Bread of Life Church India

பெரியவர் நம்மோடு


இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் மூன்று சம்பவங்களை மேற்கோள் காட்டி, வேதபாரகர்களையும்,  பரிசேயர்களையும் கடிந்து கொள்வதை மத்தேயு 12ம் அதிகாரத்தில் காண முடியும்.
வேதபாரகர்களும்,  பரிசேயர்களும் மிகவும் உயர்வாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும் மேலானவர் இயேசு கிறிஸ்து என்பதை இந்த வேதப் பகுதியில் இயேசு கிறிஸ்து அற்புதமாக விளக்கி காண்பித்திருக்கிறார்.   
சாலொமோனிலும் பெரியவர்
தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்” (மத்தேயு 12:42) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
இந்த வசனத்தில்சாலொமோனை குறிப்பிட்டு, இயேசு கிறிஸ்து ஒப்பனை செய்து பேசுவதிலிருந்து  ஆழமான செய்தி என்ன என்பதை வேதாகமத்தின் பிண்ணனியத்துடன் ஆராய்ந்து பார்க்கும் போது, இயேசு கிறிஸ்து சொல்லும்  செய்தியை சுவைக்க முடியும்.
இயேசு கிறிஸ்து குறிப்பிடும்தென்தேசத்து ராஜஸ்திரீயை க்குறித்து 1 ராஜாக்கள் 10 ம் அதிகாரத்திலும், அதே சம்பவத்தை 2 நாளாகமம் 9 ம் அதிகாரத்திலும் வாசிக்க முடியும்.
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்” (2நாளா 9:1)  என்று வேதம் கூறுகிறது.
சேபாவின் ராஜஸ்திரீயைக் குறித்தே இயேசு கிறிஸ்துதென் தேசத்து ராஜஸ்திரீஎன்று குறிப்பிடுகிறார். சாலொமோனின் நாட்களில் வாழ்ந்து வந்த இந்த பெண் சாலொமோனின் ஞானத்தைக்குறித்தும்,, அவனுடைய கீர்த்திகளைக் குறித்தும், அறிந்து தனது தேசத்திலிருந்து, எருசலேமுக்கு வருகிறாள்.
அவள் சாலோமோனிடம் விடுகதைகள் மூலம் கேள்விகளைக் கேட்டு, சாலோமோனின் ஞானத்தைச் சோதிக்கிறாள். அவளுடைய எல்லா விடுகதைகளையும் சுலபமாக சாலோமோன் விடுவிக்க மிகுந்த ஆச்சரியப்பட்டு, தான் கொண்டு வந்த பரிசுகளை வழங்குகிறாள்.
மேலும்ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.
நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது” ( 2 நாளா 9:5,6) என்று சொல்லி வியந்து சாலோமோனைப் புகழ்கிறாள்.
இதில் முக்கியமான செய்திகளை நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த பெண் தனது தேசத்தில் சாலோமோனின் ஞானத்தைக்குறித்து கேள்விப்படுகிறாள்.
சாலோமோனின் ஞானத்தைக் காணவேண்டும் என்றும், அதை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் மேலும் அதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்றும் தனது தேசத்திலேயே தீர்மானத்துடன்மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு  வருகிறாள்”.
இங்கு நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தைத் தேடி வந்த இந்த பெண்ணின் ஆர்வம், மேலும் அவளின் முயற்சி, அவளுடைய செயல் இவைகள் சாதாரணமானது அல்ல.
இந்த பெண்ணைக்குறித்து இயேசு கிறிஸ்துபூமியின் எல்லைகளிருந்துவந்தாள் என்ற கூடுதல் செய்தியைக் குறிப்பிடுகிறார். இங்கு ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாலோமோன் இருந்தயூதேயாதேசம், பூமியின் மையப் பகுதியில் இருக்கிறது. ஆனால் இந்த பெண்பூமியின் எல்லைகளில் இருந்து வந்திருக்கிறாள். யூதேயா தேசத்திற்கும் இந்த பெண்ணின் தேசத்திற்கும் கிட்ட தட்ட 1800 கிலோ மீட்டரில் இருந்து, 2000 கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம் என்று சில வேத வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
இவ்வளவு தூரங்களை தாண்டி வருவதற்கு அந்த பெண்ணிற்கு பல நாட்கள், பல மாதங்கள் ஆகி இருக்கலாம். இருந்தாலும் அதை எல்லாம் அவள் பொருட்படுத்தாமல், சாலோமோனின் ஞானத்தை நேரிலே பார்த்து, கேட்க வேண்டும் என்றே அவள் வந்திருக்கிறாள். ஒரு தேசத்தின் இராணியாக இருக்கும் பெண் ஞானத்தைத் தேடி வந்தாள்.
ஆகையால் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அலட்சியப்படுத்திய வேதபாரகர்களையும்,  பரிசேயர்களையும் பார்த்தே இயேசு கிறிஸ்துசாலோமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்என்று கூறுகிறார்.
சாலோமோனின் ஞானத்தை கேட்க பல ஆயிரம் மைல் தூரத்திலிருந்து வந்தராஜஸ்திரீநியாயத்தீர்ப்புநாளிலே இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்”. ஏன் என்றால் சாலோமோனை விட பெரியவரின் வார்த்தைகளை அசட்டை செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ள கூடாது என்று அவர்களுக்கு விரோதமாக முறையிடுவாள் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார்.
பிரியமானவர்களே, இக்காலத்திலும் கூட தேவனுடைய வார்த்தைகளை அசட்டை செய்கிறவர்கள் அதிகமாகிக்கொண்டிருப்பதை கண் கூடாக காண முடிகிறது. வாழ்வின் அடித்தளமான தேவனுடைய வார்த்தைகளை கேட்பதற்கு பதில் அலங்காரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆவிக்குரிய வாழ்வுக்கு உகந்தது அல்ல.
யோனாவிலும் பெரியவர்
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்” (மத்தேயு 12:41) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
மகா நகரமாகிய நினிவே பட்டணத்தின் அக்கிரமம் மிகுதியான போது யோனா மூலமாக தேவன் அந்த பட்டணத்தை எச்சரிக்கிறார். “கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது. யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்” (யோனா 3:3,4) என்று வேதம் கூறுகிறது.
நாற்பது நாட்களில் பட்டணம் முழுவதும் அழிக்க பட்டுவிடும் என்ற எச்சரிப்பைக் கேட்ட, அந்த பட்டணத்தின் இராஜா முதல் பெரியோரில் இருந்து சிறியோர் வரை ஆடு, மாடு மிருக ஜீவன்கள் முதற்கொண்டு, உணவு எடுத்துக்கொள்ளாமல், தண்ணீர் கூட குடிக்காமல் தேவ சமுகத்தில் , காத்திருந்து தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட, மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பினர். விடுதலையை பெற்றுக்கொண்டனர்.
நாற்பது நாட்கள் மட்டுமே வாழ்வதற்கு தேவன் நாட்களை குறித்து விட்டார் என்ற செய்தியை அறிந்த நினிவே மக்கள் அந்த நாற்பது நாட்களும் தேவனுடைய சமூகத்திலேயே அமர்ந்து விட்டனர். ஆகையால் நடந்தது என்ன? தேவன் மனமிறங்கினார்.  நினிவே பட்டணம் அழிவில் இருந்து தப்பித்துக்கொண்டது.
யோனாவின் மூலமாக உரைக்கப்பட்ட எச்சரிப்பின் சத்தத்திற்கு மக்கள் செவி கொடுத்தனர். “யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்”. எனவே, இயேசு கிறிஸ்துவின் எச்சரிப்பு வார்த்தைகளுக்கும், அவருடைய சத்தத்திற்கும் செவி கொடுக்காமல் செல்பவர்களுக்கு விரோதமாகநினிவே பட்டணத்தார்எழுந்து நின்று குற்றம் சாட்டுவார்கள்  என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
தேவாலயத்திலும் பெரியவர்
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத் 12:6) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். தேவ ஆலயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தேவாலயத்தின் முக்கியத்துவத்தை சரியாக உணர்ந்து கொள்ள வில்லை.
ஆசரிப்பு கூடாரமேசாலமோனின் நாட்களுக்கு பின்தேவாலயமாகவிளங்குகிறது. ஆனால் அந்த ஆசரிப்பு கூடாரமும், தேவாலயமும், இயேசு கிறிஸ்துதான் என்பதை மறந்து போனதுதான் பரிதாபம்.
ஆகையால்தான் இயேசு கிறிஸ்து தேவாலயத்துடன் தன்னை ஒப்பிட்டு பேசுகிறார். “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்” (யோவான் 2:19-21). ஆனால் அவர்களோ, ஆலயத்தை வெறும் கட்டிடமாக கண்டார்கள். ஆகையால்தான் அதைப் புதுபிக்கவே நாற்பத்தாறு வருஷம் ஆனதே, இவர் எப்படி மூன்று நாளைக்குள்ளே கட்டுவார்  என்று கேட்பதைப் பார்க்கிறோம்.
தேவாலயம் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்பனையாகவே பழைய ஏற்பாட்டு நாட்களில் விளங்குகிறது  என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்” (வெளி 21:22) என்று வேதாகமம் கூறுகிறது. பரலோகத்திலே மனிதர்களின் கைகளால் கட்டப்பட்ட ஆலயம் இல்லை. ஏன் என்றால்  இயேசு கிறிஸ்துவே  ஆலயம். இதை உணர்த்துவதற்காகவேதேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார்என்று இயேசு கிறிஸ்து தன்னைக்குறித்து குறிப்பிடுகிறார்.
சாலமோனிலும் பெரியவர்
யோனாவிலும் பெரியவர்
தேவாலயத்திலும் பெரியவர்
பிரியமானவர்களே, “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4) என்று வேதம் கூறுகிறது. அவரை மட்டும் நாம் உயர்த்துவோம்.
இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் விட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெரியவர். நாம் உலகத்தை ஜெயிக்க வேண்டுமானால் அவர் நம்மோடு கூட இருக்க வேண்டும். அதற்கு நாம் அவரோடு கூட இருக்க வேண்டும்.
எனவே பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வில் எந்த அளவுக்கு நாம் இயேசு கிறிஸ்துவை உயர்த்துகிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கை உயர்த்தப்படும். நாம் கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாக்கப்படுவோம்.  நம்முடைய ஜென்ம சுபாவம் அழிக்கப்படும் போது, நாம் கிறிஸ்துவுக்குள் உன்னத வாழ்வின் நிறைவை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.
பெரியவர் நமக்குள்ளே….
மிகவும் பெரியவர் நமக்குள்ளே….



0 comments:

Post a Comment