உங்களுடன் ஒரு நிமிடம்
கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் குடும்ப,
வாசக அன்பர்களுக்கு, நித்திய தேவனாகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி.
ஜீவ அப்பம் மாத இதழ் தேவனால் கொடுக்கப்பட்ட
ஊழியம் என்பதை கர்த்தர் மறுபடியும் உணர்த்தி இருப்பதால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த ஊழியத்தில் தேவனுடைய கரம் இருப்பதினால் தேவனுக்கே
மகிமை உண்டாவதாக.
இந்த 2017 புதிய வருடத்தில் புதிய கிருபைகளை,
நன்மைகளை, ஆசீர்வாதங்களை கர்த்தர் நிறைவாக தருவாராக.
கடந்த சில மாதங்கள் நமது ஜீவ அப்பம் மாத
இதழ் வெளியிட முடியாமல் தடைகள் காணப்பட்டன. அநேகர் போன் மூலமாக விசாரித்தீர்கள் நன்றி.
இந்த மாத இதழுக்காக சிலர் பிரயாசப்படுகிறீர்கள், ஜெபிக்கிறீர்கள், உங்கள் குறைவுகளிலும்
இந்த ஊழியத்தை தாங்குகிறீர்கள், நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அன்பு ஜீவ அப்பம் மாத இதழ் வாசகர்களே, நமது
ஜீவ அப்பம் மாத இதழ் வேண்டும் என்பவர்களுக்கும், தங்கள் விலாசத்தைக் கொடுத்தவர்களுக்கும்
மட்டுமே, நாம் ஜீவ அப்பம் அனுப்பி வைக்கிறோம்.
அனுப்புகிற எல்லோரும் சந்தா அனுப்புவதில்லை. தேவனுடைய வார்த்தைகளை ஜீவ அப்பம் சுமந்து
செல்வதால், சந்தா அனுப்பாதவர்களிடமும் கட்டாயமாக
கேட்பதில்லை. அனுப்பி வைக்கிறோம், தேவனுடைய வார்த்தைகள் விதைக்கப்பட்டால் போதுமானது
என்பதே நமது குறிக்கோள்.
இந்த ஊழியத்தின் மூலம், கிறிஸ்துவை அறியாதவர்கள்
அறிந்து கொள்ளவும், கிறிஸ்துவை அறிந்தவர்கள் கிறிஸ்துவில் வளர்வதற்கு ஏதுவாகவும் செய்திகள்
வெளியிடப்படுகிறது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட
நமது ஜீவ அப்பம், பல தடைகள் மத்தியில்தான் வெளி வந்து கொண்டிருக்கிறது. இடைப்பட்ட சில
மாதங்கள் வெளியிட பொருளாதார குறைவுகள் உண்டாகும்போது, பிறகு வெளியிடலாம் என்று சூழ்நிலைகள்
காரணமாக நிறுத்தப்படுகிறது.
அப்படிப்பட்ட நேரங்களில், முந்திய மாதங்களில்
வெளியிட்ட மாத இதழைப் படித்தவர்கள், “எனக்கு ஜீவ அப்பம் வேண்டும், அனுப்பி தாருங்கள்”
என்று மின் அஞ்சல் அனுப்புவார்கள், போன் மூலமாக குறுஞ்செய்திகள் வரும், சிலர் தொலைபேசி
மூலம் தொடர்பு கொள்வார்கள். இவ்விதமாக அநேகர் ஜீவ அப்பம் மாத இதழ் மூலம் பயன் அடைந்து,
ஆசீர்வதிக்கப்பட்டதின் மூலம் தொடர்ந்து கேட்கும் போது, உந்துதல் அடைந்து, நெருக்கடிகள்
மத்தியிலும் தளராமல் ஜீவ அப்பம் வெளியிட முடிகிறது.
இந்த மாத இதழ் மூலம் நாங்கள் பயன் அடைந்தோம்
என்று தேவ பிள்ளைகள், கொடுக்கும் சாட்சியான வார்த்தைகளே எங்களுக்கு பலனும், நெருக்கடிகள்
மத்தியில் வெளியிட்டதில் உண்டாகும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. தேவனுக்கு மகிமை செலுத்தி, கர்த்தரை துதிக்கிறோம்.
தொடர்ந்து சில மாதங்கள் ஜீவ அப்பம் வெளியிட
முடியாமல் இடைவெளியானாலும், புதுப்பொலிவுடன் நம்மை எழுதச்செய்வதும், மாத இதழை வெளியிடச்செய்வதும்,
தேவனுடைய கிருபையும், தேவனுடைய நடத்துதலும், தேவ பிள்ளைகளின் சாட்சியான, உற்சாக வார்த்தைகளும்தான்.
இவைகளை வாசிக்கும் அன்பு வாசகர்களே, இந்த
மாத இதழுக்காக தொடர்ந்து, ஜெபியுங்கள், தேவ சித்தம் அறியுங்கள். கர்த்தர் உங்கள் உள்ளங்களில்
உணர்த்துவதை உணர்ந்து, இணைந்து செயல்படுங்கள்.
இதுவரை மாதம் தோறும், 500 பிரதிகள் வெளியிடப்படுகிறது,
இதை அனுப்பி வைப்பதற்கும் சேர்த்து, பல ஆயிரம் மாதம் தோறும் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு,
“பெருகவே, பெருகப்பண்ணுவேன்” என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தின் படி நிச்சயமாக ஊழியமும்,
மாத இதழும் பெருகும் என்று விசுவாசிக்கிறோம்.
அன்பு தேவ பிள்ளைகளே, ஜீவ அப்பம் ஊழியங்கள்
முழுக்க முழுக்க தேவனை மட்டுமே நம்பி, விசுவாசத்துடன் நடைபெற்று வருகிறது. இதற்காக
எந்த ஸ்தாபனத்தையோ, தனிப்பட்ட எந்த மனிதரை சார்ந்தோ இல்லை.
தேவனே, தேவைகளைச் சந்தித்து நடத்தி வருகிறார்.
இந்த ஊழியத்துடன் தேவ பிள்ளைகள் அதிகமாக இணையும் போது, இன்னும் அநேக புதிய ஆத்துமாக்களை
தேவனுடைய வார்த்தைகள் மூலம் சந்திக்கவும், விசுவாச மக்கள் இன்னும் தேவ ஐக்கியத்தில்
வளரவும், சபைகளின் வளர்ச்சிக்கும், ஊழியங்களின் விரிவுக்கும் கட்டாயம் ஜீவ அப்பம் பயன்படும்.
மேலும், ஜீவ அப்பம் ஊழியங்கள் மூலம், ஜீவ
அப்பம் கைப் பிரதிகள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது,.
முதலாவது நமது ஜீவ அப்பம் ஊழியங்களுக்காக
ஜெபியுங்கள், உங்கள் ஜெப உதவிகளும், இணைந்து செயல்படுகிறவர்களும் தேவை. இது முழுக்க
முழுக்க தேவனுடைய இராஜ்யம் விரிவடைய மட்டுமே, பங்கு பெறுங்கள், ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
0 comments:
Post a Comment