தோல்விக்கு தோல்வி
எப்போது ஒரு மனிதன் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறானோ, அப்பொழுது அவன் போராட்ட களத்தில் எதிரியை வீழ்த்த தயாராகி விட்டான் என்று எண்ணிக்கொள்ளலாம்.
இந்த களத்தில் தோல்வியின் விளிம்பை தொடாதவர்கள் இருக்க முடியாது. காரணம் வெற்றி வீரனாய் வலம் வருவதற்கு, வெற்றியில் பாடம் கற்றவர்களை விட, தோல்வியின் விளிம்பில் பாடம் கற்றவர்களே அதிகம். தோல்வியின் பாதையில் செல்லாதவரை வெற்றியின் அருமை உணரப்படுவதில்லை. ஆகவேதான் தோல்வியின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால் அது முடிவல்ல, வெற்றியே முடிவாக இருக்கும், இவ்வித திடநம்பிக்கையுடன் போராடுபவர்களே, தோல்வியில் துவண்டு போகாமல் எழுந்து ஜெயிக்கிறவர்கள். அவர்களே, போராட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியும்.
ஆனால் அது முடிவல்ல, வெற்றியே முடிவாக இருக்கும், இவ்வித திடநம்பிக்கையுடன் போராடுபவர்களே, தோல்வியில் துவண்டு போகாமல் எழுந்து ஜெயிக்கிறவர்கள். அவர்களே, போராட்டத்தில் வெற்றியை ருசிக்க முடியும்.
வெற்றிக்காக போராடுகிறவர்களுக்கு எதிராக எதிரி திட்டமிட்டு செயல்படுத்தும் ஆயுதங்களில் மிக முக்கியமான ஆயுதம் தோல்வி பயம். தோல்வி பயத்துடன் போர் களத்தில் நிற்கும் வீரனை எளிதில் எதிரி வீழ்த்தி விட, எடுக்கும் தந்திரங்களில் இது முக்கியமானது.
“தோல்வியின் விளிம்பு வரை சென்றாலும் நான் தோற்க மாட்டேன். எனக்கு ஜெயம் கொடுப்பவர் என்னோடு உண்டு’’ என்று தைரியமாக போராட வேண்டும்.
அதே வேளையில் எவ்வித நிலையில் இருக்கிறேன் என்பதையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்துவோடு இருந்த பேதுரு, இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போகும் வேளையில், பயந்து பாவத்தின் விளிம்புக்கே சென்று, இயேசு கிறிஸ்துவை மறுதலித்து, இந்த உலக வாழ்வோடு இணைந்து கொள்வதற்கும் தயாராகி விட்டார்.
அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து; நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்.
அதற்கு அவன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான்.
அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு; இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
அவனோ; அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து; மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
அப்பொழுது அவன்; அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான் (மத்தேயு 26:69-74).
இவ்விதமாக தடுமாற்றத்தில் இருந்த பேதுரு கடைசி நொடி பொழுதில் சுதாரித்துக்கொண்டு, உடனடியாக எழுந்து விட்டார்.
“அப்பொழுது,கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
வெளியே போய், மனங்கசந்து அழுதான்’’ (லூக்கா 22:61,62) தான் செய்த தவறுக்காக கல்வாரி நாயகனாம் இயேசு கிறிஸ்துவிடம் மனஸ்தாபப் பட்டு, மனம் வருந்தி, கண்ணீர் சிந்தி, மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட பேதுரு, அதன் பின் அவனுடைய வாழ்வில் தோல்விகளுக்கு இடம் கொடுக்காமல், தொடர்ந்து, தோல்விக்கே, தோல்வியை பரிசளித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் இயேசுவை மறுதலித்த பேதுருவைப் போல், இயேசுவானவரை காட்டிக்கொடுத்த யூதாசும், யுத்தகளத்தில் தோல்வியின் விளிம்புக்கு சென்றான். “பணத்திற்காக இயேசுவை காட்டி கொடுத்து விட்டோமே’’ என்று மனஸ்தாபப் பட்டான். ஆனால் மனந்திரும்பி கர்த்தரிடத்திற்கு வராமல், இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்க்காமல், ஒதுங்கி சென்று “குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்; எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய் நான்று கொண்டு செத்தான் (மத்தேயு 27:4,5)
யூதாஸ் தோல்வியின் விளிம்புக்கு சென்று பாவம் செய்தது உண்மைதான். ஆனால் அவனுக்கு இருந்த மனந்திரும்புதல் என்ற வாய்ப்பை வீணடித்து விட்டான்.
அன்பான தேவ பிள்ளைகளே, பேதுருவும், யூதாசும் செய்த குற்றம் ஒன்றுதான். யூதாசை விட, பேதுரு செய்த குற்றம் எந்த வகையிலும் குறைந்தது இல்லை.
இருவரும் மனஸ்தாபப்பட்டார்கள். ஆனால் தன்தவறை ஒப்புக்கொள்ள வேண்டியவரிடம் வந்து ஒப்புக்கொண்டு, அறிக்கை செய்ய வேண்டியவரிடம் அறிக்கை செய்து, சரியான நேரத்தில் பேதுரு மனந்திரும்பினான்.
யூதாசோ, மனந்திரும்பி, இயேசு விடம் வராமலேயே போய்விட்டான். மிஞ்சின நீதிமானாய் போனதே யூதாஸின் வீழ்ச்சிக்கும், அழிவுக்கும் காரணமாகி விட்டது.
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மன்னிக்க முடியாத பாவம் இந்த பூமியில் எதுவும் இல்லை.
சரியானபடி பாவத்தை உணர்ந்து, மெய் மனஸ்தாபத்துடன் அறிக்கையிட்டு, மனந்திரும்பி வெற்றி வாழ்க்கையை தொடர்வதற்கு இயேசு கிறிஸ்து உற்சாகப்படுத்துகிறார்.
எனவே தேவ பிள்ளையே, தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் கலங்காமல் யுத்தத்திற்கு எழுந்து நில். தேவ பிள்ளைகளுக்கு எதிராக தோற்றுப்போனவனே களத்தில் இருக்கிறான். ஜெயம் பெற்றவரின் பிள்ளைகளே அவனை எதிர்த்து களத்தில் நிற்கிறோம். கலங்கவேண்டியது அவனாகத்தான் இருக்க வேண்டும். நாம் அல்ல, அகில உலகையும் ஆளுகை செய்யும் சர்வ வல்லவரின் சந்ததியே, நீ கலங்கி நின்றால் யார் ஜெயம் பெறுவர். விளிம்பில் நின்றாலும் வீரு நடையிடு. வெற்றி நமதே, நாயகன் இயேசு நம்முடனே.
பரிசுத்தம் என்பது எளிதுதான். அதை தக்க வைத்துக்கொள்வதற்கு தான் போராட்டம், அதில் ஜெயத்தை கொடுப்பவரை அருகில் வைத்து, நாம் அழுது கொண்டிருக்க வேண்டிய அவசியமென்ன? தோல்வியைக் குறித்து புலம்பல் பாடி பயன் என்ன?
புலம்பல் கீதங்கள் விலகட்டும், ஜெயகீதங்கள் தொனிக்கட்டும். நாளையும் நமதே, வெற்றியும் நமதே என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்களே நாம் தானே, உரக்க சொல், அதை உனக்கே முதலில் சொல், அதை இப்பொழுதே சொல், உன் நாடி, நரம்புகளில் இவ்வார்த்தைகள் ஊடுருவி, உனக்குள் இருக்கும் தோல்வி எண்ணங்களையும், நடுக்கங்களையும், உருவி போடட்டும்.
சத்தியத்தின் சந்ததியே, சத்தாக நில். தோல்வியின் உடை களையப்பட்டு, இரட்சிப்பின் உடை அணியப்பட்டுள்ளாய் என்பதை மறவாதே, மறக்க விடாதே. என்ன நடந்தாலும் சத்தியத்தை மட்டும் விட்டு விடாதே. உன்னைக் காப்பதும், நித்திய வாழ்வை தருவதும் அதுவே என்பதை புத்திக்கு உரைக்க சொல்லிக்கொண்டேயிரு. அது உன்னை கூர்மையாக்கிக்கொண்டே இருக்கும்.
தோற்றவனே போர்களத்தில் சளைக்காமல் நின்றால், ஜெயமுண்டு என்று அறிந்தவர்கள் எப்படியாக நிற்க வேண்டும்.
தேவனுடைய இதயத்துக்கு ஏற்றவன் என்று தேவனால் சாட்சி பெற்றவனாகிய தாவீதின் வாழ்க்கையிலும் தோல்வியின் விளிம்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் தாவீது வீழ்ந்து போகவில்லை. காரணம் அப்படிப்பட்ட வேளையிலும் கூட கர்த்தரை சார்ந்து கொண்டு, கர்த்தருக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, மனஸ்தாப ப்பட்டு, மனந்திரும்பி, “அப்பொழுது, தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்பொழுது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையில் விழாதிருப்பேனாக என்றான் (2 சாமுவேல் 24:14).
தோல்வியின் விளிம்பில் நின்ற போதும் தாவீதின் வார்த்தைகள் நமக்கு உற்சாகம் அல்லவா? தோல்வியின் காரணத்தை 2 சாமுவேல் 24:10-13 தெரிந்தவுடன் “தேவனுடைய கரங்களிலேயே விழுகிறேன்’’ என்று தேவனை விட்டுப் பிரிக்க எதிரியாகிய பிசாசு தந்திரமாக செயல்பட்ட சத்துருவின் தந்திரத்தை அறிந்து கொண்ட தாவீது, அவனுக்கு விரோதமாக யுத்தம் பண்ணின சத்துருவை வெட்கமடைய செய்கிறான்..
இவ்விதமாகவே, நம்மையும் தேவனை விட்டு பிரிக்கவும், பரிசுத்த வாழ்வில் இருந்து வீழ்த்தவும் எதிரி எத்தனிக்கையில் உடனடியாக கர்த்தரின் கரங்களில் விழுவதே நல்லது. கர்த்தரின் கரத்தில் விழுந்தால், சத்துருவுக்கு முன் வீழமாட்டாய். கர்த்தர் வீழ்ந்து போக விட மாட்டார்.
வாழ்க்கை என்ற போர்க்களத்தில் ஏற்படும் தவறுகளை நேர்மையாய் அறிக்கை செய்வது ஒன்றும் தவறு இல்லை. அதை அறிக்கை செய்கிற இடத்தை சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
தளபதியாய் முன் செல்லும் இயேசுவிடம் அறிக்கையிடு, பணிவோடு கூட கற்றுக்கொள். எல்லாம் தெரிந்தவனாக கர்த்தருக்கு முன்பாக காண்பிக்காதே, உனக்கு கற்பித்து தருபவர் அவர்தான் என்பதை மறந்து விடாதே.
சத்துருவுக்கு முன் தோல்வியை அறிக்கையிடாதே, விளிம்பில் நின்றாலும் சத்துருவுக்கு முன்பாக வீராப்பாய் நில். பின்வாங்குதல் மட்டும் போர்க்களத்தில் செல்லாது. முன்னோக்கி செல்லும் போதே, நீ வெற்றி பெறுவாய். பின் நோக்கினால் தோல்வியில் மடிவாய். முன்னோக்கி செல்பவனுக்கே, கர்த்தர் துணை செய்வார். போர்க்களத்தில் பின் நோக்கி தப்பித்தவன் இல்லை. முன்னோக்கி தோற்றவனுமில்லை.
போர்களத்தில் நின்று தோல்வியைக்குறித்து சிந்திக்க நேரமில்லை, விழுந்து விட்டாலும் நீ வீழ்ந்து போகவில்லை. எழு, நில், தொடர்ந்து போரிடு, எதிரியின் தந்திரங்களுக்கு அடி பணியாதே, நீ விழுந்தது கூட பெரிய தவறு அல்ல, மறுபடியும் எழும்பாமல் இருந்தால் அது மாபெரும் தவறு.
தோல்வியை தொடர்ந்து பேசி, கிறிஸ்து உனக்கு தந்த மேலான நன்மைகளை விட்டு விடாதே, உன் பலவீனத்தை அறிந்தே, எதிரி உன்னை வீழ்த்த பார்ப்பான். பலவீனத்தை எதிரிக்கு முன் காண்பித்து விடாதே, சத்துருவுக்கு முன் கம்பீரமாக நில். ஜெயிக்க போவது நீதான்.
நீ விழுந்திருந்தால் விழுகையின் காரணத்தை உனக்குள் அறிந்து கொள்ள ஆராய்ந்து பார். தவறுகள் இருப்பின் தேவனுடைய சந்நிதியில் அறிக்கையிட்டு ஒப்பரவாகு.
போர் களத்தில் நிற்கிற நீ எதிரிக்கு முன் உன் தோல்விகளை அறிக்கையிட்டு, என்னால் முடியாது என்று சோர்ந்து போய் விடாதே.
உன் சோர்வை தனக்கு சாதகமாக்கி, அதன் மூலமாக உன்னை வீழ்த்த எதிரி தந்திர ஆலோசனை செய்வதற்கு இடம் கொடுத்து விடாதே.
தோல்வியையே பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை, இனி தோல்விக்கு இடம் கொடுக்காமல் செல்ல வேண்டியதற்கு என்ன வழி என்பதை ஆராய்வதே புத்தசாலித்தனம்.
இந்த உலகமும், உலக மனிதர்களும் வெற்றி என்றாலே, பணத்தையும், பதவிகளையும், வசதியான வாழ்வு மட்டுமே என்று நினைத்து அதற்காக எதையும் செய்ய தயாராகிறார்கள்.
அப்படிப்பட்ட வாழ்க்கையே தோல்வியான பாவ வாழ்க்கை என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.
எனவே, பணத்தை சம்பாதிப்பதோ, பதவிகளை தக்கவைத்துக்கொள்வதோ, வெற்றியல்ல, வாழ்க்கையில் நேர்மையாக வாழ்வதும், நீதியாக இருந்து, பரிசுத்தத்தை காத்துக்கொள்வதுமே, வெற்றி வாழ்க்கை. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கும் உலக வாழ்க்கைக்குமே போராட்டம் உண்டு. எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இந்த போராட்டத்திற்குள்ளாகவே வரவில்லை. அவர்களுடைய போராட்டமும், செயல் பாடுகளும் முற்றிலும் வேறுபாடானவைகள். அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை.
எனவே, தேவன் நமக்கு நியமித்துக்கொடுத்திருக்கும் உண்மையான வாழ்க்கை வாழ்வதற்கு, பரிசுத்தமும், உண்மையும், நீதியும், நேர்மையும் கட்டாயம் அவசியம்.
இந்த வாழ்க்கை வாழக்கூடாத படிக்கே எதிரியாகிய பிசாசானவன் நமக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறான். இந்த போராட்டத்தில் நாம் ஜெயமுள்ளவர்களாய் வெற்றி நடை போட்டு, தோற்றவனுக்கு தோல்வியையே தினம் தோறும் பரிசளிப்போம்.
வெற்றி வேந்தன் இயேசு கிறிஸ்து என்றென்றும் நம்மோடு கூட இருந்து, நம்மை வழி நடத்துவாராக.
0 comments:
Post a Comment