Bread of Life Church India

நீங்களும் எஜமானாக வேண்டுமா?


இந்த உலகத்தில் பணம் எல்லாவற்றிற்கும் தேவை என்பதை எல்லோரும் அறிவோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு செயல்படுவோரும் உண்டு. பணம் இல்லாவிட்டால் இன்றைய காலகட்டத்தில் எதையுமே செய்யமுடியாது என்பது போன்ற நிலை வந்துவிட்டது. இதையும் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இந்த பணத்தை பயன்படுத்தும் விதத்தைதான் அதிகமானோர் சரியாக அறிந்து கொள்ள வில்லை. இதைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை வேதாகமம் வெளிச்சத்தில் பார்க்கலாம்.

“எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனை பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது’’ (லூக்கா 16:13) என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகிறார்.
இந்த வசனத்தில் ஊழியக்காரன் என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தை தேவனுடைய வேலையைச் செய்யும் ஊழியக்காரர்களை பற்றியது அல்ல என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
தேவனுக்கு கொடுக்கவேண்டிய முதலிடத்தை  உலகப்பொருள்களுக்கு கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் தேவனை அல்ல உலக பொருள்களையே அப்படிப்பட்டவர்கள் சிநேகிக்க ஆரம்பிக்கிறார்கள். உலக பொருள்கள் என்பது இவ்வுலகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையாக இருக்கிறது. அதை தெய்வமாகவோ, எஜமானாகவோ வைத்து விட்டால் தேவனை அசட்டை செய்வதாகும்.
அதற்காக இயேசு கிறிஸ்து உலகப பொருள்களே வேண்டாம் என்று சொல்லுகிறாரா? உலகத்தின் பொருள்கள் இல்லாமல் பணம் இல்லாமல் எப்படி இந்த பூமியில் வாழ்வது என்ற எண்ணத்துடன் கேள்வி கேட்க கூடாது.
இந்த வசனத்தின் மூலமாக இயேசு கிறிஸ்து அப்படி சொல்லவில்லை மாறாக உலகப் பொருள்களும் பணமும் ஒருநாளும் நமக்கு எஜமானாக வரக்கூடாது என்றே சொல்லுகிறார். ஏன் என்றால் நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவரை எஜமானாக வைத்து பின்பற்றினால், பணத்திற்கு நாம் எஜமானாக இருப்போம். பணம் நம்மை பின் தொடரும். நாம்  சொல்லுகிறதை பணம் கேட்கும்.
மாறாக பணத்தை எஜமானாக வைத்து, தேவனுக்கு கீழ்ப்படியாமல் வாழ்ந்தால், பணத்திற்கு நாம் வேலைக்காரர்களாக, அடிமைகளாக இருந்து பணத்தின் பின்னால் அலைந்து கொண்டிருப்போம். பணம் சொல்லுகிறதை நாம் கேட்க வேண்டும். பணம் நம்மை ஆளுகை செய்து, நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும். நாம் நமது நிம்மதியை இழந்து, சந்தோஷத்தை இழந்து, சமாதானத்தை இழந்து, பணத்திற்கே முதலிடம் கொடுத்து, அன்பில்லாதவர்களாக, மற்றவர்களை மதிக்காதவர்களாக இருந்து எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு பயன்இல்லாதவர்களாகவும் மாறி விடுவோம்.
உலகம் மனிதனின் பணம் அந்தஸ்தை வைத்து மனிதனுக்கு மதிப்பு கொடுக்கும். அதற்காக பணத்தை நாம் கொண்டாட முடியாது. நம்முடைய வாழ்க்கையை பணம் தீர்மானிக்கக் கூடாது. நம்முடைய சந்தோஷ துக்கத்தை பணம் தீர்மானிக்க கூடாது. நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிற பொறுப்பு நம்முடைய கையில் இருக்கிறது.
சிலருக்கு பாக்கெட்டில் பணம் இருந்தால் கம்பீரமாக இருப்பார்கள். சந்தோஷமாக இருப்பார்கள். என்னைப்போல ஒருவரும் இல்லை என்ற கர்வத்தில் வாழ்வார்கள்.
ஆனால் அதே பணம் அவர்கள் பாக்கெட்டில் இல்லாவிட்டால் அப்படியே எல்லாம் மாறுதலாக இருக்கும். மிகவும் சோர்ந்து போய் இருப்பார்கள். மிகவும் வேதனையுடனும், கவலையுடனும், துக்கத்துடனும் இருப்பார்கள். என்னைப்போல கேவலமான ஆள் யாரும் இல்லை என்பது போல அவர்கள் செயல்கள் மாறிவிடும். தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். யாருமே என்னை மதிக்க வில்லை என்ற மனக்குறை மனதை அழுத்திக்கொண்டிருக்கும்.
மிகவும் நொந்து போன நிலையில் இருப்பார்கள். இந்த இரண்டு விதமான நிலைகளுமே தவறு. பணம் இருந்தால் ஒருமாதிரி. அதே பணம் இல்லை என்றால் வேறுமாதிரி. அப்படியாக பணத்தை வைத்து நம்முடைய வாழ்க்கையை நாம் தீர்மானிக்க கூடாது. அதே சமயம் மற்றவர்களையும் பணம் அந்தஸ்தை வைத்து எடை போடக்கூடாது.
நாம் பணத்திற்காக அல்ல, பணமே நமக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. நம்முடைய மகத்துவம் தனித்துவம் அறிந்து நாம் செயல்படவேண்டும். மனிதனை அவனுடைய பண்புகளை வைத்து மதிப்பிட வேண்டும்.
பணத்திற்காகவே நாம் வாழ்க்கையை அற்பணித்துவிட்டால் பணத்தை நம்மால் சம்பாதித்துவிட முடியும். ஆனால் நம்மை நாம் இழந்து விடுகிறோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இக்காலத்தில் பணத்திற்கு தங்களை அற்பணித்து விட்ட மனிதர்களை பணம் என்ற எஜமான் எப்படி எல்லாம் ஆட்டி படைக்கிறான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்தும் வருகிறோம்.
நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். இதுவரை நமக்கு பணம் வேலைக்காரனாக இருந்து வந்திருக்கிறதா? அல்லது எஜமானாக இருந்து வந்திருக்கிறதா? இதுவரை எஜமானாக இருந்து வந்திருந்தால் இனி அதை எஜமானாக வைக்க போகிறோமா? அல்லது நமக்கு வேலைக்காரனாக வைக்கப்போகிறோமா? முடிவு நமது கையில்தான்.
ஆனால் அநேகர், பணத்தையும், தேவனையும் எஜமானாகவே வைக்க விரும்புகிறார்கள். அது முடியாத ஒன்று. எப்படி என்றால். பணத்தை எஜமானாக வைக்கும் போதே, பணத்தை பற்றிக்கொண்டு, தேவனை அசட்டை செய்ய ஆரம்பித்து விடுகிறோம். அப்படி இருக்க எப்படி தேவனை சேவிக்க முடியும்.
ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தேவன் நம்மைவிட மிக மிக மேலானவர். ஆனால் பணமோ நம்மைவிட மிக மிக கீழானது. நாம் பணத்தை சம்பாதிக்க வேண்டும். பணம் நம்மை சம்பாதிக்க விடக்கூடாது. இதெல்லாம் சிறு வித்தியாசம்தான். இந்த வித்தியாசத்தை சரியாக அறிந்து செயல்படுகிறவர்களே மிக மிக உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் எதையும் செய்கிறவர்களாக இருப்பவர்கள் பணத்திற்கு வேலைக்காரர்களே.
நீங்கள் எப்படி? பணத்திற்கு வேலைக்காரரா? அல்லது எஜமானா? உங்கள் முடிவுதான் உங்களை எஜமானாக மாற்றும்.
“நான் இனி பணத்திற்கு எஜமானாகவே இருப்பேன்’’ என்று சொல்லுகிறது எனக்கு கேட்கிறது. பிறகு என்ன உங்கள் வேலைக்காரனான பணம் உங்களை தேடி வருவான். உங்களுக்கு சேவை செய்வான். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வான்.
ஆனால் ஒன்று இயேசு கிறிஸ்துவை உங்கள் எஜமானாக வைக்க மறந்து விடாதீர்கள்.

0 comments:

Post a Comment