Bread of Life Church India

பரவச பயணம்


வான்மதியின் வண்ண ஒளியில், எண்ணமெல்லாம் தென்றலின் தீண்டலில் பரவசமாய் குலுங்கும் வண்ண மலர்களைப் போல்  துள்ளிக்கொண்டிருக்க, வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆபிராம்.
கடவுளின் படைப்புக்கள் எவ்வளவு அருமையானவைகள்,! இந்த உலகை கடவுள் எவ்வளவு இரசனையுடன் படைத்துள்ளார்! எத்தனை நேர்த்தி,! எவ்வளவு அற்புதம்.! இனிமையான இந்த இயற்கையை இரசிப்பதில்தான் எத்தனை ஆனந்தம். மனிதனுக்காக கடவுளின் படைப்புக்கள் இதமாக உள்ளதுஎன்று அவன் நினைவலைகளில் மூழ்கியிருக்க, தன் பணிகளையெல்லாம் முடித்து விட்டு, தன் கணவனின் அருகில் வந்த சாராய், “என்னங்க இன்னும் உறக்கம் வரவில்லையா?” என்று அன்புடன் விசாரித்து அவன் தலையை கோதி விட்டாள்.

இதமாக வருடிய தன் மனைவியின் கரங்களைப்பிடித்து, “எப்படி உறக்கம் வரும் சாராய், என் எண்ணமெல்லாம் கடவுளின் மகத்துவமான வார்த்தைகளைக் கேட்டதில் இருந்து மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறது. என் பார்வையில் மாற்றம், என் எண்ணங்களில் மாற்றம், இதுவரை நான் பார்த்த இந்த பூமியே இன்னும் அழகாய் என் பார்வையில் தோன்றுகிறது.
அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை சாராய், என் மனம் ஆனந்தத்தால் நிறைந்திருக்கிறதுஎன்று அவன் சொல்லும் போதே அவனுடைய அகத்தில்  இருந்த மகிழ்ச்சி முகத்தில் வெளிப்பட, புன் முருவலுடன் அவன் பேசுவதையே வைத்த கண் மாறாமல்  பார்த்துக்கொண்டிருந்தாள் சாராய்.
இந்த அளவு நீங்கள் சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததே இல்லை, நீங்கள் சந்தோஷமாக இருப்பதை காணும் போது கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்என்று சொல்லிக்கொண்டே அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
உண்மைதான், கடவுள் பேசிய வார்த்தைகளைக் கேட்டதில் இருந்து,  இனம்புரியாத ஆனந்தமும், பரவசமும் என்னுள் உண்டாகிறது சாராய். கடவுள் பேசும் போது என்னைச் சுற்றிலும் இருந்த அந்த  ஒளியின் பிரகாசம் என் உணர்வை விட்டு இன்னும் நீங்காமல் இருக்கிறது, மனித வாழ்வில் அர்த்தம் வேண்டுமானால் அந்த பிரகாசமான மகிமையில் நிறைந்திருப்பதையே விரும்ப வேண்டும்.சாராய்”. அவன் சொல்லும் போதே பல ஆயிரம் மின்னல்கள் ஒரே சமயத்தில் சந்தித்தால் உண்டாகும் பிரகாசம் அவன் முகத்தில் காணப்பட்டது.
ஆமாங்க, கடவுள் உங்களை அதிகமாக விரும்புகிறார், உங்களுக்கு தன்னை வெளிப்படுத்தி, தன் விருப்பத்தையெல்லாம் சிநேகிதனிடம் பேசுவதைப்போல உங்களிடம் பேசியுள்ளாரே, உண்மையில் நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்என்று சொல்லும் பொழுது உறக்கம் கண்ணை இறுக்கும் வேளையிலும், அவளுடைய கண்களில் பெருமிதம் வெளிப்பட்டது.
சாராய், கடவுள் சொன்ன நாட்டுக்கு செல்ல நாம் தயாராக வேண்டும். உனக்கு இதில் விருப்பம்தானே?” என்று அவளுடைய முகத்தைப் பார்த்தான்.
கணவனின் கரங்களுக்குள் தன் முகம் புதைத்து, “நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் வருவதுதானே என்னுடைய வேலை, அதுவும் கடவுள் சொல்லி நீங்கள் செல்லும் போது அதற்கு நான் தடையாக இருப்பேனா?”’ என்று அவள் சொல்லும் போதே இரட்டிப்பான சந்தோஷம் அவனைத் தொற்றிக்கொண்டது.
சரி சாராய், கடவுளுடைய வார்த்தைகளுக்கு நாம் தாமதப்படுத்தாத படிக்கு நாளையே புறப்படுவோம்என்று சொல்ல, “சரிங்கஎன்று சொல்லி, உறங்க செல்ல, எண்ண அலைகள் அமைதியாக, கண் அயர்ந்தான் ஆபிராம்.
இரவின் இருள் கலைய, இதழ்களில் படிந்த பனி போல் விடியலின் வெண்மை படர, கடவுள் காண்பித்த நாட்டை நோக்கிப்புறப்படுவதற்கான ஆயத்த வேலைகளில் ஆபிராமும், சாராயும் ஈடுபட ஆரம்பித்தனர்.
அவர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருப்பதைக் கண்ட தேராகு, “ஆபிராம், நீ அவசியம் செல்லத்தான் வேண்டுமா? இன்னும் நன்றாக யோசித்து முடிவெடுக்கலாமேஎன்று தயக்கத்துடன் சொல்ல, “இல்லைங்க அப்பா, கடவுளின் வார்த்தைகளை தள்ளிப்போடுவது நல்லதல்ல, உடனே செல்வதுதான் நல்லதுஎன்று சொல்லி, சமாதானப்படுத்தும்படி அவனுடைய கரங்களைப்பிடித்துக்கொண்டு, “தடை சொல்லாதீங்க அப்பா, உங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு வேண்டும், மனப்பூர்வமாக எங்களை வாழ்த்தி அனுப்பி விடுங்கள்என்று, இருதயத்தின் வியர்வை கண்களில் பனிக்க கரம் கூப்பி நின்றான்.
சரிப்பா, நான் உன்னை தடுக்க வில்லை, நம்மை படைத்த கடவுள் ஒன்றைச் செய்ய சொல்கிறார் என்றால் அதில் கட்டாயம் நல்ல விஷயம் இருக்கத்தான் செய்யும், கடவுளே உன்னை அனுப்பும் போது, அவர் உனக்கு துணையாக இருந்து பார்த்துக்கொள்வார்என்று சொல்லி ஆபிராமை அணைத்து முத்திமிட்டு, அவனை ஆரதழுவி, “ஆபிராம், நானும் உன்னுடன் வருகிறேன்பா, என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்என்று தேராகு சொல்ல, ஆபிராமின் இருதயத்தின் வியர்வை ஆனந்த பனியாய் கண்களில் வெளிப்பட்டு, “அப்பா உண்மையாகவே எனக்கு மிகுந்த சந்தோஷம், தயாராகுங்கள் அப்பா, போகலாம்என்று சொல்லும் போதே அவனுக்குள் இருந்த சந்தோஷத்தின் துள்ளல் அவன் அசைவுகளில் வெளிப்பட்டன.
இவர்கள் பேசுவதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த லோத், ஆபிராமிடம் சென்றுநானும் உங்களுடன் வருகிறேன், என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்என்று தன் மன விருப்பத்தைத் தெரியப்படுத்தினான்.
அவனைத் தன் மார்போடு அணைத்துலோத், என் அன்பு மகனே, நீ இங்கே இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள், நாங்கள் செல்கிறோம்,” என்று அவனுடைய தோள்களை தட்டி சொல்ல, தன் தலையை தாழ்த்தி, ஆபிராமின் முகத்தை ஏறிட்டு பார்க்காமல், “இல்லை, நான் உங்களுடன்தான் வருவேன், என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்என்று அவன் மார்பில் தன் முகம் புதைத்து, விம்மினான்.
அவன் தலையை தன் இருகரங்களாலும், அணைத்து, “சரிப்பா, உன் விருப்பம் இதுதான் என்றால் தாராளமாக என்னுடன் நீ வரலாம்என்று சொல்ல, ஆபிராமை இறுக அணைத்து, தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினான் லோத்.
தாங்கள் செல்ல போகிற இடம் எப்படிப்பட்டது, அங்குள்ள சூழ்ந்நிலைகள் என்ன? என்பது எல்லாம் தெரியா விட்டாலும், போக சொன்னது கடவுள் என்பதை மட்டும் மனதில் கொண்டு, ஆபிராம் துரிதமாக புறப்பட்டுக்கொண்டிருந்தான்.
ஆபிராமும், தன் மனைவி, மற்றும் தேராகு, லோத்துடன் ஊரை விட்டு, வேறு தேசத்திற்கு செல்ல போகிறார்கள் என்ற செய்தி, அந்த ஊர் முழுக்க பரவியது, அநேகர் தேடி வந்து ஆபிராமிடத்தில் பேசினார்கள், ஆபிராம் கடவுள் தன்னை சந்தித்து, பேசிய விஷயத்தைச் சொல்லி தாங்கள் சென்றே ஆக வேண்டும் என்று சொல்லி புறப்பட, ஊர் முழுவதும் அங்கே கூடி வந்து கண்ணீர் மல்க நின்று அவர்களை வழியனுப்பினர்.
அவர்களுடைய பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் வழியில்ஆபிராம் நாம் செல்லும் இடம் எது,? அதற்கு நாம் எப்படி செல்ல வேண்டும்”? என்று தேராகு நடந்து கொண்டே ஆபிராமைப் பார்த்துக் கேட்டான். ஆடுகளை நடத்திச்சென்று கொண்டிருந்த ஆபிராம் அவைகளை கவனித்துக்கொண்டே, “நாம் செல்லும் இடம் குறித்தும்,  எந்த திசையில் செல்ல வேண்டும் என்றும் கடவுள் தெளிவாக சொல்லியிருக்கிறார், அவர் அந்த பாதையில் நம்மைத் தொடர்ந்து நடத்துவார் அப்பாஎன்று சொல்லி தேராகுவைப் பார்த்தான். ‘சரிஎன்பது போல் தேராகு தலையை அசைக்க மௌனமாக அவர்களுடைய பயணத்தைத் தொடர்ந்தனர்.
பகல் முழுவதும் ஒளி வீசிக்களைத்துப்போன ஆதவன் ஓய்வெடுக்க செல்ல, சாராயும், லோத்தும் நடப்பதைக் கண்ட ஆபிராம், அவர்கள்  மிகவும் சோர்ந்து போனார்கள் என்பதை அறிந்து, “நாம் கூடாரமிட்டு, தங்கி இரவு சென்று நமது பயணத்தை தொடர்வோம்என்று சொன்னதும் அதுவரை அதற்காகவே காத்திருந்தவர்களைப் போல் எல்லோரும் ஒன்றாக தலையை அசைக்க சிறிது தூரம் சென்ற பொழுது மக்கள் நடமாட்டம் இருக்கவே, அருகில் ஏதோ ஒர் ஊர் இருப்பதை உறுதி செய்து அதன் அருகாமையில் கூடாரத்தை அமைத்து இளைப்பாரினர்.
தொடர்ந்து மறுபடியும் தங்கள் பயணத்தை தொடர சில நாட்களாக நடந்து செல்வதால் புறப்படும் போது இருந்த ஆர்வம் குறைந்தவனாய் தேராகு மிகவும் சோர்வுடன் இருப்பது அவனுடைய பேச்சிலும், நடையிலும் வெளிப்பட ஆபிராம் கவனித்தான், இருப்பினும் எதுவும் சொல்லாமல் பயணத்தைத் தொடரஆபிராம் மிகவும் சோர்வாக இருக்கிறது, ஏதாவது ஒரு இடத்தில் சில நாட்கள் தங்கி நன்றாக இளைப்பாறி பின்பு நம் பயணத்தை தொடரலாம், நாம் கொண்டு வந்த உணவு பொருள்களும் தீர்ந்து விட்டதுஎன்று மிகவும் சோர்ந்து போன நிலையில் தேராகு பேசுவதைக்கேட்ட ஆபிராம் வருத்தமடைந்தவனாய், “சரிங்க அப்பா நல்ல இடமாக பார்த்து சில நாட்கள் அங்கேயே தங்கி விட்டு, செல்வோம்என்று சாராயைப் பார்த்தான். அவளும் சரி என்பது போல் தன் கண் அசைவுகளில் வெளிப்படுத்த, லோத்தும்அப்படியே செய்வோம் என்று சொன்னான்.
சிறிது தூரம் சென்றதும், தங்களுக்கு எதிர்பட்ட ஒருவரைப் பார்த்து, ஐயா, இது எந்த ஊர்என்று ஆபிராம் கேட்டான். அந்த நபர் போகிற போக்கிலேயே, “ஆரான்என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து செல்ல, இன்னொரு நபரைக் கூப்பிட்டு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாங்கள் எங்கிருந்து வருகிறோம், என்பதைச் சொல்லி, தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதையும் சொல்லி விட்டு, சில நாட்கள் நாங்கள் தங்க வேண்டும் அதற்கு  அனுமதி கேட்க வேண்டும் என்பதைக் கேட்டான் ஆபிராம்.
எல்லா விவரங்களையும், அந்த நபர் சொல்ல, ஆரானுக்கு அருகாமையில் தாங்கள் தங்குவதற்கும், ஆடு. மாடுகளை அடைத்து வைப்பதற்கும் கூடாரங்களை அமைத்தான்.
ஆரானில் உள்ள முக்கியமான நபர்களைச் சந்தித்து, தங்களைக் குறித்த விவரங்களை சொல்லி, சில நாட்கள் ஆரானுக்கு அருகாமையில் தங்குவதற்கு அனுமதி பெற்று, அங்கே தங்கினார்கள்.
அந்த ஊர் தேராகை கவர்ந்து விட்டது, நாட்கள் சென்ற பின்னும் புறப்பட மனமில்லாமல், நாட்களைத் தள்ளிக்கொண்டே வந்தான். ஆபிராமும் தன் தகப்பனுக்காக அங்கேயே தங்கி, வழக்கமான தன் பணிகளைத் தொடர்ந்தான்.
நாட்கள் மாதங்களாக, மாதங்கள்  தொடர, ஆட்டு மந்தை, மாட்டு மந்தை பெருகி, தாங்கள் தொடர்ந்த பயணத்தை மறந்தவர்களைப்போல ஆரானிலே அவர்கள் ஐக்கியமாகி விட, ஆபிராமின் உள்ளம் பல சமயங்களில் கடவுள் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற தாமதமாகிறதே என்று வாதிக்கப்பட்டாலும் அமைதியாக இருந்து வந்தான்.
மாதங்கள் வருடங்களாக உருண்டோடின, ஆபிராமும் சூழ்நிலைக் கைதியைப் போல் மாறிவிட, தேராகு மிகவும் வியாதியடைந்து நடக்க முடியாதவனாய் படுத்த படுக்கையானான்,
நடந்த சம்பவங்களையும், கடவுள் தன்னிடம் பேசியவைகளையும் நினைத்துநான் பெரிய தவறு இழைத்து விட்டேன், சில நாட்கள் இந்த ஆரானிலே தங்கி விட்டு செல்லலாம் என்று  இத்தனை வருடங்கள் நாம் இங்கே இருந்து விட்டோமேஎன்று சாராயிடம் சொல்லி மிகவும் வருந்தி வேதனையுடன் அவளைப்பார்த்தான் ஆபிராம்.
ஆமாம், நீங்கள் இத்தனை வருடம் தங்கி இருக்க சம்மதித்து இருக்க கூடாது. உடனே நாம் புறப்பட்டிருக்க வேண்டும், இந்த தவறுக்கு நீங்கள் மட்டும் அல்ல, நாங்கள் எல்லோரும்தான் காரணம்என்று அவனை ஆறுதல் படுத்தினாள்.
இவ்விதமாக பேசி ஒருவரை, ஒருவர் தேற்றினாலும், கடவுளிடம் இருந்து வந்த வார்த்தைகளை நிறைவேற்ற வருடங்கள் தள்ளிப்போனதே என்று நினைத்த பொழுது ஆபிராமின் கண்களில் ததும்பும் நீரைத் தடுக்க முடிய வில்லை.
சில நாட்களில், தேராகுவின் வியாதி அதிகமாக, ஆரானிலே அவன் மரித்தான்.  

தொடரும்

ஆதியாகமம் 11:31,32 வசனத்தின் அடிப்படையில் கதை வடிவமாக எழுதப்பட்டது.

ஆபிரகாமின் வாழ்க்கை கதை வடிவில் 3 வது தொடர்
1, 2, தொடர்களை வாசிக்க
ீழை கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கவும்

படைப்பா? படைப்பாளியா?  1
 
தேடல் 2


 

0 comments:

Post a Comment