Bread of Life Church India

சத்தியமுள்ள, சத்தான சந்ததியே.......

கிறிஸ்துவுக்குள் பிரியமான என் அன்பு ஜீவ அப்பம் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் வாழ்த்துக்கள்.
நமது ஜீவ அப்பம் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய மேலான கிருபையும். இரக்கமுமே, நமது மாத இதழ் வருவதற்கு மிக முக்கிய காரணம்.
பல நெருக்கடிகள் மத்தியில்தான் உங்கள் கரங்களில் இந்த புத்தகமானது தவழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தனை நெருக்கங்களையும் தாண்டி இந்த புத்தகத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு காரணம், எதாகிலும் ஒருவார்த்தை உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குள்ளான மறுரூபத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதற்காகத்தான்.
நமது சிந்தனை, எண்ணங்கள் கிறிஸ்துவைப்போல் மாற்றத்தை பெற்றுவிட வேண்டும். இதுதான் நமது வாழ்க்கையில் இருக்கும் பொல்லாத அரண்களை நிர்மூலமாக்கும்.

இக்கால உலக மக்களும், பெயரளவில் இருக்கும் கிறிஸ்தவ சமுதாயமும் ஆவிக்குரிய மாற்றத்தை விரும்பாமல், பொருளாதார மாற்றத்தை மட்டுமே முன் நிறுத்தி, ஒவ்வொரு அடிகளையும் அதற்கு நேராக எடுத்து வைத்துக்கொண்டு, அதற்காக இயேசு கிறிஸ்துவையும், ஆவியானவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டிருக்கிறது.
இயேசுவானவர் அழைப்பதோ, ஆவிக்குரிய மாற்றத்திற்கு, ஆவிக்குரிய மாற்றம் இல்லாமல் உலகத்தில் ஏற்படும் எந்த மாற்றமும், மனிதனுக்குள்ளாக, உலகத்திற்குள்ளாக எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடமுடியாது.
பொல்லாங்கனுக்குள்ளாய் கிடக்கும் உலகமும், மனிதனும், கிறிஸ்துவுக்குள்ளான மாற்றத்தை பெற்றால் மட்டுமே, அது மறுரூபமாக இருக்கும்.
இரட்சிப்பின் மாற்றம், வாழ்க்கையில் தெரியாவிட்டால் இரட்சிக்கப்பட்ட மனிதனின் இரட்சிப்பு எதுவாக இருக்கும்?
ஏழையான மனிதன் பணக்காரனாக மாறுவது மட்டும், இரட்சிக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் இரட்சிப்பின் மாற்றம் அல்ல.
வியாதியோடு இருந்த மனிதன், சுகத்தோடு இருப்பது மட்டும் இரட்சிப்பின் மாற்றம் அல்ல.
பாவத்திலும், பாவ சுபாவத்திலும், இருந்த மனிதனின் பாவம் மன்னிக்கப்பட்டு, கிறிஸ்துவின் சாயலாய், கிறிஸ்துவைப்போல் மாற்றப்படுவதே இரட்சிப்பின் மாற்றம்.
இந்த மாற்றத்தின் அடுத்த அடுத்த படிகளை கவனித்து கிறிஸ்துவுக்குள்ளாக அனுதினமும், இரட்சிப்பை பெற்று, முடிவுவரை இரட்சிப்பில்நிலைத்திருப்பதே மாற்றம். இந்த மாற்றத்திற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இக்காலத்தில் வேத வசனங்களைக் கொண்டு பல விதமான போதனைகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் கிறிஸ்துவுக்கு நேராக,  கிறிஸ்துவுக்குள் வாழ அழைக்கப்படாத, கிறிஸ்துவின் சாயலைப்போல மாற்றாத எந்த போதனைகளும் கிறிஸ்துவினிடத்தில் இருந்து வந்தவைகள் அல்ல,
இந்த உலகத்தில் செல்வ செழிப்பாக வாழ்வது எப்படி? விசுவாச அறிக்கையினாலே ? எவ்விதம் வசதியான வாழ்க்கை வாழலாம், என உலக வாழ்வின் முன்னேற்றத்தை குறிவைத்து பேசப்பட்டு வரும் போதனைகள், தேவனால் வருபவைகள் அல்ல. வேதாகம வார்த்தைகளை வைத்து நாம் வேறுபிரித்து பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், பிசாசினால் ஏமாற்றப்பட்டவர்களின் போதனைகளில் சிக்கி ஏமாற்றப்பட வேண்டிய நிலை வந்து விடும்.
பரவசப்பேச்சுக்களுக்கு சிக்கி கொள்ளாத படி, பரிசுத்தத்திற்கு நேராக செல்ல உதவி செய்யும் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து செல்வதே உத்தமம்.
பரவசமாக பேசி, உணர்ச்சியை தூண்டுவது, தேவ வார்த்தை அல்ல, பாவத்தை உணர்த்தி, பரிசுத்த தேவனிடம் அழைத்து செல்வதே தேவனுடைய வார்த்தை.
இரட்சிப்பின் செயல்களை தேவன் முடித்து விட்டார். பயத்துடனும், நடுக்கத்துடனும், நமது இரட்சிப்பு நிறைவு பெற  வேத வசனங்களை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியது நமது வேலை.
கிறிஸ்துவுக்குள்ளான மாற்றத்தைப் பெறுவதும், கிறிஸ்துவுக்குள்ளான மாற்றத்தை அறிவிப்பதுமே நம் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது. இதற்காகவே நாம் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த பணியை செய்யவே நமதுஜீவ அப்பம்’’ செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக சத்தியமுள்ள, சத்தான சந்ததியாக, நமது தலைமுறையில் அநேகரை எழுப்பி, தேவ சித்தம் செய்திட வேண்டும் என்ற தாகம் மட்டுமே நமது ஊழியத்தின் நோக்கமும், செயல்பாடுகளும்.
அன்பு சகோதர, சகோதரிகளே, என் அன்பு உறவுகளே, தனி மரம் தோப்பாகாது, ஒரு கை ஓசை எழுப்பாது, இந்த உன்னத பணியில் இணைந்து செயலாற துடிக்கும் அன்புள்ளங்களே, உங்கள் கரங்களை இணையுங்கள்.
சர்வ வல்லவரின், சத்தியமுள்ள, சத்தான முத்துக்களே, உங்கள் ஜெபங்களில் நினையுங்கள். தேவனுக்கென்று செயல்பட நாம் தயாராக இருந்தால், நம் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்த தேவன் தயார்.
ஜெபிப்போம், இணைவோம், மாற்றத்தை கொண்டு வருவோம்.  பரலோக முத்துக்களாய் ஜொலிப்போம்.

0 comments:

Post a Comment