தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?
“கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய
தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்”என்று
2 நாளா 18:22ல் வாசிக்கிறோம் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் தேவன்
பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?
இது 2 நாளாகமம் 18ம் அதிகாரத்தை வாசிக்கும்
பொழுது சிலருக்கு எழும்பும் கேள்வியாக இருக்கலாம். இந்த அதிகாரத்தில் உள்ள
சம்பவத்தின் மூலமாக தேவன் என்ன
செய்தியை தமது மக்கள் அறிந்து
கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை
இந்த வேத பகுதியை நன்றாக
வாசித்து தியானித்து அறிந்து கொள்வோம்.
ஒரு சமயம் இஸ்ரவேலின்
ராஜாவாகிய ஆகாப், சீரியாவிற்கு விரோதமாக
கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு யுத்தத்திற்கு யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தையும் அழைக்கிறான். யோசபாத்தும் வருகிறேன் என்று சம்மதிக்கிறான். ஆனாலும் “யோசபாத் இஸ்ரவேலின்
ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்” (2 நாளா
18:4) உடனே இஸ்ரவேலின் ராஜா ஆகாப் தனக்கு
சாதகமாக தீர்க்கதரிசனம் சொல்லும் நானூறு தீர்க்கதரிசிகளை அழைத்து
விசாரிக்கிறான். அவர்கள் அனைவரும் “நீங்கள்
போகலாம் தேவன் உங்கள் கையில்
ஒப்புக்கொடுப்பார் என்று சொல்கிறார்கள்.
அந்த நானூறு பேர்
ஒரே விதமாக போகலாம் என்று
சொன்னாலும் யோசபாத்திற்கோ அதில் திருப்தி இல்லை.
ஆகையால் “யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு
இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே
இல்லையா என்று கேட்டான்” (2 நாளா
18:6). இவ்விதமாக யோசபாத் கேட்பதில் இருந்து
ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள
வேண்டும். கர்த்தருடைய ஆவியினால் நடத்தப்படுகிற மனிதன் பொய்களை நம்ப
மாட்டான்.
ஆனால் இஸ்ரவேலின் ராஜா
ஆகாப் தேவனுடைய வார்த்தைகளை மீறி பொல்லாங்கான செயல்களில்
அதிகமாக ஈடுபட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, தனக்கும்
தனது செயல்களுக்கும் சாதகமான வார்த்தைகளை பேசும்
நபர்களை உடன் வைத்துக்கொண்டிருக்கிறான்.
இவ்விதமாக கர்த்தருக்கு பயப்படாமல் தன் சுய இஷ்டத்தின்படியாக
நடந்து கொண்டிருக்கும் ஆகாப்புக்கோ நானூறு தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள்
காதில் தேனாய் வந்து பாய்கிறது.
நானூறு பேர் சொன்னதை ஏற்க முடியாமல் யோசபாத்
கேட்டதால், ஆகாப் மிகவும் சலிப்புடன்
“மிகாயா” என்னும் மற்றொருவன் இருக்கிறான்.
அவன் எப்போதும் தனக்கு விரோதமாகவே தீர்க்கதரிசனம்
சொல்வான் என்று சொல்கிறான். உடனே யோசபாத் அவனை
அழைத்து வரும்படி சொல்கிறான்.
இதற்கிடையில் அந்த நானூறு தீர்க்கதரிசிகளில்
ஒருவனான சிதேக்கியா நாடகப்பாணியில் தாங்கள் சொன்ன பொய்யான
தீர்க்கதரிசனமான வார்த்தைகளை
உறுதிப்படுத்தப் போராடுகிறான்.
“கெனானாவின்
குமாரனாகிய சிதேக்கியா
தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார்
என்றான்” (2 நாளா 18:10) ஆனாலும் அதையும் யோசபாத்தால் நம்ப முடிய வில்லை.
மிகாயா வந்தபின் “ராஜா
அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல்
யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு
அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்
என்றான்” (2 நாளா 18:14). அவனும் அந்த நானூறு
தீர்க்கதரிசிகளைப்போலவே சொன்னாலும் அப்பொழுதும் யோசபாத்திற்கு திருப்தி இல்லை.
மிகாயாவை பார்த்து உண்மையாக கர்த்தருடைய வார்த்தையை சொல்லும் படி யோசாபாத் நிர்பந்திக்கிறான். “அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும்
மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர் இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர்
தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்”
(2 நாளா 18:16).
ஆகாப் யுத்தத்தில் மடிந்து
போவான் ஆகையால் இஸ்ரவேல் மக்கள்
மேய்ப்பன் இல்லாத ஆடுகளை போல்
சிதறடிக்கப்படுவார்கள் என்று உவமையாக தேவனுடைய
வார்த்தையை சொல்கிறான். உடனே ஆகாப்புக்கு கோபம்
வருகிறது.
அந்த வேளையில்தான் மிகாயா
மேலும் கர்த்தருடைய வார்த்தைகளையும் தான் தரிசனமாக கண்டவைகளையும்
விவரித்து சொல்கிறான்.
“கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர்
வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும்
கண்டேன்.
அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில்
போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு,
ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து,
கர்த்தருக்கு முன்பாக நின்று: நான்
அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று
கர்த்தர் அதைக்கேட்டார்.
அப்பொழுது அது: நான் போய்,
அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது.
அதற்கு அவர்: நீ அவனுக்குப்
போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய்
அப்படியே செய் என்றார்.
ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய
தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர்
உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்” (2 நாளா 18:18-22). இந்த வார்த்தைகளை கேட்ட ஆகாப் இதுதான் கர்த்தருடைய
வார்த்தை என்பதை அறிந்து கொள்ளாமல், கர்த்தருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, உடனே மனஸ்தாபப்பட்டு
மனம் திரும்பாமல், மிகாயாவை பிடித்து அடித்து, சிறைசாலையில் போடும்படி கட்டளையிடுகிறான்.
ஒருவேளை அந்த நேரத்தில் மிகாயா மூலமாக வெளிப்படுத்தப்பட்ட
எச்சரிப்பின் வார்த்தைகளை ஆகாப் கேட்டு, மனஸ்தாபப்பட்டு, மனம்திரும்பியிருந்தால் பொய்யின்
ஆவியின் வஞ்சகத்தில் இருந்து விடுபட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து கர்த்தருடைய வார்த்தையை
அசட்டை பண்ணி வந்த ஆகாப் விழுந்து போகும்படிக்கு பின்வரும் அந்த சம்பவமானது கர்த்தருடைய
வார்த்தையின்படி நடந்தேறியது.
“சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக்
கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்
(2 தெசலோனிக்கேயர் 2:11,12).
பிரியமானவர்களே, எச்சரிப்பான தேவனுடைய வார்த்தைகளை தொடர்ந்து அசட்டை செய்து, தன்
சுய இஷ்டத்தின்படியாக நடந்துகொண்டு, தனக்கு பிரியமான வார்த்தைகளை
மட்டுமே கேட்க வேண்டும் என்று
விரும்புகிறவர்கள், வெகு விரைவில் வஞ்சிக்கப்படுவார்கள்.
ஏன் என்றால் கர்த்தருடைய வார்த்தைகளை
அசட்டை செய்கிறவர்களுக்கு தேவன் பொய்யை நம்பும்
படி வஞ்சகத்தின் ஆவியையே அனுப்புவார்.
கர்த்தருடைய வார்த்தைகள் எப்பொழுதும் நாம் விரும்புகிற விதமாகவே இருக்க வேண்டும்
என்று விரும்பவும் கூடாது.
கர்த்தருடைய வார்த்தைகள் எச்சரிப்பாகவும்,
வரும். கர்த்தருடைய வார்த்தையின்படியாக
நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் நமது வாழ்வின்
ஆசீர்வாதத்திற்கு நேராக நம்மை வழி
நடத்தி செல்லும்.
இக்காலத்திலும் கூட அநேகர் தங்களுக்கு
பிடித்தமான வார்த்தைகளை
மட்டுமே கேட்க வேண்டும் என்று
விரும்புகிறார்கள். தங்களை சீர்படுத்திக்கொள்ளும் கர்த்தருடைய வார்த்தைகளை அசட்டை செய்யப்
பார்க்கிறார்கள். இக்கால
அநேக பிரசங்கிகளும் மக்களுக்கு பிரியமான வார்த்தைகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தருடைய வார்த்தைகள் மட்டும்தான் எல்லா சூழ்நிலைகளையும் ஜெயிப்பதற்கு
பெலன் கொடுக்கும். மனிதனுக்கு நலமாக தோன்றுகிற நல்லவார்த்தைகளானாலும்
அந்த வார்த்தைகள் ஒருபோதும் பெலன் கொடுப்பது இல்லை.
ஆகையால்தான் அநேகர் விசுவாச வாழ்விலிருந்து
விழுந்து, இம்மைக்குரிய வாழ்விலும், மறுமைக்குரிய வாழ்விலும் பெறுந்த தோல்வியையே சந்திக்கிறார்கள்.
இக்காலத்தில் ஒரு கூட்டம் தேவனின்
எச்சரிப்பான வார்த்தைகளை சொல்வதும் இல்லை. அதேவேளையில் அதை
கேட்கும் மன நிலையில் ஒரு
கூட்ட மக்களும் இல்லை. அன்பானவர்களே, இப்படிப்பட்டவர்களிடத்தில்
பொய்யின் ஆவிகள் கிரியை செய்யும்.
ஆனால் அது பொய்தான் என்று
பகுத்தறிந்து பார்க்கும் நிலையில் இல்லாமல் ஆகாப்பை
போல வீழ்ச்சியை சந்திப்பவர்களே இக்காலத்திலும் அதிகமாக காணப்படுகிறார்கள்.
ஆனால் யோசபாத்தைப்போல கர்த்தருடைய
வார்த்தையை சரியாக பகுத்துபார்த்து, தேவனுடைய
வார்த்தைக்கு காத்திருந்து கீழ்ப்படிய விரும்புகிறவர்கள் எல்லா தீங்குகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள்.
பொல்லாத ஆவிகளுக்கு அவர்கள் மேல் அதிகாரம்
இல்லை. பொய்யின் ஆவிகள் தேவ பிள்ளைகளை
மேற்கொள்வதில்லை.
எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய வார்த்தைகளே நம்மை மாற்றும். கர்த்தருடைய
வார்த்தைகளே நம்மை மறுரூபமடைய செய்யும்.
கர்த்தருடைய வார்த்தைகளே நம்மை உயர்த்தும். கர்த்தருடைய
வார்த்தைகளே தைரியப்படுத்தும். கர்த்தருடைய வார்த்தைகளே நம்மை வழி நடத்தும்.
கர்த்தருடைய வார்த்தைகளே நமக்கு உறுதுணையாக இருக்கும்.
எனவே கர்த்தருடைய வார்த்தைகளை வாஞ்சிப்போம்.
பொய்யின்
ஆவிகளுக்கு விலகி நிற்போம்.
0 comments:
Post a Comment