தேடல்
படைப்பா? படைப்பாளியா?
தொடர்ச்சி........
சந்திரன் பணியை முடித்து புறப்பட
ஆயத்தமாக, ஆதவன் தன் பணியை
துவக்க தாமதமாகிக் கொண்டிருக்க, விடிந்தும் விடியாததுமான இளங்காலையில் வெளியே வந்து பார்க்க வீட்டிற்கு
முன் முந்தின தினம் செய்து
வைத்திருந்த சிலைகள் எல்லாம் நொறுங்கி,
சிதறிக் கிடப்பதைக் கண்டு, அந்த குளிர்வேளையிலும்
தன் உடல் சூடாக வியர்வைத்
துளிகள் வெளியே வரலாமா என்று
எட்டிப்பார்க்க “யார் இந்த வேலையை
செய்தது?” என்று அங்குமிங்கும் பார்த்து,
“நாகோர், ஆரான், ஆபிராம்” என்று
அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் ஓடினான்.
இதுவரை இல்லாத அளவு
தன்னுடைய தந்தையின் சத்தம் கேட்டு, நன்றாக
உறங்கிக்கொண்டிருந்தவர்கள்
எழுந்து ஒன்றும் புரியாமல் பதட்டத்துடன்
பார்க்க “என்னங்க, என்ன ஆச்சு, ஏன்
இந்த படபடப்பு” என்று தேராகுவின் மனைவி
நிதானமாக தன் கணவனிடம் கேட்டுக்கொண்டே
அருகில் வந்தாள்.
தன்னுடைய படபடப்பு குறையாமல் “நாம் செய்து வைத்திருந்த
எல்லா சிலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது, இதுவரை இது
போல் நடந்தது இல்லையே,” என்று
தன் மனைவியைப் பார்த்துச் சொல்ல, சூழ்நிலையின் விபரீதத்தை
புரிந்து கொண்ட ஆபிராமுக்குள்
பதட்டம் தொற்றிக் கொண்டது.
இருந்தாலும் உண்மையை மறைக்க கூடாது,
என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, உதடுகள் காய்ந்து ஒன்றோடு
ஒன்று ஒட்டிக்கொண்டிருக்க சிரமத்துடன் அவைகளை தன் நாவால்
ஈரப்படுத்திக்கொண்டு, தயக்கத்துடன் “அப்பா…..நா நான்தாப்பா
அவைகளை ….” என்று முழுவதும் முடிக்கும்
முன், தேராகு தன் பலத்தை எல்லாம் தன்
கரத்தில் திரட்டி அவன் கன்னத்தில்
விரல்களை பதிக்க, நிலை
குலைந்து வலியால் துடித்தான் ஆபிராம்.
ஆனாலும் தேராகுவின் கோபம்
தணிய வில்லை, மேலும் ஆவேசமாக
அவனை நெருங்கி, தன் கோபத்தை வெளிப்படுத்த
ஆபிராமின் தாய் அவனை தன்னோடு
அணைத்துக் கொண்டு, “விடுங்க சிறுபிள்ளைதானே” என்று
அவனை சமாதானப்படுத்த, சற்று தன் கோபத்தை
அடக்கிக் கொண்டு, “ஏன்டா இப்படிச் செஞ்ச,
இதை செய்வதற்கு நாளெல்லாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம், இதை
செய்து விற்றால்தான் நம்முடைய வயிறு நிறையும்” என்று
சொல்லிக் கொண்டே சுவரில் சாய்ந்து
அமர்ந்து கொண்டான்.
தன் தாயின் அரவணைப்புக்குள்
இருந்தாலும் வலியின் தாக்கம் குறையாததால்
விசும்பிக்கொண்டே இன்னும் இறுக்கமாக தன்தாயை
அணைத்துக்கொண்டவன், “வேண்டாப்பா இந்த சிலைகள் செய்ய
வேண்டாப்பா, இதைக் கடவுள் என்று
சொல்லி இதை வாங்கி யாரும்
ஏமாற்றம் அடைய கூடாதப்பா” என்று
அவன் பேசினாலும் பயத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்பது அவனுடைய வார்த்தையில் உள்ள நடுக்கத்தில்
வெளிப்பட்டன.
இவ்வளவு அடி வாங்கியும்,
அவன் இவ்விதம் பேசுவதை கண்ட தேராகு
சிறுவன் இவ்விதம் பேசுகிறானே என்று அவன்
பேசுவதை தள்ளி விடவும், முடியாமல்,
ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அமைதியாக தன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
உறக்கத்திலிருந்து, பதட்டத்துடன் எழுந்து இதுவரை இல்லாத
அளவு தங்கள் வீட்டில் இப்படியொரு
பதட்டமான சூழல் உண்டானதைக் கண்டு
என்ன செய்வதென்று புரியாமல் நாகோரும், ஆரானும், திகைத்தவர்களாய் வெளியே எட்டிப்பார்த்தனர். சிலைகள்
எல்லாம் உடைந்து நொறுங்கிக்கிடக்க ஒருவரை
ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
தன்னுடைய தந்தையின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் தான்
செய்தது தவறு என்று ஆபிராமின்
மனம் ஏற்றுக்கொள்ள வில்லை. தான் செய்தது
தவறுதான், இனி இவ்விதம் செய்யமாட்டேன்,
என்னை மன்னித்து விடுங்கள் என்று தன் தந்தையிடம்
சென்று சொல்வதற்கு மனம் இடங்கொடுக்க வில்லை.
அந்த நாள் முழுவதும்
ஒவ்வொருவருக்குள்ளும் இறுக்கமான சூழல் தொடர ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ளாமல் அவரவர் தங்கள் பணிகளை
செய்து கொண்டனர்.
ஆபிராமோ, இனி இந்த சிலைகள்
செய்வதிலோ, விற்பதிலோ இணைந்து செயல்படக்கூடாது என்று
உறுதியாக தீர்மானமெடுத்துக் கொண்டது அவனுடைய செயல்களில்
வெளிப்பட்டன.
முன்பு போல் தேராகு
க்கும் சிலை செய்து விற்பதில் இருந்த
ஆர்வம் குறைந்து வேறு வழியில்லாமல் அதைச்
செய்து வந்தான்.
நாட்கள் உருண்டோடின. ஆபிராம்
வாலிப பருவத்தை அடைந்தான். தன்னுடைய தகப்பனாருடைய வேலையில் சற்றும் ஆர்வம் இல்லாமல்
இருந்து வந்த ஆபிராம் ஆடுகளை
மேய்த்து, தனக்கென்று மந்தையை உருவாக்கி அதை
பெருக செய்தான்.
தன் மந்தையின் மேல்
கவனமுள்ளவனாக அதைக் கண்ணும் கருத்துமாக
கவனித்து, அவைகளை மேய்த்து வந்தான்.
அவனுடைய உள்ளம் முழுவதும்
’கடவுள் எப்படி இருப்பார். அவரைக்
காணமுடியுமா? அவரோடு பேச முடியுமா?’
என்ற எண்ணங்களே அவன் மனம் முழுவதும்
ஆக்கிரமித்திருந்தன. இதே எண்ணங்களோடு ஒவ்வொரு
நாளும் தனிமையான நேரங்களை
செலவிட ஆரம்பித்தான்.
“நான் பேசும் சத்தத்தை
கடவுள் கேட்பார், அவர் என்னோடு பேசுவார்”
என்று அவனுக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை
உண்டாகிக்கொண்டிருந்தன. அந்த ஆவல் ஆபிராமுக்குள்
நாளுக்கு நாள் அதிகமாயின.
கடவுளைக்குறித்த தேடல் ஆபிராமின் ஆத்துமாவிற்குள்ளிருந்து
அதிகமதிகமாக புறப்பட்டன. ஆனால் சிலைகளிலோ, மற்ற
எந்த பொருள்களிலோ, கடவுள் இல்லை. இந்த
உலகமும், இதில் உள்ளவைகளும் தானாக
உண்டானது அல்ல, இவைகளையும் மனு
குலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள
கடவுள் ஒருவர் உண்டு, என
அவன் உள்ளுணர்வில் தெளிவான எண்ணமிருந்தன.
கடவுள் மனிதர்கள் உருவாக்கும்
சிலைகளுக்குள்ளேயோ, மர பொம்மைகளுக்குள்ளேயோ இல்லை.
உயிருள்ள மனிதனை படைத்த கடவுள்
உயிரற்ற சலனமில்லா கல்லுகளில் வாசமாயிருப்பாரோ? உயிரோடு இருக்கும் கடவுள்
பேசுவார் என்ற அசைக்க
முடியாத உறுதியுடன் இருந்தான்.
ஒரு நாள் ஆபிராம்,
வனாந்தரமான இடத்தில்
மந்தையை அமர்த்தி மேய்த்துக்
கொண்டிருந்த மாலை நேரத்தில், ஆட்டு
மந்தையை வீட்டிற்கு நேராக அழைத்துச்செல்லும் அந்த
வேளையில், ஒரு கம்பீரமான குரல்
“ஆபிராம், ஆபிராம்” என்று அழைக்கும் இடி
முழக்கம் போன்ற சத்தம் கேட்டு,
திகைத்தவனாய் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தான்.
கண்களுக்கு எட்டின தூரம் வரை
ஒருவரையும் காணாமல் இந்த சத்தம்
எங்கிருந்து வந்தன.? என அவன் திகைத்துக்கொண்டிருக்கையில்
மறுபடியும் “ஆபிராம், ஆபிராம்” என்று அதே சத்தம்
கேட்க, இம்முறை சுதாரித்துக்கொண்ட ஆபிராம் இந்த
சத்தம் இதுவரை கேட்டிராததும், மனித
சத்தங்களுக்கு அப்பார்பட்ட சத்தம் என்பதை உணர்ந்தவனாய்,
இது வானத்திலிருந்து வந்த சத்தம்தான் என்பதை
அறிந்து, இனம் புரியாத சந்தோஷத்துடன் “இதோ
நான் உமது அடியேன்” என்று
சொல்லி பயத்துடன் நின்றான்.
அந்த வேளையில் மிகவும்
பிரகாசமான ஒளி அவனைச்சுற்றிலும் பிரகாசிக்க,
அவனால் பார்க்க முடியாத அளவு,
மகிமையின் பிரகாசம் சூழ்ந்திருக்க அதிலிருந்து கடவுள் ஆபிராமை நோக்கி
“ஆபிராமே, உன்னை இந்த மனுகுலத்திலிருந்து
பிரித்தெடுத்தேன், உன்
எண்ணங்களையும், நீ கூப்பிடும் சத்தங்களையும்
நான் கேட்டேன்.
" நீ உன் நாட்டிலிருந்தும்
உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும்
புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும்
நாட்டிற்குச் செல்.
உன்னை நான்
பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசீர்வாதங்களை வழங்குவேன்.
உன் பெயரை நான் சிறப்புறச்
செய்வேன்; நீயே ஆசீர்வாதமாக விளங்குவாய்.
உனக்கு ஆசீர்வாதம் கூறுவோர்க்கு
நான் ஆசீர்வாதம் வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும்
சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள்
அனைத்தும் ஆசீர்வாதம்
பெறும்" என்று சொல்லி அவன்
செல்ல வேண்டிய நாட்டைக்குறித்தும் அவன்
செல்ல வேண்டிய இடத்தைக்குறித்தும் அவன் நடக்க வேண்டிய வழிகளைக் குறித்தும்,
தெளிவாக கடவுள் அவனிடம் பேசுவதை
மிகவும் பணிவுடன் கேட்டு, “அந்தபடியே செய்கிறேன்” என்று சொல்லி வணங்கி
நின்றான்.
அவனைச்சுற்றிலும் இருந்த பிரகாசமான ஒளி
விலகியிருந்தது, ஆனாலும் அந்த அனுபவத்திலிருந்து
மீளாதவனாக வெகு நேரமாகி விட்டது
என்பதை உணர்ந்து, தன் மந்தைகளை மடக்கி,
அவைகளை தன் வீட்டிற்கு நேராக
நடத்த ஆரம்பித்தான்.
அவனுக்குள் கடவுள் பேசிய வார்த்தைகளே
மறுபடியும், மறுபடியும் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன. வானத்தையும் பூமியையும் படைத்த ஒப்பில்லா ஒரே
கடவுள் தன்னுடன் பேசிய வார்த்தைகளை நினைத்து
நினைத்து பூரித்தவனாய் வீட்டை நோக்கி நடந்து
வந்தான். ஆனால் அவனுக்குள்ளாக இருந்த
அளவில்லா மகிழ்ச்சியில் காற்றில் மிதந்து வருவது போல்
உணர்ந்தான்.
இரவு வெகு நேரமாகியும்
தன் கணவன் வராததைக்கண்டு, ஆபிராமின்
மனைவி சாராய் அவனுடைய வருகைக்காக
வாசலியேயே அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தாள். தூரத்தில் ஆபிராம் வருவதை பார்த்தபின்
அவளுடைய மனம் அமைதியானது.
ஆபிராம் அருகில் வந்ததும்
“ஏன் இவ்வளவு நேரம், ஒரு
நாளும் இவ்வளவு நேரம்? ஆகாதே”
என்று ஆபிராமைப்பார்த்துக் கேட்டுக்கொண்டே,
தொழுவத்தை திறந்து
விட ஆடுகள் அதற்குள் அணி
வகுத்துச் சென்றன.
“என்ன நான் கேட்டுக்கொண்டே
இருக்கிறேன், நான் கேட்பதை கூட
கவனிக்காமல் என்ன அப்படி ஒரு
சிந்தனை”? என்று கேட்டவளை அப்பொழுதுதான்
முதன் முதலாக பார்ப்பது போல்
ஆபிராம் நிற்க “உங்களைத்தான் கேட்கிறேன்”
என்று அவனைப் பார்த்து சத்தமாக
கேட்டாள்.
அப்பொழுதுதான் சுய நினைவுக்குள் வந்தவனைப்போல்
துள்ளிக்குதித்து கடவுள் தன்னிடம் பேசியவற்றை
விவரித்துச் சொன்னான், அவன் பேச பேச
சாராயின் கண்கள் விரிவடைந்தன. மிகுந்த
ஆச்சரியத்துடன் “என்னங்க சொல்றீங்க! நீங்க
சொல்வதெல்லாம் உண்மையா?” என்று அவனையே பார்க்க “நான் சொல்வது எல்லாம்
உண்மைதான், கடவுள் என்னோடு பேசினார்”
என்று ஆபிராம் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவனுடைய
தந்தை தேராகு, அவனுடைய சகோதரர்கள்
அவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அவனைச் சூழ்ந்துகொள்ள
எல்லோரிடமும் கடவுள் தன்னிடம் பேசியவற்றை
சந்தோஷமாக சொல்ல எல்லோரும் மிகுந்த
ஆர்வமாக கேட்டு ஆச்சரியப்பட்டனர்.
தேராகு ஆபிராமின் தலையை
வருடி, “என் மகனே, கடவுள்
ஆசீர்வாதம் எப்போதும் உன்னோடு இருப்பதாக, இனிமேல்
இந்த சிலைகளை நான் வணங்குவதில்லை”
என்று சொல்லி அவைகளை அகற்றினான்.
வீடு முழுவதுமாக சந்தோஷத்தினால்
நிறைந்திருந்தது. “நாளைக் காலையே கடவுள்
சொன்ன நாட்டை நோக்கி பயணம்
செய்ய வேண்டும்” என்று சொல்லி தன்
பயணத்திற்காக ஆயத்த வேலையில் ஈடுபட
ஆரம்பித்தான், ஆபிராம்.
தொடரும்
தொடரும்
ஆதியாகமம் 12:1-3 வரை உள்ள
வசனங்கள் அடிப்படையில் கதை வடிவில் எழுதப்பட்டது
0 comments:
Post a Comment