Bread of Life Church India

எந்த சரீரத்தில் இருப்பார்கள்?

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்” ( ஆதி 5:24). வேதாகமத்தில் முதன் முதலாக மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட மனிதன்ஏனோக்”.
இதை அடுத்து பழைய ஏற்பாடு காலங்களில்இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்  (2 இராஜா 2:11) என்று எலியாவைக்குறித்தும் வேதம் கூறுகிறது.

எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக், எலியாவின் இந்த சம்பவங்களைக் குறித்து சற்று விரிவாக வேத வசனங்களைக் கொண்டு தியானிக்கலாம். எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இருவரும் மாம்ச சரீரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார்களா? அல்லது மறு ரூபமாக்கப்பட்டு, ஆவிக்குரிய சரீரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார்களா? என்பதைக் கேள்வியாக வைத்து வேதாகம வசனங்களை ஆய்வு செய்யலாம்.
முதலாவது ஏனோக்கை குறித்து பார்க்கும் போது, “விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்” (எபிரெயர் 11:5) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் ஏனோக் மரிக்க வில்லை என்பது தெளிவாகிறது.
விசுவாசத்தினாலே மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக் மறுபடியும் பூமிக்கு வந்து மரிக்க வேண்டும் என்பது விசுவாசத்திற்கு விரோதமானதாக இருக்கிறது என்பதை முதலாவது நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
மரணத்தைக் காணாத ஏனோக் மறுபடியும் பூமிக்கு வந்து மரிக்க வேண்டும் என்று நாம் அதிகமான போதனைகளில் கேட்டிருக்கிறோம். அதற்கு ஆதாரமாக வைக்கப்படும் வேத வசனம்அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” (எபிரெயர் 9:27) என்ற வசனமாகும். ஆனால் இந்த வசனம் எதற்காக கொடுக்கப்பட்டது என்பதை நன்றாக தியானிக்க வேண்டும்.
வேதாகமத்தில் பார்க்கும் போது மரித்த அநேகர் உயிரோடு எழுப்பப்பட்டார்கள். “ஒரே தரம் மரிப்பது” என்ற விதியை மீறி அப்படிப்பட்டவர்கள் இரண்டு தரம் மரித்தார்கள். ஆனால் இது பொதுவான விதி அல்ல. தேவன் தமது சித்தப்படி செய்கிறார்.
இவ்விதமாக ஒருவரை மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்படுவது தேவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. மரிக்க கூடாது என்று தேவன் எடுத்துக்கொண்டவனை அவன் வந்து மரித்துதான் ஆக வேண்டும் என்று வாதிடுவதில் எந்த நியாயமும் இல்லை.
ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். மரணத்தை காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டவர் மரித்துதான் ஆகவேண்டும் என்று கூற முடியாது.
 எல்லா மனிதர்களுக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது உலகத்திற்குரியது, அது தேவனின் பொதுவான சட்டமாகும். ஆனால் இரட்சிக்கப்பட்ட மக்களுக்கு மரணம் கட்டாயமான ஒன்றல்ல. காரணம் இயேசு கிறிஸ்துவின் வருகையில் பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெச 4:17) என்று வேதம் கூறுகிறது.
உயிரோடிருக்கும் இரட்சிக்கப்பட்ட தேவ ஜனம் இயேசு கிறிஸ்துவின் வருகையில் மரணத்தை காணாமல் மறுரூபமாக்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் மரிப்பதில்லை. மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்படுபவர்கள்  மறுபடியும் மரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே கர்த்தருடைய பிள்ளைகள் மரித்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே, எல்லோரும் மரித்துதான் ஆக வேண்டும் என்று பொதுவாக விதிக்கப்பட்ட சட்டம்  ஏனோக்கை பாதிக்க வில்லை. அது இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளுக்கும் பொருந்தாது.
மேலும், கிறிஸ்து இயேசுவுக்குள் பாவத்திற்கு மரித்தவர்கள், கிறிஸ்துவோடு மறுரூபமாக்கப்படுவதால் அவர்கள் நியாயசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த அடிப்படை சத்தியத்தை தேவன் ஆதியிலேயே ஏனோக்குக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். ஆகையால்தான்ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்” (யூதா 1:14,15) என்று வேதம் கூறுகிறது.  இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமல் இருக்கும் அவிசுவாசிகள் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவார்கள் என்றும், விசுவாசித்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு,  இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து, அவருக்காக காத்திருப்பவர்கள் மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற சத்தியத்தை அறிந்தவனாக ஏனோக் இருக்கிறான் என்றும், இச் செய்தியை முதலில் அறிவித்ததுஏனோக்தான் என்பதையும் வேத வசனம் உறுதிப்படுத்துகிறது.
இந்த அடிப்படையில் ஏனோக் மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவம் அவன் பூமிக்குரிய சரீரத்துடன் செல்ல வில்லை. மாறாகஆவிக்குரிய சரீரமாக மறுரூபமாகியே அவன் சென்றிருக்க வேண்டும்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். "கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்” (1 கொரி 15:20) என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் மரித்து உயிர்தெழுந்தவர்களில் இயேசு கிறிஸ்து முற்பலனானவர் என்று வேதம் கூறுகிறது. 
இயேசு கிறிஸ்து மரித்து உயர்த்தெழுந்து, மறுரூபமானவர்களில் முதற்பலனானவர்.
மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்ட “ஏனோக்” முதற்பலன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஏனோக் மரித்து, உயிர்த்தெழுந்து, மறுரூபமாக வில்லை.
மேலும்  இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் அவர் உயிரோடு எழுப்பிய லாசரு, யவீரு மகள், வாலிபன், மற்றும் வேதாகமத்தில் அநேகர் மரித்து எழுப்பப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களும் மறுபடி மரித்தார்கள். காரணம் அவர்கள் மரணத்தில் இருந்து உயிரோடு எழுப்பப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மறுரூபமாக்கப்படவில்லை. 
ஆனால் மரித்த இயேசு இனி மரிப்பது இல்லை என்று வேதம் கூறுகிறது. “மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை” (ரோமர் 6:9). ஏனென்றால் மரித்து உயிர்தெழுந்த  இயேசு கிறிஸ்து மறுரூப சரீரத்தில் இருக்கிறார்.   எனவே இயேசு கிறிஸ்துவே முதற்பலன்.
இயேசு கிறிஸ்துவின் வருகையில் மரணத்தைக் காணாமல் அவருக்கு காத்திருப்பவர்கள் மறுரூபமாக்கப்படுவார்கள் என்பதற்கு அடையாளமாகவும், சாட்சியாகவும் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்கள் இரண்டு பேர் மரணத்தைக் காணாமல் மறுரூபமாகி திருஷ்டாந்தமாக இருக்கிறார்கள்.
வேதாகமம் எதையும் முன் அறிவிக்காமல் செய்ய வில்லை. அந்த அடிப்படையில் மன சாட்சியின் காலம் என்று வேத வல்லுநர்களால் அறிவிக்கப்படும் காலத்தில், “ஏனோக்கும், நியாயப்பிரமாண காலம் என்று சொல்லப்படும் காலத்தில்எலியாவும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே, கிருபையின் காலத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு,  பாவத்திற்கு மரித்து, அவருடைய வருகைக்காக காத்திருக்கிற அனைவரும் மரணத்தைக்காணாமல் மறுரூபமாக்கப்படுவார்கள்.
தொடர்ந்து, எலியாவைக்குறித்து வேத வசனங்கள் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து கவனிக்கலாம்.
மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்ட எலியாவைக்குறித்து பார்க்கும் போதுஅன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்” (லூக்கா 9:30,31) என்று வேதம் கூறுகிறது. இங்கு எலியாவைக் குறித்து வேதம் கூறும் பொழுதுமகிமையோடே காணப்பட்டுஎன்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.
அப்படியானால் எலியா மகிமையின் சரீரத்தில் இருந்தார் என்பது உண்மையாகிறது. அதாவது மறுரூபமாக்கப்பட்ட ஆவிக்குரிய மகிமையின் சரீரத்தில் இருந்ததையே வேதம் குறிப்பிடுகிறது.
மகிமையின் சரீரத்தில் எலியா இயேசு கிறிஸ்துவோடு பேசினார் என்று வேதம் கூறுகிறபடியால், அவர் பூமிக்குரிய சரீரத்தில்தான் இருப்பார்  என்று சொல்லப்படுவதை ஏற்க இயலவில்லை. மேலும், எலியா பூமிக்குரிய சரீரத்தில்தான் இருக்கிறார் என்பதற்கு வேறு எந்த வேத ஆதாரமும் வேதாகமத்தில் இல்லை.
மேலும், மோசேயும், எலியாவும் மறுரூபமாக காட்சியளித்து இயேசுகிறிஸ்துவிடம் பேசினதைக்குறித்து,  "அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்'' (மத்தேயு 17:9) என்று வேதம் கூறுகிறது.
இங்கு இன்னொரு விஷயத்தையும் வேத வசனங்களின் மூலம் தெளிவு படுத்த விரும்புகிறேன். எலியாவை மகிமையின் சரீரத்தில் கண்ட சீஷர்கள் இயேசு கிறிஸ்துவிடம் கேட்கிறார்கள். “அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்” (மத்தேயு 17:10) என்று வேதத்தில் பார்க்கிறோம்.
ஏன் இந்த கேள்வியை சீஷர்கள் கேட்டார்கள்? அவர்கள் கேட்ட கேள்வி வேதபாரகர்களின் போதனையின் அடிப்படையில்தான் இருக்கிறது என்பதை, அவர்களே கூறுகிறார்கள். சரி, வேதபாரகர்கள் ஏன் அவ்விதம் போதித்தார்கள் என்று பார்ப்போமானால், “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்” (மல்கியா 4:5) என்று தீர்க்கதரிசி மல்கியாவால் முன் அறிவிக்கப்பட்ட வசனத்தை வைத்து அவர்கள் போதித்தார்கள்.
ஆனால் இந்த தீர்க்கதரிசன வசனம் எவ்விதம் நிறைவேறியது என்பதை அவர்கள் அறியாது இருந்தார்கள். இதைக் குறித்து, “பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்” (லூக்கா 1:17) என்று  யோவான் ஸ்நானனைக்குறித்து வேதம் கூறுகிறது.
எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய்யோவான் ஸ்நானன் வந்தான் என்பதுதான் உண்மை. எலியாவே மறுபடியும் மாம்ச சரீரத்தில் வருவான் என்று வேதம் கூறவில்லை. இதன் அடிப்படையிலேயே இயேசு கிறிஸ்துவும் தன்னுடைய சீஷர்களுக்கு பதில் கொடுப்பதை காண முடியும். “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; “ (மத்தேயு 17:11,12) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
எனவே, எலியா எடுத்துக்கொள்ளப்படும் போது, மறுரூபமாக்கப்பட்டு தான் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனவேதான் மறுரூப மலையில் இயேசு கிறிஸ்துவோடு பேசும் போது மகிமையின் சரீரத்தில் எலியா வெளிப்பட்டான். ஆகவே, தற்போது மகிமையடைந்த ஆவிக்குரிய சரீரத்தில்தான் எலியா இருக்க வேண்டும். இதற்கான வேதாகம ஆதாரம் மட்டுமே வேதாகமத்தில் இருக்கிறது.
மாம்ச சரீரத்தில் இருப்பதற்கான ஆதார வசனம் ஒன்று கூட இல்லை. எனவே, எலியா எடுத்துக்கொள்ளப்படும்போதே மறுரூபமாக்கப்பட்ட ஆவிக்குரிய சரீரத்திலேயே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்” (1 கொரி 15:50,51) என்று வேதம் கூறுகிறது.
எனவே,ஏனோக், எலியா மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த சம்பவங்கள் இன்றைக்கும் நமக்கு கொடுக்கும் செய்தி என்னவென்றால்,  பாவத்திற்கு மரித்து, இயேசு கிறிஸ்துவுக்காக காத்திருக்கும் நாமும், இயேசு கிறிஸ்துவின் வருகையில் உயிரோடு இருப்போமானால் மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்பதையே அறிவிக்கிறது.

1 comments:

  1. praise the lord. very good message brother. thank you for this message

    ReplyDelete