Bread of Life Church India

சமநிலை சத்தியம்




ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” (1 யோவான் 3:17,18).
ஒருவருடைய குறைவில் அவருக்கு உதவி செய்யாமல்நான் அன்பாக இருக்கிறேன்என்று சொல்லிக்கொள்வது மாய்மாலமான அன்பு என்று வேதம் கூறுகிறது.
உண்மையான தேவனுடைய அன்பு தேவையில் உள்ளவர்களுக்கு மனப்பூர்வமாக உதவி செய்யும். தேவன் என்னை மிகுதியாக ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்வதற்காக மிகுந்த ஆஸ்தியை தேவன் கொடுக்க வில்லை. குறைவில் இருக்கும் தன்னுடைய சகோதரனுக்கு குறைச்சலில் உதவி செய்யும் படிக்குதான் தேவன் ஆஸ்திகளை கொடுக்கிறார்.
நல்ல வேலையைக் கொடுத்து, நல்ல தொழிலைக் கொடுத்து நல்ல வருமானத்துடன் ஆஸ்திகளை தேவன் கொடுத்திருப்பது, இல்லாதவர்களைப் பார்த்து இழிவாக பேசவோ, இழிவாக நடத்தவோ அல்ல.
தன்னிடம் வந்துது எல்லாம் தனக்குதான், மற்றவர்கள் எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பது பிசாசின் குணம். அது தேவ பிள்ளைகளின் குணம் அல்ல.

மிகுந்த ஆஸ்தி உள்ளவர்களின் குணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால் மற்றவர்களின் குறைவில் அவர்கள் உதாரத்துவமான உதவி செய்கிறார்களா? அல்லது அதற்கு ஏதாவது காரணங்களை சொல்லி சமாளிக்கிறார்களா? என்பதை கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
தன்னுடைய ஆஸ்தியில் இருந்து மற்றவர்களுக்கு கொடுக்காமல் தானே வைத்து எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதும்சுயம்தான்.
சிலர், ”என்னுடைய சாமர்த்தியத்தினால் சம்பாதித்தேன், என்னுடைய திறமையினால் சம்பாதித்தேன், நான் மிகுந்த கஷ்டப்பட்டு சம்பாதித்தேன். இவைகள் எல்லாம் தேவன் எனக்கு கொடுத்தவைகள். இவைகளை மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்து விட முடியுமா? ஞானமாக நடந்து கொள்ள வேண்டும்என்று வியாக்கியானம் செய்வார்கள்.
ஆனால் வேத வசனம் அப்படியா சொல்கிறது? வேத வசனம் குறைவில் உள்ளவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்றா கூறுகிறது? இவைகளும் சுயமும், பெருமையும் தான், தன்னுடையது என்ற அகங்காரமே அல்லாமல் வேறு அல்ல.
சிலர்சுவிசேஷம் சொல்லும் படிதான் அழைக்கப்பட்டிருக்கிறோம், உதவி செய்வதற்காக அல்ல என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவையில் இருப்பவர்களை பார்க்கும் பார்வையே வித்தியாசமாக இருக்கும். உதவிக்காக தன்னிடம் வந்தவர்கள், மகா பெரிய பாவிகள் போலவும், தங்களிடம் இருப்பதை அபகரிக்கவே வந்த திருடர்கள் போலவும், அப்படிப்பட்டவர்களைப் பார்த்து கண்களாலே அவர்களை விரட்டி,  வார்த்தையாலே இழிவு படுத்தி விடுகிறதுண்டு.
ஆனால் தேவ பிள்ளைகள், வேதாகம வசனங்கள் அனைத்திற்கும் கீழ்ப்படிந்து நடப்பதே, தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதாகும். தங்களுக்கு ஏற்ற விதங்களில் வேதாகம வசனங்களை எடுத்துக்கொள்வதும், தங்களுக்கு சாதகமான வசனங்களை மட்டும் பூதகண்ணாடி வைத்துப் பார்த்து அதை மட்டுமே வலியுருத்தி சொல்லிக்கொண்டு இருப்பது சரியாகாது.
ஒரு தேவனுடைய பிள்ளை ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு ஓரத்திற்கு சென்று விடக்கூடாது.
எனவே, நன்றாக வேத வசனங்களை போதிக்கிறவர்களும், உதவி செய்ய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது தங்கள் கரங்களை குறுக்கிக் கொள்வது வேதவசனத்தின் முறைகள் அல்ல.
மேலும் அது என்னுடைய வேலை அல்ல என்று ஒதுங்கிக்கொள்வதையும் வேதம் அனுமதிக்க வில்லை. ஆகையால் தான் மேலே உள்ள வசனம் சொல்கிறது, “வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலே அன்பு கூற வேண்டும்என்று கூறுகிறது. உதவி செய்யாமல், வெறுமையாக வசனங்களை மட்டும், தேவையில் உள்ளவர்களிடம் நாவினால் நயமாக பேசி விட்டு, விலகி விடுவது வேதாகமம் காண்பிக்கும் வழி அல்ல.
சிலர் நாங்கள் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். இப்படிப்பட்டவர்கள் செய்யும் உதவி, தேவையில் இருப்பவர் உயர்த்தப் பட வேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதில்லை. மாறாக தாங்கள் கணக்கு காண்பிக்க வேண்டும் என்னும் அடிப்படையில் கடமைக்காக மட்டுமே இருக்கிறது.
ஆனால் வேதம் செய்ய சொல்லும் உதவி எப்படி பட்டது தெரியுமா? “மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக  (2கொரி 8:14,15).
ஒருவர் வறுமையில் வாடுகிறார் என்றால் அவருக்கு ஒரு வேளை உணவு மட்டும் கொடுப்பதோ, அல்லது ஒரு உடை மட்டும் கொடுத்து விட்டு, தங்கள் கடமையே முடிந்தது போல் இருப்பது உதவி அல்ல, அதற்கு பெயர்தர்மம்”. இதை உலக மனிதர்களே, தேவ பிள்ளைகளை விட அதிகமாக செய்து வருகிறார்கள்.
ஆனால் வேதம்தர்மம்கொடுப்பதைக் குறித்து சொல்லாமல், “சமநிலைப் பிரமாணம்என்று கூறுவதைக் கவனிக்க வேண்டும். சமநிலைப்பிரமாணம் என்றால் ஒருவருடைய தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதாகும்.
தன்னுடைய சகோதரனை தன் நிலைக்கு உயர்த்துவதாகும். தன்னிடம் உள்ளதில் பாதியை கொடுத்து குறைவில் இருப்பவர்களை உயர்த்துவதாகும்.
இக்கால கிறிஸ்தவ உலகம், வேதம் காண்பிக்கும் இந்த சம நிலை பிரமாணத்தைக் குறித்து பேசுவதே இல்லை. பிறகு எப்படி செயல்படுவது! இவ்விதம் பேசுவதோ, செயல்படுவதோ, தன் ஆஸ்தியை பாதியாக குறைத்து விடுமே, இந்த சத்தியத்தை எப்படி பேசுவது? இதுதான் இன்றைய நிலை.
யாருக்கும் உதவி செய்து விடக்கூடாது என்பதை இன்றைய கிறிஸ்தவன் போதித்துக்கொண்டிருக்கிறான். இதுதான் ஞானமான செயல் என்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறான். இதுதான் வேதனையின் உச்சம்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி 8:9).
இந்த வசனத்திற்கு மேலும் கீழும் உள்ள வசனங்களை கவனித்து வாசிக்கும் போது குறைவில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மிக தெளிவாக போதித்துக்கொண்டு வரும் பொழுது, இரட்சிப்பில் இயேசு கிறிஸ்து ஒரு மனிதனுக்கு அரை, குறையாக உதவி செய்யாமல் முழுமையாக உதவி செய்தார் என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டு கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2கொரி 9:8) என்று இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள்நற்கிரியைகளில் பெருக வேண்டும்என்று வேதம் வலியுருத்திக் கூறுகிறது.
இந்த சத்தியங்கள் எல்லாம், மறக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும், மறுக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. சத்திய வசனங்களை மறந்து விட்டால் இல்லை என்று ஆகி விடுமா? மறுத்து விட்டால் இல்லாமல்தான் போய் விடுமா? சத்தியம் எதிலும் சமரசம் செய்து கொள்வதில்லை. அது சத்தியமாக தொனித்துக்கொண்டே இருக்கும்.
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்” (2கொரி 9:9). இதில்வாரியிறைத்தான்என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் அறியாதவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக்கொள்ள இந்த வசனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும், வருமான வரிதுரைக்கு கணக்கு சமர்பிக்கும் விதமாக கண் துடைப்புக்காக ஏதோ ஒன்றை செய்து விட்டு, மிக தைரியமாக இந்த வசனங்களைப் பயன் படுத்திக்கொள்கின்றனர்.
ஆனால்வாரியிறைத்தல்என்பது ஏழையாய் இருந்தவன் ஏழை இல்லை என்ற அளவுக்கு அவனுக்கு கொடுத்து உயர்த்துவதாகும். இதை வாசிக்கும் அன்பானவர்களே, ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறதல்லவா? இதுதான் இந்த வசனத்தின் முழுமையான விளக்கம்.
ஏழை, ஏழையாகவே இருப்பதும், தேவையில் உள்ளவன் தேவையிலேயே இருப்பதும் அவனுக்கு செய்த உதவியாகாது. அவனுக்கு அளிக்கப்பட்டதர்மம்”.
ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,  உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?” (யாக்கோபு 2:15,16).
உண்மையாக தேவையில் உள்ளவர்களுக்கு, இருப்பவர்கள் கட்டாயமாக உதவி செய்ய வேண்டும். ஏனென்றால்விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது” (அப் 4:32) இதுதான் கிறிஸ்தவம். இதுதான் ஆதி திருச்சபையின் நிலை.
அதே வேளையில் தேவையில் இருப்பவர்கள் தேவனைப் பார்க்க வேண்டும். என் தேவைகளை பூர்த்தி செய்ய தேவனால் மட்டும்தான் முடியும் என்ற எண்ணமுடையவர்களாக தேவனைச் சார்ந்திருக்க வேண்டும்.
தேவனைச் சார்ந்து கொள்ளாமல் மனிதனையே எல்லாவற்றிற்கும் தேடி செல்வது வாழ்வில் எந்த உயர்வையும் தருவதில்லை. “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங் 121:1,2) என்று சங்கீதக்காரர் தேவனையே நோக்கி பார்ப்பதைக் கவனிக்க வேண்டும்.
தேவனுடைய ஒத்தாசையில்லாமல், தேவனுடைய அனுமதியில்லாமல் எந்த ஒரு உதவியும் கிடைக்காது, அப்படி கிடைத்தாலும் அது முழுமையாக இருக்காது என்பதை தேவ பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும்.
தேவன் சொல்லாதவைகளை செய்வதும் தவறு, தேவன் சொல்லி செய்யாமல் இருப்பதும் தவறு. எனவே, தேவையில் உள்ளவர்கள் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். உதவி செய்கிறவர்கள் தேவனின் சத்தத்தைக் கேட்டு, குறைச்சலில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய  வேண்டும்.
ஆகவே, தேவ பிள்ளைகளே, “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலே 3:24) “எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரி 10:31). கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக.





0 comments:

Post a Comment