Bread of Life Church India

காயீன் மனைவி யார்?





வேதாகமத்தை வாசிக்கும் போது கேள்விகள் வராமல் இருந்தால்தான் தவறு. கேள்விகள் வருவது நல்லது. ஆனால் அந்த கேள்விகள், விடையை தேடி விசுவாசத்தில் வளர்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.  விசுவாச வாழ்வில் இருந்து தவறி விழுவதற்கு ஏதுவாகவும், முரண்பட்ட கருத்துக்களை கூறி, குழப்புவதற்கு காரணமாக இருந்து விடக்கூடாது.
ஆதியாகம புத்தகத்தை வாசிக்கும் போது, “காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள்என்ற கேள்வி வராமல் இருக்காது. ஏனென்றால் ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரத்தில் ஆதாம் ஏவாள் இருவர் மட்டுமே இருக்கின்றனர். 4ம் அதிகாரத்தில் 1,2 வசனங்களில் இவர்களுக்கு காயீன், ஆபேல் என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்ததாக குறிப்பிடும் வேதம் 4ம் அதிகாரம் 17ம் வசனத்தில் காயீன் தன் மனைவியை அறிந்தான் என்று கூறுகிறது.  அந்த சமயத்தில் ஆதாம், ஏவாள், காயீன் மட்டுமே இருப்பதை போல நாம் வேகமாக வாசித்துக்கொண்டு செல்லும் போது தெரிகிறது. எனவேதான் காயீனுக்கு மனைவி எங்கிருந்து வந்தாள் என்ற கேள்வி எழுவது இயற்கையே.
அதே வேளையில் வேதாகமத்தை வேகமாக வாசித்துக்கொண்டே செல்லாமல் நிதானமாக தியானித்தும் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி நாம் நிதானமாக தியானிக்கும் போது 4ம் அதிகாரம் 14ம் வசனத்தில்என்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் என்னைக் கொன்று போடுவான்என்று காயீன் கூறுவதிலிருந்து, அப்பொழுதே மற்ற மனிதர்களும் அவர்களோடு இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதை அறிந்து கொண்டால் காயீன் மனைவி யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆதியாகம புத்தகத்தின் 4,மற்றும் 5ம் அதிகாரங்கள் மட்டும் 2 ஆயிரம் வருடங்கள் சரித்திரத்தை கொண்டதாக இருக்கிறது. இந்த அதிகாரங்களை அணுகும் போதும், வாசிக்கும் போதும், முறையாக, சரியாக, தெளிவாக வாசித்து அறிந்து கொள்ளுதல் நல்லது.
இரண்டாயிரம் வருட சரித்திரமாக இருந்தாலும் எது நமக்கு தேவையோ, எது நமக்கு அவசியமோ அதை மட்டும் இந்த இரண்டு அதிகாரங்களில் உள்ள வசனங்கள் தாங்கி நிற்கிறது.
மனுகுலத்தின் ஆரம்பத்திலேயே எவ்விதம் மனுக்குலம் பிரிந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை காண்பிக்கும் படியாக, தேவ திட்டங்களுக்கு விரோதமாக சென்று விட்ட  காயீன் சந்ததி தேவனை அறியாது, தேவனுக்கு விரோதமான சந்ததியாக பிரிந்து வருகிறது. ஆபேலுக்கு பதிலாக தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சேத்தின் சந்ததியும் தேவனுக்கு பயந்து, அவருடைய வழியில்  எப்படி எவ்விதம் வந்து கொண்டிருக்கிறது என்பதை காண்பிக்கும் வம்ச வரலாறுகளே இந்த இரண்டு அதிகாரங்களிலும் எழுதப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 4:17-23 வரை உள்ள வசனங்களில் காயீனின் 8 தலைமுறையை குறித்து வேதாகமம் தெரிவிக்கிறது. 5ம் அதிகாரத்தில் 3ம் வசனம் முதல் 29 ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் சேத்தின் 9 தலைமுறைகளை குறித்து விவரிக்கிறது.
வேதாகமம் வம்ச வரலாறுகளை தெரிவிக்கும் போது அதில் முதல் மகனின் பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட வில்லை.
ஆதாமுக்கு பல ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் இருந்தும் வேதாகம சரித்திரத்திற்கு அவர்கள் பெயர்களும், அவர்களின் வாழ்க்கை வரலாறும் அவசியப்படாததினாலேயே அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இல்லை.
சரி கேள்விக்கு வருவோம். “காயீன் தன் மனைவியை அறிந்தான்” (ஆதி 4:17) காயீனுக்கு மனைவி எங்கிருந்து வந்தாள் என்பதை வைத்து குழப்புகிறவர்களும் அநேகர்.
காயீன் ஆபேலை  கொலை செய்யும் போது 130 வயது உடையவனாக காயீன் இருந்திருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் ஆதாம் ஏவாளுக்கு காயீன் , ஆபேல் என்று இரண்டு பிள்ளைகள் மட்டும் அல்ல அநேக பெண்பிள்ளைகளும் பிறந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.
ஆபேல் கொலை செய்யப்பட்டபின் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியேஆபேலுக்கு பதில்சேத்தின்  பெயர் வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆதாமின் மற்ற எந்த பிள்ளைகளின் பெயரும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட வில்லை. எனவே சேத்துக்கு முன்பும், பின்பும் அநேக ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் ஆதாமுக்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது.
மேலும் சேத் பிறக்கும் போது ஆதாமுக்கு நூற்று முப்பது வயது என்று ஆதியாகமம் 5ம் அதிகாரம் 3ம் வசனத்தில் பார்க்கிறோம். இந்த வயது கணக்கு முறை ஆதாம் படைக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படாமல் ஆதாம் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. காரணம் ஏதேனில் ஆதாம் இருந்த வரையிலும் பாவம் செய்வதற்கு முன் வரை மரண சரீரத்தில் அவன் இருக்க வில்லை. வயது கணக்கிடும் முறை மரண சரீரத்திற்கு மட்டுமே. அந்த அடிப்படையில் ஆதாம் ஏதேனை விட்டு, வெளியேற்றப்பட்ட நாட்களிலிருந்து அவன் வயது கணக்கிடப்படுகிறது.
எனவே ஆதாமுக்கு 130 வருடங்களில் அநேக பிள்ளைகள் பிறந்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஆதாமுக்கும், காயீனுக்கும் ஒருவருட   இடைவெளி மட்டுமே இருந்திருக்க வாய்ப்புண்டு.
ஆதாம் ஏதேனை விட்டு, துரத்தப்பட்ட நாளிலிருந்து, ஆபேல் கொலை செய்யப்பட்ட நாள்வரை 130 வருட சரித்திரம் உள்ளது. அந்நாட்களிலேயே ஆதாமுக்கு அநேக , ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் பிறந்திருப்பதாலேயே அப்பொழுதே ஒரு கூட்ட மக்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு, எனவேதான் காயீன் தேவனை நோக்கிஇன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்” (ஆதி 4:14).
ஆகவே, அப்பொழுதே அவனுடைய சகோதர, சகோதரிகள் அநேகர் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. எனவே தன் சகோதரிகளில் ஒருவரை காயீன் மணந்திருக்கலாம்.
அந்நாட்களில் ஆதாம், ஏவாள் அவர்களுடைய பிள்ளைகள் என அவர்கள் மட்டுமே இருந்தபடியினால் அவர்கள் தங்களுக்குள்ளாகவே மணமுடிக்க வேண்டியதாக இருந்தது.
ஆதி நாட்களில் சகோதர, சகோதரி திருமணம் செய்துகொள்ளும் முறை இருந்திருக்கிறது என்பதை வேத வசனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஆபிரகாம் தன் மனைவி சாராளை குறித்து அபிமேலேக்கிடம் சொல்லும் போதுஅவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்” (ஆதி 20:12) என்றான். ஆபிராகாமின் மனைவியும் கூட அவனது ஒன்று விட்ட சகோதரியாகவே இருந்தாள்.
சகோதரியை திருமணம் செய்ய கூடாது என்ற சட்ட முறை மக்கள் கூட்டம் திரளாக பெருகிய பின் தேவனால் லேவியராகமம் 18:11 ல் கொடுக்கப்படுகிறது.
எனவே காயீனின் மனைவி ஆதாமின் குமாரத்திகளில் ஒருத்தியான, காயீனின் சகோதரிகளில் ஒருத்திதான் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடிகிறது.
இப்படிப்பட்ட கேள்வி பதில்களோடு, நாம் இச்செய்தியை கொடுப்பதற்கு காரணம், இதைக் குறித்த குழப்பமான தகவல்களை கொடுத்து, வேதாகம விசுவாசத்திற்கு எதிரான செயல்களை செய்கிறவர்களின் வலையில் இருந்து விசுவாச மக்கள் விடுவிக்கப்படவும், பாதுகாக்கப்படவும்.
விசுவாச வாழ்வின் வளர்ச்சிக்கு இது கூடுதல் தகவலாக இருக்கும் என்பதினாலேயே இத்தலைப்பின் கீழ் நாம் வேதாகமத்தை தியானித்து இச்செய்தியை தருகிறோம்.

0 comments:

Post a Comment