Bread of Life Church India

பயனுள்ள கருவிகளாய்.........

கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் அன்பு வாசக குடும்பத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபத்துடன் வாழ்த்துக்கள்.
இம்மட்டுமாக நம்மைக் காத்து வழி நடத்தி வரும் இம்மானுவேலாகிய தேவனுக்கு எல்லா கனமும், மகிமையும் துதியும் உண்டாவதாக.
நமது ஜீவ அப்பம், ஊழியங்களையும், ஜீவ அப்பம் மாத இதழையும் ஆசீர்வதித்து நடத்தி வரும், அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.
ஜீவ அப்பம் ஊழியமானது தேவனுடைய கிருபையால் அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த ஊழியமானது இன்னும் விரிவடைந்து அநேகருக்குப் பயனுள்ளதாக இருக்க ஜெபியுங்கள்..
அறிவு, இறுமாப்பையும், அன்பு பக்தி விருத்தியடையவும் செய்யும் என்ற வேத வார்த்தையின் படி, அறிவு பெருகிக்கொண்டிருக்கும், தற்கால உலகில் அன்பு குறைந்து கொண்டிருக்கிறது. 

தேவனை அறிகிற அறிவில் அன்பு மட்டுமே பெருகும், அதில் இறுமாப்பு இருக்காது, வெறும் மூளை அறிவில் இறுமாப்பு பெருகிவிடும் அதில் அன்பை காண முடியாது.
அதே போல் மூளையில் ஏற்றப்படும் வசனங்கள், மற்றவர்களுக்கு போதிக்க மட்டுமே, பயன்படும். மனதில் வைத்து வாழ்க்கையில் வெளிப்படுத்தும் போதே அது தனக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்கால சூழலில் மிக முக்கிய தேவை வசனத்தின் படி வாழ தன்னை அர்ப்பணிக்கிறவர்களே, இது இக்காலத்தில் நமக்கு முன் இருக்கும் சவால்.
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கிறிஸ்துவின் சாயலாக, கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ள நாம் இதையே நமது முக்கிய தேவையாக வைத்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.
நாம் தேவ சித்தம் செய்ய அழைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணங்களை  ஒரு போதும் மறக்காத படிக்கு இக்கால தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் முன்மாதிரியாக நாம் இருக்க வேண்டியதும் தேவன் நம்மிடம் கொடுத்திருக்கும் மாபெரும் பொறுப்பு என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.
கிருபை பொருந்திய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளே, ஒவ்வொருவரையும் அனல் கொண்டு எழும்ப செய்யும். இந்த வார்த்தைகளை கொடுத்து சத்தியத்தில் எழும்ப வேண்டும் என்பதே தேவன் நமது இருதயங்களில் கொடுக்கும் பாரம்.
தேவன் கொடுத்துள்ள ஆத்தும பாரத்துடனே, தேவனுடைய வழியில் இந்த ஊழியங்களை செய்ய ஜெபத்துத்துடன், பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தேவன் மட்டுமே உதவியாளராக இருந்து நடத்தி வருகிறபடியால் தேவனுக்கே மகிமை உண்டாவதாக. நாம் கருவிகள் மட்டுமே என்பதை ஒரு போதும் மறந்து விடாத இருதயம் கட்டாயம் நமக்கு வேண்டும்.
கருவிகளாக இருக்கும் நாம் இணைந்து செயல்படுவதையே தேவன் விரும்புகிறார். அநேகரின் ஆத்தும பசியை தீர்க்கும் அப்பமாக இந்த ஜீவ அப்பம் அநேகருக்கு சென்றடைய உங்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என்பதை மறுபடியுமாக உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்.
அன்போடு கூட உங்களை உற்சாகப்படுத்தி, இந்த ஊழியத்தில் உங்கள் பங்கும் எதாவது ஒரு வகையில் இருக்க அழைக்கிறேன். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக.
இந்த மாத இதழ் உங்கள் கரங்களில் கிடைப்பதற்கு முன் எத்தனை பிரயாசங்களும், முயற்சிகளும் இருக்கிறது என்பதை நீங்களும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஏன் என்றால் இந்த மாத இதழை வெளியிடுவதற்கு செலவாகும் பொருளாதாரம் நிறைவாக இருந்து இதை வெளியிட வில்லை. எப்படியாகிலும் தேவனுடைய சத்திய வசனங்கள் யாவரையும் சென்றடைய வேண்டும் என்ற பாரத்துடன் மட்டுமே பொருளாதார குறைவுகளிலும் நிறைவான தேவனுடைய வார்த்தைகள் இந்த மாத இதழ் மூலம் உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
மற்றவர்கள் வெளியிடுகிறார்கள் நாமும் ஒரு மாத இதழை வெளியிடலாம் என்ற வகையில் இந்த மாத இதழ் ஆரம்பிக்க வில்லை. நடத்தவும் இல்லை. இந்த மாத இதழ் முழுக்க முழுக்க தேவனுடைய சித்தத்துடன், தேவனுடைய வழிநடத்துதலின் அடிப்படையில், தேவ கிருபையுடன் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது என்றால் உண்மையிலும், உண்மை.
அன்பு உறவுகளே, படியுங்கள், தேவ நாமம் மகிமைக்காக இதில் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை தெரிவிக்க மறக்காதீர்கள். மற்றவர்களுக்கும் ஜீவ அப்பத்தை அறிமுகம் செய்து படிக்க கொடுத்து, உற்சாகப்படுத்துங்கள்.
தொடர்ந்து ஜெபியுங்கள். நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக.


0 comments:

Post a Comment