Bread of Life Church India

தண்ணீர் இல்லா மேகங்கள்




 துர் உபதேசம்மிக கொடிய ஆவிக்குரிய வியாதி. மெல்ல மெல்ல விசுவாச வாழ்வை அழிக்க முயற்சிக்கும் உயிர்கொல்லி, இதில் அறிந்து சிக்கியவர்களை விட அறியாமல் சிக்கியவர்களே அதிகம்.
கிறிஸ்துவை விட்டு, பிரித்து, ஒழுக்க நெறிகளை விட்டு விலக்கி, பரிசுத்தவாழ்வுக்கு தகுதியில்லாமல் மாற்றி, தேவனுடைய ஐக்கியத்தை விட்டு முழுவதுமாக  பிரிப்பதுவே, துர் உபதேசத்தின் நோக்கம்.
எனவே ஆவிக்குரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும், தெரிந்து கொள்ள வேண்டியதும் மிக மிக அவசியம். இதன் தன்மை என்ன? இதன் ஊடுருவல் எப்படிப்பட்டது? என்பதை  வேத வசனங்களின் மூலமாக அறிந்தால் இதன் தாக்குதலில் இருந்து  தற்காத்துக் கொள்ளலாம்.

நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்;” (யூதா 3)  என்று திருச்சபையின் ஆதி நாட்களிலேயே தேவ பிள்ளைகளுக்கு ஆவியானவர் எச்சரிக்கிறார். விசுவாச வாழ்வில் உள்ளவர்களை நேரடியாக இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கச் செய்வது கூடாத காரியம். எனவேதான் அப்படிப்பட்டவர்களின் செயல்கள் பக்க வழியில் இருக்கிறது.
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபே 2:8) என்று வேதம் கூறுகிறது. ஆனால் இரட்சிப்புக்காக கொடுக்கப்பட்ட கிருபையை, “கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து, தங்கள் சுய இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள, அதாவது தங்களுக்கு ஏற்ற விதங்களில் வேதாகமத்திற்கு விரோதமான உபதேசங்களை விதைத்து, தங்கள் சுய ஆதாயங்களுக்காக செயல்படுத்த ஆரம்பித்ததேதுர் உபதேசம்.
இப்படிப்பட்டவர்களின் செயல்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பவர்களிடம் செயல்படாது என்று அறிந்து, கிறிஸ்துவை விட்டு, பிரிக்கும் முயற்சியில் இறங்கி கிறிஸ்துவை விட்டும், வேதாகம ஒழுக்க நெறிகளை விட்டும், பிரிக்கும் முயற்சியே  துர் உபதேச குழுக்களின் அடிப்படைத் திட்டம்.
ஆகையால் தான் அப்படிப்பட்டவர்களைக் குறித்துஅவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்” (2 பேதுரு 2:1) என்று வேதம் கூறுகிறது. அப்படிப்பட்டவர்களின் மூலமாக தந்திரமான வேத புரட்டுகள் செய்ய வைத்துகிரயத்துக்கு கொண்ட ஆண்டவரை” (இயேசு கிறிஸ்து) மறுதலிக்க செய்வது பிசாசின் மிகப் பெரிய தந்திரம். அப்படிப்பட்டவர்களின் தந்திரத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
இரட்சிப்புக்கு பல வழிகள் இருக்கிறது, அதில் இயேசுவும் ஒரு வழி அவ்வளவுதான். இயேசுகிறிஸ்து இரட்சிப்பின் கருவி மட்டும்தான் என்று கூறி இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டும் கிடைக்கும்  இரட்சிப்பை மட்டுப்படுத்துவதே அப்படிப்பட்டவர்களின் இலக்கு.
மேலும், இயேசு கிறிஸ்து தெய்வீக தன்மை உள்ளவர் அல்ல, அவர் தூதர்களுக்கு முன்பாக  படைக்கப்பட்டவரே என்று கூறி, சம்மந்தம் இல்லாத வசனங்களைக் காண்பித்து, விசுவாச மக்களை குழப்பி, இயேசு கிறிஸ்துவை விட்டு பிரிக்க வேண்டும்  என்பதுதான் துர் உபதேச குழுக்களின் செயல்பாடுகள்.
இக்காலத்திலும் கூட இது போல சில குழுக்கள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த குழுக்களின் இலக்கு எல்லாம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்தான். விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்கள், விசுவாச வாழ்வை புதிதாக ஆரம்பித்தவர்களை இலக்காக வைத்து, பைபிள் ஸ்டெடி எடுக்கிறேன் என்ற பெயரில் தந்திரமாக வீடுகளுக்குள் புகுந்து, சில வேத வசனங்களைச் சொல்லி குழப்பி, இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை மறுதலிக்க செய்து, இயேசு கிறிஸ்துவை விட்டு பிரிக்க பல விதங்களில் செயல்படுகின்றன. விசுவாச மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
முதலாவது நம்முடைய விசுவாசம் என்ன? நாம் எவ்விதம் இரட்சிக்கப்பட்டுள்ளோம், நம்முடைய இரட்சகர் யார்? கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைகள் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். யார் என்ன சொன்னாலும் காற்று வீசும் பக்கம் எல்லாம் தன்னை வளைத்துக் கொள்ளும்நாணல்போல் ஆவிக்குரிய வாழ்வில் இருக்க கூடாது.
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்” (2 யோவான் 7) என்று வேதம் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தையும், தேவனே மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதையும் மறுதலிக்கும்படி எழும்புகிறவர்களையே வேதம்  வஞ்சகர்கள் என்று அடையாளப்படுத்துகிறது.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது” (1யோவான் 4:1-3)
துர் உபதேசத்தையும், கள்ளப்போதகர்களையும் அறிந்து கொள்வதற்கு வேதாகமம் தெளிவான வசனங்களை நமக்குக் கொடுத்திருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கை பண்ணாமல் இருப்பவர்களே, துர் உபதேசக்காரர்கள், கள்ள தீர்க்கதரிசிகள். அப்படிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  
இயேசு கிறிஸ்து எப்படி 100% தேவனோ, அதே வேளையில் அவர் இந்த பூமியில் சரீரத்தில் இருந்த நாள்களில் 100% சதவீதம் மனிதனாகவும் இருந்தார்.
இயேசு கிறிஸ்துவை வேதம் தேவ குமாரன் என்று அழைக்கிறது, அதே வேளையில் மனுஷ குமாரன் என்றும் அழைக்கிறது. இங்கு ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். “தேவ குமாரன்என்பது தேவனுடைய மகன் என்று அர்த்தம் கொள்ளும் வார்த்தை அல்ல. அவரேதேவன்என்று விளக்கும்பதம்”. தேவன் என்பதைத்தான்தேவ குமாரன்  என்று வேதம் கூறுகிறது. இது போலவேமனுஷ குமாரன்என்னும் பதமும்மனிதனின் மகன்என்று அர்த்தம் கொள்ளும் வகையில் எழுதப்படாமல்மனிதன்என்று குறிப்பிடும் விதமாகவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வித வார்த்தைகளை வாசிக்கும் போது அதன் சரியான அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்களின் இரட்சிப்புக்காக மனுஷ குமாரனாக வந்த  இயேசுவே தேவன்என்று வேதம் மிக தெளிவாக கூறுகிறது.
இவ்வித வேதாகம உபதேசத்திற்கு விரோதமாக இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை குறைத்து போதிக்கப்படும் உபதேசங்கள்துர் உபதேசங்கள்என்று அறிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்டவர்களை குறித்துஇவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது” (யூதா 1:12,13) என்று வேதம் கூறுகிறது.
சத்தியத்தியத்திற்குள் இருப்பவர்களை பிரிக்கும்படி செயல்படுகிறவர்கள் தேவனுடைய தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை வேதாகமம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகிறது.
                மேலும்உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” (கலா 1:6-8). “வேறொரு சுவிசேஷம்என்று வேதம் எதைக்குறித்து கூறுகிறது?
கலாத்திய சபையில் இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிக்கப்பட்டவர்களை மறுபடியும்விருத்தசேதனம்செய்தால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும்  என்று  கூறி விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டாகும் இரட்சிப்பின் சுவிசேஷத்தை மாற்றும் படியாக விசுவாச மக்கள் விருத்தசேதனம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதையும், சிலர் அப்படிப்பட்ட வஞ்சகர்களின் வலையில் விழுந்து, விருத்தசேதனம் செய்து கொண்டதையும் அறிந்த பவுல் அப்போஸ்தலன் அதற்கு விரோதமாக தேவ வைராக்கியம் கொண்டு எழும்புவதும், அதற்கான முழு விளக்கத்தையும் கொடுப்பதுமே கலாத்திய நிருபம்.
இதனுடைய தன்மை என்ன ? இன்னொரு மார்க்கத்தில் இருந்து வந்து, விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின்  மூலம் இரட்சிக்கப்பட்டவர்களை மறுபடியும் பழைய பாரம்பரியங்களுக்கு நேராக நடத்திச்செல்ல, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை புரட்டி, வஞ்சகமாக கிறிஸ்துவின் உபதேசத்தை விட்டு, பிரிப்பதுவேதுர் உபதேசம்”. மனித பாரம்பரியங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை மறுபடியும் பாரம்பரியங்களின் நுகங்களுக்கு கீழ் கொண்டு செல்வதும், மறுபடியும் நியாயப்பிரமாணத்தின் நுகத்தடிகளுக்கு நேராக கொண்டு செல்வதும் கிறிஸ்துவின் இரட்சிப்பை விட்டு பிரிக்கும் செயல்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இரட்சிக்கப்படுவது விசுவாசத்தினால் மட்டுமேகிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” ( எபே 2:8) என்று வேதம் மிக தெளிவாக கூறுகிறது. ஆனால் கிரியையினால் மட்டுமே மனிதன் இரட்சிக்கப்படுகிறான் என்று கிரியையை முன் வைத்து உபதேசிக்கப்படும் உபதேசங்கள்துர் உபதேசம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும், துர் உபதேசிகளின் உபதேசம் வேதாகம அடிப்படை உபதேசங்களுக்கு எதிராக இருக்கும்.  கிறிஸ்துவின் கன்னி பிறப்பு (மத் 1:23), கிறிஸ்துவின் தேவத்துவம் (பிலி 2:6), இயேசு கிறிஸ்து ஆராதனைக்குரியவர் (பிலி 2:10,11) விசுவாசத்தினால் இரட்சிப்பு (எபே 2:8) திருச்சபை ஐக்கியம் (எபிரெயர் 10:25), ஆவியின் வரங்கள் (1 கொரி 12:1), நித்திய நியாயத்தீர்ப்பு (வெளி 20:12), நித்திய நரகம் (வெளி 20:14), நித்தியமான பரலோக வாழ்க்கை (வெளி 21:3)  போன்ற வேதாகமத்தின் அடிப்படை உபதேசத்திற்கு எதிராக மாறுபாடான உபதேசங்களை அதாவதுதுர் உபதேசத்தைபோதிப்பவர்களையே வேதாகமம் கள்ளப்போதகர்கள் என்று அடையாளப்படுத்துகிறது.
இப்படிப்பட்டவர்களைக் குறித்தேகிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்” (2 யோவான் 1:9,10) என்று வேதாகமம் எச்சரித்து கூறுகிறது. ஏன் அப்படிப்பட்டவர்களை, வீடுகளில் ஏற்க கூடாது, வாழ்த்துதல் சொல்ல கூடாது என்றால், அப்படிப்பட்டவர்களின் நோக்கமும், திட்டமும், செயலும் கிறிஸ்துவை விட்டுப் பிரித்து வஞ்சக வலையில் விழவைப்பதுதான். எனவே தான் அப்படிப்பட்டவர்களை விட்டு விலகும் படி வேதாகமம் போதிக்கிறது.
வேதாகமத்தின் அடிப்படையான உபதேசங்களுக்கு எதிரிடையாக செயல்படுகிறவர்களையும்,  விசுவாச மக்களை இயேசு கிறிஸ்துவை விட்டு பிரிக்க தந்திரமானதுர் உபதேசத்தையும்  தேவ பிள்ளைகள்  அறிந்து விலக வேண்டும். 
கிறிஸ்துவை விட்டு, பிரிக்கவைக்கும் எந்த வஞ்சகங்களுக்கும் தேவ பிள்ளைகள் இடங்கொடுக்காதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவில் வளர்வதற்கு ஏதுவான சத்தியங்களை அறிந்து நாளுக்கு நாள் வளர்ந்து பெருகவும், இதில் நிலைத்திருந்து, தேவ ஆசீர்வாதங்களைப் பெற்று, நித்திய ஜீவனுக்கு பங்குள்ளவர்களாய் மறுரூபமாக வேண்டும்.

0 comments:

Post a Comment