Bread of Life Church India

சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான என் அன்பு சகோதர சகோதரிகளே, சமாதானம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு கர்த்தர்  கொடுக்கும் வாக்குத்தத்தமான தேவனுடைய வார்த்தை ``சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்'' <பிலி 4:9>.
                சமாதானம் என்றால் எபிரேய மொழியில் ``ஷாலோம்'' என்றும் கிரேக்கத்தில் ஐரீன் என்றும் அழைக்கப்படும் இவ் வார்த்தையானது வாழ்க்கையை சிக்கலில்லாமல் மனதை தூய்மையாய் காத்து உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்தல் என்று அர்த்தம் தருகிறது.
                சமாதானமும் இளைப்பாறுதலும் இல்லாமல் இருந்தால் குடும்பத்தில் எப்போதும் பிரச்சனைகளும், சண்டைகளுமாகவே இருக்கும். எந்த ஒரு உயர்வும் இருக்காது.
                தற்காலத்தில் அநேக குடும்பங்களுக்குள்ளாக ஒருமனம் இல்லாமல், சமாதானம் இல்லாமல் எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சனையோடு கூட இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் போது சமாதானத்தை கொடுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல் இருப்பதுதான் காரணம்.
                இந்த உலகத்தில் மனிதன் எதை வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம் ஆனால் சமாதானத்தை மட்டும் இயேசு கிறிஸ்து இல்லாமல் சம்பாதித்துக்கொள்ளவே முடியாது.

சமாதானம் தருகிறவர்
                  ஒரிசா மாநிலத்தில் இளம் வயதுடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் மிகுந்த செல்வ செழிப்புள்ளவனாக இருந்தான். அவனுக்கு ஒன்றும் குறைவு இல்லாதவனாக காணப்பட்டான். அவனைத் தேடி அநேகர் வருவார்கள். ஏன் என்றால் அவன் குறி சொல்லும் ஆவியினால் ஆளுகை செய்யப்பட்டிருந்த படியால் அவன் சொல்லும் காரியங்கள் எல்லாம் நடப்பதாக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவனுக்குள்ளாக சமாதானம் இல்லாமல் எப்போதும் குழப்பத்துடனும் சஞ்சலத்துடனும் இருந்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனை குறி சொல்ல வைக்கும் ஆவியினிடத்தில் கேட்பான், எனக்கு சமாதானத்தை கொடு, நான் கேட்பதை எல்லாம் கொடுக்கிறாய் ஆனால் சமாதானத்தை மட்டும் கொடுக்க மாட்டேன் என்கிறாயே என்று கேட்பான் அப்பொழுதெல்லாம் ``இன்று தருகிறேன் நாளை தருகிறேன்'' என்று சொன்னாலும் சமாதானத்தை அந்த ஆவியால் கொடுக்க முடியவில்லை.
                இப்படி சமாதானத்தை தேடி கொண்டிருந்த மனிதனுக்கு ஒரு கைப்பிரதி கிடைத்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கலாமே என்று பிரித்தவுடன் அதில் எழுதப்பட்டிருந்த தலைப்பு அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அந்த கைப்பிரதியில் ``நீங்கள் தேடும் சமாதானத்தை இயேசு கொடுக்கிறார்'' என்று எழுதப்பட்டிருந்தது. அது வரை இயேசு என்ற பெயரைக்கூட கேள்விப்படாத அவனுக்கு அந்த வார்த்தை புதுமையாக இருந்தது.  உடனே அந்த கைப்பிரதியில் எழுதப்பட்டிருந்த எல்லாவற்றையும் வாசித்து முடித்தான்.
                உடனே ஒரு அறைக்கு சென்று முழங்காலில் நின்று அந்த கைப்பிரதியை கையில் வைத்துக்கொண்டு, ``இந்த துண்டு பிரதியில் இயேசுவே உண்மையான தெய்வம். அவர்தான் சமாதானத்தை தருவார் என்று எழுதியிருக்கிறது, இயேசுவே நான் பல வருடங்களாக சமாதானம் இல்லாமல் சமாதானத்தை தேடி கொண்டிருக்கிறேன். இப்பொழுது தான் எனக்கு தெரிந்தது நீங்கதான் உண்மையான தெய்வம். சமாதானத்தை தருவது நீங்கதான் என்றும் எனக்கு சமாதானத்தை தாருங்கள் '' என்றும் தனக்கு தெரிந்த வார்த்தைகள் மூலம் வேண்டுதல் செய்தான்.
                உடனே அந்த அறையில் இயேசு தோன்றினார். அவன் இயேசுவை தரிசித்தான். அவனுடைய மனதில் அதுவரை அழுத்திக்கொண்டிருந்த பாரங்களும், இனம் புரியாத குழப்பங்களும், பயங்களும் நீங்கி, சமாதானத்தினால் அவன் மனம் முழுவதும் நிறைந்தது அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தொழுது கொண்டு அந்த நாள் முதல் குறி சொல்லிவந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று, தேவனுடைய பிள்ளையாக மாறி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உண்மையான தெய்வம் என்று தனது ஊரில் இருக்கும் அனைவருக்கும் நற்செய்தி அறிவித்தான். அவன் மூலமாக அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அறிவிக்கும் ஊழியக்காரனாய் தேவனுடைய ஊழியத்தை செய்ய ஆரம்பித்தான். 
                பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சமாதானத்தை கொடுக்கிறவர். ``சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக''
< யோவான் 14:27> என்று நமக்கு சமாதானத்தை கொடுக்கும் படியாக பூமிக்கு வந்தவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

சமாதான காரணர்

                வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடி இருந்த இடத்தில் யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டப்பட்டிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று; உங்களுக்குச் சமாதானம் என்றார் < யோவான் 20:19>. உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமாகி முதல் முதல் சொன்ன வார்த்தை ``உங்களுக்கு சமாதானம்'' அதுவும் எந்த சூழ்நிலையில் அந்த வார்த்தையை சொல்லுகிறார் என்றால் அவர்கள் பயந்து தங்களுக்கு எதாகிலும் ஆகி விடுமோ என்று கலக்கத்துடன் இருக்கும் வேளையில், அவர்களுக்கு அப்பொழுது என்ன தேவையோ அதை சரியாக கொடுக்கிறார். இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம், அல்லது தற்காலிகமாக கடனாவது வாங்கி கொள்ளலாம். ஆனால் ஒருவராலும் தானாக சம்பாதிக்க முடியாததும் ஒருவராலும் கடன் கொடுக்க முடியாததும் ``சமாதானம் மட்டுமே''. ஏன் என்றால் சமாதானத்தை கொடுப்பவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. அவர்தான் சமாதான காரணர்.
                எப்படி என்றால் வேதம் கூறுகிறது. ``அவர் <இயேசு> சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்தி லுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று < கொலோசெயர் 1:20>. இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாகவே, மனு குலத்திற்கு சமாதானம் வந்தது. எனவே அன்று முதல் இன்று வரை, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள் உலகத்தையே தங்களுக்கு சொந்தமாக ஆதாயப் படுத்திக்கொள்ளலாம். ஆனால் இயேசு கிறிஸ்து இல்லாமல் ஒரு மனிதனாலும் சமாதானத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது.
                மனிதன் சமாதானத்தை தேடி எங்கு எங்கு எல்லாமோ தேடி சுற்றி அலைந்து கொண்டிருக்கிறான். இதை செய்தால் சமாதானம் கிடைக்குமா? அதை செய்தால் சமாதானம் கிடைக்குமா? என்று எதை எதை எல்லாமோ செய்து கொண்டிருக்கிறான். ஆனால் சமாதானம் மட்டும் கிடைக்கவே இல்லை. எனக்கு பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்கள் அப்படிப்பட்ட நபர்களில் ஒருவராக இருக்கலாம். இப்பொழுது உங்களுக்கு சமாதானத்தின் வழியை அறிவிக்கிறேன். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் சமாதானத்தை தருகிறவர் இயேசு கிறிஸ்து மட்டுமே, நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த மதத்தை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து உண்மையாக முழு மனதுடன் இயேசுவே எனக்கும் என் குடும்பத்துக்கும் சமாதானத்தை தாருங்கள் என்று நீங்கள் முழங்கால் போட்டு கேட்பீர்கள் என்றால் உடனடியாக நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் சமாதானத்தை பெற்றுக்கொள்வீர்கள். இயேசு கிறிஸ்து சொன்னது போல அவர்கொடுக்கும் சமாதானம் இந்த உலகம் கொடுப்பது போல தற்காலிகமானதாக இருக்காது, நிறைவான அவருடைய சமாதானத்தையே கொடுக்கிறார்.

சமாதானம் அருளி ஆசீர்வதிக்கிறவர்

``கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்'' < சங்கீதம் 29:11>. உலகத்தில் உள்ள எல்லா மக்களும் தேவனுடைய பிள்ளைகள்தான். ஆனாலும், கர்த்தர் தமது ஜனம் என்று அழைப்பதும் தமது ஜனத்திற்கு சமாதானம் தருவார் என்று சொல்வதும் ஏன் என்றால். தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, நீதியுடனும் நேர்மையுடனும் வாழும் மக்களையே தேவன் தமது ஜனம் என்று அழைக்கிறார்.
                 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளாமல், தங்கள் மனம் போன பாதையில் சென்று, தங்கள் மன விருப்பத்தின் படியாக செயல் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தேவன் உதவி செய்யவும் முடியாது, சமாதானத்தை கொடுக்கவும் முடியாது, ஏன் என்றால் தேவனுடைய சட்டங்களும் நியமனங்களும் உண்டு, தேனுடைய சட்டத்துக்கும், நியமனங்களுக்கும் நான் கீழ்ப்படிய மாட்டேன் என்பவர்கள் தேவனுடைய மக்களாக இருக்க முடியாது.   அப்படிப் பட்டவர்கள், சமாதானத்தை  பெற்றுக்கொள்ளவும் முடியாது.
                எனவேதான் கர்த்தர் சொல்லுகிறார் `` நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்,
                என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். < ஏசாயா 32:17,18>.
                எனவே தேவனுடைய பிள்ளைகள் தேவ சித்தம் அறிந்து செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும். தேவன்  கொடுப்பதில்தான்  சமாதானம் உண்டு, தேவ சித்தத்துக்கு மீறி தங்கள் சுய சித்தத்தின்படியாக செயல்பட ஆரம்பிக்கும் போது, தேவ சமாதானத்தை இழக்க நேரிடுகிறது.
                சில தேவனுடைய பிள்ளைகள் கூட, தங்களுடைய வேலை காரியங்கள், திருமண விசேஷங்களுக்கு தேவனுடைய சித்த த்தை அறிந்து கொள்ளாமல் செயல்பட்டு விடுவார்கள். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் முள்ளாக இருந்து, சமாதானத்தை கெடுத்துக்கொண்டிருக்கும்.
                ஒன்றை தேவனுடைய பிள்ளைகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும், தேவனாகிய கர்த்தர் நமக்கு வேண்டிய அனைத்தையும், நமக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். தேவன் கொடுப்பதற்கு முன்பாக சுயமாக நாம் தேர்ந்தெடுக்கும் போது அது நமக்கு எதிராகவே இருக்கிறது.
                தேவன் நமக்காக கொடுப்பதை விட மேலான ஒன்றை நம்மால் தேடவும் முடியாது. பெற்றுக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் அவ்வளவு நேர்த்தியாக  தேவன் நமக்காக ஒவ்வொன்றையும் ஆயத்தப்படுத்தி தருகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையாக விசுவாசத்துடன் தேவனை சார்ந்து அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றவேண்டும்.
                முக்கியமாக வாலிப வயதை அடைந்து திருமணத்திற்காக நிற்கும் தேவ  பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தற்கால உலக வழக்கத்தின்படியாக தங்கள் சுய விருப்பத்தின் படியாக திருமண வாழ்க்கையை முடிவு செய்யக்கூடாது. முதலாவது தேவ சித்தம் அறிந்து, பெற்றோர் பார்க்கும் துணையையே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் இதை வலியுறுத்தி சொல்ல வேண்டியது இருக்கின்றது என்றால் தங்கள் சுய விருப்பத்தின் படியாக காதலித்து திருமணம் முடித்தவர்களின் வாழ்க்கையில் தேவ சமாதானம் இல்லை என்பதை அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அன்பான வாலிப சகோதர சகோதரிகளே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன் என்றால் கடந்த சில நாட்களுக்கு முன் வாலிபர் கூட்டத்தில் பேசிய ஒரு பிரபலமான ஊழியரின் செய்தி வீடியோவை பார்த்தேன். அந்த செய்தியில் அவர் சொல்லுகிறார். காதலிப்பது தப்பு இல்லை, தாராளமாக காதலித்து திருமணம் செய்யலாம், ஏனென்றால் நானும் கூட காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். என்று, இப்படிப்பட்ட வஞ்சக வார்த்தைகளை பிசாசு யாரைக்கொண்டும் பேசலாம். அந்த ஊழியருக்கு வாலிபர்கள் வட்டம் அதிகம். அவருடைய கூட்டம் என்றால் வாலிபர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.
                ஆகவே அவர் மூலமாக பிசாசு வாலிபர்களை வஞ்சிக்கப்பார்க்கிறான். வாலிபர்களே! எச்சரிக்கை எவ்வளவு பிரபலமான ஊழியர் சொன்னாலும் வேதத்துக்கு மாறாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள கூடாது.
                ஏன் என்றால் தேவ சித்தம் இல்லாமல் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக செயல்பட்டு, நீங்கள் சமாதானத்தை இழந்து நிற்கும் போது அப்படிப்பட்டவர்கள் உங்கள் துக்கத்தில் பங்கு எடுக்க முடியாது. ஆகவே சமாதானத்தின் தேவன் உங்களோடிருந்து உங்களை ஆசீர்வதித்து உங்களை வழிநடத்த வேண்டும் என்றால் நீங்கள் அவரோடும், அவருடைய வார்த்தைகள் உங்களோடும் இருக்க வேண்டும்.
                அப்படி இருந்தால் ``சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். < ரோமர் 16:20>.  
                நீங்கள் சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். இம்மாதத்தில் இந்த செய்தியின் வழியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிறைவான சமாதானத்தை தருவாராக என்று வாழ்த்தி, கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை ஆசீர்வதிக்கிறேன். 

0 comments:

Post a Comment