மகிழ்ச்சியாய் வாழ்ந்திடவே
இந்த மாதத்திற்கான ஆசீர்வாதமான
வசனத்தை தியானிப்போம். “இந்த நாள் நம்முடைய
ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள்
மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்’’ (நெகேமியா 8:10).
சந்தோஷமும், மகிழ்ச்சியும் தேவனால் கொடுக்கப்படுவதாகும், மகிழ்ச்சியை விரும்பாதவர்
இந்த பூமியில் யார் இருக்க முடியும்.மனிதர் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள்.
ஆனால் எதை மனிதரின்
இருதயம் மகிழ்ச்சி என்று நினைக்கிறது. எந்த
மகிழ்ச்சி கிடைக்காமல் மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது எந்த மகிழ்ச்சியைத்
தேடி மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ?
உலக பொருள்களின் வழியாகவும்,
உலக இன்பங்களின் வழியாகவும், மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் மனிதர்கள் தேடுவதால்தான் அதை முழுமையாக பெற்றுக்கொள்ள
முடியாமல், கலக்கம், கவலை, பயம், வேதனை
என்று வேண்டாத யாவற்றையும், விரும்பாமல்
எடுத்துக்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள்.
பரிசுத்த வேதாகமம் எந்த மகிழ்ச்சியை குறித்து
சொல்லுகிறது. எந்த மகிழ்ச்சியை மக்கள்
பெற்றுக்கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது.
இவைகளை எல்லாம் வேத
வசனங்களின் மூலமாக சிந்தித்து, தேவன்
நமக்கு கொடுக்க விரும்பும் உண்மையான
மகிழ்ச்சியைப் பெற்று சந்தோஷமாக வாழ்வோம்.
நெகேமியா 8:10 வசனங்களுக்கு முன்னால் எழுதப்பட்டுள்ள வசனங்களை கவனமாக வாசித்தால், “அவர்கள்
தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
ஜனங்கள்
எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும்,
ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி:
இந்த நாள் உங்கள் தேவனாகிய
கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும்
அழவும் வேண்டாம் ’’ (நெகேமியா 8:8,9) என்று எழுதப்பட்டுள்ளது.
நாம் வேதாகமத்தின் ஒரு
வசனத்தை வாசிக்கும் போது அதற்கு மேலும்
கீழும், அந்த அதிகாரம் முழுவதுமாக
வாசித்து தியானிக்க வேண்டும். அப்படி நாம் தியானிக்கும்
போதுதான் தேவன் நமக்கு கொடுக்கும்
சத்தியங்களை முழுமையாக நம்மால் விளங்கி கொள்ளவும்,
ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இந்த வேதாகம பகுதியில், தேவனுடைய
நியாயப்பிரமாண வார்த்தைகளை வாசிக்க கேட்ட மக்கள்
தேவனுடைய வார்த்தைகளோடு தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தையின்படியாக தங்கள் வாழ்க்கை இல்லையே,
மாறாக தேவன் விரும்பாத பாவத்தால்
நிறைந்து இருக்கிறதே என்று, தேவனுடைய வார்த்தையின்
மூலமாக அறிந்து, மனஸ்தாபப்பட்டு அழுகிறார்கள்.
யார் ஒருவர் தங்கள்
பாவத்திற்காக, மனஸ்தாபப்பட்டு, அழுது, மனந்திரும்புகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில்
மகிழ்ச்சி தானாக வந்து விடுகிறது.
இதைத்தான் மேலே உள்ள வசனம்
தெளிவுபடுத்துகிறது. மனம் வருந்தி, தங்கள்
பாவம் மன்னிக்கப்பட, அழுதவர்களை பார்த்தே, “இந்த நாள் நம்முடைய
ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள்
மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் ‘’ என்று வேதம் கூறுகிறது. உள்ளத்தின்
நிறைவால் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகும். பாவத்தை
விட்டு விலகும் போதே, உள்ளத்தின்
சந்தோஷம் பெருகும்.
அநேக மனிதர்களுடைய வாழ்க்கையில்
மகிழ்ச்சி இல்லை. காரணம் உள்ளத்திலும்,
வாழ்க்கையிலும் பாவம் நிறைந்து இருக்கிறது.
பாவம் நிறைந்து இருக்கிற இடத்தில் மகிழ்ச்சிக்கு இடமே இல்லை.
மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையை நினைத்துப்
பார்த்தாலே வெறுமை காணப்படும். மகிழ்ச்சி
இல்லாத வாழ்க்கை எப்படி வெறுமையான வாழ்க்கையோ,
அதே போல பெலன் இல்லாத
வாழ்க்கையாகவும் இருக்கிறது.
மகிழ்ச்சியை தேடி மனிதன் தேடாத
இடம் இல்லை. செல்லாத இடமும்
இல்லை. ஆனால் இந்த மகிழ்ச்சி
பாவத்தை விட்டு, மனந்திரும்பும்பொழுதே, கர்த்தருக்குள் கிடைக்கிறது
என்று வேதாகமம் சொல்லுகிறது.
கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சி பெருகும் போது, மனித வாழ்வில்
பலமும் பெருகுகிறது.
பாவத்தை விட்டு
விட்டால்
மகிழ்ச்சி
“அநித்தியமான
பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக
பாக்கியமென்று எண்ணினான்’’
(எபிரெயர் 11:25,26)
மோசேயை குறித்து வேதம்
சொல்லும் பொழுது, அவன் இந்த
உலகத்தின் மூலமாக நெருக்கப்படும் பாவ
சந்தோஷத்தை வெறுத்து, கிறிஸ்துவின் நிமித்தமாக வந்த நிந்தைகளை மகிழ்ச்சியாக
ஏற்றுக்கொண்டான் என்று சொல்லுகிறது.
இக்காலத்தில் அநேக மக்களுடைய வாழ்க்கையில்,
கவலையும், கண்ணீரும் வேதனையும் அதிகமாக பெருகி இருக்கிறது.
ஆனால் இந்த கவலையும், கண்ணீரும்,
வேதனையும் எதனால் வந்தது என்பதை
ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு முறை நாங்கள்
குழுவாக ஜெபம் செய்து கொண்டிருக்கும்
போது ஒரு வாலிப சகோதரன்
மிகவும் அழுது கொண்டு, நாங்கள்
ஜெபம் பண்ணும் இடத்தில் வந்து
அமர்ந்தார்.
நாங்கள் ஏன் அழுகிறீர்கள்
என்று அவரை விசாரித்தபோது, நான்
ஒரு பெண்ணை விரும்பினேன். அந்த
பெண் ஏற்கனவே திருமணமானவள். அவளும்
என்னை விரும்பினாள். நாங்கள் இருவரும் சந்தித்து
ஒன்றாக இருந்து வந்தோம். சமீபகாலமாக
அவள் என்னை சந்திப்பதில்லை, என்னோடு
ஒன்றாக இருப்பது இல்லை. எனக்காக ஜெபியுங்கள்
என்று விம்பி, விம்பி அழுதான்.
அந்த வாலிப சகோதரனுக்குள்ளாக
இருந்த அழுகையும், வேதனையும் பாவ சந்தோஷம் தொடர்ந்து
கிடைக்கவில்லையே என்பதாக இருந்தது.
அந்த சகோதரனுக்கு வேத
வசனங்களின் சத்தியத்தை சொல்லி, நீங்கள் செய்வது
பாவம், இந்த பாவம் உங்கள்
வாழ்க்கையில் ஒரு நாளும் உங்களை
சந்தோஷமாக வாழ விடாது.
இதுவரை நீங்கள் செய்து
வந்த பாவத்தை விட்டு விட
நல்லதொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அவைகளை விட்டு, மனந்திரும்பி,
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக
பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளும் பொழுது, உங்கள் வாழ்க்கையில்
இதுவரை உங்கள் வாழ்க்கையை அழித்து
வந்த பொல்லாப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, நல்லதொரு
வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்ன பொழுது,
அந்த நேரத்தில் அதை கேட்டு தலை
அசைத்த அந்த வாலிபன், முழுமையாக
அதிலிருந்து விடுபட சம்மதிக்காமல், அநித்தியமான
பாவ சந்தோஷத்தின் நிமித்தம் தன்னுடைய வாழ்வையே பாழ் படுத்திக்கொண்டான்.
இன்றும் அநேகர் அழுகிறார்கள்,
கலங்குகிறார்கள், வேதனை அடைகிறார்கள். எதற்காக
“அநித்தியமான பாவ சந்தோஷத்தை அடையும்
படியாகவும், இந்த உலகத்தின் ஆஸ்திகள்
தன்னிடம் இல்லை என்பதற்காகவும்தான்.
ஆனால் “ஐயோ, இந்த
பாவத்திலிருந்து நான் விடுபட வேண்டுமே,
என்னை சுற்றிநெருக்கிக்கொண்டிருக்கிற, இச்சைகளில் இருந்து நான் விடுவிக்கப்பட
வேண்டுமே, தேவனுடைய வார்த்தைகளை என்னுடைய வாழ்க்கையில் நான் கடைபிடித்து வாழ
வேண்டுமே என்று உண்மையாக ஒரு
மனிதன் மனஸ்தாபப்பட்டு
அழவேண்டும்.
இவ்விதமாக மனஸ்தாபப்பட்டு, அழுது, இயேசு கிறிஸ்துவின்
மூலமாக பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளும்
பொழுது, மகிழ்ச்சியால் உள்ளம் நிரம்பும், இதுதான்
வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
பரிசுத்த வாழ்வில்
மகிழ்ச்சி
பாவ நிலையில் மனிதன்
மகிழ்ச்சியை பெற்றுக்கொள்வது கூடாத காரியம்.
கர்த்தருக்குள்ளான பரிசுத்த வாழ்வில்தான் முழுமையான சமாதானமும் சந்தோஷமும் உண்டு.
இதை வாஞ்சித்து தேடும்
மக்களின் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியை எடுத்து விட ஒருவராலும்
முடியாது. ஏன் என்றால் இந்த
மகிழ்ச்சி கர்த்தரால் கொடுக்கப்படும் மகிழ்ச்சி.
“உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்’’ (சங்கீதம்
119:16) என்று வேதம் கூறுகிறது.
தேவ வசனத்தை மறவாமல்,
தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது, தேவன்
கொடுத்துள்ள வார்த்தையின் படியாக என்னுடைய வார்த்தை
இருக்கிறதா? என்று அனுதினமும் கவனித்து,
தேவனுடைய வார்த்தைகளில் நிலைத்திருப்பதே மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் கொடுக்கும்.
தேவனுடைய வார்த்தைகளை கவனித்து, அவைகளைக் கைக்கொண்டு நடக்கும் மனிதனுடைய வார்த்தைகள் இவ்விதமாகவே இருக்கும். “உமது வேதம் என்
மனமகிழ்ச்சியாயிராதிருந்தால்,
என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்’’ (சங்கீதம்
119:92). பாவமே, மனிதனின் துக்கத்திற்கும், வேதனைகளுக்கும் காரணம். பாவத்தின் அழுத்தமே,
மனிதனின் எல்லாவிதமான பொல்லாப்புகளுக்கும் தூண்டுகோல்.
பாவத்தின் அழுத்தமும், பாவத்தின் கொடிய அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டுமானால்,
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, இரட்சகராக
ஏற்றுக்கொண்டு, பாவத்தை அறிக்கையிடும் பொழுது,
வேதம் கூறுகிறது, “நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து
மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்’’ (ஏசாயா 12:3) இயேசு
கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பை பெற்றுக்கொண்டு,
இரட்சிப்பின் பாதையில் நடக்கும் மனிதனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
அது ஊற்றுப்போல் சுரந்து கொண்டே
இருக்கும். அதை அனுதினமும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“உம்முடைய
வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய
வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது’’ (எரேமியா
15:16) என்று வேதம் கூறுகிறது.
தேவனுடைய வார்த்தைகள் கிடைக்காமல், அல்லது அந்த வார்த்தைகளை
அலட்சிய படுத்துகிறவர்களே, நிம்மதி இழந்து அழுது
புலம்புவார்கள்.
ஆனால் தேவனுடைய வார்த்தைகள்
கிடைத்ததும், அந்த வார்த்தைகளை தன்னுடையதாக்கி,
அந்த வார்த்தைகளுக்கு தங்களை ஒப்புவித்து அவைகளின்
படி நடக்கிறவர்கள், சந்தோஷமும், பெலனும் அடைவார்கள். இருதயம்
ஆனந்தத்தினால் நிறைந்து, மகிழ்ச்சியினால் திழைக்கும்.
“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள்
களிகூருவேன்’’
கர்த்தருக்குள்ளான வாழ்வு, எவ்வளவு மகிழ்ச்சியான
வாழ்வாக இருக்கும் என்பதை கர்த்தருக்குள்ளாக வாழ்கிறவர்களால்
மட்டும்தான் அனுபவ பூர்வமாக உணர்ந்து
கொள்ள முடியும்.
கர்த்தருக்குள்ளாக வாழ்கிறவர்களுக்கு இந்த உலகத்தில் எது
இருந்தாலும், இல்லாவிட்டாலும், மகிழ்ச்சி குறையாது, ஏன் என்றால் இந்த
மகிழ்ச்சி இயேசு கிறிஸ்துவினால் வந்தது.
இயேசு கிறிஸ்துவினால் வராத
எந்த மகிழ்ச்சியும் நிரந்தரமாக இருக்குமா என்றால் கட்டாயமாக நிரந்தரமாக
இருக்காது.
ஒரு மனிதனுக்கு பணம் அதிகமாக, அதிகமாக
பணத்தின் நிமித்தம், அவனுக்கு மகிழ்ச்சியும் பெருகி கொண்டே இருக்கிறது,
அவன் “என்னை விட இந்த
பூமியில் வேறு யார் இவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்க முடியும்’ ’என்று நினைக்கிறான்.
ஆனால் சில காலம்
சென்ற பின்பு, வருமானம் குறைந்து
பணத்தின் வருகை நாளுக்கு நாள்
குறைய குறைய அவனுடைய மகிழ்ச்சியும்
நாளுக்கு நாள் குறைந்து கொண்டே
இருக்கிறது.
இது போல் இந்த
உலகத்தின் பொருள்களின் மூலமாக கிடைக்கும் எந்த
மகிழ்ச்சியும், அது விலகி செல்லும்
பொழுது, மகிழ்ச்சியும் தானாக விலகி செல்ல
ஆரம்பித்து விடுகிறது.
ஆனால் யாருக்குள், இயேசு
கிறிஸ்துவின் மூலமாக, இரட்சிப்பின் மகிழ்ச்சி
கிடைக்கிறதோ, அந்த மகிழ்ச்சி வேறு
எது இருந்தாலும், இல்லாமல் போனாலும் குறையாது, குறையவே குறையாது.
ஆகையால் தான் “கர்த்தருக்குள் எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று
மறுபடியும் சொல்லுகிறேன்’’
(பிலிப்பியர் 4:4) என்று வேதம் கூறுகிறது.
கர்த்தருக்குள் இருக்கும் போதுதான் சந்தோஷமும், மகிழ்ச்சியும். நிறைவாக உண்டாகும். கர்த்தருக்குள்
இல்லாத வாழ்க்கையில் வேதனையும், கண்ணீரும் மட்டும் தான் நிறைந்து
இருக்கும்.
பிரியமானவர்களே, கண்ணீரும், வேதனையும், நம்முடைய வாழ்க்கையை விட்டு முழுவதுமாக விலகி
போக வேண்டுமானால் கர்த்தரோடு வாழும் வாழ்க்கையில் மட்டும்தான்
சாத்தியமாகும்.
இந்த வார்த்தைகளின் மூலமாக
தேவன் நம்முடைய வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்க விரும்புகிறார். ஒரு
விசையாக நம்மை ஆராய்ந்து பார்த்து,
தேவன் விரும்பாத எது நமது வாழ்க்கையில்
இருந்தாலும் அவைகளை எடுத்து போடவும்,
முழுமையான மனந்திரும்புதல் வாழ்க்கை வாழவும் நம்மை அர்ப்பணிப்போம்.
கர்த்தருக்குள்ளாக மகிழ்ச்சியோடும், சமாதானத்தோடும் நீங்கள் வாழ உங்களை
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்களுடன் இருந்து நடத்துவாராக.
0 comments:
Post a Comment