Bread of Life Church India

பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன் கடினமாக்கினார்?



 கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்” (யாத் 9:12). ஏன் பார்வோனின் இருதயத்தை தேவன்  கடினப்படுத்தினார் என்பதே சிலரின் கேள்வியாகும். ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
 இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடும் படி அவர்களை போக விட வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை பார்வோனிடத்தில் மோசே சொன்ன பொழுதுஅதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்” (யாத் 5:2).
கர்த்தர் யார்? நான் கர்த்தரை அறியேன்; என்று பார்வோன் சொல்வதால் இஸ்ரவேலர்களின் தேவன் யார் என்பதை அறியாமல்  இந்த வார்த்தைகளை அவன் சொல்ல வில்லை. அவன் அப்படி சொன்னவைகளின் அர்த்தம் என்னவென்றால்கர்த்தர் சொன்னால் நான் அனுப்பி விட வேண்டுமா? அப்படி அவர் சொன்னதும் அனுப்புவதற்கு அவர் யார்? என்று தன் மனதைக் கடினப்படுத்தி அகந்தையாகவும், ஆணவமாகவும் கர்த்தருக்கு விரோதமாக பேசுகிறான்.
ஆகவேதான் பார்வோன், தான்  யார் என்பதை அறிந்து கொள்ளும் படி தேவன் அவனுடைய இருதயத்தை மேலும் கடினமாக்கினார்.   ஆணவத்தின் உச்சியில் இருந்த பார்வோனுக்கு தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவருடைய அதிகாரம் என்ன? அவருடைய செயல்கள் எப்படிப்பட்டவைகள் என்பதை அவன் பார்க்கும்படிக்கே அவனுடைய இருதயத்தை மேலும் கடினப்படுத்தி கடினப்படுத்தி இயற்கையின் மேல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பார்வோன் அறிந்து கொள்ளும் படி பத்து வாதைகளினால் அவனின் அதிகாரத்தையும், ஆணவமான பேச்சையும் சிதறடித்தார்.

தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?



“கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்என்று 2 நாளா 18:22ல்   வாசிக்கிறோம் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்? இது 2 நாளாகமம் 18ம் அதிகாரத்தை வாசிக்கும் பொழுது சிலருக்கு எழும்பும் கேள்வியாக இருக்கலாம். இந்த அதிகாரத்தில் உள்ள சம்பவத்தின் மூலமாக தேவன் என்ன செய்தியை தமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை இந்த வேத பகுதியை நன்றாக வாசித்து தியானித்து அறிந்து கொள்வோம்.
ஒரு சமயம் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், சீரியாவிற்கு விரோதமாக கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு யுத்தத்திற்கு யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தையும் அழைக்கிறான். யோசபாத்தும் வருகிறேன் என்று சம்மதிக்கிறான். ஆனாலும்யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்” (2 நாளா 18:4) உடனே இஸ்ரவேலின் ராஜா ஆகாப் தனக்கு சாதகமாக தீர்க்கதரிசனம் சொல்லும் நானூறு தீர்க்கதரிசிகளை அழைத்து விசாரிக்கிறான். அவர்கள் அனைவரும்நீங்கள் போகலாம் தேவன் உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்கிறார்கள்.
அந்த நானூறு பேர் ஒரே விதமாக போகலாம் என்று சொன்னாலும் யோசபாத்திற்கோ அதில் திருப்தி இல்லை. ஆகையால்யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்” (2 நாளா 18:6). இவ்விதமாக யோசபாத் கேட்பதில் இருந்து ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய ஆவியினால் நடத்தப்படுகிற மனிதன் பொய்களை நம்ப மாட்டான்.
ஆனால் இஸ்ரவேலின் ராஜா ஆகாப் தேவனுடைய வார்த்தைகளை மீறி பொல்லாங்கான செயல்களில் அதிகமாக ஈடுபட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, தனக்கும் தனது செயல்களுக்கும் சாதகமான வார்த்தைகளை பேசும் நபர்களை உடன் வைத்துக்கொண்டிருக்கிறான்.