Bread of Life Church India

புது வருட துவக்கம் மட்டுமல்ல, புது வாழ்வின் ஆரம்பம்

கிறிஸ்துவுக்குள் அன்பான என் அன்பு தேவ பிள்ளைகளுக்கு புத்தாண்டின் வாழ்த்துக்களுடன் இந்த புது வாழ்வின் வாக்குத்தத்த தை கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
     2014 ம்  ஆண்டு புதிய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், நிறைவான நன்மைகளையும் கொண்டு வரப்போகிறது. அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறேன்.

    ``சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்'' (வெளி 21:5).
    இந்த வார்த்தை தேவ பிள்ளைகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் வாக்குத்தத்தம். இந்த வாக்குத்தத்தம் இரண்டு வகைப்படும். ஒன்று பரலோகத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. இந்த பூமிக்கு உரியதாகவும் இருக்கிறது.
    இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தேவ பிள்ளைகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்வான பரலோக வாழ்வையும், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இப் பூமியில் புதிய வாழ்வை துவங்குகிறவர்களுக்கும் சொந்த மானதாகவும் இருக்கிறது.
    இந்த வாக்குத்தத்தம் இந்த ஆண்டின் விசேஷமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குத்தத்ததின்படி. இந்த ஆண்டு தேவ பிள்ளைகளாகிய நம்மை நடத்தப்போகிறார்.
    விசுவாசத்துடன் நாம் ஜெபித்து, நாம் இந்த வாக்குத்தத்ததை சுதந்தரித்துக் கொள்ளப்போகிறோம்.
    பிரியமானவர்களே,வேதாகமத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாம் நமக்கு சொந்தமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் நாம் தேவனிடமிருந்து ஒரு விசேஷமான வாக்குத்தத்ததை பெற்றுக்கொண்டு, அந்த வாக்குத்தத்ததை  சுதந்தரித்துக் கொள்கிறோம்.
    ஒவ்வொரு வருடமும் நம்முடைய வாழ்வில் நாம் வளர்ச்சியைப் பெற்று தேவனுக்கு சாட்சியாக வாழவேண்டும் என்பதுதான் தேவன் நம்மேல் வைத்திருக்கும் தேவ சித்தம்.
    அதே வேளையில் சிலருடைய வாழ்வில் கடந்த வருடங்களில் வேதனைகள் மேல் வேதனைகளும், கஷ்டத்தின் மேல் கஷ்டங்களும், கண்ணீரின் மேல் கண்ணீருமாக மிகுந்த பிரச்சனையின் ஊடாகக் கடந்து வந்திருக்கலாம்.
    அப்படிப்பட்டவர்கள் இந்த ஆண்டிலாவது என்னுடைய வாழ்வில் மாற்றம் ஏற்படாதா? என்ற ஏக்கத்துடன் இந்த ஆண்டை எதிர்பார்த்து வந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களைப்பார்த்துதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் உங்கள் வாழ்வில் ``நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்'' என்று. அன்பான தேவனுடைய பிள்ளைகளே, இது  புதிய வருடத்தின் துவக்கம் மட்டுமல்ல, உங்கள் வாழ்வின் புதிய துவக்கம் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது.
    புதியது என்று சொல்லும் போது அங்கு பழைய வைகளுக்கு இடம் இல்லை. அது போல இந்த புதிய வருடத்தில் புதிய நன்மைகளை பெற்றுக்கொள்ளப் போகிற உங்கள் வாழ்க்கையில் இதுவரை உங்களை வேதனைப்படுத்திய பழையவைகளுக்கு இடமில்லை.
    ஆகவே எந்த எந்த விஷயங்களில் நாம் புதியவைகளை பெற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதை வேதாகம வசனத்தின் அடிப்படையில் நாம் தியானிக்கலாம். கர்த்தர் நமக்கு துணை செய்வாராக.

நமது சிந்தையை புதிதாக்குகிறார்
    ``முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
    இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்'' (ஏசாயா 43:18,19).
    அநேக சமயங்களில்  நம் எண்ணங்களில் மாற்றம் ஏற்படாமல் இருப்பதினால்தான் வாழ்க்கையில் மாற்றத்தைப் பார்க்க முடிய வில்லை. முதலாவது நம்முடைய எண்ணத்தின் மாற்றமே நம்முடைய வாழ்க்கையின் மாற்றத்திற்கு அஸ்திபாரம்.
     அந்த அஸ்திபாரத்தையே முதலாவதாக இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் போட விரும்புகிறார்.
    எப்படி என்றால் நம்முடைய எண்ணங்கள் எப்போதுமே எதாகிலும் ஒரு விஷயத்தில் கட்டப்பட்டு விட்டது என்றால் அதில் இருந்து விடுபடுபது சாதாரணமான விஷயம் அல்ல. இன்றைக்கு அநேகருடைய உள்ளங்கள் தாழ்வு மனப்பான்மையால் மிகவும் நொறுங்கி போய் உள்ளது.
     நடந்து முடிந்து போனவைகளையும், தோல்விகளையும் நினைத்து நினைத்து, வாழ்வின் நன்மையானவைகளை பெற்றுக்கொள்ள முடியாதபடிக்கு அநேகருடைய உள்ளங்கள் வாடிப்போன நிலையில் கடந்த ஆண்டுகளில் இருந்திருக்கலாம்.
    ஆனால் இந்த புதிய ஆண்டில் கர்த்தர் முதலாவது உங்கள் உள்ளத்தை புதிதாக்கு கிறார். இதுவரை உங்களுடைய உள்ளத்தில் இருந்த சோர்வுகள், பயங்கள், வேதனைகள், குழப்பங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இவைகளை எல்லாம் நீக்கி, சமாதானம், சந்தோஷம், தன் நம்பிக்கை, மன திடன், மன உறுதி இவைகளைத் தந்து, உங்களைப் புதிய வழிகளில் நடத்தப்போகிறார்.
    முதலாவது நம்மை சுற்றியிருக்கிறவைகள் மாறுவதற்கு முன்பாக நாம் மாறவேண்டும்.  நம்முடைய பிரச்சனைகள் நீங்குவதற்கு முன்பாக பிரச்சனைக்கு காரணமாக இருப்பவைகள் மாறவேண்டும். அது போல நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் புதிதாக வேண்டுமானால் முதலாவது நம்முடைய உள்ளம் புதிதாக வேண்டும்.
    ஏன் என்றால் நம்முடைய எண்ணத்தின் மூலமாகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செயல்படுகிறார். நம்மை செயல்படுத்துகிறார். நம்முடைய எண்ணங்களில் தேவையில்லாதவைகள் இருக்கும் பொழுது, அவைகளே நம்மை செயல்படுத்தப்பார்க்கிறது. அவைகள் நம்மை செயல்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் நன்மைகளை நாம் சுதந்தரித்துக்கொள்ளாதபடிக்கு அவைகள் தடை செய்யப் பார்க்கிறது.
    ஒருவேளை கடந்த ஆண்டுகளில் தேவையில்லாத எண்ணங்களும், தேவையில்லாத செயல்பாடுகளும் நம்மை சரியான பாதையில் போக விடாதபடிக்கு நம்மை தடை செய்திருந்திருக்கலாம். ஆனால் இந்த புதிய ஆண்டில் அப்படிப்பட்ட காரியங்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை விடுவித்து, நம்மை நடத்தப்போகிறார்.
   
    அதற்கு நாம் முதலாவது நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த வருடத்தில் இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(2 கொரிந்தியர் 5:17) என்ற வேதாகம வார்த்தையின்படி கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில், கிறிஸ்துவின் சாயல் வெளிப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழும் படியாகச் செய்வார்.
    இந்த உலகத்தில் மேலான நன்மை ஒன்று இருக்கிறது என்றால் அது கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறி, கிறிஸ்துவுக்காக தன்னுடைய வாழ்வை அற்பணிப்பதுதான். இப்படி தன்னை முழுமையாக அற்பணிக்கிறவர்களின் வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதங்களை நிறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    கிறிஸ்துவுக்குள் வந்து இத்தனை ஆண்டுகளாக உண்மையாகவே கிறிஸ்துவை உனது வாழ்வில் வெளிப்படுத்தாமல் ஏனோ தானோ என்று இதுவரை நீ வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த புதிய ஆண்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன்னைப்பார்த்து சொல்லுகிற வார்த்தை என்னவென்றால்  இது வரை உன்னுடைய வாழ்வில் எத்தனையோ விதமான சூழ்நிலையில் நான் வந்து உன்னிடம் வாசம்பண்ணும்படியாக வந்தும் நீ அதற்கு இடங்கொடுக்காமல் உன்னுடைய சுய இஷ்டத்தின் படியாகச் சென்று அநேக சஞ்சலங்களையும் வேதனைகளையும் பட்டுவிட்டாய். இனிமேலும் உனது வாழ்வில் இன்னல்களை அனுபவிக்க உனக்கு உடலிலும், மனதிலும் பெலன் இல்லை. இந்த ஆண்டில் எனது சித்த த்தின்படியாக நடக்கும் படியாக உன்னை முழுமையாக ஒப்புக்கொடு. உனது வாழ்வை புதிதாக்கி, உன்னை உயர்ந்த ஸ்தானத்தில் நிறுத்துவேன் என்று இந்த புதிய ஆண்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னோடு கூடப் பேசுகிறார்.
    இதோ சகலத்தையும் புதிதாக்கும் கர்த்தர் உன்னையும் மாற்ற விரும்புகிறார். இதுவரை வெளிவேஷமாக வாழ்ந்த வாழ்க்கைப் போதும். இந்த புதிய ஆண்டில் வாழ்வின் இதுவரை இருந்த எல்லா போராட்டமான சூழ்நிலைகளையும் மாற்றி, உன்னைக் கர்த்தர்  புதிதாக்கப் போகிறார். நீ முந்தினவைகளை நினைக்க வேண்டாம் பூர்வமானவைகளைச் சிந்திக்கவும் வேண்டாம்.
    கர்த்தர் உனக்குள்ளாக செயல்பட உன் சிந்தையை முழுவதுமாக ஒப்புக்கொடு. அசுத்தமான உன் சிந்தைகள் நீங்கும். வேண்டாத எண்ணங்கள் உன்னை விட்டு அகலும்.
    இப்படிப்பட்ட மாற்றமே உன் வாழ்வில் மகத்தான செயல்களை நீ செய்வதற்கு வழிவகுக்கும்.
    கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில்மட்டுமே சமாதானம் இருக்கும். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் மட்டுமே சந்தோஷம் இருக்கும்.
    தேவன் விரும்புகிற வாழ்க்கை வாழ்வதற்கு இயேசு கிறிஸ்து எல்லா விதத்திலும் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்.  நம்மைப்பெலப்படுத்துகிறார். கிருபை கொடுக்கிறார். பொல்லாப்பில் இருந்து தூக்கி எடுக்கிறார். நமக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கொடுக்கிறார். எதை நாம் செய்ய வேண்டும். எதை நாம் செய்யக்கூடாது என்று நமக்கு உணர்த்துகிறார். எல்லா சூழ்நிலையிலும் நமக்கு பக்கபலமாக இருக்கிறார்.
    நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய நடத்துதலுக்கு நம்மை முழுமையாக அற்பணித்து விடுவதுதான்.
    இந்த புதிய ஆண்டு துவக்கத்தில் இருக்கிற நாம் இப்படியாக முழுவதும் நம்மை இயேசு கிறிஸ்துவுக்கு அற்பணித்து விடுவோம் என்றால், நமது வாழ்வில் இனி எல்லாம் புதுமையே. எப்படிப்பட்ட புதுமைகள்  வேத வசனம் திட்டமாகக் கூறுகிறது.
    மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ் சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர் களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
    அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.(வெளி 21:3,4). இந்த வசனங்கள் பரலோகத்தில் மட்டுமில்லைங்க. உண்மையாக இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் நாம் வாழ்கிற இந்த பூமியிலும் இந்த நன்மைகளை நாம் சுதந்தரித்து வாழமுடியும்.
    இந்த 2014ம் ஆண்டு இதைத்தான் நம்முடைய வாழ்வில் புதியதாக கொடுக்க இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.
    இந்த வாக்குத்தத்தத்தை இந்த ஆண்டில் நாம் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமானால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். இயேசு கிறிஸ்துவின் சாயலாக மாறியே ஆகவேண்டும். இன்னும் மாய்மாலங்களோ, வெளி வேஷங்களோ, தேவனுக்கு முன்பாக செல்லுபடியாகாது. நம்மை புதிதாக மாற்றி, நம்முடைய வாழ்வை புதிதாக்குவதே தேவன் இந்த ஆண்டு நமக்கு கொடுத்திருக்கும் வாக்குத்தத்தம்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

0 comments:

Post a Comment