உள்ளத்திலிருந்து உங்களுடன்
கிறிஸ்துவுக்குள் இனிமையான ஜீவ அப்பம் வாசகர்களே,
சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
அன்பின் வாழ்த்துக்கள்.
மறுபடியும் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரில் உங்களில் சிலரை
காண முடியாவிட்டாலும், தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக உங்களை சந்திப்பதில்
மிகுந்த சந்தோஷப்படுகிறேன்.
நம்முடைய தலைமுறையில் தேவன் நமக்கு கொடுத்த
பொறுப்புக்களை சரியாக உணர்ந்து செயல்படுத்த
வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும்
ஜீவ அப்பம், இந்த தலைமுறையில்
அநேகர் கிறிஸ்துவுக்குள் வளர்ந்து பெருகவும், கிறிஸ்துவுக்குள் கட்டப்படவும்
செயல்பட்டு வருகிறது.
வேத வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து,
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களுக்கும், போராட்டங்களுக்கும் எதிராக போராடுவதில் நீங்கள்
சோர்ந்து போகாமல், ஒவ்வொரு நாளும் தேவ
ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, நிலைத்து நிற்க ஜெபத்துடன் உற்சாகப்படுத்துகிறோம்.
அநீதியால் கிடைக்கும் உலக லாபத்தை விட,
நீதியில் கிடைக்கும் பரலோக நன்மை மேலானது
என்பதை தேவ பிள்ளைகள் நன்றாக
அறிந்திருக்க வேண்டும். “சின்ன மீனை போட்டு,
பெரிய மீனை பிடிக்க வேண்டும்”
என்று உலகத்தில் ஒரு வழக்கச் சொல்
உண்டு. அது போல உலக
ஆசைகளை காண்பித்து, விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை கொள்ளையிடுவதுதான் பிசாசின் தந்திரம்.
நாம் கிறிஸ்துவை தேடுவது
உலக ஆதாயத்திற்காக அல்ல, மேலான பரலோக
பொக்கிஷங்களை பெற்றுக்கொள்வதற்காகவே. உன்னதமான சகல ஆசீர்வாதங்களுக்கும் சொந்தக்காரர்களாகிய
நாம், அற்பமான உலக ஆசைகளுக்கு
இடங்கொடுக்காமல் நம்மை கிறிஸ்து இயேசுவுக்குள்
காத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்களில் ஆவிக்குரிய
மலட்டு தன்மைகள், மலிந்து காணப்படுகிறது. ஆவிக்குரிய
வாழ்வின் மேன்மை அறியாமல் அநேகர்
கிறிஸ்தவர்கள் என்ற பெயர்களில் இருப்பது
வருந்தத்தக்கது. ஆவிக்குரிய வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து
பெருக வேண்டும். ஆவிக்குரிய வளர்ச்சி நம்முடைய வாழ்வில் வெளிப்பட வேண்டும்.
நம்மை சுற்றிலும் இருக்கும்
மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை
அறிவிப்பதில் ஒரு நாளும் நாம்
தாமதம் பண்ணக் கூடாது. நமக்கு
கிடைக்கும் நேரங்களில் கட்டாயமாக ஒவ்வொருவரும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும்.
நீதியுள்ள சமுதாயம், நேர்மையான சமுதாயம் உருவாக வேண்டுமானால் சுவிசேஷம்
அறிவிக்கப்பட வேண்டும். சுவிசேஷத்தின் ஒளி இருளில் இருக்கும்
மக்களை விடுவிக்கும்.
நமக்கு கிடைக்கும் வழிகளில்
சுவிசேஷத்தை நாம் அறிவித்துக்கொண்டே இருக்க
வேண்டும். யாரோ ஒருவர் அறிவிப்பார்கள்
என்று ஒரு போதும் நம்முடைய
கடமைகளை மறந்து நாம் இருக்க
கூடாது.
மேலும், இளைய தலைமுறை
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பதற்கு சரியான மாதிரிகள் இந்த
நாட்களில் தேவை. மற்றவர்களுக்கு நன்றாக
உபதேசிக்கும் அநேகர் தாங்கள் மாதிரியாக
இருப்பது இல்லை.
மாதிரியாக இல்லாமல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.
அர்ப்பணிப்பு இல்லாமல் எழுப்புதல் உண்டாகாது. கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றாமல், உபதேசிக்க முடியாது.
தேவன் நமக்காக கொடுக்கும்படி
வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் நாம் எதிர்பார்ப்பதற்கும் மேலாக
இருக்கிறது. தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்களில்
வேதனைகள் இருக்காது.
கிறிஸ்துவினுடைய சுவிசேஷமே சம்பூரணமான ஆசீர்வாதங்களை கொடுக்கிறது. எந்த அளவுக்கு நாம்
சுவிசேஷத்தில் வளர்கிறோமோ, அந்த அளவிற்கு சம்பூரணமான
ஆசீர்வாதங்களை நிறைவாக பெற்றுக்கொள்வோம்.
நமது ஜீவ அப்பம்,
கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் கிடைக்கும் சம்பூரணமான
ஆசீர்வாதங்களை எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்
தேவனுடைய பணிகளை செய்து வருகிறது.
சோர்ந்து போனவர்களை தேவனுடைய வார்த்தையால் உற்சாகப்படுத்தவும், சத்தியத்தை அறிய வேண்டும் என்ற
தாகம் உள்ளவர்களுக்கு சத்தியத்தின் மகத்துவங்களை வெளிப்படுத்தவும், இயேசு கிறிஸ்துவின் மேன்மையான
சுவிசேஷத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சையாக உள்ளவர்களுக்கு வழிகாட்டவும், தேவ கிருபையால் வெளி
வந்து கொண்டிருக்கிறது.
அன்பான வாசக முத்துக்களே,
உங்களின் தொடர் ஜெபங்களும், பங்களிப்பும்
இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தனி ஒருவராய் செயல் படுவது தனி
மனித சாம்ராஜ்யத்தையே உண்டாக்கும். இணைந்து செயல்படுவதே தேவனுடைய
ராஜ்யத்தைக் கட்டும். தேவனுடைய ராஜ்யத்தை கட்டும் பணியில் தீவிரமாக
செயல்பட்டுக்கொண்டிருக்கும்,
ஜீவ அப்பத்துடன் நீங்களும் இணைந்து செயல்பட உங்களை
உற்சாகப்படுத்தி, அன்புடன் அழைக்கிறோம்.
உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறோம். கர்த்தர்
உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு
கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
0 comments:
Post a Comment