Bread of Life Church India

ஏன் மாற்றம் ! எது மாற்றம் !!

மனம், உணர்வுகளின் இருப்பிடமாக, அல்லது செயல்களின்  பிறப்பிடமாக இருக்கிறது. எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் மைய ஏவலாக செயல்படக்கூடியது மனம். மனது சாதாரணமானது அல்ல, மனம் தான் மனிதன்.

தன் மனதில் தோன்றாத எந்த ஒரு விஷயத்தையுமே மனிதன் செயலில் கொண்டு வருவதில்லை. ஒரு விஷயத்தை செயல் படுத்துவதற்கு முன்பாக பலமுறை மனதில்தான்  ஒத்திகை பார்க்கப்படும். மனிதனின் வாழ்வில் மனமே எல்லாவற்றிற்கும் முன்னோடி. மனமே, வாழ்வின் அச்சாணி. மனமே உயிர்நாடி. மனம் பிசகினால் செயல்படுதலும் நின்று விடும்,
மனிதனின் செயலுக்கு முதலாவது வடிவம் பெறும் இடமே மனம்தான். அது கண்ணுக்குப் புலப்படாத பகுதியில் இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகளே மிகப்பெரிய பாதிப்புகளை ‘நல்லவையாக’ அல்லது “தீயவையாக’’ ஏற்படுத்தக் கூடியது. மனிதனின் செயலின் மூலமாகவே மனதின் தன்மை வெளிப்படுகிறது.
மனிதனின் தன்மை, அவன் சிந்தனையில் வெளிப்படும். சிந்தனையின் தன்மை, பேச்சில் வெளிப்படும். பேச்சின் தன்மை, அவன் எப்படிப் பட்டவன் என்பதை வெளிப்படுத்தும்.
மனிதனின் செயல்பாடுகளுக்கு மனமே, பயிற்சி களமாக இருக்கிறது. மனிதனின் மனம் எப்படியோ, அப்படியே அந்த மனிதன் இருக்கிறான்.
மனதிற்கோர் மாற்றம்
உலக மாற்றம், சமுதாய மாற்றம் எல்லாமே மனிதனின் மன மாற்றத்திற்குள்ளாகவே இருக்கிறது. மனமாற்றம் இல்லை என்றால் உலக மாற்றமும் இல்லை, சமூதாய மாற்றமும் இல்லை. ``அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்’’ (நீதி 23:7) என்று வேதம் கூறுகிறது. அதே போல மனிதன் எப்படியோ அப்படியே சமுதாயம் இருக்கும். மன மாற்றமே, நல்ல சமுதாய மாற்றம்.
மனிதனின் மனம் ஏன் மாற்றமடைய வேண்டும். ஏன் மனதிற்கு மாற்றம் தேவை.? எப்படி உள்ள மனம் எப்படி மாற வேண்டும்? என்ற கேள்வி எழும்பலாம்.
மற்றவர்களை அன்பாக நினைக்காத மனம். பிறருடைய தவறுகளை மன்னிக்க முடியாத மனம். தன்னைப்போல மற்றவரை நேசிக்காத மனம். உண்மையில்லா மனம். மற்றவரை அழிக்க நினைக்கும் மனம். பாவம் செய்கிற மனம். இப்படிப்பட்ட மனம் தன்னுடைய தவறுகளை அறிந்து, தன் பிழைகளை உணர்ந்து, தன் பாவம் மன்னிக்கப்பட்டு, பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் மனமாக, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் மனமாக மாற்றம் அடைவதே மன மாற்றம்.

வேறுபட்ட, மாறுபட்ட மனமுடையவர்கள் அன்றும், இன்றும் என்றும் உண்டு, பழைய தலைமுறை சென்று புதிய தலைமுறை வரும்பொழுதெல்லாம் இம்மனமாற்றத்திற்கோர் அழைப்பு விடுக்கப்பட்டே ஆக வேண்டும். ஏன் என்றால் “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது’’ (எரேமியா 17:9) என்று வேதம் கூறுகிறது. கேடான மனதில் நற்செயல்களை எவ்விதம் காண முடியும், அசுத்தமான மனதில் சுத்தம் எப்படி இருக்கும்.
கேடான மனமும், அசுத்தமான சிந்தனையும், பொல்லாத செயல்களையும் செய்யும் மனிதன் எவ்விதம், சமுதாய மாற்றத்தை குறித்தும், உலக மாற்றத்தை குறித்தும் பேச முடியும். மனமாற்றமென்பது தனி மனிதனில் தொடங்கி முழு உலகமும் மாற்றமடைவதாகும். தன்னில் ஏற்படாத மாற்றம் எவ்விதம் தேசத்தில் ஏற்பட முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
மனிதனின் உண்மையான மன மாற்றத்தில்தான், ஒரு மனிதனுக்குள் கிறிஸ்தவம் பிறக்கிறது. கிறிஸ்தவத்தின் மூலமாகவே சமுதாய மாற்றமும், உலக மாற்றமும், சாத்திய மாகும். உண்மையான மனமாற்றமில்லாத, மறுரூப சிந்தை இல்லாமல், கிறிஸ்துவின் சாயல் இல்லாமல் ஒருவர் தன்னை கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வாரானால், அவருக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. தொடர்பும் இல்லை.
கிறிஸ்தவ பெயர் வைத்துக்கொள்வதல்ல, கிறிஸ்தவம். வெறும் வழிபாட்டு சடங்கு முறைமைகள் அல்ல, கிறிஸ்தவம். மதவாத அமைப்பு அல்ல, மன மாற்றமடைந்தவர்களின் ஐக்கியமே கிறிஸ்தவம். கிறிஸ்துவைப்போல் வாழ அர்ப்பணிப்பதே கிறிஸ்தவம்.
 கிறிஸ்தவத்தின் அழைப்பு, மத மாற்றத்திற்கு விடுக்கும் அழைப்பு அல்ல.. இவ்விதமான மன மாற்றத்திற்கே அழைப்பு விடுக்கிறது.
“அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்’’ ( மத் 4:17) இது மனிதனை படைத்த கடவுளின் அழைப்பு.
எனவேதான் மனமாற்றமடைந்த மனிதன் மற்றொருவருக்கு மனமாற்ற அழைப்பு விடுக்கிறான். இதுதான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மிகுந்த பலனை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உண்மையாக மனமாற்றமடைந்த மனிதர்களும், தேசங்களும் சாட்சி. இன்றைக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியில் நடக்கும் சீஷர்கள் விடுக்கும் அழைப்பும் மனமாற்றத்திற்காகவே இருக்க வேண்டும். உண்மையான மனமாற்றம் அடைகிறவன் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் சாயல் மட்டுமே வெளிப்படும். இக்கால சூழ்நிலையில் மிகவும் வலியுறுத்தி கூறப்பட வேண்டிய சத்தியம் மனமாற்றம்.
உலகமெங்கும் முக்கியமான இம்மாற்றத்தை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றிலுமே மாறிக் கொண்டிருக்கிறது. இது பேராபத்தையே ஏற்படுத்தும். மாற்றமடைய வேண்டிய மனமோ கடினப் பட்டுக் கொண்டிருக்கிறது.
மனசாட்சி மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைக் குறித்து “ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயம், வஞ்சிக்கிற ஆவிகள், பிசாசுகளின் உபதேசங்கள் இவைகளுக்கு செவி கொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகி போவார்கள் (1 தீமோ 4:1) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.
சத்தியத்தின் பக்கம் திரும்பும் படியான அழைப்பை புறம்பே தள்ளாத மனம் மாற்றமடையும், அதன் மூலமாகவே தனி மனிதனுக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை பிறக்கும் இதில் எந்தவொரு மாற்றமுமில்லை. நடை உடை மாற்றமோ, மதமாற்றமோ, கலாச்சார மாற்றமோ எளிது. அதுவல்ல மாறுதல். அது எவ்வித நற்பயனையும் கொடுக்காது. உண்மையாக மாறும் மனதில் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் மாற்றப்பட்டிருக்கும். ஆதிக்க மனம் மாற்றப்பட்டு, ஒன்றுபட்ட மனம் உண்டாகும். மறுரூப வாழ்வுதான் உண்மையான கிறிஸ்தவம் தங்கி இருந்து செயல்படும் இடமாக இருக்கிறது. இதைக் குறித்து தான் ``மனம் புதிதாகிறதனாலே மறு ரூபமாகுங்கள்.'' (ரோமர் 12:2) என்று வேதம் கூறுகிறது. மறுரூபமென்பது மற்றொரு வடிவமாக மாறுதல் என்ற பொருளை உடையதாக இருக்கிறது. அதாவது அருவெறுப்பான கம்பளிப் புழுவானது அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறுதல் என்று அர்த்தம்.
இவ்வித மறுரூபத்தை குறித்தே மனந்திரும்புதல், மறுபிறப்பு, புது சிருஷ்டி, புது மனிதன் என பல்வேறு வடிவங்களை வேதம் விளக்கி காண்பிக்கிறது.

வெளி தோற்றத்தில் அழகாக காட்சி தந்து விட்டு, உள்ளத்திலோ, அசுத்தங்களையும், பொல்லாத  எண்ணங்களையும் வைத்திருப்பதே மனதின் அருவெறுப்பானது.  
அருவெறுப்பான கம்பளிப்புழு எப்பொழுது வண்ணத்துப் பூச்சியாக அழகாக மாறுதல் பெறுகிறதோ,  அது போல் அருவெறுப்பான மனம் நற்குணங்களால் நிறைந்த அழகிய மனமாக மாறுதலைக்குறித்தே “மனம் புதிதாகிறதனாலே மறு ரூபமாகுங்கள் ‘’ என்று வேத வசனங்கள் மாற்றத்திற்கு அழைப்பு கொடுக்கிறது.
எப்படி கம்பளிப் புழுவானது, அழகிய வண்ணத்து பூச்சியாக மாற்றமடைந்த பின் மறுபடியும் அது தன் பழைய நிலைக்கு திரும்புவதில்லையோ. அதுபோலவே, மனமாற்றமடைந்த மனிதனின் மனமானது திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது. அப்படி பழைய நிலைக்கு திரும்புமானால் அவ்வித மனிதனை ``நாய்''க்கு ஒப்பிட்டும் ``பன்றி''க்கு ஒப்பிட்டும் வேதம் கடுமையாக சாடுவதை கவனிக்காது விட்டுவிடக் கூடாது. ``நாய்'' தான் கக்கினதை தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின் படியே அவர்களுக்குச் சம்பவித்தது   (2 பேதுரு 2:22)
மறுரூப மனம், மறுரூப வாழ்க்கையாக முழு உருப்பெற்று உண்மையான நிறைவையும், மகிழ்வையும், பெற்று மற்றவருக்கும் அதை கொடுக்கச் செய்யும்.
நல்ல சுபாவம்
மாற்றமடைந்த மனது,  மறுரூபத்தை பெற்றிருந்தால், நல்ல சுபாவத்தை வெளிப்படுத்த வேண்டும். இதைத்தான் “நல்ல கனி’’ கொடுக்க வேண்டுமென்று ``நல்ல கனி''க்கு மனதை ஒப்பிட்டு வேதம் கூறுகிறது. ``மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுங்கள்'' <லூக் 3:8> என்று கூறும் வேதம் தொடர்ந்து ``நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (லூக் 3:9) என்றும் எச்சரிக்கை கொடுக்கிறது. கனிகளை வைத்து நல்ல மரமா? கெட்ட மரமா? என்பதை அறிந்து கொள்ள முடியும் (மத் 7:17). மனித சுபாவத்தைக் கொண்டே,  நல்ல மனிதனா? கெட்ட மனிதனா? என்று அறிந்து கொள்ள முடியும்.
 ``தேவனுடைய ராஜ்ஜியமானது.... அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்கு கொடுக்கப்படும் (மத் 21:43). ஆவியின் கனியென்பது சகல நற்குணத்திலும், நீதியிலும், உண்மையிலும் விளங்கும் (எபே 5:9).
ஒரு கனியை எடுத்துக் கொண்டால் அதில் சுவை, வாசனை, திடம், ஈரப்பதம், மென்மை, நிறம், உருவம், சத்துக்கள், தாதுப் பொருட்கள், ஆகிய ஒன்பது பண்புகள் அதில் உண்டு.
இவ்வித ஒன்பது பண்புகள் கொண்ட கனியையே, நற்கனி என்று சொல்ல முடியும், இவ்விதமாக மன மாற்றமடைந்து, மறுரூபமான மனிதன்,  இயேசு கிறிஸ்துவின் சாயலைப் பெற்று, ஆவியானவரால்  நடத்தப்படுகிறவனாக இருப்பானானால் அவனுக்குள் ஆவியின் கனியிருக்கும். அதாவது, அவனுக்குள் நற்பண்புகள் இருக்கும்.  இதை குறித்துதான் ``ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் (உத்தமம்) சாந்தம், இச்சையடக்கம் (கலா 5:22,23) என்று வேதம் கூறுகிறது.
இவ்விதமாக நற்பண்புகளை வெளிப்படுத்துவதைக் குறித்தே, ”நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலா 5:25)என்று வேதம் அறிவுறுத்துகிறது.
கிறிஸ்தவ வாழ்வின் ஆசீர்வாத சின்னமே மேலே குறிப்பிட்டுள்ள கனியுள்ள வாழ்க்கை என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வித கனி கொடாத பட்சத்தில் அந்த மரம் வெட்டிப் போடப்பட வேண்டும் என்று மிகவும் கடுமையானதொரு எச்சரிப்பையும் வேதம் கொடுப்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். அதே வேளையில் ஒரு மரமானது கனி கொடுக்க வேண்டிய அத்தனை விதமான காரியங்களும் செய்யப்படுகிறது (லூக் 13:7_9)
மனமாற்றமும், மறுரூப வாழ்வும், கனியுள்ள சுபாவமும் தான்  ஒரு மனிதனுக்கு வெற்றியான வாழ்க்கையையும், சாதனை சரித்திரத்தையும் ஏற்படுத்துகிறது.  அது மட்டுமல்ல, மறுமை வாழ்வுக்கும் வழிவகுக்கும். அநேகரை அதற்கு வழிநடத்த முன் மாதிரியாகவும் இருக்கும். மனித வாழ்வில் இதை விட இன்பம் வேறு ஒன்றுமில்லை. இதற்கே படைக்கப் பட்டோம். அழைக்கப்பட்டோம். இவ்விதமாகவே வாழ்வோம்.


0 comments:

Post a Comment