Bread of Life Church India

பயனுள்ள கருவிகளாய்.........

கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் அன்பு வாசக குடும்பத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபத்துடன் வாழ்த்துக்கள்.
இம்மட்டுமாக நம்மைக் காத்து வழி நடத்தி வரும் இம்மானுவேலாகிய தேவனுக்கு எல்லா கனமும், மகிமையும் துதியும் உண்டாவதாக.
நமது ஜீவ அப்பம், ஊழியங்களையும், ஜீவ அப்பம் மாத இதழையும் ஆசீர்வதித்து நடத்தி வரும், அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.
ஜீவ அப்பம் ஊழியமானது தேவனுடைய கிருபையால் அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த ஊழியமானது இன்னும் விரிவடைந்து அநேகருக்குப் பயனுள்ளதாக இருக்க ஜெபியுங்கள்..
அறிவு, இறுமாப்பையும், அன்பு பக்தி விருத்தியடையவும் செய்யும் என்ற வேத வார்த்தையின் படி, அறிவு பெருகிக்கொண்டிருக்கும், தற்கால உலகில் அன்பு குறைந்து கொண்டிருக்கிறது. 

விருத்தியாகும் வாழ்வு

“இந்த தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’’ (ஆதி 26:3)
    ஆண்டவர் குறிப்பிடும் எல்லைக்குள் இருந்து செயல்படும் போது தேவனாகிய கர்த்தர் நம்முடன் இருந்து நம்முடைய செயல்களைப் பெருக செய்கிறார். நன்மையாக மாற்றுகிறார். இது தான் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
    கர்த்தர் நம்மை ஒரு எல்லையில் நிறுத்துவதின் நோக்கமே நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தேவ சித்தம் செய்கிறவர்களாக இருக்கிறோமா? என்பதை காண்பதற்காகவே.
        மேலே நாம் வாசித்த தேவனுடைய வார்த்தையானது ஈசாக்கினிடத்தில் தேவன் சொன்ன வார்த்தை, அது எந்த சூழ்நிலையில்  சொல்லப்பட்டது என்பதை பார்த்தால் பஞ்ச காலத்திலே எகிப்திற்கு போக புறப்பட்ட ஈசாக்கினிடத்தில் “நீ எகிப்திற்கு போக வேண்டாம், இந்த தேசத்தில் வாசம் பண்ணு, நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்பதாகும்.
ஈசாக்கும் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து கேராரூரிலேயே தங்கி விட்டான்.
         தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தத்தின் படி கீழ்ப்படிந்து நடந்தால் என்ன ஆசீர்வாதங்கள் உண்டாகும் என்பதைக் குறித்து அடுத்து அடுத்து உள்ள வசனங்கள் விவரித்து காண்பிக்கின்றன.

தோல்விக்கு தோல்வி

        
எப்போது ஒரு மனிதன் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறானோ, அப்பொழுது அவன் போராட்ட களத்தில் எதிரியை வீழ்த்த தயாராகி விட்டான் என்று எண்ணிக்கொள்ளலாம்.
        இந்த களத்தில் தோல்வியின் விளிம்பை தொடாதவர்கள் இருக்க முடியாது. காரணம் வெற்றி வீரனாய் வலம் வருவதற்கு,  வெற்றியில் பாடம் கற்றவர்களை விட, தோல்வியின் விளிம்பில் பாடம் கற்றவர்களே அதிகம். தோல்வியின் பாதையில் செல்லாதவரை வெற்றியின் அருமை உணரப்படுவதில்லை. ஆகவேதான் தோல்வியின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
       ஆனால் அது முடிவல்ல, வெற்றியே முடிவாக இருக்கும், இவ்வித திடநம்பிக்கையுடன் போராடுபவர்களே, தோல்வியில் துவண்டு போகாமல் எழுந்து ஜெயிக்கிறவர்கள். அவர்களே, போராட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியும்.