Bread of Life Church India

பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன் கடினமாக்கினார்?



 கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்” (யாத் 9:12). ஏன் பார்வோனின் இருதயத்தை தேவன்  கடினப்படுத்தினார் என்பதே சிலரின் கேள்வியாகும். ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
 இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடும் படி அவர்களை போக விட வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை பார்வோனிடத்தில் மோசே சொன்ன பொழுதுஅதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்” (யாத் 5:2).
கர்த்தர் யார்? நான் கர்த்தரை அறியேன்; என்று பார்வோன் சொல்வதால் இஸ்ரவேலர்களின் தேவன் யார் என்பதை அறியாமல்  இந்த வார்த்தைகளை அவன் சொல்ல வில்லை. அவன் அப்படி சொன்னவைகளின் அர்த்தம் என்னவென்றால்கர்த்தர் சொன்னால் நான் அனுப்பி விட வேண்டுமா? அப்படி அவர் சொன்னதும் அனுப்புவதற்கு அவர் யார்? என்று தன் மனதைக் கடினப்படுத்தி அகந்தையாகவும், ஆணவமாகவும் கர்த்தருக்கு விரோதமாக பேசுகிறான்.
ஆகவேதான் பார்வோன், தான்  யார் என்பதை அறிந்து கொள்ளும் படி தேவன் அவனுடைய இருதயத்தை மேலும் கடினமாக்கினார்.   ஆணவத்தின் உச்சியில் இருந்த பார்வோனுக்கு தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவருடைய அதிகாரம் என்ன? அவருடைய செயல்கள் எப்படிப்பட்டவைகள் என்பதை அவன் பார்க்கும்படிக்கே அவனுடைய இருதயத்தை மேலும் கடினப்படுத்தி கடினப்படுத்தி இயற்கையின் மேல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பார்வோன் அறிந்து கொள்ளும் படி பத்து வாதைகளினால் அவனின் அதிகாரத்தையும், ஆணவமான பேச்சையும் சிதறடித்தார்.

 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.
நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார் (யாத் 7:3-5).
இஸ்ரவேல் மக்களை கொடுமை படுத்தி,  துன்புறுத்தி 400 ஆண்டுகளாக அவர்களை அடிமைப்படுத்தி வந்த பார்வோனும், எகிப்தியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யார் என்பதை அறிந்து கொள்ளவும், கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் எகிப்தியர்களும், பார்வோனும் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக செய்த எல்லா கொடுமையான செயல்களுக்கும் அவர்கள் தண்டணையை அடைய வேண்டும் என்பதற்காகவும், தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தி, எகிப்தியர்களை தண்டித்து, இஸ்ரவேலர்களுக்கு நீதியை சரிகட்டினார்.
எனவே,தேவன் பார்வோனின் சுயசித்தத்திற்கு முரணாக அவனது இருதயத்தைக் கடினப்படுத்தினார் என்று  கருதுவது தவறாகும். அவனுடைய இருதயத்தின் முழுமையையும் தேவன் அறிந்திருந்தபடியாலும், மனந்திரும்புதலுக்கு ஏதுவான எந்த கிரியைகளும் அவனிடம் இல்லாமல், தேவனுக்கும், அவர் சித்தத்திற்கும் எதிர்த்து நிற்பவனாக இருந்தபடியினாலும் அவன் இருதயத்தை கடினப்படுத்தி தேவன் தமது கிரியைகளை வெளிப்படுத்துகிறார்.
எனவே, தேவனுக்கு முன்பாக ஆணவமாக நிற்கும் எந்த மனிதனும் எந்த ராஜ்யமும் நிலை நிற்பது இல்லை. தேவனுக்கு முன்பாக ஆணவமாக நின்ற பார்வோன் மட்டுமல்ல, பல தேசங்களும், அதிகாரத்தினால் ஆணவத்துடன் செயல்பட்ட எல்லா மனிதரின் நிலையும் இவ்விதமாகவே இருந்திருக்கிறது.
பூமியெங்கும் என்னைப் போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்” (யாத் 9:14)என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எகிப்தியர்கள் பத்துவகையான வாதைகள் மூலம் வாதிக்கப்பட்டார்கள். அந்த பத்து வாதைகளிலும் தேவன் வாதைக்காக பயன்படுத்தியவைகள் எகிப்தியர்கள் தங்களுக்கு தெய்வங்களாக வைத்திருந்தவைகளை வைத்தே தேவன் அவர்களை வாதித்தார். காரணம் என்ன? அவைகள் தெய்வங்கள் அல்ல, தேவனே வானத்திற்கும் பூமிக்கும் சகல அதிகாரம் படைத்த ஒரே தேவன் என்பதை எகிப்தியர்கள் அறிந்து கொள்ளும்படி தேவன் அப்படி செய்தார். “எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது” (யாத் 8:10) என்று வேதம் கூறுகிறது.
வாதை உண்டாகும் வேளையில் கர்த்தருக்கு பயந்து ஜனங்களை போக விடுகிறேன் என்று சொல்லும் பார்வோன், “இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்” (யாத் 8:15). பிரச்சனைகள் நின்றதும் கர்த்தருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணம் அவனை விட்டு நீங்கி போகிறது. மனம் கடினப்படுகிறது. எனவே தேவன் அவனுடைய மனம் கடினப்படுவதற்கு மேலும் அனுமதி கொடுத்தார்.
சிலர் பிரச்சனையான சூழ்நிலையில் இருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் தந்திரமாக செயல்படுவார்கள். பிரச்சனை முடிந்ததும் எந்த மாறுதலும் இல்லாமல் பழைய நிலையிலேயே தொடர்வார்கள். அது போல தான் பார்வோனும் இலகுவான சூழ்நிலை உண்டானதும் தான் சொன்னபடி செய்யாமல் போனான். ஆகவே முன்பை விட அவன் இருதயம் கடினப்பட தேவன் அனுமதித்தார்.
மேலும் இந்த செயல்கள் மூலமாக முழு உலகமும் ஏன் இஸ்ரவேலர்களும், பின் வரும் சந்ததிகளும் கர்த்தரின் மகத்துவங்களை அறிந்து கொள்ளும்படியாகவும் தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்பட அனுமதித்தார்.
நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்” (யாத் 10:2).
நன்றாக இருந்த பார்வோனின் இருதயத்தை தேவனாகவே கடினப்படுத்த வில்லை. அவனுடைய இருதயம் கடினப்பட்ட நிலையில்தான் இருந்தது. அவனுடைய கடினப்பட்ட இருதயத்தை அறிந்திருந்த தேவன் தொடர்ந்து அந்நிலையில் இருக்க அனுமதித்தார். 20 தடவைகளுக்கும் மேற்பட்ட வசனக்குறிப்புக்களில்  பார்வோனின் இருதயம் கடினப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சில வசனங்கள் மட்டுமே தேவனே பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது. எனவே, யார் கர்த்தருக்கு விரோதமாக இருந்து தங்கள் மனதைக் கடினப்படுத்துகிறார்களோ, அவர்கள் இருதயம் மென்மேலும் கடினப்பட்டு போகும்.
தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, மனந்திரும்பும் மனிதனின் இருதயத்தை தேவன் கனிவாக மாற்றி, தமது அன்பை வெளிப்படுத்துவார்.



0 comments:

Post a Comment