வென்றவர் மூலம் வெல்வோம்
வெற்றி வாழ்க்கை சாத்தியமே (பகுதி 2)
1.
அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள்
கடந்த நாட்களில் அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ற தலைப்பில், அ) சுயத்தின்
அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று பார்த்தோம்.
தொடர்ந்து அதை தியானித்து, வெற்றி வாழ்க்கை வாழும்படியாக தேவ கிருபைகளை
பெற்றுக்கொள்வோம்.
ஆ) பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.
“பாவத்தினின்று நீங்கள்
விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்’’ ( ரோமர் 6:22). தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது,
பாவத்தில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப் பட்டு விட்டீர்கள் என்று. ஆனால் அநேக
நேரங்களில் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள நம்முடைய உள்ளம் மறுக்கிறது. ஏன் என்று
பார்த்தால் வேதம் இப்படி சொல்லுகிறது ஆனால் என்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும்
இல்லையே, அப்படி இருக்க இந்த வசனத்தை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வது.
இதுதான் சிலருடைய எண்ணங்களில் ஆழமாக
பதிந்திருக்கிறது, இந்த எண்ணம்தான் வெற்றி வாழ்க்கைக்கு முட்டு`க் கட்டையாக இருந்து இயேசு கிறிஸ்து கொடுக்கும் ஜெயத்தை
முழுமையாக ருசிக்க முடியாதபடிக்கு செய்கிறது.
ஆனால் “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக்
கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது’’ (ரோமர் 6:14) என்று
வேதாகமம் மிக தெளிவாகக் கூறுகிறது. இந்த வசனத்தின் மூலமாக நாம் அறிந்து
கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், பாவத்தின் பிடியில் இருந்து, இயேசு
கிறிஸ்துவின் இரத்தத்தினால் விடுவிக்கப்பட்ட நம்மை, இனி பாவம் மேற்கொள்ள முடியவே
முடியாது. ஆனால் இந்த பாவம் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மை பாவத்திற்குள்ளாக
தள்ளி விடுவதற்காக பிசாசு அத்தனை விதமான தந்திரங்களையும் செய்கிறான்.
அதில் ஒரு தந்திரம்தான் நமக்கு பாவத்தின்
அழுத்தத்தை கொடுத்து, இன்னும் பாவத்தில் இருந்து நாம் விடுபடவில்லை என்ற மாய
தோற்றத்தை ஏற்படுத்துகிறான்.
ஆகவேதான் நமக்குள் பாவத்தின் எண்ணங்கள்
வரும் பொழுது, ‘நான் இன்னும் பாவத்தில் இருந்து விடுபடவில்லையோ’ என்று சிறியதாக அவிசுவாச எண்ணம் நமக்கு வருகிறது,
இப்படி வந்ததும் பிசாசு பாவத்தின் அடுத்த கட்டத்திற்குள்ளாக நம்மை கொண்டு செல்லப் பார்க்கிறான்.
எப்பொழுது நாம் இயேசு கிறிஸ்துவை
இரட்சகராக ஏற்றுக்கொண்டோமோ, அப்பொழுதே பாவத்தின் எல்லா வேர்களும் முற்றிலுமாக
நம்மை விட்டு அழிக்கப்பட்டு விட்டது. இதுதான் நூறு சதவீத உண்மை.
இயேசு கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக பாவம் நமக்கு உள்ளாக இருந்து கிரியை செய்து வந்தது.
அப்பொழுதோ, நம்மால் பாவத்தின் அழுத்தத்திலிருந்தும், பாவத்தின் பிடியில் இருந்தும்
விடுபட முடிய வில்லை. பாவம் முழுவதுமாக நம்மைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தது.
ஆனால் இப்பொழுதோ, பாவம் நமக்கு வெளியில் இருந்து, நம்மை அழுத்தப் பார்க்கிறது.
ஆனால் நாம் அனுமதி கொடுக்காமல் பாவம் நமக்குள் வரமுடியாது. நம்மை அடிமைப்படுத்தவும்
முடியாது.
முடியாது.
அதனால்தான் இப்பொழுது பாவம்
வெளியில் இருந்து நம்மை அழுத்தி, இன்னும் பாவத்திலிருந்து விடுபட வில்லை,
என்பதைப்போல நமக்கு காண்பித்து, நமக்குள்ளாக வருவதற்கு நம்மை ஏமாற்றி,
அவிசுவாசத்துக்கு நேராக நம்மை நடத்தி, அடிமைப்படுத்துவதற்கு முயற்சிக்கிறது. ஆனால்
நாம் அதற்கு அனுமதிக்கக் கூடாது.
“பாவத்திற்கு நீங்கள்
அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்’’ (ரோமர் 6:20). “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று
விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக்
கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன்’’ ( ரோமர் 6:22).
பிரியமானவர்களே, பிசாசு அநேகருடைய உள்ளத்தில் விதைக்கும்
விஷ விதை என்னவென்றால், பரிசுத்தம் என்பது பாரமானது, பரிசுத்தமாக வாழ்வது முடியாத
காரியம். பரிசுத்தம் உன்னால் முடியாது என்று, உலகத்தையும், தோற்றுப் போனவர்களையும்
காண்பித்து, சோர்வு படுத்த முயற்சிப்பான். நாம் சென்று கொண்டிருக்கிற வெற்றியின்
பாதையில், அநேகர் விழுந்து போய் இருக்கலாம். விழுந்து போனவர்களை பார்த்தால்
நம்முடைய இலக்கு தடைபடும். நமக்கு முன்னோடியும், முன்மாதிரியும், இயேசு கிறிஸ்துவாக
இருந்தால் நிச்சயமாக அவர் சென்ற வெற்றியின் பாதையில் நாமும் பயணம் செய்வோம்.
பயணத்தில் வெற்றியும் பெற்றுக்கொள்வோம்.
நாம் பாவத்தின் படுகுழியில் இருந்து, கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் மூலமாக விடுவிக்கப் பட்டு
விட்டோம் என்பதுதான் நமக்கு கொடுக்கப்பட்ட நல்ல செய்தி, முழு உலகத்திற்கும்
அறிவிக்கப்படும் நற்செய்தி.
“இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில்
ஒன்றுமில்லை’’ (யோவான் 14:30) என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். இதே போல
அவரைப்பின்பற்றுகிற நாமும் சொல்ல முடியும். எப்படி என்றால் இனி நாம் பாவத்திற்கு
அடிமையில்லை. பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டோம்.
“இயேசு கிறிஸ்துவை அறிந்து, நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன்
என்று சொல்லுகிற அநேகர், ஏன் இன்னும் பாவத்தில் இருக்கிறார்கள்.? அவர்களை இயேசு
கிறிஸ்து விடுவிக்க வில்லையா?’’ என்று சிலர் நினைக்கலாம். எப்பொழுது ஒருவர் “நான் பாவியான மனிதன். என்னுடைய
பாவத்திலிருந்து என்னை விடுவிக்கும் படியாக, இரட்சகராகிய இயேசு கிறிஸ்து எனக்காக
சிலுவையில் தன்னுடைய இரத்தத்தை சிந்தி, என்னை மீட்டு விட்டார். இனி பாவம் என்னை
ஆளுகை செய்ய முடியாது என்ற சத்தியத்தை சரியாக அறிந்து கொள்ளாமல், தங்களுடைய சுய
முயற்சியில் பாவத்தை ஜெயிக்க முயற்சித்து கொண்டிருப்பதினால், விழுந்து விழுந்து
எழுந்திருக்கிறார்கள். ஆகையால்தான் பாவத்தில் இருந்து இன்னும் நான் விடுபடவில்லை
என்ற எண்ணமே இன்னும் அப்படிப்பட்டவர்களைப் பாவத்தில் வாழும்படியாக செய்கிறது.
பிசாசின் மற்றொரு தந்திரங்களில் ஒன்று, தேவனுடைய
வார்த்தைகளின்படி இந்த காலத்தில் வாழ்வது என்பது முடியாத காரியம். வேதாகமம்
எழுதப்பட்ட காலத்தில் வேண்டுமானால் இப்படி வாழ்வது ஒரு வேளை சாத்தியமாக
இருந்திருக்கலாம்,. ஆனால் இந்த காலத்தில் எல்லாம் அப்படி வாழ்வது கூடாத காரியம்.
இதெல்லாம் போதனைகளுக்கு மட்டும் வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறை
வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று கிறிஸ்தவர்களையே இரட்டை வேடம் போடவைத்துக் கொண்டிருக்கிறான்.
தேவனுடைய வார்த்தையை மீறுவதும், பாவமான வாழ்க்கை வாழ்வதும்
மிகவும் இனிமையானதாக காண்பித்து, இந்த உலகமே இப்படித்தான் இருக்கிறது, நான்மட்டும்
என்ன இதற்கு விதி விலக்கா? என்று பாவத்தை இன்பமாக செய்கிறார்கள். ஆனால் இந்த
அறியாமையினாலே, அநேகர் தங்களின் வாழ்க்கையில் தாங்களாகவே, தோல்வியின் பாதையில்
சென்று கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களின் எண்ணம் எல்லாம், இந்த காலத்தில்
வெற்றி வாழ்க்கை வாழ்வது சாத்தியம் இல்லை என்பதே, ஆனால் வேதாகமம் ஏதோ ஒரு
காலகட்டத்திற்கு மட்டும் எழுதப்பட்டது அல்ல. ஏதோ ஒரு தலைமுறைக்கு மட்டும் கொடுக்கப்பட்டதும்
அல்ல. எல்லா காலகட்டத்திற்கும், எல்லா தலைமுறையினருக்கும் போதுமானதாக இருக்கிறது.
அதுமட்டும் அல்ல, எந்த காலத்திலும் பாவம்
சாதாரணமாக இருக்க வில்லை. அதே வேளையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்ட
பாவத்திலிருந்தும் விடுவிக்க கூடியது.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவருக்கும் வெற்றி
வாழ்க்கை வாழும்படியான எல்லாவிதமான உதவிகளையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
செய்கிறார். பாவம்தான் மனிதர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான தோல்விகளுக்கும்
காரணம். ஒரு பழமொழி இப்படியாக சொல்லுவார்கள். ‘மடியில் கனம் இல்லை என்றால்,
வழியில் பயம் இல்லை’. அதே போல நம்மைடைய வாழ்க்கையில் பாவம் இல்லை என்றால், தோல்வி என்பதும்
இருக்காது. நம்முடைய வாழ்க்கையில் இருந்த பாவத்தின் வேர் இயேசு கிறிஸ்துவின்
மூலமாக முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது. ஆகவே இனி நம்முடைய வாழ்க்கையில்
தோல்விக்கும் இடமில்லை. இயேசு கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக வாழ்கிற யாவருக்கும்
வெற்றி வாழ்க்கை சாத்தியமே.
தொடர்ந்து வருகிற நாட்களிலும் இந்த செய்தியின்
தொடர்ச்சி வரும். தவறாமல் படியுங்கள்.
0 comments:
Post a Comment