நீயே அந்த மனிதன்
தவறுகள் ஒரு மனிதனுடைய வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்பைவிட, அந்த தவறுகளை இன்னொருவர் மீது திணிக்க முற்படுவதே மனித வாழ்வில் நீங்காத
பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
தன்னுடைய தவறுகளுக்கு இன்னொருவரே காரணமாக
இருக்கிறார் என்று மற்றவரை சுட்டி காட்ட காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை மனிதனுடைய
தவறுகள் ஒருபோதும் சரி செய்யப்படுவதில்லை.
தப்பிதங்களுக்கு சூழ்நிலைகள்தான் காரணம்
என்று சூழ்நிலைகளை காரணம் காட்டி தப்பித்து விடுவது, தற்காலிகமான விடுதலையே. அப்படிப்பட்ட
மனிதன் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்கிறானே தவிர, தப்பிதங்களில் இருந்து
தப்பித்துக்கொள்வதில்லை.
மனிதனின் தொடர் தோல்விக்கு அடிப்படையாக இருப்பது,
தனது தவறை நேர்மையாக ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். ஆதி மனிதர்களாகிய ஆதாம் ஏவாளில் இருந்து
வந்த இந்த நிலை மனிதர்களிடம் செயல்படுவது விசித்திரம் அல்ல, அது ஜென்ம சுபாவம்.
பொய் சொல்வதற்கும், ஒரு விஷயத்தை மாற்றி
சொல்வதற்கும், திரித்து பேசுவதற்கும், மற்றவர்களை குற்றப்படுத்துவதற்கும் செலவிடப்படுகிற
நேரத்தையும், அதற்காக எடுக்கும் பயிற்சியையும் நிறுத்தி விட்டு, தனக்குள் இருக்கும்
வேண்டாதவைகளை விட்டு விட நேர்மையாக தேவனிடத்தில் அறிக்கையிட்டு, தன்னுடைய தப்பிதங்களுக்கு
மனஸ்தாபப்பட்டு தன்னைத்தானே அனுதினமும் நியாயம் தீர்த்து நடக்கும் போது வாழ்க்கை கிறிஸ்துவைப்போல
வெற்றியுடன் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.
இஸ்ரவேலின் முதல் இராஜா சவுல் தன்னுடைய வாழ்வில்
சந்தித்த தொடர் தோல்விக்கு காரணம் என்னவென்றால் தன்னுடைய தவறுகளை முழுக்க முழுக்க மற்றவர்கள்
மீதும், சூழ்நிலைகள் மீதும் திணிக்க முற்பட்டதுதான்.
ஒவ்வொரு தவறு செய்யும் போதும் அந்த தவறுக்கு
எதாவது ஒரு காரணத்தை சொல்லி, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைப்பது எப்படிப்பட்ட
பொல்லாப்பை ஏற்படுத்தும் என்பதை சவுல் வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
சொல்வதை மட்டும் செய்வதை விட்டுவிட்டு, சொல்லாததையும்
சேர்த்து செய்வதுதான் மனிதனுக்கு கைவந்த கலை. சொல்லாததை செய்துவிட்டு, தன் செயலுக்கு
நியாயம் கற்பிக்க முற்படுவதே வாடிக்கை.
அப்படி செய்வது புத்திசாலிதனம் என்பது மனிதனின்
எண்ணம். ஆனால் அது தனக்கு தானே வெட்டிக்கொள்ளும் குழி என்பதை அறியாமல் இருப்பதே அழிவின்
ஆரம்பம்.
தோல்வியின் காரணத்தை வெளியில் தேடுவதே தோல்வியின்
முதல்படி.. தோல்விக்கு எதாவது காரணம் சொல்வதே வெற்றியை எட்டமுடியாத தூரத்தில் வைத்து
விடுகிறது.
“சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
இப்போதும் நீ போய், அமலேக்கை
மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து,
அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும்,
ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார்’’
(1 சாமுவேல் 15:2,3).
தேவனுடைய வார்த்தைகளை கேட்டு யுத்தத்திற்கு
செல்லும் சவுல் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் “சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல்
தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும்
அழித்துப்போட்டான்’’ (1 சாமுவேல் 15:9).
சவுல் தன்னுடைய மனவிருப்பத்தின்படி செய்து,
தேவனுடைய வார்த்தைகளை தனக்கு பின்னாக தள்ளி விடுகிறான். தேவனுடைய வார்த்தைகளுக்கு கொடுக்க
வேண்டிய முக்கியத்துவத்தை அவன் கொடுக்கவில்லை.
தேவனுடைய வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிய
வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன் சுய இஷ்டத்தின்படி நடந்து, தேவனுக்கு மனஸ்தாபத்தை
ஏற்படுத்தினான் என்று வேதம் கூறுகிறது.
ஆனால் சாமுவேல் அவனிடத்திற்கு சென்ற பொழுது,
“கர்த்தருடைய வார்த்தையை
நிறைவேற்றினேன்’’ (1 சாமுவேல்
15:13) என்று சொல்லுகிறான்.
“அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற
ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும்
என்ன என்றான்
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்;
ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்;
மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்’’ (1சாமுவேல் 15:16,17).
தேவனுடைய வார்த்தைகளை மீறி, தேவனுக்கு பிரியமில்லாத
செயல்களை செய்து விட்டு, அதை தேவனுக்காகவே நான்கொண்டு வந்தேன் என்பது தேவனை அல்ல, சவுல்
தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டான்.
தேவன் ஒரு போதும் தன் வார்த்தைகளுக்கு விரோதமானவைகளை
ஏற்றுக்கொள்கிறவரே இல்லை. அநீதியாய் வருகிறவைகளை ஏற்றுக்கொள்ளும் தேவன் நம்முடைய தேவன்
அல்ல. அவர் நீதியில் பிரியப்படுகிறவர்.
ஏமாற்றி, அநீதியாய் சம்பாதிக்கும் ஒரு மனிதன்
அதை தேவனுடைய ஊழியத்திற்கே நான் கொடுக்கிறேன் என்று சொல்வானானால் அது தன்னுடைய தவறை
மறைத்து, அந்த தவறிலிருந்து வெளியில் வர விரும்பவில்லை என்பதைதான் காட்டுகிறது.
இவ்விதமாகவே, தன் சுய இச்சையை நிறைவேற்றிக்கொள்ள
தீர்மானித்த சவுல் தன்னுடைய தவறு கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் அதை சமாளிக்கவே முற்படுகிறான்.
அதை ஏற்றுக்கொண்டு, தவறுக்கு மனஸ்தாபப்பட முற்படவில்லை.
அதுவே அவனுடைய பரிதாப நிலையை காட்டுகிறது.
தன் தவறை மறைக்க காரணங்களை சொல்கிறவனே பரிதாபத்திற்குறிய மனிதன். இதில் எந்த மாற்று
கருத்திற்கும் இடமில்லை. வேதம் திட்டமாக நமக்கு காண்பிக்கிறது.
ஒரு பொய்யை, அல்லது ஒரு தவறை மறைக்க ஓராயிரம்
பொய்களையும், அல்லது தவறுகளையும் செய்ய எதிரியாகிய பிசாசு தூண்டிக்கொண்டே இருப்பான்.
ஆனால் ஒரு தவறு செய்யும் பொழுது, அதை நேர்மையாக
ஏற்றுக்கொண்டு, அதற்காக மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி தேவனிடம் மன்னிப்புக்கேட்டு,
அதிலிருந்து முழுமையாக விடுபட்டு, தேவனுக்கு முன்பாக நீதிமானாய் நிறுத்துவதற்கு எப்போதும்
ஆவியானவர் நமக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறார்.
தான் செய்த தவறுக்கு இன்னொருவரை காரணம் காட்டி,
தன்னை நீதிமானாய் காட்ட முயற்சிக்கும் தன்மையானது பிசாசினிடத்தில் இருந்தே வருகிறது.
அதற்கு ஒரு போதும் அனுமதி கொடுக்கவே கூடாது.
லாபமோ, நஷ்டமோ, உயர்வோ, தாழ்வோ, எதுவாக இருப்பினும்.
நீதியாக நடக்க முற்படும் மனிதன். சிறு தவறானாலும் அதை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, மேலும்
தவறு நடக்காதபடிக்கு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள தேவனிடத்தில் ஐக்கியப்படுவானானால் தேவன்
அவனுக்கு உதவி செய்து அவனுடைய வாழ்வில் ஜெயத்தை கொடுக்க எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்.
இதுதான் தாவீதின் வாழ்வில் நடக்கிறது.
தாவீது, உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை
அபகரித்து, உரியாவை திட்டம் தீட்டி, யுத்தத்தில் மடிய செய்து, தந்திரமாக எல்லாவற்றையும்
செய்து மனிதர்களுக்கு தெரியாதபடி, எல்லாவற்றையும் எதார்த்தமாக நடப்பது போல் செய்து,
தன் இச்சையை நிறைவேற்றிக்கொண்டான். இந்த சம்பவத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
ஆனால் ஒரு நாளிலே கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியை
தாவீதினிடத்தில் அனுப்புகிறார். நாத்தான் தீர்க்கதரிசியோ,
தாவீதின் தவறை சுட்டிக்காட்ட கதை போல் அந்த சம்பவத்தை சொல்லுகிறார். அந்த கதையில் நடக்கும்
அநியாயத்தை பொருத்துக்கொள்ள முடியாத தாவீது அந்த மனிதனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்
என்று தீர்ப்பு சொல்கிறான் (2 சாமுவேல் 12:1-6).
யாரோ ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்று
தீர்ப்பு சொன்ன தாவீதிடம் “நீயே அந்த மனுஷன்’’
என்று நாத்தான் பகிரங்கமாக கர்த்தருடைய வார்த்தையினாலே எச்சரிக்கிறார்.
தான் தவறு செய்ததை கர்த்தர் கண்டார் தான்
மறைந்திருக்க வில்லை என்பதை தாவீது அறிந்து கொண்டான். உடனே தான் செய்த தவறுகளுக்கு
அவன் எந்த காரண காரியங்களையும் தேடவும் இல்லை. அதை சமாளிக்க வகை பார்க்கவும் இல்லை.
அந்த தவறுக்கு சூழ்நிலைகளையோ, மற்றவர்களையோ,
அவன் சுட்டிக்காட்டவும் இல்லை. “அப்பொழுது
தாவீது நாத்தானிடத்தில்:
நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான்’’ (2 சாமுவேல் 12:13).
தாமதம் செய்யாமல் உடனே தன்னுடைய தவறை நேர்மையாக
ஏற்றுக்கொண்டான். தனது தவறுக்கு தான்தான் காரணம் என்பதை அறிக்கையிட்டு, மெய் மனஸ்தாபத்துடன்
தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சி நிற்கிறான்.
தான் செய்த பாவத்தை மற்ற மனிதர்கள் கேள்விப்பட்டால்
தன்னை மதிக்க மாட்டார்களே, தன்னுடைய புகழ் மங்கி விடுமே, என்றெல்லாம் தாவீது சிந்திக்கவும்
இல்லை. யோசிக்கவும் இல்லை.
அவனுடைய எண்ணத்தில் இருந்தது எல்லாம் மனிதர்கள்
மூலம் கிடைக்கும் புகழ்ச்சியை விடவும், தேவனுடைய ஐக்கியமும், கிருபையும் முக்கியம்
என்பதை அவனுடைய செயல்களும் அறிக்கைகளும் காண்பிக்கின்றன. (சங்கீதம் 51)
எல்லா ஜனங்களும் காண தான் எப்படிப்பட்ட மோசமான
செயலை செய்தவன் என்பதை மறைக்காமல் அறிக்கை செய்து, தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்திய
படியினால், மீண்டும் அவன் பாவமான தோல்விக்குள் சிக்கி கொள்ளாமல் பரிசுத்தமான வெற்றி
வாழ்க்கை வாழும்படியான தேவ கிருபையை நிறைவாக பெற்றுக்கொண்டான்.
அது மாத்திரம் அல்ல, தேவனுடைய இருதயத்திற்கு
ஏற்றவன் என்று தேவனால் சாட்சி பெற்ற மனிதனாகவும் வெற்றியாய் ஜொலித்ததற்கு தாவீது தன்னை
ஒளித்துக்கொள்ளாதவனாய் இருந்ததினால்தான் அவன் எல்லா கண்களுக்கும் முன்பாகவும் தேவனால்
உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தது.
வெற்றியுள்ள வாழ்க்கைக்கு மிகவும் தேவையான
அம்சங்களில் ஒன்று. தன்னுடைய பாவத்தினால் வந்த தோல்வியை, மறைக்காததும், அதை மற்றவர்கள்
மீது திணிக்காததும், தன்னுடைய தவறுகளுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்பதை சுட்டிகாட்டாததும்,
அல்லது தன்னுடைய தவறுகளுக்கு சூழ்நிலைகளே காரணம் என்று சொல்லி தப்பிக்க முற்படாததுமே.
தவறுகளை களைந்து, பாவத்தை ஜெயித்து, தோல்விக்கு
தப்பி, பரிசுத்தமான வெற்றி வாழ்க்கை வாழ தகுதி படுத்துகிறது.
தேவ பிள்ளைகளாகிய நாம் இதை ஒரு போதும் மறந்து
விடக்கூடாது. என்னுடைய தவறுகளுக்கும், பாவத்திற்கும் நானே காரணம். அதை நேர்மையாக ஏற்றுக்கொள்ளும்போதே,
இனி அதை செய்யக் கூடாது என்ற எண்ணமும் சேர்ந்தே வரும்.
அப்படிப்பட்டவர்களுக்குதான் தேவன் உதவி செய்ய
முடியும். அவர்களையே தூக்கி விடவும் முடியும். தேவன் நமக்கு உதவி செய்யவும், நம்மை தூக்கி விடவும்
எப்போதும் தயாராகவே இருக்கிறார்.
நாம் அவரை விட்டு விலகி விடாதபடிக்கு எப்போதும்
ஜாக்கிரதை உள்ளவர்களாகவே இருக்க வேண்டும்.
வெற்றியுள்ள பரிசுத்த வாழ்க்கை வாழும்படியாக
அழைக்கப்பட்ட தேவனுடைய ஜனமே, ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாகவே நம்மை நடத்திடுவார்.
0 comments:
Post a Comment