வானத்து நட்சத்திரங்கள்
“நான் உன்னை ஆசீர்வதிக்கவே
ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின்
நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே
பெருகப் பண்ணுவேன்” (ஆதி 22:17) என்று இந்த ஆண்டு கர்த்தர் வாக்குத்தத்தம்
கொடுத்துள்ளார்.
தேவனுடைய ஆசீர்வாதங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது,
ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் தேடி அநேகர் அங்குமிங்கும்
அலைந்து கொண்டிருக்க, தேவன் தமது பிள்ளைகளைக்கு,
அவரை தேடி வருகிறவர்களுக்கு ஆசீர்வாதங்களை
நிறைவாகக் கொடுத்து, இந்த ஆண்டு பெருகவே பெருக செய்வேன்
என்று வாக்குப்பண்ணுகிறார்.
இந்த வசனத்தின் பின்ணணியத்தை
பார்க்கும் போது, தேவன் முதல்
முதலாக ஆபிரகாமுக்கு இந்த ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார்.
தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்து, அவனோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அவனுடைய
சந்ததிக்கும் இந்த
வாக்குத்தத்தத்தை நினைவு படுத்தி இந்த
ஆசீர்வாதங்களுக்கு நேராக வழி நடத்துகிறார்.
“நான் உன் தகப்பனாகிய
ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான்
உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம்
உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்”
(ஆதி 26:4) என்று
வேதம் கூறுகிறது.
ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தங்களை ஆபிரகாமிடம்
மட்டும் சொல்லி அவைகளுக்குப் பின்
அமைதியாக இருக்காமல், அவனுடைய சந்ததியாகிய ஈசாக்கிடமும்
சொல்லி தேவன் உறுதிப்படுத்துகிறார்.
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் காலங்களை கடந்து, சூழ்நிலைகளை கடந்து,
எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றும்படி தீவிரமாக செயல்படுகிறது.
வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்ளுவதுமட்டும் அல்ல, பெற்ற வாக்குத்தத்தங்கள்
வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க
வேண்டும். அந்த
வகையில் ஆபிரகாமும், ஈசாக்கும் தங்களை தேவனுடைய திட்டத்திற்கு
அர்ப்பணித்தார்கள் என்று வேதாகமம் அவர்களைக்
குறித்து சாட்சியிடுகிறது. எனவே இந்த ஆசீர்வாத
வாக்குத்தத்தம் தலைமுறையையும் தாண்டி செல்கிறதைப் பார்க்க
முடிகிறது.
தேவனிடம் பெற்றுக்கொள்ளும், வாக்குத்தத்தங்களை சுதந்தரித்து, தன்னுடைய அடுத்த தலைமுறைகளுக்கும் அதை எவ்விதம் கடத்தி விடுவது என்பதை
வேதாகம வசனங்களின் மூலமாக அறிந்து கொள்ளவேண்டும்.
“பின்னும் தேவன் அவனை நோக்கி:
நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப்
பெருகுவாயாக” (ஆதி 35:11) என்று அதே வாக்குத்தத்த
ஆசீர்வாதங்களின் தொடர்ச்சியாக யாக்கோபுக்கும் தேவன் அதைக் கொடுத்து
அவனைப் பெருகச் செய்வதைக்காண முடியும்.
மேலும் இந்த வாக்குத்தத்தங்கள்
கோத்திரப்பிதாக்களோடு, முடிந்து விடாமல், அல்லது சில தலை
முறைகளுக்குள் முடங்கி விடாமல், தேவன்
அதை தொடரச் செய்து, புதிய
உடன் படிக்கையின் கீழ் இருக்கும் விசுவாச
மக்களுக்கும், ஏன் நமக்கும், இந்த
செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கும் தந்து நிறைவாக்குகிறார்.
“நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே
ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்” (எபி 6:14). இந்த வசனத்தை நாம் கூர்ந்து கவனித்தால், இந்த வார்த்தையில் கூடுதல்
வார்த்தைகளை தேவன் பயன்படுத்துவதைக் காண
முடியும், “நிச்சயமாக”என்ற வார்த்தையை தேவன் சொல்லுவதின் மூலமாக
பல நூற்றாண்டுகள் தாண்டி வரும் வாக்குத்தத்ததை
தேவன் உறுதிப்படுத்தி கூறுவதையே இவ்வாக்கியம் நமக்கு தெளிவுப் படுத்துகிறது.
வேதாகமத்தில் எந்த வாக்குத்தத்தங்களும் முடிந்து
போகவில்லை. எல்லா வாக்குத்தத்தங்களும் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவரை விசுவாசிக்கிற
அனைவருக்கும் தொடர்ந்து வருகிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
“எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள்
ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரி
1:20) என்பதை வேதாகமம் உறுதிப்படுத்துகிறது.
1. ஆசீர்வாதங்களை
சுதந்தரிக்கும்
வழிகள்
வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்வதற்கும், சுதந்தரித்துக் கொள்வதற்கும், வழி
முறைகள் உண்டு. அப்படிப்பட்ட வழிகளில் சிலவற்றை வேதாகம வசனங்கள் மூலம் காண்போம்.
a) விசுவாசம், இந்த வழியாகவே ஆபிரகாமும்
வாக்குத்தத்தங்களைப் பெற்று, சுதந்தரித்துக்கொண்டான் என்பதை வேதாகமம்
மிகவும் அழகாக விளக்கி காண்பிக்கிறது.
“தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி,
தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:21) என்று வேதம் கூறுகிறது.
எப்படி தேவனுடைய வாக்குத்தத்தங்கள்
உயிருள்ளதாக இருக்கிறதோ, அதே போல வாக்குத்தத்தங்களை
சுதந்தரித்துக்கொள்கிறவர்களின்
விசுவாசமும் உயிருள்ளதாக இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் ஒரு
உயிர் புதிதாக பிறக்க வேண்டுமானால்,
ஆணுடைய உயிர் அணுவும், பெண்ணுடைய
உயிர் அணுவோடு இணைய வேண்டும்.
அப்படி இணையும் போதே புதிய
ஒரு உயிர் பிறக்கிறது. இதில்
ஒன்று உயிருடன் இருந்து இன்னொன்று உயிரற்ற
நிலையில் இருந்தால் புதிய உயிர் உண்டாக
வாய்ப்பே இல்லை.
அது போலவே தேவனுடைய
வாக்குத்தத்தங்கள் உயிருள்ளவையாக இருக்கிறது. இந்த உயிருள்ள வாக்குத்தத்தங்களை
தனக்குள் வாங்கிக்கொள்கிறவர்களிடம் உயிருள்ள விசுவாசம் இருக்க வேண்டும். தேவன்
கொடுக்கும் வாக்குத்தத்தங்களை விசுவாசத்துடன் எதிர்கொள்ளும் போதே எந்த நோக்கத்திற்காக
வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டதோ, அந்த நோக்கங்கள் நிறைவேறுகிறது.
அந்தப்படி இதை வாசித்துக்கொண்டிருக்கிற அன்பு தேவனுடைய
பிள்ளையே எந்த அளவு விசுவாசம்
உனக்குள் இருக்கிறதோ, அந்த அளவு ஆசீர்வாதங்களை
உன்னால் சுதந்தரித்துக்கொள்ள முடியும். விசுவாசம் என்பது சூழ்நிலைகளுக்கு உட்பட்டதல்ல,
சூழ்நிலைகளையும் தாண்டி செயல்படக்கூடியது.
உனக்கு சூழ்நிலைகள் எதிராக இருக்கலாம், நடப்பவைகள்
எல்லாம் எதிர்மறையாக
நடந்து கொண்டிருக்கலாம், அப்படிப்பட்ட கால சூழ்நிலைகளிலும், தேவனுடைய
வாக்குத்தத்தங்களை நம்பி, முழுமையாக விசுவாசிக்கும்
போது, எதிரானவைகளை முறியடித்து, சூழ்நிலைகளை மாற்றி தேவன் ஆசீர்வாதங்களை
நிலை
நிறுத்துகிறார்.
எனவே, எதிரான சூழ்நிலைகளைக்
கண்டு, பயந்து அஞ்ச வேண்டாம்,
எதிரான சூழ்நிலைகளை விசுவாசத்துடன் எதிர்கொள்ளுங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்கள் வாக்குத்தத்தமாக உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் ஆசீர்வதித்து, பெருகவே பெருக செய்வார்.
b) கீழ்ப்படிதல் விசுவாசமும், கீழ்ப்படிதலும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படக்கூடியவை, விசுவாசம்
இல்லாமல், கீழ்ப்படிதல் வராது, கீழ்ப்படிதல் இல்லாமல்,
விசுவாசம் செயல்படாது. “ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து,
என் விதிகளையும், என் கற்பனைகளையும், என்
நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்”
(ஆதி 26:4) என்று தேவனே ஆபிரகாமைக்
குறித்து சாட்சியிடுகிறார்.
எனவே, கீழ்ப்படிதல் மிகவும் அவசியம்.
“நான் கீழ்ப்படிதலோடுதான் இருக்கிறேன்,
விசுவாசத்தோடுதான் இருக்கிறேன்” என்று நாம் சொல்லிக்
கொண்டிருந்தால் மட்டும்
போதாது, நாம் கீழ்ப்படிதலோடும், விசுவாசத்தோடும்
இருக்கிறோம் என்பதை நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டும்.
தேவனுடைய வார்த்தைகளுக்கு எந்த விதமான எதிர்
கேள்விகளும் கேட்காமல் அவைகளை அப்படியே கேட்டு,
அதன்படியாக செயல்பட ஆரம்பிப்பதே கீழ்ப்படிதலின்
படியாகும், எதிர்கேள்வி கேட்பது கீழ்ப்படிதலை அபத்தமாக்கி,
விசுவாசத்தைக் கேள்விக்குறியாக்கி, ஆசீர்வாதங்களை தடைசெய்து விடும். மிகவும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
c) உத்தமம்: விசுவாசமும், கீழ்ப்படிதலும் ஒன்றோடு ஒன்று இணையும்
போதே, ’உத்தமம்’ அதாவது உண்மை செயல்பட
ஆரம்பிக்கிறது. உத்தமமே உண்மையாக தேவனைப்
பின்பற்றச் செய்கிறது. உத்தமனாக இல்லாமல் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது காற்றில் கறையும் கானல் நீருக்கு
சமனாகவே இருக்கும்.
“கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்;
நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு
உத்தமனாயிரு” (ஆதி 17:1) என்று கூறுகிறார், ஏன் என்றால் உத்தமம் தேவனுடைய
ஆசீர்வாதங்களுக்கு வழி திறந்து விடுகிறது.
தேவனுடைய மகத்துவங்களை அறிந்து, அவர் எப்படிப்பட்டவர் என்பதை
உணர்ந்து, தேவனுடைய நீதியையும், நியாயங்களையும் வெளிப்படுத்தும் படியாகவே தேவன் நம்மைத் தெரிந்து
கொள்கிறார். நாம் தேவனுடைய நீதியையும்,
நியாயத்தையும் வெளிப்படுத்துவதில் உத்தமமாக செயல்பட வேண்டும் என்பதே
தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
“கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன்
தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள்
நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக்
காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை
அறிந்திருக்கிறேன் என்றார்” (ஆதி 18:19). இவ்விதமாக ஆபிரகாமை தேவன் தெரிந்து கொண்டு,
பயன்படுத்துவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டதற்கு “உத்தமம்” என்னும்
வழிகளும் காரணமாக இருக்கிறது என்பதை கவனிக்காமல் விட்டு விட்டால் தேவனுடைய
ஆசீர்வாதங்களுக்கு நேராக நம்மால் நடக்க
முடியாது.
d) தேவ ஐக்கியம்: மேலும் விசுவாசமும், கீழ்ப்படிதலும்,
உத்தமமும், தேவனுடைய ஐக்கியத்தில் பலப்படுத்துகிறதாக இருக்கிறது. எனவே தேவனுடைய ஐக்கியம்
இல்லாமல் தேவனுடைய வாக்குத்தத்தங்களையோ, ஆசீர்வாதங்களையோ, சுதந்தரித்துக்கொள்வதென்பது கூடாத காரியம். ஆபிராகாம்
தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்டதற்கு அவன் எப்போதும் தேவனோடு
ஐக்கியமுள்ளவனாக இருந்தான்.
e) தேவனைச் சார்ந்துகொள்ளுதல்: தேவனோடு ஐக்கியமுள்ளவர்களே, எல்லா நேரங்களிலும், எல்லா
சூழ்நிலைகளிலும் தேவனைச் சார்ந்து கொள்வார்கள்.
தேவனைச் சார்ந்து கொள்ளும் போதே தேவனுடைய ஆசீர்வாதங்கள்
பல மடங்கு பெருக ஆரம்பிக்கிறது.
எனவே பிரியமானவர்களே, ஆசீர்வாதம்
வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்
மட்டும் போதாது, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்
கொள்வதற்கான வழிகள்
என்ன என்பதையும், ஆசீர்வாதங்களை தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் அறிந்து செயல்படுத்துவதுமே ஆசீர்வாதங்களைப்
பெருக செய்யும்.
இவைகளை நன்றாக அறிந்திருந்த
ஆபிரகாம் தேவனை மட்டுமே சார்ந்திருந்தான்.
“அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப்
பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று
நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும்
பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும்
எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும்
உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை
உயர்த்துகிறேன்” (ஆதி 14:22,23) என்று ஆபிரகாம் சோதோமின் ராஜாவைப்பார்த்து
அறிக்கையிடுவதில் இருந்து அவன் எந்த அளவுக்கு தேவனை மட்டுமே சார்ந்திருந்தான் என்பதை
விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த உலகத்தில் மனிதர்கள்
எப்படியாகிலும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். என்பதைக் குறிக்கோளாக கொண்டு,
எதை வேண்டுமாலும் செய்யத்துணிவார்கள், ஆனால் நம்முடைய ஆசீர்வாதங்கள்
எப்படி வேண்டுமானாலும் வர கூடாது, அது
கர்த்தரிடத்திலிருந்து மட்டுமே வர வேண்டும்.
வருமானங்களைப் பெருக்கிக் கொள்ளவும், பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்ளவும்,
வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும், எதை வேண்டுமானாலும் செய்வேன்,
எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று
சொல்லி, தேவனுக்கு விரோதமான செயல்களில் ஈடு படுவோர், பொய்களை துணிகரமாக சொல்லி, மற்றவர்களை எளிதில் ஏமாற்றி,
வஞ்சகமான செயல்களைச் செய்து, தங்கள் வருமானங்களையும், பதவி உயர்வுகளையும் பெற்று, வசதி
வாய்ப்புக்களை தங்கள் சுய இச்சைகளின்படி சுய பலத்தில், தேவனுடைய வழிகளுக்கு எதிராக
ஏற்படுத்திக்கொண்டால், கடைசியில் மிச்சம்
இருப்பது சாபம் மட்டும் தான்.
எனவே தான் “கர்த்தரின் ஆசீர்வாதமே
ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர்
வேதனையைக் கூட்டார்” (நீதி 10:22) என்று வேதம் கூறுகிறது.
இதை நன்றாக அறிந்திருந்த
ஆபிரகாம், தேவன் மட்டுமே தன்னை
ஆசீர்வதிக்க வேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக
இருந்ததைக் காணமுடிகிறது. கர்த்தரால் மட்டுமே தான் உயர்வை பெற வேண்டும்
என்பதிலும் உறுதியாக இருந்ததையும் காணமுடிகிறது.
இன்றைக்கு வரை ஆபிரகாமை தேவன்
ஆசீர்வதித்தார் என்று நாம் சொல்கிறோம்
என்றால், அதற்கு ஆபிரகாம் உறுதியாக
தேவனை மட்டுமே சார்ந்திருந்ததும் ஒரு
காரணமாக இருக்கிறது.
அன்பான தேவ பிள்ளைகளே,
இந்த புதிய ஆண்டில் புதிய
தீர்மானத்துடன் நாம் பயணம் செய்வோம்.
“இந்த உலகத்தின் மூலம், உலக மனிதர்கள்
மூலமாக அல்ல, கர்த்தர் என்னை
ஆசீர்வதித்துப் பெருக செய்ய வேண்டும்.
எனவே எதற்காகவும், இந்த உலகத்துடன் சமரசம்
செய்து கொள்ள மாட்டேன்”என்று
தீர்மானத்துடன் இருக்கும் போதுதான், இப்படிப்பட உறுதியான செயல்பாடுகள்
தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கச்செய்து, அதில் ஒவ்வொரு நாளும்
பெருகி, நாளுக்கு நாள் விருத்தியடையச் செய்யும்.
எனவே தேவனுடைய வாக்குத்தத்தங்களைப்
பெற்று, ஆசீர்வதிக்கப்பட்டு, அதை தக்கவைத்துக் கொள்வதற்கும், சுதந்தரித்துக் கொள்வதற்கும், நாளுக்கு நாள் பெருகுவதற்கும்,
மிக மிக முக்கியமான வழிகள்.
விசுவாசம்
கீழ்ப்படிதல்
உத்தமம்
தேவ ஜக்கியம்
தேவனை மட்டுமே சார்ந்திருத்தல்
கீழ்ப்படிதல்
உத்தமம்
தேவ ஜக்கியம்
தேவனை மட்டுமே சார்ந்திருத்தல்
இந்த வழிகளை நாமும்
பயன்படுத்துவோம். ஆசீர்வாதங்களை நிறைவாகப் பெற்று, பெருகுவோம்,
2. ஆவிக்குரிய
வாழ்வில்
பெருக்கம்
“உன் சந்ததியைப் பூமியின்
தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை
எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்”
(ஆதி 13:16) ஆபிரகாமின் சந்ததியை பெருக பண்ணுவேன் என்ற
வாக்குத்தத்தம் அப்படியே நிறைவேற்றப்பட்டுள்ளதை சரித்திரத்திலே காண முடிகிறது,
“நான் உனக்கும் எனக்கும்
நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி,
உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்
என்றார்” (ஆதி 17:2) இந்த வாக்குத்தத்தங்களின் படி
தனி மனிதனாக அழைக்கப்பட்ட ஆபிரகாம்
திரளாக பெருகி ஒரு தேசத்தின்
மக்களே ஆபிரகாமின் சந்ததி என்று அழைக்கப்படும்
அளவுக்கு அவனைத் தேவன் பலுகி
பெருகச் செய்தார்.
மேலும் வேதாகமம் இந்த
வாக்குத்தத்ததைக் குறித்து
கூறும்போது, “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்
பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல்,
உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார்,
அந்தச் சந்ததி கிறிஸ்துவே”(கலா
3:16) என்று வேதம் கூறுகிறது.
இந்த வாக்குத்தத்தமானது நேரடியாக கிறிஸ்துவுக்கே
வருவதாக ஆவிக்குரிய பிரகாரமாக வேதாகமம் குறிப்பிடுகிறது.
எனவே ஆவிக்குரிய ஆசீர்வாதமாகவும் இந்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டு
இருக்கிறது.
இந்த வசனத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் இந்த வாக்குத்தத்தமானது செல்கிறது. இது எவ்விதம் செயல்படுகிறது
என்பதைக்குறித்து நாம் பார்க்கும் பொழுது,
“மேலும் தேவன் விசுவாசத்தினாலே
புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு:
உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்” (கலா 3:8,9).
இவ்விதமாக முழு உலத்திலுள்ள மக்களும்
இயேசு கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதிக்கப்படும்படியாக, இந்த வாக்குத்தத்தமானது இன்றுவரை
செயல்படுகிறது, இனி மேலும் செயல்படுகிறதாக
இருக்கிறது.
எப்படியெனில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, விசுவாச
மார்க்கத்தாராக இருந்து, ஆவிக்குரிய வாழ்வில் பெருக ஆரம்பிக்கும் போதே
ஒரு மனிதனுக்குள் உண்மையான தேவனுடைய ஆசீர்வாதங்கள் உண்டாக ஆரம்பிக்கிறது.
அந்தப்படி இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும்
நமக்கு இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதமானது நிறைவாக உண்டாக ஆரம்பிக்கிறது, இது நமது இரட்சிப்பில்
இருந்தே துவங்குவதாக இருந்தாலும், தேவன் இதை விசேஷமாக நமக்கு இந்த ஆண்டில் நினைவு படுத்தி
இன்னும் அதிகமாக பெருகும்படி நமக்கு கிருபையளிக்கிறார்.
எனவே இந்த ஆண்டில்
தேவன் நமக்கு கொடுத்துள்ள இந்த
வாக்குத்தத்தின்படி நம்மை ஆவிக்குரிய வாழ்வில்
பெருக செய்யப்போகிறார். முதலாவது ஒருமனிதனின் வாழ்வில் ’ஆவிக்குரிய தரித்திரம்’ நீங்க வேண்டும். ’ஆவிக்குரிய
தரித்திரம்’ நீங்கும் போதே அவன் உண்மையான
ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறான்.
மேலும் ஆவிக்குரியவன் ஆவிக்குரியவனை
உருவாக்குகிறான், ஆவிக்குரியவர்கள் அதிகமாக உருவாகும் போதே
குடும்பங்கள் சமாதானம் பெற்று, ஆசீர்வாதங்களில் பெருக
ஆரம்பிக்கிறது. ஆவிக்குரியவர்கள் உருவாகும் போதே தேசங்கள் சமாதானங்கள்
பெற்று பெருக ஆரம்பிக்கிறது.
ஒருவன் ஆவிக்குரியவனாக உருவாகும் போதே, அவனுடைய
தனிப்பட்ட வாழ்விலும், ஆசீர்வாதங்களைப் பெற்று, பெருக ஆரம்பிக்கிறான்.
எனவே, இந்த ஆண்டில் ’ஆவிக்குரிய
பெருக்கம்’ இருக்கும் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார்.
ஆவிக்குரிய வாழ்வு பெருகும். தனிப்பட்ட
விதங்களில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும்
ஆவிக்குரியவாழ்வில் எந்த வீழ்ச்சியும் இல்லாமல்
உறுதியாக நின்று “பெருகவே பெருகுவாய்”
என்று தேவன் வாக்குப் பண்ணுகிறார்.
இவைகளை விசுவாசித்து, இதற்காக ஜெபிப்போம்.
3. பொருளாதார
வாழ்வில்
பெருக்கம்
“ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும்
பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்” (ஆதி 13:2) என்று வேதம் கூறுகிறது. தேவன் இல்லாத வெறுமையான
பொருளாதர ஆசீர்வாதங்கள், ஆசீர்வாதங்களே அல்ல, அதே வேளையில்
ஆவிக்குரிய வாழ்வில் பெருகிய ஒருவன் தொடர்ந்து
பொருளாதார நிலையில் மிகவும் தரித்திர நிலையில்
இருப்பதும் நல்லதல்ல.
ஆவிக்குரிய வாழ்வை விளக்கி காண்பிக்காத செழிப்பு
உபதேசமும், செழிப்பான வாழ்வை விரும்பச் செய்யாத ஆவிக்குரிய
உபதேசமும் ஒரு பக்க நிலையை
மட்டுமே காண்பிக்கும்.
ஆனால் தேவன் ஆபிரகாமை
ஆசீர்வதிக்கும் போது ஆவிக்குரிய வாழ்விலும்
பெருகினான், பொருளாதார வாழ்விலும் பெருகினான். அதாவது “அவன் ஆஸ்திகளுடைய
சீமானாக இருந்தான்” என்று வேதாகமம் கூறுகிறது.
எனவே, தேவ பிள்ளைகளே,
நாம் ஆவிக்குரிய வாழ்விலும் தாகமாக இருக்க வேண்டும்,
பொருளாதார வாழ்வையும் விரும்ப வேண்டும். இவ்விதமாக
இந்த ஆண்டு நம்மை பொருளாதாரத்திலும்
கர்த்தர் பெருக செய்வார். இதுவரை
இருந்த பொருளாதார குறைவுகள் எல்லாம் நீங்கி, மிகுந்த
செழிப்பும், நிறைவான வளர்ச்சியும் உண்டாகும்.
உங்கள் கைகளின் பிரயாசங்களை
கர்த்தர் ஆசீர்வதிப்பார். வீணான செலவுகள், பண
விரையங்கள் உண்டாகாதபடி பாதுகாப்பார். உங்கள் உழைப்புகள் விருதாவாகாதபடி
உயர்த்துவார்.
இந்த வாக்குத்தத்ததை விசுவாசியுங்கள்,
தொடர்ந்து ஜெபியுங்கள். இந்த ஆண்டிலே தேவன்
உங்களை எல்லாவற்றிலும் பெருகச் செய்வார். உங்கள்
வாழ்வில் வெற்றி பெருகும், கிருபை
பெருகும், சாமாதானம் பெருகும். இவ்விதமாக கர்த்தர்
உங்களை நடத்துவாராக.
Good ...
ReplyDeleteGod bless your valuable ministries dear pastor iyya