Bread of Life Church India

வழிப்போக்கன்



நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில் ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள், நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை கொடுக்கிறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்கு நான் செய்து கொடுப்பேன். எப்பொழுதும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று பணத்தைக் காண்பித்து, ஆசை வார்த்தைகளை பேசியதில் மயங்கி எனது வீட்டில் ஒரு சிறிய அறையை ஒதுக்கி அந்த நபரை தங்க வைத்தேன்.
ஆரம்பத்தில் நான் என் மனதில் நினைக்கிற எந்த காரியமானாலும் அதை எனக்கு உடனே செய்து கொடுத்தான். எனக்கு மிகவும் இன்பமாக இருந்தது. இப்படி தன் பணத்தையும் கொடுத்து, நான் விரும்புகிற எல்லாவற்றையும் எனக்காக ஓடி ஓடி ஒரு வேலைக்காரனைப்போல உதவி செய்து வந்த நபரை பார்த்து பெருமிதம் கொண்டேன்.
நாட்கள் சென்றன. அந்த நபர் எனது வீட்டின் எல்லா அறைகளையும் என் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த ஆரம்பித்தான். நாட்கள் செல்ல செல்ல எனது பேச்சை மதிக்காமல் அவன் தன் இஷ்டம் போல் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.

ஒரு கட்டத்தில் அவன் சொல்வதை நான் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். அவன் என்னை அடிமையைப் போல நடத்த ஆரம்பித்து விட்டான். என் வீட்டை முழுவதுமாக அவன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான்.
குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவனின் போக்கு இன்னும் மிகவும் கடினமாக மாறி விட்டது. இந்நிலையில் அவனை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்று நான் மிகவும் போராடினேன். ஆனால் நான் எவ்வளவுதான் போராடியும் என்னால் வெளியேற்ற முடிய வில்லை.
ஒரு கால கட்டத்தில் அவன் எனது வீட்டை அவன் விருப்பத்தின் படி எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டான். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
என்னை  தனக்கு முழுவதுமாக அடிமைப்படுத்தி, சட்டத்திற்கு எதிரான எல்லா செயல்களையும் தாராளமாக செய்து வந்தான். அந்த நபரைக் குறித்து,  சட்டத்திடம் முறையிடலாம் என்றால் அதினால் நானும் எனது வீடும் பாதிக்கப்படுமே என்ற பயம் ஒரு பக்கம் என்னை நெருக்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது என்றே புரியாத நிலையில் தன்னந்தனியாக அமர்ந்து யார் இந்த பொல்லாத நபரிடம் இருந்து என் வீட்டை விடுதலையாக்குவார்கள் என்று கலங்கிக் கொண்டிருந்தேன்.
இப்படிப்பட்ட வேளையில் எனக்கு வீட்டைக் கொடுத்த என் தந்தையிடமே எல்லாவற்றையும் சொல்லி இதற்கு தீர்வு பெறலாம் என்று, அவரிடத்தில் என்னுடைய பண ஆசையால் நீங்கள் எனக்கு தந்த இந்த வீட்டில் ஒரு நபரை குடிபுகுத்தினேன். ஆனால் அந்த நபர் நாட்கள் செல்ல செல்ல இந்த வீட்டில் நான் விரும்பாத பல பொல்லாத வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டான். நான் அவனை வெளியேற்ற எவ்வளவோ முயற்சி செய்தும், சிறிய அளவு கூட என்னால் முடிய வில்லை என்று, எனது பண ஆசையில் நான் அந்த நபரின் வலையில் சிக்கிக் கொண்டதை விவரித்து, சொல்லி, வருந்தி, எனது தந்தையிடம் மன்னிப்புக் கோரினேன்.
அந்த நபர் செய்யும் எல்லா பொல்லாத செயல்களுக்கும் வீட்டு சொந்தக்காரனாகிய நானே பாதிக்கப்படுகிறேன். தயவு செய்து அந்த நபரை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று முறையிட்டேன்.
என் தந்தை எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக எனது மூத்த சகோதரனை எனக்கு உதவியாக அனுப்புகிறேன் என்று சொல்லி, உடனடியாக அனுப்பி வைத்தார்.  எனது மூத்த சகோதரன் நேரடியாக அந்த நபரிடம்  நீ உடனே இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும். உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமானால் நான் அதை உனக்கு கொடுக்கிறேன் என்று கூறி அந்த நபரை வெளியேற்றி விட்டார்.
வீடு முழுவதும் அலங்கோலமாக காணப்பட்டது. எனது அண்ணன் அதை உடனடியாக சுத்தப்படுத்தி, குடியிருப்புக்கு ஏற்ற நல்ல வீடாக மாற்றி கொடுத்து விட்டு, இது நான் தங்கும் வீடு, இதில் வெளி நபர்களை நீ தங்க வைக்க கூடாது என்று சொல்லி, எனக்கும் என் வீட்டிற்கும் பாதுகாப்பாக ஒரு பாதுகாவலரை கொடுத்தார்.
எனக்கு இருந்த கலக்கம், பயம், சோர்வுகள் நீங்கி, நான் எனது வீட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.
ஆனாலும் எனது அண்ணனால் விரட்டி விடப்பட்ட அந்த பொல்லாத நபர் என் தெருவோரங்களில் சுற்றித் திரிகிறான். சில வேளைகளில் யாருக்கும் தெரியாமல் மறுபடியும், மறுபடியும் என் வீட்டு கதவை தட்டி, நான் உனக்கு இன்னும் ஏராளமான பணம் தருகிறேன். அல்லது நீ எவ்வளவு கேட்கிறாயோ, அதை உனக்கு கொடுக்கிறேன், உன் வீட்டில் எனக்கு ஒரு பகுதியை வாடகைக்கு கொடு, என்று தொல்லை கொடுப்பான்.
சில சமயங்களில் பின் வாசல் வழியாக வீட்டிற்குள் வர முயற்சி செய்வான். நான் அவனுடைய ஆசை வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல், பின் வழியாகவும் நுழைந்து விடாதபடி எனது பாதுகாவலரின் துணையுடன் எனது வீட்டுக் கதவை அடைத்து விடுவேன்.

ரோமர் 7:7-24
ரோமர் 8:1-5
வசனங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட உவமைக் கதை
இந்த கதையில் வரும் வீட்டை சரீரத்திற்கும், நான் என்பதை உங்களுக்கும் வாடகைக்கு வரும் நபரை பாவத்திற்கும், தந்தையை பிதாவாகிய தேவனுக்கும்,  மூத்த அண்ணனை இயேசு கிறிஸ்துவுக்கும், பாதுகாவலரை பரிசுத்த ஆவியானவருக்கும் ஒப்பிட்டு, மறுபடியும் வாசித்து பாருங்கள்.


0 comments:

Post a Comment