ஆசீர்வாதமான குடும்பம்
தேவனுடைய சமூகத்தில் நிற்கும் பாக்கியம் கிடைக்கப் பெருவதே ஆசீர்வாதம். ஆசீர்வாதங்களிலேயே
மிகப்பெரிய ஆசீர்வாதம் தேவனுக்கு முன்பாக இருப்பதுதான். எனவேதான்
தாவீது தன்னுடைய வீடு தேவனுக்கு முன்பாக
இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்.
தேவனுக்கு முன்பாக இருப்பவர்கள் தான்
தங்கள் சுயத்திற்கு தினமும் மரித்து, தேவனுடைய
அங்கீகாரத்திற்கு பாத்திராக ஒவ்வொரு நாளும் தகுதியாக
முடியும்.
தேவனுக்கு முன்பாக இருக்கும் போது
மட்டுமே ஒருவனுடைய சுயமும், அவன் செய்கிற தவறும்
நன்றாக வெளிப்படும், தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தில்
ஒவ்வொருவரும் தேவனுக்குப் பயந்து தேவனால் நடத்தப்படுகிறவர்களாகிறார்கள்.
அப்படிப்பட்ட குடும்பத்தில் தேவனுடைய ஆசீர்வாதம் நிறைவாக இருக்கும்.
ஆகையால் தான் கர்த்தாவே,
எனது குடும்பம் உமக்கு முன்பாக இருக்க
வேண்டுமே என்று தாவீது ஜெபிக்கிறார்.
அநேகர் தனது குடும்பம்
ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறார்கள் ஆனால் ஆசீர்வாதம் என்றால்
என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.
அதைச் சரியாக அறிந்து
கொண்டால் உண்மையான ஆசீர்வாதங்களை ஒவ்வொரு குடும்பங்களும் நிறைவாகப்
பெற்றுக்கொள்ளும்.
தேவனுக்கு முன்பாக நமது குடும்பமும்
இருக்கும் படி ஒவ்வொரு நாளும்
நாமும் வேண்டுதல் செய்வோம். தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்திற்கு
தேவன் கொடுக்கும் நன்மைகள் என்ன? என்பதை வேதாகம
வசனங்கள் மூலமாக அறிந்து கொள்வோம்.
தேவ அங்கீகாரம்
பெருதல்
தேவனால் அங்கீகாரம் பெற்ற
குடும்பம்தான் ஆசீர்வாதமான குடும்பம். இதை நன்றாக அறிந்து
கொள்ள வேண்டும். “அவர்: நான் போகட்டும்,
பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர்
என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்” (ஆதி 32:26). யாக்கோபு
தேவன் தன்னை ஆசீர்வதிக்க வேண்டும்
என்று இரவு முழுவதுமாக போராடினான்.
இக்காலத்தில் ஆசீர்வாதம் என்றால் பொருளாதார செழிப்பு
மட்டும்தான் என்று அநேகர் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால் “அடியேனுக்கு தேவரீர்
காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா
சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன்
அல்ல, நான் கோலும் கையுமாய்
இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்” (ஆதி 32:10) என்று யாக்கோபு முந்திய
வசனங்களில் சொன்னதைக் காணலாம்.
ஒன்றுமில்லா நிலையில் தனது மாமன் வீட்டிற்கு
சென்ற யாக்கோபு, குடும்பமாக மிகுந்த செல்வந்தனாக இரண்டு
பரிவாரங்களுடன் வருகிறான். போதுமான அளவுக்கு அவன்
செல்வந்தனாக இருக்கிறான். அப்பொழுதுதான்
“நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப்
போகவிடேன்” என்று தேவன் தன்னை
ஆசீர்வதிக்க வேண்டும் என்று போராடுகிறான்.
இந்த வசனங்களின் மூலமாகவும்,
இந்த சம்பவங்களின் மூலமாகவும், நாம் நன்றாக அறிந்து
கொள்ள வேண்டிய மிக முக்கியமான
சத்தியங்கள் உண்டு. தேவ பிள்ளைகளே,
அதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மிகுந்த செல்வந்தனாக இருந்த
யாக்கோபு இன்னும் தான் மிகுந்த
செல்வந்தனாக ஆக வேண்டும் என்று
போராடவில்லை. மாறாக தேவனுடைய அங்கீகாரத்திற்காக
போராடுகிறான்.
தானும், தன்னுடைய குடும்பமும்
தேவனால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றே தேவ சமூகத்தில்
காத்திருந்து ஜெபிக்கிறான்.
யாக்கோபு தனது தந்திரத்தினாலே தனது
சகோதரன் ஏசாவை ஏமாற்றி, அவனுடைய
சேஷ்ட புத்திரபாகத்தை தட்டிப்பரித்து தனதாக்கிக் கொண்டான். இது அவனுடைய உள்ளத்தில்
அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். இந்த
வேளையில் உண்மையாக தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்று, சேஷ்ட புத்திர
பாகத்திற்கு சொந்தகாரனாக வேண்டும் என்பதற்காக தேவனுடைய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று
இரவு முழுவதுகாக தேவனோடு, போராடுகிறான்.
அவன் தனக்காக மட்டும்
போராட வில்லை. தன் குடும்பத்திற்காகவும்,
வருங்கால தன்னுடைய சந்ததிகளுக்காகவும் கூட போராடுகிறான் என்பதுதான்
உண்மை.
தேவனுடைய அங்கீகாரத்தின் மூலமாக கிடைப்பதுதான் நிலையாக
இருக்கும் என்பதை அறிந்து கொண்டவனாக
தேவ சமூகத்தில் தேவன் தன்னை நிரப்பும்
படி முழுமையாக வெறுமையாக்கி ஒப்படைக்கிறான்.
இந்த உலகத்தில் ஒரு
வேளை மனிதன் செல்வந்தனாக வேண்டுமானால்,
அது சுலபமாக இருக்கலாம். தனக்கு
வேண்டிய செல்வங்களை எந்த வகையிலாவது சேர்த்துக்
கொள்ளலாம். ஆனால்
தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவது சுலபமானது அல்ல. ஏன்
என்றால் தேவனால் அங்கீகாரம் பெறுவதே
உண்மையான ஆசீர்வாதம்.
செல்வந்தர்களுக்கு மட்டுமே இந்த உலகமும்,
மனிதர்களும் அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் தேவன் மனிதனை
அங்கீகரிப்பது நொறுங்கி போன உள்ளத்தை வைத்துதான்.
உலகம் மேலோட்டமான பகட்டை வைத்து அங்கீகாரம்
கொடுக்கிறது. தேவன் உள்ளத்தில் உள்ள
உத்தமத்தை வைத்து அங்கீகாரம் கொடுக்கிறார்.
தேவனுடைய அங்கீகாரம், மனிதனின் சுயம் சாம்பலாகும் போது
கிடைக்கக் கூடியது. ஒரு மனிதன் தன்
சுயம் சாகாமல் செல்வந்தனாகி விடலாம்.
ஆனால் சுயம் சாகாமல் தேவ
அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
இவ்விதமாக தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் தேவனுக்கு முன்பாக வைத்து, தேவ
அங்கீகாரத்திற்காக போராடிய யாக்கோபு, தேவ
அங்கீகாரத்தைப் பெறுகிறான். அங்கே தேவன் அவனுடைய
பெயரை “இஸ்ரவேல்” என்று மாற்றுகிறார்.
அவனுடைய குடும்பமும், இஸ்ரவேல்
சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டது என்பது சரித்திரம். தேவ
பிள்ளைகளே நமது குடும்பமும் தேவ
அங்கீகாரம் பெற வேண்டும்.
தேவனால் கட்டப்படுதல்
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம்
விருதா” (சங்கீதம் 127:1) என்று வேதம் கூறுகிறது.
இங்கு குறிப்பிடப்படும் வீடு என்பது கல்,
மணல், செங்கலால் கட்டி எழுப்பப்படும் வீட்டைக்குறித்து
சொல்லப்பட்டது அல்ல. கணவன்,மனைவி, பிள்ளைகள் என்று
கட்டப்படும் குடும்பத்தைக் குறித்து கூறுகிறது.
குடும்பத்தை அன்பு, பாசம், நேசம்,
சமாதானத்தினால் தேவன் கட்டுகிறார். இவ்விதமாக
தேவன் குடும்பத்தைக் கட்டாவிட்டால் எல்லாம் வீணாகிறது என்று
வேதம் கூறுகிறது.
வீட்டில் எல்லா ஆடம்பர பொருள்களையும்
வாங்கி விட வேண்டும். மிக
பெரிய வீட்டை கட்டி விட
வேண்டும் என்று பிரயாசப்பட்டு உழைக்கும்
அநேகர் தன் குடும்பத்தை சரியாக
கட்ட தவறி விடுகிறார்கள். பிள்ளைகளை
கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன் வளர்க்காமல் அவர்கள் சுய விருப்பத்திற்கு
விட்டு விட்டு பின் நாட்களில்
வேதனைப் பட்டு கலங்குவது உண்டு.
குடும்பத்தில் ஒளிவு மறைவு இருந்தால்
அந்த குடும்பம் ஆசீர்வாதமான குடும்பம் அல்ல, ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாக இருந்து கொண்டு, ஒருவருக்கு
ஒருவர் எந்த தொடர்பும் இல்லாமல்
ஒரே வீட்டில் இருப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் இருந்தால் அது மாய்மால குடும்பம்.
குடும்ப உறவுகளில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும்.
கணவன் மனைவிக்கும், பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளும் எல்லாவற்றிலும் வெளிப்படையான தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சில குடும்பங்களில் குடும்ப
உறுப்பினர்களுக்குள்ளேயே யார் பெரியவர் என்ற
ஈகோ விளையாடிக்கொண்டிருக்கும். இதனால் எப்பொழுதும் சண்டைகளும்,
பிரச்சனைகளுமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் யார்
ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல,
யார் விட்டுக் கொடுத்து செல்கிறார்கள் என்பதில்தான் குடும்பத்தின் அஸ்திவாரம் பலப்படுகிறது.
ஒருவரை ஒருவர் நன்றாகப்
புரிந்து செயல்படுவதுதான் ஆசீர்வாதமான குடும்பம். குடும்ப உறவுகளில் ஒருவர்
மற்றவரை எந்த அளவுக்கு கனப்படுத்துகிறார்களோ,
அந்த அளவு கனம்தான் அவர்களுக்கு
கிடைக்கிறது. ஒருவரை உதாசீனப்படுத்தி, மட்டுப்படுத்தி,
மற்றவர்கள் கனமடைய முடியாது.
குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தாலும்
அது முழு குடும்பத்தையும் பாதிக்கச்
செய்யும்.
எனவே, குடும்பமாக தேவனைத்
தேட வேண்டும். தேவனை முதலாவதாக வைக்கும்
போது தேவனால் குடும்பம் கட்டப்படும்.
தேவனால் கட்டப்படும் குடும்பம் எல்லாவிதங்களிலும் ஆசீர்வாதமாக இருக்கும்.
தேவ ஐக்கியத்தில்
இருத்தல்
தேவனுக்கு முன் இருக்கும் குடும்பம்
தேவன் நியமித்துள்ள ஒழுங்குகளுக்குள் இருக்கும். நம்முடைய தேவன் ஒழுங்கின் தேவன்
என்று வேதாகமம் முழுவதுமாக பார்க்க முடியும். எல்லாவற்றையும்
ஒழுங்கும் கிரமமுமாக நடத்துகிறவர் நமது தேவன்.
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தில்
ஐக்கியம் பலப்படும். “அவன் குமாரர், அவனவன்
தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே
விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும்
தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள்”
(யோபு 1:4). யோபுவும் அவன் பிள்ளைகள் எல்லோரும்
ஒற்றுமையுடன் எல்லாவற்றிலும் இணைந்து, இசைந்து, மனமகிழ்ச்சியுடன் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது.
யோபுவின் குடும்பம் தேவனுக்கு முன்பாக இருந்தது, தேவன் அந்த குடும்பத்தில்
ஐக்கியத்தைப் பலப்படுத்தியிருந்தார்.
நல்ல ஐக்கியமே குடும்பத்தின்
சிறப்பு. இந்த
காலத்திலே அநேக குடும்பங்களுக்குள்ளேயே நல்ல ஐக்கியம்
இல்லை. சொத்துகளுக்காக
பணம் செல்வாக்குகளுக்காக குடும்பங்கள் பகையாகி துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் என்ன? குடும்பங்களைக்
கலைத்து, சமாதானத்தைக் கெடுத்து, தேவ திட்டங்களுக்கு விரோதமாக
சத்துருவானவன் செய்யும் சூழ்ச்சிகள்.
இவ்விதமாக சொத்துக்களுக்காகவும், பணத்திற்காகவும் பகையாகி, பிரிவினைகளில் நிற்கும் குடும்பங்கள் தேவனுக்கு முன்பாக அல்ல. பிசாசுக்கு
முன்பாக நிற்கிறது.
பகைகளும், பிரிவினைகளும், வஞ்சகங்களும் தேவனால் உண்டானவைகள் அல்ல,
அது பிசாசினால் உண்டானவைகள். தன் குடும்பத்தைப் பகைத்து,
அல்லது ஏமாற்றி, பிரிந்து நின்று ஒருவன் எவ்வளவு
ஆஸ்தி உடையவனாக இருந்தாலும் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் இல்லை. அப்படிப்பட்டவன்
சபிக்கப்பட்டவன். ஏன் என்றால் அவன்
தேவனுக்கு முன்பாக இல்லை.
தேவனுக்கு முன்பாக இருக்கும் மனிதன்,
தேவனால் நடத்தப்படுகிறவனாக இருக்கிறான். தேவனால் நடத்தப்படுகிறவன், தன்
குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும், ஐக்கியத்திற்காகவும் இந்த உலக ஆஸ்திகளைக்
கூட இழக்க தயாராக இருப்பான்.
ஆனால் அப்படிப்பட்டவனை தேவன் கை விடமாட்டார்.
அவன் தேவனால் அங்கீகாரம் பெற்றவனாக,
தேவன் தரும் ஈவுகளால் அவன்
உயர்த்தப்பட்டுக்கொண்டே இருப்பான். ஆனால் அவன் நோக்கமும்
எண்ணமும் தேவ சித்தம் செய்ய
வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் அவனை தேவன் பொருளாதாரத்திலும் உயர்த்துவார்.
அவன் குறைந்து போவது இல்லை.
தேவ அன்புக்குள்
இருத்தல்
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பம்
எந்த நிலையிலும் தேவனை மட்டுமே சார்ந்து
இருக்கும். தேவனை தன்னுடைய சொத்தாக
மதிக்கும் குடும்பம் ஒரு போதும் தேவனை
விட்டு விலகுவதில்லை.
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பம்,
இந்த உலகத்திலிருந்து கிடைக்கக் கூடியவைகளுக்கு அடிமைப்பட்டு, தேவனை விட்டு விலகுவதில்லை.
ஏன் என்றால் தேவன் எங்கு
இருக்கிறாரோ, அங்குதான் எல்லாவிதமான செழிப்பும் இருக்கும். தேவன் இல்லாத செழிப்பு
கானல்நீர் போன்றது. கண்களால் காண்பது போல் இருந்தாலும்
அது உண்மை அல்ல. அது
வெறுமையானது.
“உன் மனைவி உன்
வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன்
பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற
மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்” (சங்கீதம் 128:3,4) என்று வேதம் கூறுகிறது.
தேவனை மட்டுமே சார்ந்து
இருக்கும் குடும்பத்தில் அன்பும், சந்தோஷமும், மகிழ்ச்சியும், சமாதானமும் நிறைவாக இருக்கும். ஏன்
என்றால் தேவன் குடும்பத்தின் நடுவில்
உலாவிக்கொண்டிருப்பார்.
தேவனுடைய பாதுகாப்புக்குள்
இருத்தல்
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பம்,
தேவனுடைய பாதுகாப்பில் இருக்கும். “நீர் அவனையும் அவன்
வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி
வேலியடைக்கவில்லையோ?” (யோபு 1:10) யோபுவையும் அவன் குடும்பத்தையும் சுற்றி
கர்த்தர் வேலியடைத்து பாதுகாத்தார் என்று சாத்தான் சொல்லுகிறான்.
ஏன் என்றால் அவன் தீங்கு
செய்யும் படியும், பொல்லாப்பு செய்யும் படியும் சுற்றி வருகிறவன்.
யோபுவின் குடும்பத்தை சுற்றி, தேவன் பாதுகாப்பு
வேலி அமைத்து வைத்திருந்தபடியால் சாத்தானால்
யோபுவின் குடும்பத்திற்கு எதிராக தீங்கு செய்ய
முடிய வில்லை.
“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர்
உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே
வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச்
சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும்
விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக்
காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன்
வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்” (சங்கீதம் 121:5-8). தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தை
சுற்றிலும் தேவன் எவ்விதமாக பாதுகாப்பு
தருகிறார் என்று 121ம் சங்கீதத்தில் வேதம்
மிக தெளிவாக கூறுகிறது.
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்திற்கு
விரோதமாக சத்துருவானவன் செய்யும் எல்லாவிதமான தந்திரங்களையும் முறிய அடித்து, தேவன்
ஒவ்வொருநாளும் பாதுகாத்து நடத்துவார்.
வியாதிகளோ, பெலவீனங்களோ, வீண் பண விரையங்களோ
ஒன்றும் வராதபடிக்கு தேவன் பாதுகாப்பார்.
தேவனுடைய பராமரிப்புக்குள்
இருத்தல்
தேவனுடைய பாதுகாப்பில் இருக்கும் குடும்பத்தை தேவன் பராமரித்து நடத்துவார்.
அனுதினமும் தேவைகளைச்
சந்தித்து எந்த குறைவுகளும்
இல்லாதபடி ஒவ்வொரு நாளும் வழி நடத்துவார்.
“உன் கைகளின் பிரயாசத்தை
நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்” (சங்கீதம் 128:2). உழைக்கிற எல்லோரும் தங்கள் பலனைப் பெற்றுக்கொள்வதில்லை.
காரணம் அவர்கள் தங்கள் தேவைகளை
முன் வைத்தே தங்கள் வாழ்க்கைப்
பயணத்தைத் தொடர்கிறார்கள்.
ஆனால் எந்த குடும்பம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்பாக
வைத்து, செய்கிற எந்த வேலையிலும் தேவனுடைய
கரம் கூடவே இருந்து அதில்
எந்த தோல்வியும், விரையமும் ஏற்படாதபடிக்கு அதில் தனது நன்மைகளை
தருகிறார்.
“உன் தேவனாகிய கர்த்தரை
நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு
ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான
பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:18) என்று வேதம் கூறுகிறது.
மேலும், “நீ கையிடும் எல்லா
வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்”
(உபாகமம் 28:8). எவ்வளவுதான் ஒரு மனிதன் பிரயாசப்பட்டு
வேலை செய்தாலும் அதை தேவன் அங்கீகரிக்க
வேண்டும்.
அநேகர் வேலையை, தொழிலைத்
தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. தொழிலை
செய்வதற்கும், வேலையை செய்வதற்கும் தேவனே
பெலன் கொடுக்கிறார். தொழில் செய்கிறவர்கள், வேலை
செய்கிறவர்கள் தேவனை முன்பாக வைத்து
செயல்படும் போது தேவன் அதை
விருத்தியடையச் செய்வார்.
அதன் மூலமாக குடும்பத்தின்
தேவைகளை தேவன் பூர்த்தி செய்து,
பராமரிப்பார். தேவன் குடும்பத்தை பராமரிக்கும்
போது அதில் குறையே இருக்காது.
எனவே எந்த சூழலிலும் நாம்
குறைவு பட்டு விடுவோமோ? என்று
கலங்கி நிற்க வேண்டிய அவசியம்
இல்லை. முழுமையாக தேவனை நம்பி, விசுவாசிக்கிறவர்களுக்கு
தேவன் குறைகளை நிறைவாக்குவார்.
தேவ சமாதானத்தை
பெருதல்
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்தில்
சமாதானம் பெரிதாக இருக்கும். “உன்
பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம்
பெரிதாயிருக்கும்” (ஏசாயா 54:13). ஒரு குடும்பம் வாழையடி
வாழையாக சமாதானத்தில் வளர வேண்டும். நீதியில்
வளர வேண்டும். அதற்கு
தேவனால் போதிக்கப் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பத்திற்கு
தேவனுடைய நல்ல வார்த்தைகள் கிடைக்கும்.
உலக மனிதர்களிடத்தில் கூட போதனைகள் மலிந்து
போய் இருக்கிறது. ஆனால் தேவனால் கொடுக்கப்படும்
போதனைகளில் மட்டுமே ஜீவன் இருக்கும்.
ஜீவனுள்ள தேவனுடைய போதனைகளே, பிள்ளைகள் நன்றாக வாழ்வதற்கும், சமாதானம்
பெற்று, சுகமாக வாழ்வதற்கும் ஏதுவாக
இருக்கிறது. இதுதான் குடும்ப சமாதானத்தைப்
பெருக செய்யும்.
தேவன் இல்லாத குடும்பங்களில்,
அல்லது, தேவனை முன்பாக வைக்காத
குடும்பங்களில் எப்பொழுதும் பிரச்சனைகளும், சண்டைகளும், ஓலங்களும் உண்டாகிக் கொண்டே இருக்கும். பிள்ளைகள்,
இந்த உலகத்தின் பிடியில் சிக்கி, சமாதானம் இல்லாமல்
உலகம் செல்லும் வழிகளில் சென்று தங்கள் ஜீவியத்தைக்
கெடுத்துக்கொண்டு, குடும்பத்திற்கும் அவ பெயரை ஏற்படுத்துகிறவர்களாக
இருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களில் சமாதானம் இல்லாமல் அந்த குடும்பமே தத்தளித்துக்கொண்டிருக்கும்.
ஆனால் தேவனுக்கு முன்பாக இருக்கும் குடும்பமோ,
சமாதானம் பெற்று, அதில் பெருகும்.
இதுதான் தேவனுடைய நிறைவான
ஆசீர்வாதம். இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள
ஒவ்வொரு நாளும் தேவனே உமக்கு
முன்பாக எனது குடும்பம் இருக்க
வேண்டும் என்று ஜெபித்து, தேவனுடைய
வழிநடத்துதலின்படி நமது குடும்பத்தை நடத்துவோம்.
நமது குடும்பம் ஆசீர்வாதமான குடும்பமாக விளங்கும்.
0 comments:
Post a Comment