Bread of Life Church India

அஸ்திவாரம்



கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு, தேனிலும் இனிமையான இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
பிரியமானவர்களே, நமது ஜீவ அப்பம் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, எல்லைகளை விரிவாக்கி  வருவதால் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரித்து, துதிப்போம்.
தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கவும், அநேகர் தேவனுடைய வார்த்தைகளினாலே விடுவிக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் ஜீவ அப்பம் மாத இதழை தேவன் பயன்படுத்தி வருகிறார்.

தேவனுடைய நிறைவான கிருபைகளை பெற்று, இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் உத்தமமான சீஷர்களை ஏற்படுத்தும்படி, தேவனாகிய கர்த்தர் நமது கரங்களில் கொடுத்திருக்கும் இந்த ஊழியத்தை, தேவன் நமக்கு காண்பிக்கும் வழியில், தேவ சித்தம் அறிந்து ஒவ்வொரு நாளும் செயல்பட நம்மை அர்ப்பணிப்போம்.
உலகத்தின் பிடியில் சிக்கி, உலகம் காட்டும் வழியில் சென்று, தங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்தி, அறியாமை இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களை தேவனுடைய வார்த்தையினாலே விடுவிக்கும் உன்னதபணியை தேவன் நமது கரங்களில் கொடுத்திருக்கிறார்.
எந்த வழிகளில் எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று இரவும் பகலும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும், இக்கால மனிதர்களிடமே நாம் தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்க தேவன் இந்த தலைமுறையில் நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தான் எல்லாவற்றையும் அறிந்து விட்டேன் என்று மாய்மாலத்தில் மாட்டிக்கொண்டு, இம்மைக்காக மட்டும் கிறிஸ்துவை பின்பற்றிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தின் மத்தியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வேதாகமத்தையும், கிறிஸ்துவையும் கவனிக்காமல் மனிதர்களை கவனித்து விட்டால் வேண்டாதவைகள் நமக்குள் வர வழி அமைத்து கொடுப்பதாகிவிடும். கவனமாக இருந்து, உண்மையான மனந்திரும்புதலோடு, கிறிஸ்துவைப்பின்பற்றி, வேதாகமத்தை கவனித்து நம்முடைய வாழ்வை காத்துக்கொள்ளுதல் நல்லது.
வேதாகமத்தில் இல்லாத, இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுக்காத நவீன உபதேசங்களும், உபதேசிகளும் பெருகி விட்ட இந்த காலத்தில் வேதாகமத்தை படிப்பதும், தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பதும் மிக மிக அவசியமாக இருக்கிறது.
வேதாகம வார்த்தைகளுக்கு உட்படாத எந்த ஆசீர்வாதங்களும், செல்வங்களும் நமது ஜீவியத்தை கெடுத்து விடும். கிறிஸ்தவனுக்கு கிடைக்கும் செல்வத்தின் பெருக்கமெல்லாம் தேவனுடைய ஆசீர்வாதத்தினால் தான்  வந்தது என்று நினைத்து ஜீவியத்தை கெடுத்துக்கொள்ளாமல், அந்த மனிதன் வேத வசனங்களுக்கு கீழ்ப்படிந்து எந்த அளவுக்கு கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடந்து,  கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்துகிறான் என்பதை வேத வசனத்தின் அடிப்படையில் கவனிப்பது அவசியமாகும்.
இதுதான் உண்மையான ஆசீர்வாதம். மாறாக வெறும் கிறிஸ்தவனாக மட்டும் இருந்து, வேதாகமம் சொல்வதை கவனிக்காமல், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாமல், கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்தாமல், தன் இஷ்டம் போல் நடக்கும் மனிதனின் பொருளாதார, செல்வ செழிப்பை வைத்து அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நினைத்தால் அது தவறு அது ஆசீர்வாதம் அல்ல, வேதனை.
கிறிஸ்துவை பின்பற்றும், மனிதனுடைய வாழ்வே, நித்தியத்தை நோக்கி பயணிக்கிறது. இந்த உலக ஆஸ்திகளை எந்த வகையிலாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு, செல்லும் மனிதர்களின் வாழ்க்கை பயணம், நித்திய அழிவை நோக்கி பயணிக்கிறது.
தேவன் நமக்கு கொடுத்த சுவிசேஷத்தை நாம் தைரியமாக சொல்லியே ஆக வேண்டும்.  சத்தியத்தை நாம் சத்தமாக சொல்லும் போதே, சத்தியத்தைப் பின்பற்றும் கூட்டம் எழும்பும், கிறிஸ்துவின் சாயல் மனிதர்களுக்குள் வெளிப்படும், தேவனுடைய இராஜ்யம் உண்டாகும், தேவன் மகிமைப்படுவார்.
இந்த உன்னதபணியை செய்து கொண்டிருக்கும் ஜீவ அப்பம் ஊழியங்களோடு இணைந்து செயல்பட உங்களையும் உற்சாகப்படுத்துகிறேன்.
 இன்னும் அதிகமான பிரதிகள் அச்சிடவும், இன்னும் அநேகரை தேவனுடைய வார்த்தைகளால் சந்திக்கவும், இந்த ஊழியமானது இன்னும் தேவ சித்தம் அறிந்து, தேவனுக்குப் பிரியமாக நடக்கவும் ஜெபியுங்கள்.
ஜீவ அப்பம் ஊழியத்திற்காகவும், இந்த மாத இதழ் அச்சிட்டு உங்கள் கரங்களில் கிடைக்க தங்கள் பொருளாதாரத்தினால் தாங்கி வரும் பங்காளர்களுக்காகவும், ஜெபியுங்கள்.
தொடர்ந்து நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன். கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அளவில்லாமல் ஆசீர்வதித்து பெருகச் செய்வாராக.

0 comments:

Post a Comment