Bread of Life Church India

எச்சில் கைகள்




ஊழியங்களிலும், ஊழிய அழைப்பிலும், வித்தியாசங்கள் உண்டு. வேதாகமத்தில் அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அழைப்பின்படி ஊழியத்தை நிறைவேற்றினர். அதில் அவர் ஊழியம் சிறந்தது, இவர் ஊழியம் குறைந்தது என்று எதையும் சொல்ல முடியாது.
இந்த காலத்திலும் அவரவர் அழைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நிலைத்திருப்பது நல்லது. நிறை குறை எல்லோரிடத்திலும் உண்டு. குறைகளை மட்டும் நோக்கினால் ஒருவர் கூட தேறமாட்டோம் . இது தான் உண்மை.
இப்போதும் சிலர் சொல்லுவதை கேட்டிருக்கிறேன். நான் பவுலைப்போல ஊழியம் செய்கிறேன். நான் அவரைப்போல ஊழியம் செய்கிறேன், நான் இவரைப்போல ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி விட்டு, அப்படிப்பட்டவர்களின் ஊழிய வழிகளை நோக்கி பார்ப்பது இல்லை.

பவுல் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்தார். பவுல் காணிக்கை வாங்காமல் ஊழியம் செய்தார் என்று அறை குறையாக எல்லாவற்றையும் அறிந்து பேசுகிறார்கள் இது தவறு.
பவுலுக்கு ஊழியம் மட்டுமே பிரதானம். இயேசுவை அறிவிப்பது மட்டுமே இலக்கு. கூடார தொழில் அவருக்கு முக்கியம் கிடையாது. அவருடைய கூடார தொழில் அவருடைய ஊழியத்தை எந்த விதத்திலும் பாதிக்க வில்லை.
அதே வேளையில் எல்லா இடங்களிலேயும் அவர் கூடார தொழிலை செய்து கொண்டிருக்க வில்லை.   ஒரு சில இடங்களில் மட்டுமே அவர் கூடார தொழிலை செய்ததாக வேதாகமமும் சரித்திரமும் கூறுகிறது.
இன்றைக்கு தங்களை பவுலுக்கு ஒப்பிட்டு பேசிக்கொள்ளும் ஒருவரும் பவுலைப்போல ஊழியத்தை செய்ய வில்லை. ஒருவரும் கூடார தொழிலைப்போல எதையும் செய்ய வில்லை. நல்ல வேலையில் இருப்பவர்கள். அரசாங்க பணியில் அதிகாரிகளாக இருப்பவர்கள், ஆசிரியர்களாக இருப்பவர்கள். நல்ல வியாபார துறையில் இருப்பவர்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள். “நீங்கள் எல்லாம் தயவு  செய்து நான் பவுலைப்போல ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்தை கேவலப்படுத்தாதீர்கள்’’.
உங்களைப்போல பவுல் மாதம் தோறும் பல ஆயிரங்களை, பல லட்சங்களை சம்பாதிக்க வில்லை. அதே போல் வேலையில்லாத நேரத்தில் பவுல் ஊழியத்தை செய்யலாம் என்றும் இருக்க வில்லை. ஊழியம் இல்லாத நேரத்தில்தான் சிறிது நேரம் கூடார தொழிலை செய்தார். மேலும் பவுலின் படிப்பிற்கும், அவருக்கு இருந்த வசதிக்கும் அவர் கூடார தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதெல்லாம் வேண்டாம் என்று உதறிவிட்டு அவர் ஊழியத்தை செய்தார். நீங்களும் அவ்வாறு செய்து விட்டு பேசுங்கள்
அதே போல “நான் எல்லாம் காணிக்கையே வாங்குவது இல்லை. காணிக்கை வாங்காமல்தான் ஊழியம் செய்கிறேன் என்று சிலர் பெருமையாக பேசுவது உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் காணிக்கையே வாங்க வேண்டாம். உங்களுக்கு வருகிற வருமானமே போதும்.
ஆனால் ஊழியத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு, சுவிசேஷத்தினால் மக்களை சந்திப்பதும், ஜெபத்தினால் தேவ சமுகத்தில் நிற்பதுமாக, நாளைக்கு நிலை என்ன?  என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று, கர்த்தர் மேல் பாரத்தை வைத்து செயல்படும் முழு நேர ஊழியனை உங்கள் பேச்சால் மட்டுப்படுத்தாதீர்கள்.
முழுநேர ஊழியர்கள் எல்லாம் பணத்திற்காக அலையும் சோம்பேறிகள் என்று பழித்து பேசாதீர்கள். கர்த்தர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
சிலர் நல்ல அரசாங்க பணியில் இருந்து விட்டு ஓய்வு பெற்ற பின், “நான் முழு நேர ஊழியன்?’’ என்று
சொல்லிக்கொள்கிறார்கள். இப்படி சொல்லுகிறவர்கள் அறிந்து புரிந்துதான் பேசுகிறார்களா? இல்லை ஒன்றுமே தெரியாமல் பேசுகிறார்களா?   
தங்கள் வாழ்நாளை எல்லாம், தங்கள் பெலனை எல்லாம் தங்களுக்காகவும் தங்கள் வேலைக்காகவும் பயன்படுத்தி விட்டு, பெலனை இழந்து, தட்டு தடுமாறுகிற காலத்தில் வந்து “நானும் முழு நேர ஊழியன்தான் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள். இதைக்கூட தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் தங்கள் பணி ஓய்வுக்கு பின்வரும் பணத்தை எல்லாம் தங்கள் பெயரில் வைப்பு தொகையாக வங்கியில் செலுத்திவிட்டு, தாங்கள்தான் சிறந்தவர்கள் தங்களின் ஊழியம்தான் சிறந்தது. நாங்கள் பணத்திற்காக ஊழியம் செய்யவில்லை என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார்களே அதைத்தான் பொருத்துக்கொள்ள முடிய வில்லை.
தவறு செய்கிறவர்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக எல்லோரும் தவறானவர்கள் என்று பேசுவது தவறு.
சிலர், ஊழியர்கள் காணிக்கையே வாங்க கூடாது என்று சொல்லி, போதித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யார் என்றால், பணத்தில் கொழுத்தவர்கள். பணத்திற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். வாழ்க்கையே பணம்தான் என்று வாழ்பவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஊழியம் பொழுது போக்கு. இவர்களுக்கு ஊழியம் பேர் புகழ் சம்பாதிக்கும் வழி. ஆத்தும பாரமோ, இயேசுவின் பாரமோ இல்லாதவர்கள்.
இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், எல்லாவற்றிற்கும் முழு நேர ஊழியர்களை குறை பேசுகிறவர்கள். தங்களைத்தான் மெச்சிக்கொள்கிறவர்கள். பேச்சு சாதுர்யம் நிறைந்தவர்கள்.  தங்களுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். தங்களின் பணத்தை பத்திரமாக பாதுகாப்பவர்கள். ஊழியகளுக்காக, ஊழியர்களுக்காக கொடுக்க மனம் இல்லாதவர்கள். உதவி செய்வதைக்கூட ஆதாயமாகவே செய்கிறவர்கள். ஊழியத்திற்கு கொடுப்பதில் கூட தங்களுக்கு அதன் மூலமாக என்ன ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொடுப்பவர்கள்.
இப்படி எல்லாம் நான் சொல்லுவதால், வேலை செய்து கொண்டே ஊழியம் செய்கிற எல்லோரையும் குற்றப்படுத்த நான் துணிய மாட்டேன். அப்படிப்பட்டவர்களை மட்டுபடுத்துவதும் எனது நோக்கம் அல்ல. பகுதி நேர ஊழியத்திற்கு  அழைக்கப்பட்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை உத்தமமாய் செய்கிற உண்மையான ஊழியர்களாய் அநேகர் இருப்பதை அறிந்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களிலும் பலர் அப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
ஆனால் தேவனுக்கு விரோதமாக வாழ்ந்நு கொண்டு, வேத வசனத்திற்கு எதிராக பேசிக்கொண்டு, முழு நேர ஊழியர்களை குறை பேசி குதர்க்கமாக செயல்படுகிறவர்களை வேத வசனத்தின்படி சகித்துக்கொள்ள முடியாது. வேதம் இருக்கிறது என்று சொல்லுகிறதை இல்லை என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?. ஊழியத்திற்கு காணிக்கை அவசியம் என்று வேதம் கூறுகிறதை மறுப்பதற்கு இவர்கள் யார்? முழு நேர ஊழிய அழைப்பு உண்டு என்று வேதம் சொல்லும் பொழுது, இல்லை என்று மறுப்பதற்கு இவர்கள் யார்?  முழு நேர ஊழியனை கனவீனப்படுத்த இப்படிப்பட்டவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
இப்படி எல்லாம் பேசுகிறவர்கள், ஆத்தும ஆதாயம் செய்வதற்கு களத்தில் இறங்கி செயல்பட்டது உண்டா? அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக தேவ சமூகத்தில் அமர்ந்து ஜெபிக்கும் அனுபவம் உண்டா?  மக்களை தேடிச்சென்று மக்களை கிறிஸ்துவின் வழியில் செல்ல உற்சாகப்படுத்தி, அவர்களின் சுக துக்கத்தில் பங்கு பெற்றது உண்டா? சோர்ந்து போன நேரத்தில் அவர்களுக்கு வேண்டிய வேத ஆலோசனைகளை கொடுத்து அப்படிப்பட்டவர்களை இவர்கள் தூக்கி விடுகிறது உண்டா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை.
இப்படிப்பட்டவர்கள் அமர்ந்திருப்பது ஏசி அறையில். இவர்களுக்கு முன் இருப்பது லேப் டாப். இவர்கள் எப்போதும் நிற்பது டி வி கேமரா முன்தான். இவர்கள் குறைபாடுவது எல்லாம் பேஸ்புக்கிலும், இணையத்திலும். பத்திரிக்கைகளிலும்தான்.
இப்படி எல்லாம் பேசுகிறவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு சிலரை அதாவது உங்களிடம் பணத்திற்காக கை கட்டிக்கொண்டு நிற்கும் சில ஊழியர்களை வைத்து ஒட்டு மொத்த முழு நேர ஊழியர்களும் அப்படிப்பட்டவர்கள்தான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் உங்களைப்போல முட்டாள் வேறுயாராகவும் இருக்க முடியாது.
உங்களையே சுற்றி சுற்றி வரும் சில
காக்கா கூட்டத்தை உங்கள் எச்சில் கையால் விரட்டுவதைப்போல எல்லோரையும் விரட்டலாம் என்று கனவிலும் நினைக்காதிருங்கள். உங்களுக்கு என்று ஒரு வட்டத்தை போட்டு அந்த வட்டத்திற்குள் நின்று கொண்டு, உலகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் என்னை விட சிறந்தவன் ஒருவனும் இல்லை எல்லோரும் சுயநலவாதிகள் என்று பேசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள்.
உண்மையான ஊழியர்கள் உங்களைப்போல் உள்ளவர்களின் அருகில் கூட வரமாட்டார்கள். தங்களின் தேவைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரியப்படுத்தமாட்டார்கள். குடிப்பதற்கு கஞ்சி இல்லை என்றால் கூட இப்போதுதான் பன்னீரில் குளித்து விட்டு வந்தேன் என்பது போல் விசுவாசத்தில் உங்களிடம் பேசுவார்கள்.
அப்படிப்பட்ட ஊழியர்களுக்கு, எல்லாம் கர்த்தர். எப்போதும் கர்த்தர். கர்த்தர் மட்டுமே எல்லாமே. ஆகவே இனிமேல் உங்களைப் போல பண முதலைகளை சுற்றிக்கொண்டிருக்கும் சில முதுகெலும்பில்லா மூடர்களை வைத்து எல்லோருமே அப்படித்தான் என்று முடிவு செய்துவிடாதீர்கள்.
இதைப்போலவே, காணிக்கை கொடுக்க மனம் இல்லாத, தசமபாகம் கொடுக்க விருப்பம் இல்லாத சிலர், தசம்பாகம் அவசியமா? காணிக்கை கொடுக்க வேண்டுமா? ஊழியர்கள் ஏன் காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்படி பேசுகிறவர்கள் எல்லாம் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து கர்த்தர் தங்களுக்கு கொடுத்ததில் இருந்து தேவனுடைய ஊழியத்திற்கோ, ஊழியர்களுக்கோ கொடுக்க மனம் இல்லாதவர்கள்.
இன்னும் சிலர் கஷ்டப்படுகிற ஊழியர்களுக்குதான் கொடுப்பேன். சாப்பாட்டிற்கு வழியில்லாத ஊழியர்களுக்குதான் கொடுப்பேன். ஏழைகளுக்கு மட்டும்தான் கொடுப்பேன் என்று தங்களை பெரிய ஞானிகளைப்போல நினைத்துக்கொண்டு பேசுவார்கள். இவர்கள் காணிக்கை கொடுப்பதற்காக ஊழியக்காரன் பிச்சைக்காரனாகவா இருக்கமுடியும். இவர்களிடம் உதவி பெறுவதற்காக எல்லோரும் தரித்திரராகவா இருக்க வேண்டும்.
இன்னும் சிலர் ஒன்றும் இல்லாமல் ஊழியத்தை ஆரம்பித்த அந்த ஊழியக்காரர் இன்று எவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டார் என்று பொறாமைப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கொடுத்ததால்மட்டும் உயரவில்லை கர்த்தர் தம்முடைய ஊழியத்தை செய்கிற ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுப்பார். உங்கள் மூலமாக கொடுக்க வைத்தால் அந்த பாக்கியத்தை கர்த்தர் எனக்கு கொடுத்தார் என்று சந்தோஷப்படுங்கள்.
நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது. கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவார். கர்த்தருடைய ஊழியத்திற்காக காணிக்கை கொடுப்பதை தாறுமாறாக செலவு செய்கிறவர்களை கர்த்தர் பார்த்துக்கொள்வார். அவர்களை குற்றப்படுத்துவதோ, குறை பேசுவதோ நம்முடைய வேலை இல்லை.
கர்த்தர் தம்முடைய பணிக்காக தம்முடைய ஊழியர்களை ஏற்படுத்துகிறார். தவறு செய்கிறவர்களை அவர் விசாரிப்பார்.   
எனவே நாம் பேசுகிற வார்த்தைகளுக்கு. கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். கவனம், ஜாக்கிரதை. நீயாயத்தீர்ப்புக்கு உள்ளாகாதீர். அன்புடனே இந்த செய்தி எழுதப்படுகிறது.


0 comments:

Post a Comment