Bread of Life Church India

வானமும் பூமியும் சந்தித்த நாள்


"அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது'' ( லூக்கா 1:78,79).
வானமும் பூமியும் ஒன்றோடு ஒன்று சந்திக்குமா? என்றால் சந்திக்காது என்றே அநேகர் சொல்லுவார்கள். ஒருவிதத்தில் அதுவும் உண்மைதான். ஆனால் வானாதி வானமும் கொள்ளாத தூயாதி தூயவரான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய மக்களை சந்திக்கும் படியாக இந்த பூமிக்கு வந்தார். அந்த நாளை நினைவு கூர்ந்துதான் நாம் இந்த மாதத்தில் நமது மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறோம்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சாதாரணமான ஒன்று அல்ல, இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன் எத்தனையோ கோடி மனிதர்கள் பிறந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்ற மனிதர்களின் பிறப்பிற்கு முற்றிலும் வித்தியாசமானது. எப்படி என்றால் எல்லா மனிதர்களும் மனித வித்திலிருந்து, அதாவது முதல் மனிதனாகிய ஆதாமில் இருந்து வந்தவர்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ, கன்னிகையின் வயிற்றில் பிறந்தவர். மனிதனின் வித்தில் இருந்து வந்தவர் அல்ல.
ஏன் அவர் அப்படி வரவில்லை என்றால், அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே இருந்தவர். அவரே உலகத்தைப் படைத்தவர். மனிதனின் கீழ்ப்படியாமையினாலும், பாவத்தினாலும் தேவனுடைய ஐக்கியத்தை விட்டு விலக்கப்பட்ட மனிதனுக்கு, மத்தியஸ்தராக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தார் என்று, 1 தீமோத்தேயு 2:5 ல் வேதம் கூறுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இந்த பூமிக்கு என்ன செய்தியை கொடுக்கிறது என்றால், தேவாதி தேவன் தம்மை விட்டு விலகிப் போன மக்களை சந்தித்தார் என்ற நல்ல செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்தும், இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து வருவார் என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்டு, அவர் எங்கு பிறப்பார் (மீகா 5:2) என்றும், எப்படி பிறப்பார் (ஏசாயா 7:14) என்றும், அவர் என்ன செய்வார் ( மத்தேயு 1:21) என்றும், அவர் பிறப்பதற்கு முன்பாகவே தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, சரித்திரத்தை இரண்டாக பிரித்தது. அது மட்டுமல்ல, அவரை ஏற்றுக்கொள்ளும் மனிதனின் வாழ்க்கையையும் அவர் இரண்டாகப் பிரிக்கிறார். மனிதனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து வருகிறபடியினால் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது, எப்படிப்பட்ட நன்மை உண்டாகிறது, எவ்விதமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் என்பதை வேத வசனத்தைக்கொண்டு தியானிப்போம்.
தமது மக்களை மீட்க சந்தித்தார்
"தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.'' ( லூக்கா 1:74).
மனிதனை பாவம் அடிமைப்படுத்தி, மனிதனுக்கு சத்துருவாக இருந்தது. பாவ வாழ்க்கை வாழும்படியாக செய்தது, அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவும், பாவத்தின் பிடியில் இருந்து, வெளியில் வரமுடியாதபடிக்கும் தவித்துக்கொண்டிருந்த மனிதர்களை விடுவிக்கும் படியாகவே இரட்சணிய கொம்பாய் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து, பயத்திலும், வேதனையிலும் இருந்த மனிதர்களை விடுவித்தார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சந்திப்பில் (பிறப்பில்) மிகுந்த மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகிறது. "பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்'' (லூக்கா 2:10,11). இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, தமது மக்களோடு தேவனின் சந்திப்பு. இந்த சந்திப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, இனத்திற்கோ, நாட்டிற்கோ மட்டுமானது அல்ல. அதே வேளையில் ஒரு தலைமுறையோடு மட்டும் முடிந்து போகிறதும் அல்ல. அப்படி முடிந்து போகவும் இல்லை. இது முழு உலகத்திற்குமான சந்திப்பு. தலை முறை தலைமுறைக்குமான சந்திப்பு.
இயேசு கிறிஸ்துவின் இந்த சந்திப்பின் மூலமாகவே மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையில் சமாதானம் உண்டாகிறது. சந்தோஷமும், மன மகிழ்ச்சியும் உண்டாகிறது.
பிரியமானவர்களே, உங்களை சந்திக்கும்படியாக வந்த இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து விட்டீர்களா? அப்படி ஒரு வேளை நீங்கள் இன்னும் சந்திக்காமல் இருந்தால் கிறிஸ்து பிறப்பு நன்நாளை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில், அவரை சந்திக்கும் படியாக விரும்பி வாருங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உலகத்தில் மனிதர்களாகிய நம்மை சந்திக்கும் படியாக பிறந்த இயேசு கிறிஸ்து, இன்றைக்கும் உங்கள் இல்லத்திற்கு வர விரும்புகிறார். உங்கள் உள்ளத்திற்குள் வர விரும்புகிறார்.
ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்து ஒரு மனிதனுக்கும் தூரமானவர் அல்ல என்பதை நீங்கள் முதலாவது அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த மதத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, எந்த இனத்தில் இருந்தாலும் சரி, நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களை சந்திக்கும் படியாகத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமிக்கு வந்தார்.
நமக்கு விடுதலை கொடுக்கவும், சமாதானம் கொடுக்கவும், மகிழ்ச்சியை கொடுக்கவும்,  தேவனோடு நம்முடைய உறவு பலப்படவும், நித்திய வாழ்வுக்கு நாம் தகுதி பெறவுமே, அவர் நம்மை சந்திக்க இந்த பூமியில் மனிதனாக பிறந்தார்.
தமது மக்களுக்கு சமாதானம் கொடுக்க சந்தித்தார்
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்ததும் தூதர்களின் பெரும் திரள் தோன்றி, "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்'' ( லூக்கா 2: 14).
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமையை கொண்டு சென்றது, அது மட்டுமல்ல,  பூமிக்கு சமாதானத்தை கொண்டு வந்தது. மனிதர்மேல் தேவ பிரியம் உண்டானது.   
யாருடைய வாழ்க்கையில்இயேசு கிறிஸ்து இல்லையோ அவர்களின் வாழ்க்கையில் சமாதானம் இருக்காது. எல்லாம் இருப்பது போல இருந்தாலும், எதையோ இழந்ததைப்போல, எப்போதும் பயத்துடனும், குழப்பத்துடனும் வாழ்க்கை வெறுமையாகவே இருக்கும். யாருடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து இருக்கிறாரோ, அவர்களின் வாழ்க்கையில் எதுவுமே இல்லாதது போல இருந்தாலும், எல்லாம் இருப்பவர்களைப்போல சமாதானமும், சந்தோஷமும் நிறைவாக இருக்கும். அதுதான் இயேசு கிறிஸ்துவின் சமாதான சந்திப்பு.
"அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், (லூக்கா 1:78,79). "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது '' ( மத்தேயு 4:15,16). நிறைவேறும்படி இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இந்த பூமியில் நடந்தது.
பிரியமானவர்களே, நீங்கள் என்ன சூழ்நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கையை மாற்றவும், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எல்லா இருளையும் நீக்கவுமே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளின் மூலமாக உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். உங்கள் இருதயத்தில் இயேசு கிறிஸ்து பிறக்கப்போகிறார். நீங்கள் நிறைவான நன்மைகளை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்.
தமது மக்களை பாவத்திலிருந்து விடுவிக்க சந்தித்தார்
"அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்'' ( மத்தேயு 1:21). பாவம், பாவத்தின் மூலம் உண்டாகும் சாபம் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொல்லாப்பை ஏற்படுத்தி, தேவனுடைய ஐக்கியத்தில் இருந்து பிரித்து, வேதனைக்கு மேல் வேதனையை ஏற்படுத்தி, வாழ்க்கையையே நரகமாக்கி கொண்டிருந்தது. அது மட்டுமல்ல நித்தியமான நரகத்திற்கும் கொண்டு சென்றது. இதிலிருந்து எப்படியாகிலும் விடுதலை பெற்று விடவேண்டும் என்ற மனிதன் பல வழிகளில் முயற்சித்தும் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது.
பக்தி மார்க்கமோ, தியான மார்க்கமோ, சந்நியாச வாழ்க்கையோ, ஆடு, மாடு என்று விலங்குகளை, பறவைகளை பலியிடுவதாலோ, மனிதனுடைய வாழ்க்கையில் பாவத்தை நீக்கவோ, சாபத்தை போக்கவோ முடிய வில்லை. பாவமும், சாபமும் நீங்காததினால் மனித வாழ்வில் வெற்றியை கொடுக்க முடிய வில்லை.
பாவம் மனிதர்களின் வாழ்வில் கண்ணீரையும், கவலைகளையும், வேதனைகளையும் ஏற்படுத்தி, எப்போதும் பயத்துடனும், கலக்கத்துடனும் வாழும்படியாக செய்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த மனிதர்களின் எண்ணங்களில் ‘யார் விடுவிப்பார்.? யார் எனக்கு உதவி செய்வார் என்று இருந்த ஏக்கத்தை போக்கவே, தேவ குமாரானாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில்  தமது மக்களை பாவத்திலிருந்து விடுவிக்கும்படியாக  சந்தித்தார்.
அன்பானவர்களே, எங்களை சந்தித்து விடுதலை கொடுத்த இயேசு கிறிஸ்து உங்களின் வாழ்க்கையையும் சந்தித்து, நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் இருந்து உங்களை விடுவிக்க விரும்புகிறார். நீங்கள் எப்
படிப்பட்ட பாவ வாழ்க்கையில் இருந்தாலும் சரி, நீங்கள் இயேசு கிறிஸ்துவிடம் வருவீர்கள் என்றால் உங்கள் பாவ வாழ்க்கையில் இருந்து உங்களை விடுவித்து, உங்களை பரிசுத்தமாக மாற்ற இயேசு கிறிஸ்து விரும்புகிறார். இதை வாசித்துக்கொண்டிருக்கிற என் அன்பான சகோதரனே, சகோதரியே, நீ எப்படிப்பட்ட பாவ பழக்க வழக்கத்தில் இருந்தாலும் உன்னை விடுவிக்க இயேசு கிறிஸ்துவால் முடியும். ஐயோ! இந்த பாவ பழக்கம் என்னையும் எனது குடும்பத்தையும் பாழாக்கி கொண்டிருக்கிறதே, நான் என்ன செய்வேன். எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் விடமுடிய வில்லையே என்று மிகவும் வேதனைப்பட்டு, கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாயா? உன்னை சந்திக்கும் படியாகத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் உனக்காகப் பிறந்தார்.
அந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாளை நினைவு கூர்ந்துதான் நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கு பெற்று, உங்கள் வாழ்வும் மகிழ்ச்சியுடன் இருக்கவும், உங்கள் குடும்பமும் இதில் பங்கு பெறும்படியாக, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.
இந்த கிறிஸ்து பிறப்பின் செய்தி உங்களுக்கு நன்மையாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து, நீங்கள் கிறிஸ்துவுக்குள் பலப்படவும், வளரவும், கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக.



0 comments:

Post a Comment