எல்லாம் உனக்காக......
தேவனுடைய வார்த்தைகளை தியானித்து வாசிக்கும்
போது நமக்குள் உண்டாகும் பரவசத்தை வார்த்தையால் சொல்ல இயலாது, காரணம் தேவனுடைய வார்த்தையின்
வல்லமை நமக்குள்ளாக சென்று நம்மை உயிர்ப்பிக்கிறது.
ஜீவ அப்பம் வாசக குடும்பத்திற்கு இந்த மாத தேவனுடைய
வாக்குத்தத்தமான வார்த்தை “நீ எப்போதும்
என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது’’ (லூக்கா 15:31).
லூக்கா 15 ம் அதிகாரத்தில் 11ம் வசனத்தில் இருந்து
32 ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் இரண்டு விதமான நபர்களைக் குறித்து இயேசுவானவர்
சொல்வதைப் பார்க்கலாம்.
அநேகமாக இந்த பகுதியில் இளைய மகனைக்குறித்துதான்
நாம் அதிகமாக தியானித்து இருக்கிறோம். ஆனால் உண்மையாக இந்த பகுதி மூத்த குமாரனை மையமாக
வைத்தே துவங்குகிறது.
மூத்த குமாரன், தனது தந்தை இளைய மகனை கவனிப்பது
போல் தன்னை கவனிக்க வில்லையே என்று வருந்துகிறான். ஆனால் தந்தையின் பதிலோ, தனது மூத்த
மகனையும் தான் எவ்விதம் நேசிக்கிறேன், எந்த
அளவுக்கு அதிகாரம் தந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள அறிவுறுத்துவதாக இருக்கிறது.
மூத்த மகன் எல்லாம் தகப்பனுடையது, தகப்பன் தனக்கு
எதாகிலும் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இருக்கிறது. ஆனால் தகப்பனோ, தனக்கு உள்ளது
எல்லாமே தன்னுடையது அல்ல, அது உன்னுடையது தான் என்று சொல்லி, ஆச்சரியப்படுத்துகிறார்.
இளைய மகன் முரட்டாட்டமாக இருந்த காலத்தில் தகப்பனுடைய
அன்பை புரிந்து கொள்ளாமல், உணர்ந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளாமல், தகப்பனுக்கு எதிர்த்து
நின்று, தன்னுடையதை எல்லாம் பிரித்து வாங்கி சென்று, எல்லாவற்றையும் வீணடித்து விட்டு,
கடைசியில் தகப்பனுடையது எதுவும் எனக்கு வேண்டாம் தனது தகப்பன் மட்டுமே தனக்கு போதும்
என்று மனந்திரும்பி வருகிறான்.
ஆனால் நல்ல தகப்பனோ, தன் இளைய மகனையும், தன்னுடைய
ஆஸ்தியினால் வரவேற்கிறார்.
எந்த ஒரு பிள்ளையும், தன்னுடைய ஆஸ்திக்காக
மட்டும் தன்னிடம் அன்பு கூறுவதை எந்த தகப்பனும் விரும்ப மாட்டான். கொடுப்பதினால் மட்டும்
வருவது அன்பு அல்ல, இதற்கு முன்னுதாரணமாக தேவன் மனிதர்களாகிய நம்மிடம் காண்பித்த அன்பு
நமக்கு முன்பாக இருக்கிறது.
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து
நமக்காக
மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த
தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்’’ (ரோமர் 5:8).
தகப்பனுடைய எல்லா ஆஸ்திகளும் பிள்ளைகளுக்கு
உரியவைகள்தான். ஆனால் தகப்பனுடைய ஆஸ்திகளுக்காக தகப்பன் மேல் அன்பு வைப்பது மாய்மால
(வேஷம்) அன்பு.
இளைய குமாரனைப்போல், மூத்த குமாரன் தகப்பனை
விட்டு ஓடிப்போக வில்லை, நல்லதுதான். ஆனால் அவனுக்குள் இருந்த எண்ணம் எப்படிப்பட்டது.
உண்மையாக தகப்பன் மேல் அன்பு வைத்து தகப்பனோடு கூட இருந்தானா? அல்லது தகப்பனுடைய ஆஸ்திகளின்
மேல் கண் வைத்து அதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தகப்பனுடன் இருந்தானா?
தகப்பன் தன் மகனிடம் எதை விரும்புவார். தன்னுடைய
ஆஸ்திக்காகவே தன் மகன் அன்பு கொள்வதையா? அல்லது தன் மேல் உண்மையான அன்பு வைத்து தன்னுடன்
இருக்கும்படியாகவா? நல்ல தகப்பன் உண்மையான
அன்பையே விரும்புவார்.
ஆனால் மூத்த மகனோ “இதோ, இத்தனை வருஷகாலமாய் நான்
உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான்
சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு
ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை’’ (லூக்கா 15:29) என்ற குற்றசாட்டை
தன் தகப்பன் மேல் வைக்கிறான்.
இதற்கு அர்த்தம் என்ன? இவன் தகப்பனுக்காக
செய்த ஊழியம், கீழ்ப்படிதல் எல்லாம் தகப்பனின் ஆஸ்தியை குறிவைத்தே இருந்திருக்கிறது
என்பதை தன் வார்த்தையில் காண்பிக்கிறான்.
அதற்கு அன்பான தகப்பன் “எனக்குள்ளதெல்லாம்
உன்னுடையதாயிருக்கிறது’’ என்று தனக்கு உண்டான எல்லாவற்றையும் அவனுடையது
என்று சொல்கிறார்.
தகப்பனோடே இருக்கும் மகன் தன்னுடைய தகப்பன்
எப்படிப்பட்டவர் என்பதை அறியாமல் இருப்பது எத்தனை பரிதாபம்.
தன் தகப்பன் தனக்கு தந்திருக்கும் அதிகாரத்தை
அறியாமல் இருப்பது எவ்வளவு அறியாமை.
தேவன் நல்ல தகப்பனாக நமக்கு இருக்கிறார்.
நாம் எப்படிப்பட்ட பிள்ளைகளாக இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாக
இருக்கிறது.
ஆவிக்குரிய ஐசுவரியவான்
இன்றைக்கும் அந்த மூத்த மகனைப்போலவே அநேகர்
இருக்கின்றனர். மூத்த மகன் எப்படி தன் தகப்பனோடு இருந்தானோ, அவ்விதமாக தேவனோடு இருக்கின்றனர்.
ஆனால் தேவன் எப்படிப்பட்டவர், என்னிடத்தில் அன்புடன் இருக்கும் அவரிடத்தில் நான் எவ்விதம்
அன்பு கூற வேண்டும் என்று அறியாமல் இருப்பதே ஆவிக்குரிய வாழ்வில் தேக்கத்தை ஏற்படுத்தி,
ஆவிக்குரிய தரித்திரத்தில் வாழ வேண்டிய நிலையை உண்டாக்கி விடுகிறது.
இன்றைய நாட்களில் இந்த உலகத்திற்குரிய ஐசுவரியத்தை
அடைந்து விட வேண்டும் என்று விரும்பி, தேவ பிள்ளைகள் என்று தங்களை சொல்லிக்கொள்கிறவர்கள்
கூட ஆவிக்குரிய தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பரிதாபம்.
தனது தகப்பனோடே வாழ்ந்து வந்த மூத்த மகன்
தன்னுடைய தகப்பனுடைய குணாதிசயத்திற்குள்ளாக வராமல், இந்த உலகத்திற்குரிய விதத்தில்
சுயத்தில் மையம் கொண்டு, ஆவிக்குரிய தரித்திரத்தில் இருந்ததினால், தன் தகப்பன் இளைய மகனை வரவேற்பது போல் தன் சகோதரனை அவனால்
வரவேற்க முடிய வில்லை.
தன்னுடைய சகோதரனை நேசிக்க அவனால் முடிய வில்லை.
அவனைக் குற்றம் சாட்டுவதில் தான் அவனுடைய மனம் நிறைந்திருந்ததே தவிர, அவனிடத்தில் அன்பு
காட்டும் தகப்பனின் அன்பு அவனுக்குள் இல்லை.
தகப்பனோடு இருந்தும் தகப்பனின் குணாதிசயங்கள்
அவனுக்குள் வராமல் இருந்ததே அவனுடைய ஜீவியத்தில் வறட்சியை காண்பிக்கிறது.
பொருளாதாரம் மட்டுமே தேவனுடைய ஆசீர்வாதம்
என்று எண்ணி அதற்காக மட்டும், தேவனிடம் இருக்கிறவர்கள் மூத்த மகனுக்கு ஒப்பாகவே இருக்கிறார்கள்.
அதற்காக பொருளாதார உயர்வு தேவன் கொடுப்பது
இல்லை என்று சொல்ல வில்லை. “தம்முடைய சொந்தக்குமாரனென்றும்
பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட
மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?’’ (ரோமர் 8:32) என்று வேதம் கூறுகிறது.
தேவன் தன்னுடைய எல்லாவற்றையும் நமக்காக தந்து விட்டார்.
இன்னும் நாம் அவரிடத்தில் எதை தேடிக்கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவானவரின் அடிச்சுவட்டில்
நடந்து, தேவனோடு வாழும் வாழ்க்கையே ஐசுவரியமான வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் குறை என்பது
எங்கு இருந்து வரும்.?
நிறைவானவர் நம்மோடு கூட இருக்கும் போது குறைவானவைகளுக்கு
இடமில்லையே. அப்படியானால் நாம் நினைத்துக்கொண்டிருக்கும் குறைவுகள் எதை குறித்தது?
நம்முடைய கவனமெல்லாம் எதில் இருக்கிறது.
மூத்த மகனிடம் தகப்பன் “எனக்குள்ளதெல்லாம்
உன்னுடையதாயிருக்கிறது’’ என்று சொல்லுவதற்கு
முன்பு, “நீ எப்போதும்
என்னோடிருக்கிறாய்’’ என்ற வார்த்தையை சொல்கிறார்.
உண்மையாக நாம் தேவனுடன் இருக்கும் போது, எதைக்குறித்தும் கலங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.?
அப்படியானால் இன்று உங்களுடைய கவலைகள் எதை
பற்றியதாக இருக்கிறது. உங்களுடைய கலக்கங்கள் எதை குறித்ததாக இருக்கிறது.? தேவனோடு தான்
இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லிக்கொண்டு, எனக்கு இது இல்லையே, அது இல்லையே என்று,
கலங்கி, கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து என்ன சொல்லுவார்? அஞ்ஞானிகள் என்று சொல்வாரல்லவா?
உலக ஐசுவரியத்தை மட்டுமே முதன்மையாக வைத்து,
இயேசு கிறிஸ்துவை தேடி, தேவனோடு இருக்க விரும்புகிறவர்களை
பார்த்து இயேசு கிறிஸ்து “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல்,
தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்’’ (லூக்கா 12:21).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் ஆவிக்குரிய
ஐசுவரியவான்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஆவிக்குரிய ஐசுவரியவான்களாக
இருக்கும் போதே, தேவனுடையதெல்லாம் நம்முடையது என்ற எண்ணமுடையவர்களாக இருப்போம்.
இம்மையிலும் ஐசுவரியவான்
“வீடும் ஆஸ்தியும் பிதாக்கள்
வைக்கும் சுதந்தரம்’’ (நீதி 19:14)
தகப்பன் மூத்த மகனுக்கு எதையும் விலக்கி
வைக்க வில்லை, எல்லாவிதமான சுதந்திரத்தையும் கொடுத்திருந்தார். ஆனால் அவனோ, அதை அறியாதவனாகவே
இருக்கிறான்.
தன்னுடைய தகப்பன் தனக்கு எதையும் கொடுக்க
வில்லை என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறான். அதிலிருந்து அவன் தகப்பனுடைய சுதந்திர வீதத்தை
குற்றப்படுத்துகிறவனாகவே இருக்கிறான்.
தகப்பனுடைய வீட்டில் இருக்கும் அவனுக்கு
தகப்பன் எந்த விதமான குறைகளையும் வைக்க வில்லை. தன்னுடைய எல்லாவற்றையும் அனுபவிக்க
அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.
இந்த மூத்த மகனின் குற்றச்சாட்டு, தகப்பன்
தனக்கு எதையும் கொடுக்க வில்லை என்பதாக இல்லாமல் தன்னுடைய சகோதரனை ஏற்றுக்கொண்டாரே
என்பதாகவே இருக்கிறது.
“ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய
நீதி என்றைக்கும் நிற்கும்’’ (சங்கீதம் 112:3).
இந்த பூமியில் வாழ்வதற்கு தேவன் எல்லோருக்கும்
ஆஸ்திகளையும், ஐசுவரியத்தையும் கொடுக்கிறார். ஆனால் மனிதர்கள் தேவன் தனக்கு கொடுத்தவைகளில்
திருப்தியடையாமல் மற்றவர்களுக்கு கொடுத்தவைகளிலேயே தங்கள் கண்களை பதிய வைத்து, மற்றவர்களுக்கு
இருப்பது போல் தனக்கு இல்லையே என்று தங்கள் சமாதானத்தை கெடுத்து தேவனை விட்டு மூத்த
குமாரன் போனது போல். பின்வாங்கி போகிறவர்களாக இருக்கிறார்கள்.
இந்த பூமியில் தேவன் ஒருவரையும் வெறுமையாக
விடுகிறவர் அல்ல, எல்லோரையும் நிறைவாக வைக்க விரும்புகிறார்.
“பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது’’ (1கொரி 10:26) என்று வேதம் சொல்கிறது.
நாம் தேவனுடைய
பிள்ளைகளாய், தேவனோடு கூட இருக்கும் பொழுது “எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது’’
(லூக்கா 15:31) என்று இயேசு கிறிஸ்து
சொல்லுகிறார்.
நாம் இயேசு கிறிஸ்துவினால் இம்மையிலும்,
மறுமையிலும் முழு ஆசீர்வாதங்களுக்கும், சொந்தக்காரர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
“அவர் கிறிஸ்துவுக்குள்
உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை
ஆசீர்வதித்திருக்கிறார்’’
(எபேசியர் 1:4).
தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களில்
திருப்தி உள்ளவர்களாய் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். நம்முடைய மனதின் எண்ணங்களின்
படியும், இந்த உலகத்தின் பார்வையின்படியும் நான் மிகுந்த செல்வந்தனாக இல்லையே, தேவன்
எனக்கு அப்படிபட்ட ஆஸ்திகளை கொடுக்க வில்லையே என்று முறு முறுத்து தேவனை விட்டு விலகுகிறவர்களாக
நாம் இருப்போமானால் அதுவே பரிதாபம்.
தகப்பனை குற்றப்படுத்தி, தகப்பனை விட்டு
விலகி நிற்பதால் மூத்த குமாரன் என்ன நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும், அதே போல தேவனை குற்றப்படுத்தி, தேவனை விட்டு விலகி இந்த பூமியில் மனிதன் எப்படி
வாழ முடியும்.?
தேவனை விட்டு விலகி வாழும் வாழ்க்கை அல்லவா
சபிக்கப்பட்ட வாழ்க்கை. தேவன் இல்லாமல் வாழும் வாழ்க்கை அல்லவா வெறுமையான வாழ்க்கை.
தேவன் இல்லாமல் வாழும் வாழ்க்கை அல்லவா சமாதானமில்லாத வாழ்க்கை.
தகப்பனோடு இருக்கும் மகனுக்கு தகப்பன் தன்னுடைய
ஆஸ்திகள் எல்லாம் உன்னுடையது என்று சொல்லி, தனக்குண்டான ஆஸ்திகளை எப்படி பிள்ளைகளுக்கு
கொடுக்கிறாரோ, அதே போலதான் நம்முடைய பரம தகப்பனாகிய தேவன் நமக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தந்து நம்மை நடத்துகிறார்.
தேவனுடைய நன்மைகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும்
சொந்தக்காரர்களாக இருக்கும் நாம் வீண் கவலைகளை விட்டு, வேண்டாத சிந்தனைகளை நம்மை விட்டு
அகற்றி, தேவனுக்குப் பிரியமுள்ளவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
விசுவாசத்தினாலே நாம் தேவனுடைய பிள்ளைகளாய்
இருக்கிறோம். நம்முடைய விசுவாசமானது நாளுக்கு நாள் பெருகி, தேவனோடு உள்ள ஐக்கியம் இன்னும்
அதிகமாக பெருகவும், தேவனுக்கு உகந்த பிள்ளைகளாய் நாம் இருப்போம். தேவன் நமக்கென்று
வைத்திருக்கும் நன்மைகளைப் பெற்று சாட்சியாய் வாழ்வோம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
0 comments:
Post a Comment