Bread of Life Church India

உனக்குள் இருக்கும் பலம்



தங்களுக்கு  எதிரான போராட்டங்களையே, சிலர் தோல்வி என்று நினைத்துக்கொள்கின்றனர். ஆகையால் போராட்டத்தைப் பார்த்தும், போராட்டத்திற்கு காரணமாக இருக்கும் எதிரியை பார்த்தும் பயந்து விடுகின்றனர்.
ஆகையால்தான் எதிரி கொண்டு வரும் போராட்டத்தை நேருக்கு நேர் நின்று ஜெயிக்க முடியாதபடி திணருகின்றனர். நமக்கு எதிரான பிரச்சனைகள், போராட்டங்கள் வரும் போது கண்ணை மூடிக்கொண்டால் பிரச்சனை நீங்கி விடாது.
எதிரியை நேருக்கு நேர் நின்று, எதிர்த்து, பிரச்சனைகளை தூள் தூளாக்க வேண்டும். அதை விட எதிரியின் தந்திரங்களை சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.

எதிரியின் பலத்தை குறித்து பேசி, அதையே மேன்மைப் படுத்திக்கொண்டிருக்காமல், தன்னுடைய பலம் என்ன என்பதையே அறிந்து கொள்ள வேண்டும். இதைக்குறித்து  எங்களுடைய  போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது’’ (2 கொரி 10:4) என்று வேதம் கூறுகிறது.
எதிரியை சாதாரணமாக நினைக்க வேண்டாம், அதே வேளையில் நாம் சாதாரணமானவர்கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மனுக்குலத்திற்கே பொதுவான ஒரு எதிரி யார் என்றால், திருடவும், அழிக்கவும், கொல்லவும் வருகிறவனாகிய பிசாசுதான். இந்த எதிரியே நம்மை தந்திரமாக வீழ்த்தும்படி நமக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்ய பார்க்கிறான்.
நமக்கு எதிரான போராட்டங்கள் எல்லாம் ஆவிக்குரிய போராட்டங்களே, நமக்கு எதிரே நிற்கும் எதிரி, நம்முடைய அவயவங்கள் மூலமாகவே போராட்டத்தை தூண்டுவான்.
முதலாவது அவன் குறி வைப்பது சிந்தனை களத்தையே, நமது சிந்தனையில் வேண்டாத எண்ணங்கள் சிந்தனைகளை தூண்டி விட்டு, வேண்டாத வார்த்தைகளையும், தேவையில்லாத செயல்களையும் செய்ய வகைதேடுவான்.

மேலும், இந்த எதிரியின் தந்திரங்களில் முக்கியமானதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவன், தான் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவின் மூலம் வீழ்த்தப்பட்டு விட்டதை நமக்கு மறைத்து தன்னை மிகவும் பல சாலியாக காண்பித்து, ஏமாற்ற பார்ப்பான்.
இவனுடைய ஏமாற்றுத்தனமான வலையில் நாம் ஒரு போதும் அகப்பட்டு விட கூடாது.
மேலும், நாம் நம்முடைய சுய பலத்தை நம்பி இருக்க வில்லை, நம்முடைய பலம் எல்லாம், நம்முடைய இயேசு கிறிஸ்துவினால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’’ (பிலி 4:13). என்று வேதம் கூறுகிறது.
நாம் கிறிஸ்துவின் பலத்துடன் எதிரியை எதிர்கொள்கிறோம். சுய பலத்தை நம்புகிறவனே, எதிரியின் முன் மண்டியிடுவான், சர்வ வல்லவரின் பிள்ளையாய், அவருடைய சேனையாய் இருப்பவர்கள் அவனைக்கண்டு அஞ்சுவதும் இல்லை. அவனை ஒரு பொருட்டாக நினைப்பதும் இல்லை.
ஏனென்றால்பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்’’ (1 யோவான் 4:4) என்று வேதம் கூறுகிறது.  நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று கூறாமல், ஜெயித்தீர்கள் என்று கூறுகிறது. ஜெயம் கிறிஸ்து இயேசு வினால் நமக்கு கொடுக்கப்படுகிற படியால், நமக்குள் இருக்கும் கிறிஸ்துவை நமது வாழ்வில் செயல்பட நாம் அனுமதிக்க வேண்டும்.
அதற்குநாம்  கிறிஸ்துவுக்குள் யார்’’ என்பதை முதலில் நன்றாக  அறிந்து கொள்ள வேண்டும், சிலர் இதை அறியாமல் இருப்பதே, எதிரியாகிய பிசாசுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
ஆகையால்தான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களின் வாழ்விலும் கிறிஸ்துவின் சாயல் வெளிப்படாத படிக்கு, எதிரியாகிய பிசாசு தன்னுடைய சாயலை அப்படிப்பட்டவர்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
சத்தியத்தை நன்றாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். “ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது’’ (கொலோ 3:3) என்று தெளிவாக தேவனுடைய வார்த்தை நமக்குப் போதிக்கிறது.  கிறிஸ்துவினுடையவர்களாய், நாம் இருப்பதினாலே தேவனுக்குப் பிள்ளைகளாய் இருக்கிறோம்.தேவ பிள்ளைகளாய் இருக்கும் நாம் எப்படி எதிரியாகிய பிசாசுக்கு முன்பாக தோற்றுப்போக முடியும்.
எதிரியாகிய பிசாசு, சத்தியத்தை அறியவிடாமல், சிலருடைய கண்களை அடைத்து வைத்து, வஞ்சித்து வருகிறான்.  சத்தியத்தை அறிந்து இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்பவர்களின் உள்ளத்தில் சத்திய வார்த்தையாகிய தேவனுடைய வார்த்தைகளின் மகத்துவங்களை சரியாக அறிந்து கொள்ள விடாத படிக்கு, இம்மைக்குரிய காரியங்களையே பெரிதாக காண்பித்து, இம்மைக்குரியவைகளுக்காகவே ஜெபிக்க வைத்து, அதையே அனுதினமும் தேட வைத்து, ஆவிக்குரிய கண் திறக்கப்படக்கூடாத படிக்கு இவ்வுலகத்தின் செல்வங்களை முன்நிறுத்தி, அதிலேயே தேங்கி இருக்கும்படி செய்து, அதற்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறான்.
ஆகையினால் இவ்வித வஞ்சகத்தில் சிக்கியவர்கள், கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும், வெற்றிவாழ்வின் தன்மை தெரியாதபடிக்கு, அதைக் குறித்த தெளிவு இல்லாதபடிக்கு, வெற்றி வாழ்க்கை எல்லாம் சாத்தியம் இல்லை. “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?’’ (ரோமர் 7:24) இந்த சரீரத்தில் இருக்கும் வரையும், இந்த உலகத்தில் இருக்கும் வரை என்னால் வெற்றி வாழ்க்கை வாழ முடியாது என்பது போல் இந்த வசனத்தை காரணம் காண்பித்து பேசி வருகின்றனர்.
ஆனால் நிர்பந்தமான மனிதன் யார் என்பதை தேவ பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும். இரட்சிக்கப்படாமல் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கும் மனிதனே, நிர்பந்தமான மனிதன். அப்படிப்பட்டவனையே, பாவம் நிர்பந்திக்க முடியும், இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையின் மேல் பாவத்திற்கோ, பிசாசிற்கோ அதிகாரம் இல்லை. நிர்பந்திக்கவும் முடியாது ஏன் என்றால், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே’’ (ரோமர் 8:2) என்று வேதம் திட்டமாக நமக்கு போதிக்கிறது.
எனவே, இரட்சிக்கப்பட்ட ஒருவன் இன்னும் நான் நிர்பந்தமான மனிதன் என்று சொல்லுவானானால் அவனுக்கு பாவத்தை விட்டு வர மனமில்லை என்பதுதான் உண்மை,. அல்லது. சத்தியம் மறைக்கப்பட்டு, பிசாசின் வஞ்சக வலையில் விழுந்து கிடக்கிறான் என்பது தெளிவு.
இரட்சிக்கப்பட்ட ஒருவருடைய வாழ்வு முழுக்க, முழுக்க கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, ஆவியானவரின் ஆளுகைக்குள்ளாக இருக்கிறபடியால் நாம் நம்முடைய பலத்தை சார்ந்து அல்ல, தேவனுடைய பலத்தை சார்ந்து நிற்கிறபடியால் நாம் எதிரியாகிய பிசாசை பலசாலியாக நினைத்து, அவனை மேன்மைப்படுத்துவதும் இல்லை. அது நமக்கு  அவசியமில்லை.
நாம் மேன்மைப்படுத்த வேண்டியதும், உயர்த்த வேண்டியதும். கர்த்தரை மட்டுமே, அவரை நாம் கூட வைத்துக்கொண்டு, வேறு எதையும் நாம் உயர்வாக எண்ணி, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகத்தின் மூலமாக வருகிற எல்லாவற்றையும் ஜெயிக்கும் வல்லமையை சர்வ வல்லமை உள்ள தேவன் நமக்கு கொடுத்து விட்டார்.
எனவே நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவ பலமும், தேவ அபிஷேகமும், பெற்ற தேவனுடைய பிள்ளை எதைக்குறித்தும் பயப்படவோ, கலங்கவோ, மாட்டான். தேவனோடு நெருங்கி வாழ்வது எப்படி என்பது மட்டுமே அவனுடைய சிந்தையில் எப்போதும் நினைவாக இருக்கும்.
கர்த்தருக்குள் இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் எதிரியாகிய பிசாசுக்கு எதிர்த்து நிற்பார்கள்மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்’’ (வெளி 12:11) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது.
மரணத்தின் பள்ளத்தாக்கில், பாவத்தில் மரித்துபோய் இருந்த நம்மை உயிர்ப்பித்து, கிறிஸ்துவின் ஆவியுடையவர்களாய் இந்த பூமியில் வாழ வைத்திருக்கிற தேவனுக்கு நாம் சாட்சிகள். ஜெயம் நமக்குரியது, தோல்வி நம்முடைய எதிரியாகிய சாத்தானுக்குரியது.
தாவீது கோலியாத்துக்கு முன்பாக நின்ற போது அவனுடைய பலத்தை அல்ல, தேவனுடைய பலத்தை அறிந்து இருந்தான். தேவனாகிய கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்பதை அறிக்கையிட்டான்.
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’’ (1 சாமு 17:45) என்று சொல்லி இஸ்ரவேலையே கலங்கப்பண்ணிக்கொண்டிருந்த கோலியாத்தை வீழ்த்தினான்.
தன்னுடைய பலத்தையும், வீரத்தையும் தாவீது பார்த்திருப்பான் என்றால் அவனால் கோலியாத்துக்கு முன்பாக நிற்க கூட முடிந்திருக்காது. ஆனால் அவன் தன்னுடைய பலத்தை நம்பாமல் கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்று, தேவ பலத்தை சார்ந்து, தேவனை மகிமைப்படுத்தி, வெற்றியை சுதந்தரித்தான்.
ஆனால் தேவனை விட்டு விலகி, பின் வாங்கி போன சவுலோ, கோலியாத்தை பார்த்து நடுக்கம் பிடித்தவனாய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். “சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்’’ (1சாமு 17:11) என்று வேதம் சொல்லுகிறது.
தேவனுடைய வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல், தன் சுய இஷ்டத்தின்படியாக நடந்து வந்த சவுலுக்கு எதிரி முன்பாக வந்து நிற்கும் போது எதிரியின் பலமே பெரியதாக தெரிகிறது.
காரணம் என்ன?  ஏற்கனவே, தன் ஜீவியத்தில் சவுல் எதிரியாகிய சாத்தானால் வீழ்த்தப்பட்டு விட்டான். எப்பொழுது தேவனுடைய வார்த்தைகளை மீறி தன் சுயத்தின் படி நடக்க ஆரம்பித்தானோ, அதுவே அவனுடைய விழுகைக்கு காரணமாகும்.
கிறிஸ்துவின் சாயலாக இருக்கும் தேவ பிள்ளைகளை எதிரியால் ஜெயிக்க முடியாது. “இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்’’ (கலாத்தியர் 6:17). என்று வேதம் கூறுகிறது.
இயேசு கிறிஸ்துவின் அடையாளம் உள்ளவர்களாய் நாம் இருந்தால் எதிரி நம்மை நெருங்கவே பயப்படுவான்.
எனவே நாம் கிறிஸ்துவை உடையவர்களாய், எதிர்த்து வரும் சத்துருவை எதிர்த்து நிற்போம். நாம் வெற்றியை ஒவ்வொரு நாளும் சுதந்தரித்து, தேவனுக்குப் பிரியமுள்ளவர்களாய் வாழ்வோம்.


0 comments:

Post a Comment