Bread of Life Church India

அழைக்கப்பட்ட ஊழியன்

ஊழியத்திற்கு வருகிறவர்களை (வந்தவர்களை) மூன்று வகையாக பிரிக்கலாம் 

1. ஆசையில் வருபவர்கள்

2. அர்ப்பணிப்பில் வருபவர்கள்.

3. அழைப்பில் வருபவர்கள்


1. ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் வருபவர்கள் தாங்கள் நினைத்தபடி அல்லது தாங்கள் எதிர்பார்த்தபடி ஊழியத்தில் பிரபலமாக முடியவில்லை... 

பொருளாதாரத்தில் உயர்வை பெற முடியவில்லை என்றால், தங்கள் சுய முயற்சியில் வேதாகமத்திற்கு நேர் எதிராக செயல்பட்டு, வேதாகமத்தின் உபதேசத்தை மாற்றி உலக வழக்கத்தின் படி மனிதர்களை கவர்ந்திழுக்கும்படியான செயலை துணிகரமாக செய்ய ஆரம்பித்து விடுவார்கள்...

மற்றவர்கள் தங்களை குற்றப்படுத்தினால் தாங்கிகொள்ள மாட்டார்கள். பொருளாதாரத்தை மட்டும் முக்கியத்துவப்படுத்துவார்கள். பிரபலமாக வேண்டும் என்று துடித்துக்கொண்டிருப்பார்கள்...

தாங்கள் மதிக்கப்பட வேண்டும்... மேன்மையாக மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று புகழ்ச்சிக்கு மயங்கி நிற்பார்கள். சிறு தோல்வியையும் தாங்கி கொள்ள மாட்டார்கள். குறைவுகளில்  மனரம்மியமாக இருக்க மாட்டார்கள். நெருக்கடியான சூழ்நிலையை நிதானமாக கையாள மாட்டார்கள்..

விசுவாச மக்களை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள்... போலியான அன்பு செலுத்துவார்கள்... பொருளாதாரத்தில் உயர்ந்து, பிரபலமாக இருப்பவர்களை மட்டும் மதிப்பார்கள்... ஏழ்மை நிலையில் இருப்பவர்களை இழிவாக எண்ணுவார்கள்... உதாசீனப்படுத்துவார்கள். தங்கள் சுய ஆதாயத்தை மட்டுமே முன் வைத்து எந்த ஒரு செயல்களையும் செய்வார்கள். விசுவாசிகளை தங்கள் சுய ஆதாயத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்வார்கள்.. விசுவாசிகளுக்கு நிஜத்தை போதிக்காமல் தங்கள் மாயவலையில் தங்களுக்காக எதையும் செய்யும் கூட்டத்தை உருவாக்கி கொண்டே இருப்பார்கள்... அவர்களை மட்டுமே அருகில் வைத்துக்கொள்வார்கள்... 


2. ஊழியம் செய்ய வேண்டும் என்றும், ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும் என்றும் வாஞ்சையுடன் தங்களை ஊழியத்திற்கென்று அர்பணித்து வருபவர்கள்... 

ஆரம்ப காலங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஆத்தும ஆதாய பணி செய்வார்கள்... மிகுந்த வைராக்கியமாக இருப்பார்கள். தங்களை மிகவும் வருத்திக்கொள்வார்கள்... தங்கள் உடல் நிலையை கவனித்துக்கொள்ள மாட்டார்கள்... குடும்பத்தில் கூட அன்பாக இருக்க மாட்டார்கள். மற்றவர்கள் செய்யும் சிறிய தவறு கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது... மற்ற விசுவாசிகளையும், ஊழியர்களையும்... தங்கள் அர்பணிப்பை வைத்து... தங்கள் கண்ணோட்டத்தின்படி  நியாயம் தீர்ப்பார்கள்.... யாருமே சரியில்லை ... என்னை போல யாருமே ஊழியம்  செய்ய வில்லை... என்று எப்போதும் மற்றவர்களை குறை சொல்வதிலும், குற்றப்படுத்துவதிலும் மட்டுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்துவார்கள்...

அன்பு, ஐக்கியம் ... கிறிஸ்துவின் சுபாவம் இல்லாமல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாய் கோபத்துடனே இருப்பார்கள் அதுதான் தேவ சித்தம் என்றும் சிலாக்கித்துக்கொள்வார்கள்...

கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை பேசுவார்கள்..‌அவர்கள் செயல் தவறு என்று யாராவது அவர்களுக்கு எதிராக பேசி விட்டால் அவர்களை எப்படி அவமானப்படுத்தலாம் என்று அதற்கான நேரத்தை பார்த்துக்கொண்டே இருந்து...தங்களுக்கு எதிராக பேசியவர்களை கண்டம் பண்ணி விடுவார்கள். தங்களை மிகுந்த பரிசுத்தவான்களாக கண்பித்துக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்... மற்றவர்களின் சிறு தவறுகளையும் பெரிதுபடுத்துவார்கள்... தங்களுடைய பெரிய தவறுகளுக்கும் கூட நியாயம் கற்ப்பிப்பார்கள். தாங்கள் செய்வது எல்லாம் சரி என்று வாதிடுவார்கள்...

தாங்கள் பேசுவது எல்லாம் சத்தியம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள். தங்கள் சுய புராணம் பேசிக்கொண்டே இருப்பார்கள்... ஒருவருக்கு சிறிய உதவி செய்தாலும் தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்.. மற்றவர்களை பாராட்ட மாட்டார்கள்... மற்றவர்களை உயர்வாக எண்ண மாட்டார்கள்...

3. ஊழியத்திற்கென்று தேவனால் முன் குறிக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டு, தேவனால் அழைக்கப்பட்டவர்கள்...

இயேசு கிறிஸ்துவின் சுபாவத்துடன் அன்புடனும் ... அற்பணிப்புடனும் இயேசு கிறிஸ்துவின் மன நிலையில் செயல்படுவார்கள்... ஊழியம் செய்வார்கள்... அவர்களின் கண்டிப்பில் அன்பு இருக்கும்.. கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அன்பு செலுத்தி, அரவணைக்க வேண்டிய இடத்தில் அரவணைத்து, விசுவாசிகள் எவ்வளவு முரண்டு பிடித்தாலும்... முரட்டாட்டமாக நடந்து கொண்டாலும் அவர்களை விரோதிகளை போல நடத்தாமல் பெற்ற பிள்ளை எவ்வளவு முரண்டு பிடித்தாலும் தகப்பன் எப்படி பிள்ளையை நடத்துவானோ அவ்விதமாக தகப்பனின் உள்ளத்தோடு விசுவாச மக்களை கர்த்தருக்கு நேராக வழி நடத்துவார்கள்... 

பிறருடைய தவறுகளை மன்னித்து, தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கூட வைராக்கியமாக அணுகாமல் அன்பாக அணுகுவார்கள்... மற்றவர்களுடைய தவறுகளை கண்டிக்கிறேன் என்ற பெயரில் பிறரிடம் சொல்லி, அவர்களை மன வேதனை அடைய செய்ய மாட்டார்கள்... மற்றவர்களை இழிவாக நடத்த மாட்டார்கள்... விழுந்து போனவர்களை தூக்கி விடுவதில் மட்டுமே அவர்கள் கவனம் இருக்கும்.. மாறாக எப்போது விழுவார்கள் அவர்களை எப்படி அவமானப்படுத்தலாம் என்று துளியும் நினைக்க மாட்டார்கள்...  அதே வேளையில் வேதாகம உபதேசத்தில் நிலைத்திருப்பார்கள்... மற்றவர்களுக்கு மாதிரியாக இருப்பார்கள்... தங்கள் தவறுகளையும் கண்டு பிடித்து திருத்திக்கொண்டே இருப்பார்கள்... 

மற்றவர்களின் நற்செயலை பாராட்டி, அவர்களை உற்சாகப்படுத்துவார்கள்... நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்...

ஒவ்வொருவருடைய வளர்ச்சியின் அளவை கண்காணித்து... அடுத்த அடுத்த நிலைக்கு அவர்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துவார்கள்... பொருளாதாரத்தில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் , தங்கள் தேவைகள் முழுமையாக சந்திக்கப்படாவிட்டாலும்... தங்கள் செயல்கள் மதிக்கப்படா விட்டாலும்... மற்றவர்கள் தங்களை உதாசீனப்படுத்தினாலும்... எந்த கஷ்டத்தையும் , கஷ்டமாக நினைத்து அழுது புலம்பி கொண்டே இருக்க மாட்டார்கள்... கடந்து வந்த கஷ்டங்களை சொல்லி சொல்லி, எந்த ஆதாயத்தையும் தேட மாட்டார்கள்.

கஷ்டத்தையும் தங்கள் இஷ்டமாக்கி கொண்டு... யாரையும் குறை சொல்ல மாட்டார்கள்... தேவனிடத்தில் மனதாங்கல் அடைய மாட்டார்கள்... முறுமுறுக்க மாட்டார்கள்... தேவனிடத்தில் கேள்விகளை கேட்டு தங்களை நியாயப்படுத்த மாட்டார்கள்..

எவ்வளவு நெருக்கங்கள் வந்தாலும், குறைவுபட்டாலும் ஊழியத்தை வெறுக்க மாட்டார்கள்... ஊழியத்திற்கு வந்ததே தவறு என்று எந்த சூழ்நிலையிலும் மனம் நொந்துகொள்ள மாட்டார்கள்..

கர்த்தர் நடத்துகிற வழியில் எவ்வளவு நெருக்கங்கள் வந்தாலும் மன ரம்மியமாக தங்கள் பொறுப்பை உணர்ந்து தேவனுடைய ஸ்தானாதிபதியாக செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள் இந்த உலகத்தில் இருந்து வருகிற எதுவுமே அவர்கள் செய்யும் ஊழியத்தை தடைசெய்ய இடங்கொடுக்க மாட்டார்கள்... மனமடிவடையும் படியான சூழ்நிலை வந்தாலும் சுதாரித்து கொண்டு... அழைப்பில் நிலைத்திருந்து... அடுத்த தலைமுறையையும் உருவாக்கி வைத்து ... தங்கள் அழைப்பை நிறைவேற்றி முடித்து... தங்கள் ஆவியை தங்கள் எஜமானிடம் (தகப்பனிடம்) ஒப்படைப்பார்கள்...

கிறிஸ்துவின் அழைப்பின் பணியில்

பாஸ்டர் V.S. லூர்துராஜ்

ஜீவ அப்பம் திருச்சபை 

சென்னை 19.