இரகசிய வருகை உண்டா?
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியே, தங்கள்
வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்றனர். கிறிஸ்தவத்தின்
ஆணி வேராக இருக்க கூடியவை
மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், நித்தியமான பரலோக வாழ்க்கை.
இதுவே விசுவாசமும், முழுமையாக
கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின் நம்பிக்கையுமாக
இருக்கிறது. மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால்,
பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, நித்திய வாழ்க்கைக்கு நேராக
பயணிப்பவர்கள், இந்த உலகத்தின் ஆளுகையில்
இருந்து, தேவனுடைய ஆளுகைக்குள்ளாக வருகிறார்கள்.
திருச்சபை ஐக்கியத்தில் நிலைத்திருந்து, தேவனுடைய வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் இந்த உலகத்தை முதன்மையாக
வைக்காமல், தேவனையே முதன்மையாக வைத்து
வாழ்ந்து, இயேசு கிறிஸ்துவை தங்கள்
ஆதாயமாகக் கொண்டு, வேதாகம ஒழுங்குகளுக்கு
கீழ்ப்படிந்து, விசுவாச வாழ்வில் நாளுக்கு
நாள் வளர்ந்து பெருகி, இயேசு கிறிஸ்துவின்
வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமாக காத்திருப்பவர்களையும், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும், தன்னுடன் அழைத்து செல்லும்படியாக இயேசு
கிறிஸ்து மத்திய ஆகாயத்தில் வருவதையே
“இரகசிய வருகை” என்று அழைக்கப்படுகிறது.
“இரகசிய வருகை” என்ற
வார்த்தை நேரடியாக வேதாகமத்தில் பயன்படுத்தப்பட வில்லை. இருப்பினும் திடீர்
என்று, எந்த முன் அறிவிப்பும்
இல்லாமல் “திருச்சபை எடுத்துக்கொள்ளப்படுதல்” நடைபெறுவதால் இதை புரிதலுக்கு ஏற்ற
விதத்தில் “இரகசிய வருகை” என்று
சொல்லப்படுகிறது.
“இரவிலே திருடன் வருகிறவிதமாய்க்
கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே
நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்” (1 தெச 5:2). இதே வார்த்தையை இயேசு
கிறிஸ்துவும் சொல்வதைப் பார்க்கலாம். “உங்கள் ஆண்டவர் இன்ன
நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன்
இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன்
வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே
மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்”
(மத் 24:22-24).
தேவனுடைய பிள்ளைகள் ஆயத்தமாக இருக்க வேண்டியது “இயேசு
கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கியே”.
ஆயத்தம் இல்லாமல் ஏனோ, தானோ என்று
இருப்பவர்கள் கை விடப்படுவார்கள் என்று
இயேசு கிறிஸ்து மிகத் தெளிவாகக் கூறுவதை
கவனிக்க வேண்டும்.
“அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன்
ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு
ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்”
(மத் 24:40,41). திருச்சபை ஐக்கியத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு
ஆயத்தமில்லாமல் நிர்விசாரமாக இருப்பவர்கள் கை விடப்படுவார்கள் என்பதையே
இவ்வசனங்கள் கூறுகின்றன.
“இரகசிய வருகை” என்று
சொல்லப்படுகிற “சபை எடுத்துக்கொள்ளப்படுதலில்” நடக்க இருப்பவை,
கிறிஸ்துவுக்குள் உண்மையாக வாழ்ந்திடாமல், கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கி
வாழ்ந்திடாமல் மரித்தவர்கள் கிறிஸ்துவின் வருகையில் எழுந்திருக்க மாட்டார்கள்.
அதே போல் கிறிஸ்தவுக்குள்
இல்லாமல், தங்கள் சுயமான வாழ்வில்
தொடர்ந்து நிலை கொண்டிருப்பவர்களும் சபை
ஐக்கியத்தில் இருந்தாலும் எடுத்துக்கொள்ளப்படாமல் கை விடப்படுவார்கள். “இரகசிய
வருகை” என்பது “திருச்சபையின் நியாயத்தீர்ப்பு”
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்து, பரிசுத்த ஆவியானவரில் நிறைந்து, அவருடைய வழி காட்டுதலில்
நடந்து, ஆவியின்
கனியுள்ளவர்களாய், கிறிஸ்துவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
“நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது
துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே
இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?”
(1 பேதுரு 4:17,18)
வருகைக்கு ஆயத்தமில்லாதவர்களே, எடுத்துக்கொள்ளப்படுவது அரிதான காரியமாக இருக்கிறது
என்றும், மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால்
தங்கள் பாவங்கள் கழுவப்படாதவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்றே
இந்த வேத
பகுதி கூறுகிறது.
எனவே, இயேசு கிறிஸ்துவின்
இரகசிய வருகைக்கும் உலக மக்களுக்கும் சம்மந்தம்
இல்லை. இரகசிய வருகையானது, முழுக்க
முழுக்க தேவ பிள்ளைகளுக்கானது.
பல
வித உபத்திரவங்களின் வழியாக சபையானது கடந்து
வந்தாலும், தன்னுடைய சாயலை இழந்துவிடாது கிறிஸ்துவுக்காகவே
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, உலகத்துடனும், உலக காரியங்களுடனும் எந்த
வித சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியுடன்
நிற்பவர்கள் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.
“ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான
தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து
இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பின்பு உயிரோடிருக்கும் நாமும்
கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1தெச 4:16,17).
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம்
வருகையானது இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.
ஒன்று தமக்காக காத்திருக்கிறவர்களை அழைத்துச்
செல்லும் படி இயேசு கிறிஸ்து மத்திய
ஆகாயத்திலே தோன்றுவார். இது இரட்சிக்கப்படாதவர்களாகிய மற்றவர்கள் அறியாதபடி
நடக்கும் என்பதாலேயே இது “இரகசிய வருகை”
என்று சொல்லப்படுகிறது.
“இதோ, ஒரு இரகசியத்தை
உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம்
தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு
இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்” (1 கொரி 15:51,52)
இதில் “இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்ற வார்த்தையில் இருந்தே
“இரகசிய வருகை” என்ற பதம்
பயன் படுத்தப்படுகிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“ஆகையால் நீ கேட்டுப்
பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக்
கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல்
உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை
அறியாதிருப்பாய்” (வெளி 3:3) என்று சர்தை சபையை
பார்த்து இயேசு கிறிஸ்து எச்சரிப்பதை
கவனிக்க வேண்டும்.
“பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை;
ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர்
இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால்,
அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” ( 1 யோவான் 3:2) பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப்படுதலில் அவர்கள் எவ்விதம் இருப்பார்கள்
என்பதையும் வேதம் விளக்கி காண்பிக்கிறது.
எனவே, இச்சத்தியங்களை முழுமையாக
அறிந்து, பூரணராகும் படி கடந்து செல்ல
வேண்டும். “இரகசிய வருகை”யானது
பூரணமாக்கப்பட்ட தேவ பிள்ளைகளின் எடுத்துக்கொள்ளப்படுதல்.
இதில் பிரவேசிக்க தேவ பிள்ளைகள் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும்.
எனவே, இயேசு கிறிஸ்துவின்
இரண்டாம் வருகை இரு பிரிவுகளாக
நடைபெறும்.
1. “சபை
எடுத்துக்கொள்ளப்படுதல்” (இரகசிய வருகை)
2. “பகிரங்க வருகை’
(எல்லா கண்களும் காண இயேசு கிறிஸ்து
பகிரங்கமாக வருதல்)
இவைகளுக்கான வேதாகம வசனங்கள் மிக
தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இவைகளை மிக கவனமாக
வாசித்து, சரியான விதத்திலே கையாள
வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் இரகசிய
வருகையில் கை விடப்படுதல் என்பது,
இரட்சிக்கப்பட்டு, திருச்சபையில் இணைக்கப்பட்டும், தங்கள் இரட்சிப்பைக்குறித்த தெளிவில்லாமல்,
அதைக் குறித்த மேன்மை அறியாமல்
ஏனோ, தானோ என்று இருந்தவர்களுக்கு
கிடைக்கும் தண்டனை என்பது தான்
உண்மை.
இதைக்குறித்து தான் மத்தேயு 25:1-13 வரை
உள்ள வசனத்தில் பத்து கன்னிகைகள் உவமையின்
மூலமாக இயேசு கிறிஸ்து விளக்குகிறார்.
இயேசு கிறிஸ்துவினால் கிடைத்த இரட்சிப்பில்,
ஆவியானவருடைய துணையுடன்
தனக்கு கிடைத்த கிருபையில் சுலபமாக
இயேசு கிறிஸ்துவோடு செல்ல வேண்டியவர்கள், தங்கள்
நிர்விசாரத்திலும், தங்கள் அலட்சியப் போக்கிலும்,
தங்கள் மனம் போன போக்கில்
வாழ்ந்ததினால் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இவர்கள் அந்தி கிறிஸ்துவின்
ஆட்சியில் மிகுந்த
உபத்திரவப்பட்டு, அந்த உபத்திரவத்திலும் அந்தி
கிறிஸ்துவை பின்பற்றாமல் போகும் போது இரத்த
சாட்சிகளாய் மரிக்க வேண்டிய நிலை
உண்டாகிறது.
“அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்;
அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும்
தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின்
முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட
ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” (வெளி
20:4).
இந்த வசனமானது இயேசு
கிறிஸ்துவின் இரகசிய வருகையும், மகா
உபத்திரவகாலத்தில் நடைபெறும் சம்பவங்களையும், இயேசு கிறிஸ்துவின் பகிரங்க
வருகையையும் அதற்கு பின் துவங்கும்
ஆயிரம் வருட அரசாட்சியையும் இணைத்து
தொகுக்கப்பட்ட வசனமாகும்.
இந்த வசனத்தை 1 தெச
4:16,17, மற்றும் 1 கொரி 15:51, வசனத்துடனும் ஒப்பிட்டு கூறுவது சரியாகாது.
ஏன் என்றால் இயேசு
கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் அவர்
எல்லோருக்கும் வெளிப்படுவார் என்று வேதம் கூறுகிறது.
“அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே
எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல்
நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு
உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே
கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும்
ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்”
(சகரியா 14:4). இயேசு
கிறிஸ்துவின் பாதங்கள் ஒலிவ மலையின் மேல்
நிற்கும் என்றும் வேதம் திட்டமாக
கூறுவதைக் கவனிக்க வேண்டும். இதுவே
பகிரங்க வருகையில் நடைபெறும்.
“இதோ, மேகங்களுடனே வருகிறார்;
கண்கள் யாவும் அவரைக் காணும்,
அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின்
கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.
அப்படியே ஆகும்” (வெளி 1:7). பூமியின்
கோத்திரங்கள் எல்லாம் அழுது புலம்பும்படியாக
அவருடைய பகிரங்க வருகை இருக்கும்.
ஆனால் இயேசு கிறிஸ்துவின்
இரகசிய வருகையோ, ஒருவரும் அறியாத விதத்தில் இருக்கும்.
மற்றவர்கள் ஒருவரும் அவரைக் காண மாட்டார்கள். இரகசிய
வருகையில் எல்லா பூமியின் கோத்திரங்கள்
அழுது புலம்ப மாட்டார்கள். இயேசு
கிறிஸ்துவை அறிந்திருக்கிறேன், இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, தேவனுக்கு
ஏற்ற விதத்தில் வாழாமல் நிர்விசாரமாக வாழ்ந்து
கைவிடப்பட்டவர்களே அழுது புலம்புவார்கள். இதைக்
குறித்துதான் மத் 25:1-13 வரை உள்ள வசனத்தில்
இயேசு கிறிஸ்து உவமை மூலமாக விளக்குகிறார்.
பகிரங்க வருகையை குறித்து
இயேசு கிறிஸ்துவும் “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின்
மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு
புலம்புவார்கள்” (மத் 24:30) என்று பகிரங்க வருகையைக்
குறித்து, சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்.
திருச்சபை எடுத்துக்கொள்ளப்படுதலையும், (இரகசிய வருகை) எல்லோரும்
காண ஒலிவ மலையின் மேல்
அவருடைய பாதங்கள் நிற்கும் (பகிரங்க வருகை) இதற்கு
இடைப்பட்ட காலத்திலேயே மகா உபத்திரவம்.
இயேசு
கிறிஸ்துவின் பகிரங்க வருகைக்குக் பின்
ஆயிரம்
வருட அரசாட்சி, இவைகளை எல்லாம் வேத
வசனங்கள் கொண்டு பகுத்து வாசிக்க
வேண்டும்.
வேதாகம வசனங்கள் வரிசை
கிரமமாகவோ, கால கிரமமாகவோ, எழுதப்படவில்லை.
ஆனால் தேவையானவைகளை தேவன் கிரமமாக தொகுத்து
கொடுத்துள்ளார்.
ஆகவே வேத வசனங்களை
வாசித்து தியானிக்கும் போது, வெறும் மூளை
அறிவைக் கொண்டு மட்டும் தியானிக்காமல்,
தேவ ஆவியானவரின் ஒத்தாசையுடன் மட்டுமே தியானிக்க வேண்டும்.
அப்பொழுது மட்டுமே எழுதப்பட்ட நோக்கத்தை
சரியாக விளங்கிக்கொள்ள முடியும்.
ஏன் என்றால் ஒரே
வசனத்தில் இரு பகுதி இருக்கும்.
அதில் வருட இடைவெளியும் இருக்கும்.
உதா: “ஆதாம்
தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள்
கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு
மனுஷனைப் பெற்றேன் என்றாள்” (ஆதி 4:1) இந்த ஒரு வசனத்தை
மூன்று வகையான கால கட்டத்தையும்
வருட இடைவெளியையும் பிரிக்கலாம்.
1. அறிந்தான்.
2. கர்ப்பவதியானாள்.
3. காயீனைப் பெற்றாள்.
இவ்விதமாகவே, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம்
வருகையில் நடைபெறும் இரண்டு வகையான நிகழ்வுகளுக்கான
வசனங்களும் உள்ளன.
1. இரகசிய
வருகை
2. பகிரங்க வருகை.
இதுவே,
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம்
வருகையில் நிகழும் வகைகள்.
இந்த விளக்கமும், கடல்
நீரை கையில் அள்ளும் சிறு
முயற்சிதான். இந்த விளக்கத்தை சிறு
வெளிச்சமாக வைத்து, இன்னும் ஜெபத்துடன்
வேதாகமத்தை அணுகுவோம். இன்னும் கூடுதல் வெளிச்சத்தைக்
கர்த்தர் தருவாராக.
மிக்க நன்றி வசனத்தை மிக அருமையாக திட்டமாக சொல்லியிருக்கிறீர்.
ReplyDelete