உலகின் முதல் ஆழிப்பேரலை
"என்ன சொல்லப்போகிறாரோ, கோபமாக இருக்கிறாரே!
உலகம் என்ன ஆகப்போகிறதோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த
நோவாவிடம் கடவுள் ”எனது முன்னிலையிலிருந்து
மனிதர் அனைவரையும் அழித்து விடப்போகிறேன்.
அவர்களால் பூமியில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை
மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.
உனக்காகக் கொப்பேர் மரத்தால் ஒரு
பேழையைச் செய்; அதில் அறைகள் அமைத்து
அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. 450 அடி நீளம்; 75 அடி அகலம்; 45 அடி உயரம். மேற்தள
பரப்பளவு 97,700 சதுர அடி கொண்டதாக
அந்தப் பேழையைத் தயார் செய்.
அதன் மேல் ஒரு ஜன்னலை அமைத்து, அந்த
ஜன்னல் மேல்தளத்திற்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி செய். பேழையின் கதவை ஒரு
பக்கத்தில் அமைத்துக்கொள். கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களை அப்பேழையில் அமைத்துக்கொள்.
நான், பூமியின் மேல் மழையைப் பொழிவேன். தொடர்ந்து பெய்யும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதனால் பூமியில் உள்ளவையெல்லாம்
மடிந்துபோம்.
உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர்
ஆகியோருடன் நீ அந்தப் பேழைக்குள் செல்.
உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா
உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டாக அப்பேழையில்
நிரப்பு.
அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும். வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து
வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள
உன்னிடம் வரட்டும். உண்பதற்கான எல்லா வகை
உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும்
அவற்றிற்கும் உணவாகட்டும்” என்று கடவுள் சொன்னார்.
நோவா எல்லாவற்றையும் அமைதியாகக்
கேட்டுக்கொண்டிருந்தானே ஒழிய மனம் படபடத்துக்
கொண்டே திகிலோடே இருந்தான். கடவுள் பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மை நிலையையும் தீர்மானத்தையும்
அறிந்ததால் எதுவும் பேசாமல், “நீங்கள்
கட்டளையிட்டபடியே எல்லாவற்றையும் செய்கிறேன்’’ என்று சொல்லி
கடவுளுக்கு
முன்பாக பணிந்து நின்றான்.
எல்லாவற்றையும் செய்கிறேன் என்று
நோவா கடவுளிடம் சொல்லிவிட்டாலும் அவனுடைய மனம் முழுவதும் ‘ஐயோ எல்லா மக்களும்
அழியப்போகிறார்களே’ என்ற
கலக்கத்துடனேயே இருந்தது. ஒருவருடனும் பேசாமல் கடவுள் சொன்ன வார்த்தைகளையே நினைத்துக்கொண்டிருந்தான். இரவில் தூக்கம் வராமல் உட்கார்ந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான். இதை கவனித்த நோவாவின்
மனைவி “என்னங்க தூங்கலியா? ஏன் இப்படியே உட்காந்திருக்கீங்க. என்ன உடம்பு
சரியில்லையா?’’ என்று தொட்டுப்பார்த்தாள்.
அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கிறது. மனசுதான்
சரியில்லை’’
என்றான்.
“என்னன்னு சொன்னாதாங்க உங்க மனசுல இருக்கிற பாரம் குறையும் நீங்களே மனசுக்குள்ள வச்சு யோசிச்சுக்கிட்டு இருந்தா இன்னும் அதிகமாகத்தான் செய்யும்.
என்னிடம் சொல்லலாம்ல?’’ என்று கேட்டதும்,
நோவா கடவுள் தன்னிடம் பேசின எல்லாவற்றையும் தன்மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தான். அதையெல்லாம் கேட்டதும் நோவாவின் மனைவி அதிர்ச்சியில்
உறைந்தே போய்விட்டாள்.
சிறிது நேரத்திற்கு பின்பு
சுதாரித்துக்கொண்டவளாக “நீங்க சொல்லுவது எல்லாம் உண்மையாங்க. உண்மையாகவே கடவுள்
உங்களிடம் இப்படி பேசினாரா?’’ என்று கேட்டு நோவாவின் முகத்தையே
பார்த்துக்கொண்டிருந்தாள்.
“கடவுளே நேரடியாக என்னிடம் பேசினார்மா.
இந்த அழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக பேழையை செய்யும்
படியாகவும், அது எந்த அளவில் இருக்க வேண்டும் என்றும் மிகவும் தெளிவாக கடவுள்
என்னிடம் பேசியிருக்கிறார்’’ என்று நோவா சொன்னதும் “இதற்கு வேறு வழியே இல்லையா? எல்லா மக்களும் அழிந்துதான் போக வேண்டுமா?’’ என்று தழுதழுத்த
குரலில் கேட்டாள்.
“வழி இருக்கிறது, அந்த அழிவில் இருந்து
தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. அதுதான் நாம செய்யப்போகிற பேழை. அந்த பேழைக்குள்
இருந்தால் அந்த அழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இனி வேறு வழியில்லை.
நம்மோடு சேர்ந்து எவ்வளவு பேர் பேழைக்குள் வருகிறார்களோ அவர்கள் அழிவில் இருந்து
பாதுகாக்கப்படுவார்கள். நம்மால்முடிந்த வரை இதை எல்லோரிடத்திலும் சொல்வோம். கடவுளின்
வார்த்தைகளை நம்புகிறவர்கள், விசுவாசிக்கிறவர்கள் கட்டாயம் தப்பித்துக்கொள்ள
முடியும் என்று நோவா சொன்னான்.
“நல்லதுங்க இனி நம்முடைய வேலையே அந்த
அழிவில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுவதற்காக கடவுள் பேசின வார்த்தைகளை எல்லாம் மக்களிடமே சொல்லுவதுதான்’’ என்று நோவாவின் மனைவி சொன்னதும் “நானும் இதைத்தான்
நினைத்தேன் அப்படியே செய்யலாம். சரி நேரம் ஆகி விட்டது. தூங்கலாம். நாளை
எழுந்ததும் முதலில் நமது பிள்ளைகளிடம் இது குறித்துச் சொல்ல வேண்டும் என்று சொல்லி இருவரும் படுக்கைக்கு
சென்றனர்.
நோவா பேழை செய்வதற்கான ஆயத்த வேலையில்
ஈடுபட ஆரம்பித்தான். நோவாவின் மனைவி இரவில் நோவா சொன்ன
எல்லாவற்றையும் தன்மகன்களிடமும் மருமகள்களிடமும் சொல்லி விட்டாள். அதைக் கேட்டதும் பிள்ளைகளுக்கும் அதிர்ச்சி! ஆனால் பேழைக்குள் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும்
இருக்காது என்று தெரிந்ததும், 'எல்லா மக்களும் பேழைக்குள் வரவேண்டுமே, அவர்கள் வருவார்களா?' என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டார்கள்.
நோவா தனது மனைவியை அழைத்து, “பேழை
செய்வதற்கு வேண்டிய மரங்களை தேடிப் பார்த்துவிட்டு
வருகிறேன்’’ என்றான். "அவ்வளவு பெரிய பேழையை எப்படி கட்டுவீங்க. நினைத்து பார்க்கவே முடியவில்லை. இதை கட்டுவதற்கு நிறைய தேவைகள் இருக்குமே,
அதற்கு என்ன செய்யப்போகிறோம்? சரி கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கிறார்.
கடவுளால் செய்ய முடியாதவைகள் என்ன இருக்கின்றன என்று நீங்கள் சொல்லும் வார்த்தைகள்தான் இப்போது எனக்கு ஞாபகத்திற்கு
வருகிறது. போய் வாருங்கள்’’ என்று சொல்லியனுப்பினாள்.
‘இந்தப் பேழையைச் செய்வதற்கு பல
நாட்கள் ஆகும். பேழையை கட்டிக்கொண்டே கடவுள் பூமியை அழிக்க போகும் செய்தியை மக்களுக்கு சொல்லி, மக்களை பேழைக்குள் கொண்டு வந்து
விட வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே நோவா நடந்து கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றதும் மக்கள் எல்லோரும் கூடுகிற சந்தை
வெளியில் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அந்த
வேளையிலும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும் ஒரே கூச்சலும்
குழப்பமாகவே காணப்பட்டது. மக்களின் அநீதியான செயல்கள் நாளுக்கு நாள் பெருகி
கொண்டுதான் இருந்ததே ஒழிய குறைந்ததாக தெரியவில்லை.
அதன் மத்தியிலும் நோவா உயரமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, தனது சத்தத்தை உயர்த்தி "என் அன்பான மக்களே
எல்லோரும் என்னை கவனியுங்கள். நான் பேசப்போகும் வார்த்தைகளுக்கு உங்கள் செவிகளைக் கவனித்து {கூர்மையாக்கிக்} கேளுங்கள். மிகவும் முக்கியமான தகவலை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்" என்று சொன்னதும் ஒரு சிலர் அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கவனித்தாலும், மற்றவர்கள் அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லோரும் என்னை கவனியுங்கள். நான் பேசப்போகும் வார்த்தைகளுக்கு உங்கள் செவிகளைக் கவனித்து {கூர்மையாக்கிக்} கேளுங்கள். மிகவும் முக்கியமான தகவலை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்" என்று சொன்னதும் ஒரு சிலர் அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கவனித்தாலும், மற்றவர்கள் அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
“நான் சொல்லப்போகிற தகவல்கள் உங்களுக்கு
விகற்பமாக தெரியலாம். ஆனால் நான் சொல்லப் போகும்
செய்திகள் அனைத்தும் உண்மை. இன்னும் சில நாட்களுக்குள்ளாக இந்தப் பூமி தண்ணீரினால் அழிக்கப்படப்போகிறது. வானத்திலிருந்து பெரும் மழை வரும். தொடர்ந்து பெய்யப்பொகும் மழையினால், பெரும் வெள்ளப்பெருக்கு
உண்டாகும். அப்படி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது நிலப்பரப்பு முழுவதும் தண்ணீர்
சூழ்ந்து கொள்ளும். அது மட்டுமல்ல, அந்த
வெள்ளம் எல்லா மலை உச்சிகளையும் மூடி விடும். ஆதலால் நான் சொல்லப்போகும் செய்தியைக் கவனியுங்கள்’’ என்று நோவா பேச, அதைக்
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பலத்த சத்தத்துடன் கூச்சலிட ஆரம்பித்தனர்.
கூட்டத்திலிருந்த ஒருவன் “என்ன நோவா உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? ஏன் இப்படி உளறிக்கொண்டிருக்கிறாய். மழையாவது மண்ணாவது. அப்படி என்றால் என்ன? உனக்கு மூளை குழம்பிவிட்டது என்று நினைக்கிறேன்’’ என்று எள்ளி நகையாட, சுற்றி இருந்த அனைவரும் “பைத்தியகாரனின் பேச்சை
எல்லாம் கேட்டு நேரத்தை வீணடிக்காமல் வேலையப் பாருங்கப்பா" என்று தலையில் அடித்துக் கொண்டனர்.
“நண்பர்களே தயவு செய்து நான் சொல்வதை
நம்புங்கள். இது என்னுடைய வார்த்தைகள் அல்ல. கடவுள் என்னிடம் சொன்ன வார்த்தைகளையே
நான் உங்களிடம் சொல்லுகிறேன்’’ என்றான்
நோவா. கூட்டத்தில்
இருந்த இன்னொருவன் “என்ன நோவா அடிவாங்காமல் இங்கிருந்து
போகமாட்டாய் என்று நினைக்கிறேன். எந்த கடவுள் உன்னிடத்தில் சொன்னது. அந்த கடவுளை
என்னிடத்தில் வந்து சொல்லச்சொல், நான் அந்தக் கடவுளிடத்தில் பேசிக்கொள்கிறேன்’’ என்று சொல்ல சுற்றி இருந்த எல்லோரும் சத்தமாக கேலி செய்து
சிரித்தனர்.
மறுபடியும் நோவா “நான் சொல்லுவதை நீங்கள்
நம்பினாலும் நம்பாமல் போனாலும், கட்டாயமாக வானத்தில் இருந்து மழைவரும். வெள்ளப்பெருக்கு ஏற்படும். பூமி தண்ணீரினால் சூழப்பட்டு
எல்லாம் அழிக்கப்படும். இந்த அழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் நான்
செய்யப்போகிற பேழைக்குள் நீங்கள் வரவேண்டும். நான் சொல்லுவதைச் சொல்லி விட்டேன். இனி உங்கள் விருப்பம்’’ என்று சொல்லி
அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
நோவாவின் காதுபடவே ஒருவன் “நோவா நீ பைத்தியமாகி
விட்டாய். குணமாக வேண்டுமானால், நல்ல வைத்தியரை சென்று பார். இன்னும் பைத்தியம் அதிகமாகி
விடப்போகிறது’’ என்று பின்னாலேயே வந்து நோவா அணிந்திருந்த உடைகளை பிடித்து
இழுத்தான். நோவா அவனுடைய கையை நீக்கிவிட்டு அமைதியாக சென்றான்.
ஆனாலும் நோவா சும்மா இருக்க வில்லை.
மக்கள், தன்
பேச்சைக் கேட்காமல் கேலி பேசினாலும், தான் பார்க்கிற எல்லா மனிதர்களிடமும் கடவுள் சொன்னவைகளை
சொல்லிக்கொண்டே வந்தான்.
தன்னுடைய நண்பர்களையும் அடிக்கடி
சந்தித்து “கடவுள் தன்னிடம் பேசிய வார்த்தைகளை சொன்னான். அவனுடைய நண்பர்கள் அவன்
சொல்லுவதை பொறுபையாக கேட்டார்கள்.ஆனால்
அநேக கேள்விகள் கேட்டு, அதை மறுக்க பார்த்தார்களே தவிற ஏற்றுக்கொண்டு, பேழை
செய்வதற்கு உதவி செய்யவோ, நோவா சொன்ன வார்த்தைகளை கேட்டு, பேழைக்குள் “நாங்களும்
வருகிறோம்’’ என்றோ ஒருவரும் சொல்ல வில்லை. மாறாக “மழையா? வெள்ளமா?
அழிவா? நீயும் இதை வெகு நாட்களாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறாய். ஒருமாறுதலும்
இல்லையே, அப்படி வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம்’’ என்று கேலி
பேசினார்கள்.
நாட்கள் உருண்டோடின. சிறிது சிறிதாக பேழை
வளர ஆரம்பித்தது. நோவா பேழையை செய்து கொண்டே, அதற்கு தேவையான பொருள்களை
சேகரித்துக்கொண்டே இருந்தான். பேழையை கட்டுவதற்காக தனக்கு
இருந்த நிலங்களை எல்லாம் ஒன்று ஒன்றாக விற்க ஆரம்பித்தான் நோவா. இந்த வேலையின்
மத்தியிலும், தன்னால் முடிந்த வரை எல்லா மக்களுக்கும் பூமி தண்ணீரினால்
அழியப்போகிறது என்ற செய்தியை பகிரங்கமாக அறிவித்துக்கொண்டே இருந்தான்.
நோவாவின் குடும்பம் மட்டுமே நோவாவிற்கு
உறுதுணையாக இருந்து பேழை கட்டுவதற்கு அவனுக்கு உதவி செய்து
வந்தது. மற்றவர்கள் எல்லாம் நோவாவை அடிக்காத குறைதான். அநேகர் தகாத வார்த்தைகளால்
பேசி, வேதனைப்படுத்தினார்கள். ஆனாலும் நோவா அதைப் பெரிதாக எண்ணாமல், ஒருவரிடமும்
கோபம் கொள்ளாமல், உண்மைநிலை அறியாமையால் மக்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்" என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
ஆண்டுகள் பல கடந்தன. தனக்கு இருந்த எல்லா
நிலங்களையும், தான் குடியிருந்த இடத்தையும் கூட விற்று, கடவுள் சொன்னபடியே நோவா பேழையை கட்டி முடித்தான். முழுவதும் கட்டி
முடிக்க 100 ஆண்டுகள் ஆனது. அப்பொழுது கர்த்தர் நோவாவிடம் மறுபடியும் பேசினார். "நோவா,
நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்." என்றார்.
நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்." என்றார்.
நான் சொல்லியபடி நாட்டு விலங்குகள்
எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாகவும், காட்டு விலங்குகளிலிருந்து ஆணும்
பெண்ணுமாக ஒரு சோடியையும், வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாகவும்,
மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன்
சேர்த்துக் கொள். இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல்
நாற்பது பகலும், நாற்பது இரவும் நான் மழையைப் பொழியப்போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து
அழித்தொழிப்பேன்” என்றார்.
கடவுள் சொன்னபடியே நோவா ஏழு நாட்களுக்குள்ளாக
மிகவேகமாக செயல்பட ஆரம்பித்தான்.
கடவுள் அழிக்கப்போகிறேன் என்று சொன்ன
கடைசி நாட்கள் வந்துவிட்டதை
அறிந்த நோவா, கர்த்தர் சொன்னபடியே விலங்குகளையும், பறவைகளையும், சேகரித்துக்கொண்டே,
மறுபடியும் கண்ணீரோடுகூட பார்க்கிற எல்லா மக்களிடத்திலும் “இன்னும் சில தினங்கள்
மட்டுமே இருக்கின்றன. மழைவரப்போகிறது. வெள்ளப்பெருக்கு உண்டாகும். பூமி
முழுவதும் நீரால் அழிந்து போகும்.
இப்போதாவது என்னுடைய வார்த்தைகளுக்குச் செவி சாய்த்து,
மனந்திரும்பி நான் கட்டிய பேழைக்குள்ளாக வாருங்கள். பேழைக்குள் வந்துவிட்டால் உங்களுக்கு அழிவில்லை’’ என்று தன்னால் முடிந்த மட்டும் எல்லோரிடமும்
சொல்லிப்பார்த்தான். ஆனால் ஒருவராகிலும் அவனுடைய
வார்த்தைக்கு செவி சாய்த்து, மனம் திரும்பி வருவதாக இல்லை.
கடவுள் சொன்ன அந்த கடைசி நாளும் வந்தது.
கடவுள் சொன்னபடியே அந்த ஏழு
நாள்களுக்குப்பின் பூமியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நோவாவின் வாழ்க்கையின்
அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள்
எல்லாம் பீறிட்டெழுந்தன. கடல் கொந்தளித்தது. வானங்களின்
மதகுகள் திறக்கப்பட்டன. நாற்பது பகலும், நாற்பது இரவும் பூமியில் பெரு மழை பெய்ய
ஆரம்பித்தது.
நோவா தம் புதல்வர் சேம், காம், யாபேத்து, தம் மனைவி, தம் புதல்வர்
மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தான். எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில்
ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய உயிரினங்கள் அனைத்திலும் வகைக்கு ஒரு சோடியாக நோவாவோடு பேழைக்குள் சென்றிருந்தன.
கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே
சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின்
கர்த்தர் அவர்களை உள்ளே விட்டு பேழையின் கதவை மூடினார். தொடர்ந்து மழைபெய்து
கொண்டிருந்ததால், பெரு வெள்ளம் பூமியில் பெருகிக் கொண்டிருந்தது. வெள்ளம்
பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.
அதுவரை நோவாவை கேலி பேசி, கிண்டல்
செய்து, அடிக்க வந்தவர்களும் ஏளனமாக பேசியவர்களும் அவமானப்படுத்தியவர்களுமான மழையையே பார்த்திராத அந்த மக்கள் அனைவரும், “ஐயோ, நோவா சொன்னதை கேட்க வில்லையே இப்போது நாம் என்ன
செய்வோம். இந்த அழிவில் இருந்து எப்படி தப்பிக்கப்போகிறோம்’’ என்று
சொல்லிக்கொண்டு பேழையை நோக்கி ஓடி வந்தனர்.
“நோவா, நோவா, தயவு செய்து எங்களை
மன்னித்துவிடு. நீ சொல்லும் போதெல்லாம் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல், உன்னை கேலி
பேசி அவமானப்படுத்தி விட்டோம். அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல்
கதவைத்திறந்து எங்களையும் பேழைக்குள் ஏற்றிக்கொள்" என்று கத்தினர். பேழையைச் சுற்றிலுமாக நின்று, கத்தி கதறி, கண்ணீர் விட்டு,
அழுதனர். எல்லோரும் கத்தி கதறி அழும் சத்தம் பேழைக்குள் இருந்த நோவாவிற்கு
கேட்டது. ஆனாலும் அவனால் பேழையின் கதவை திறக்கமுடியாமல்,
கர்த்தர் பேழையின் கதவை அடைத்து வெளிப்பக்கமாக பூட்டி இருந்தபடியால் அவனால் கதவைத்
திறக்க முடியவில்லை. வேகமாக ஜன்னல் பக்கம் ஓடினான். கழுத்து வரை ஆழமான நீரில் நின்று கொண்டு
அல்லல் படும் மக்களின் துயரத்தைக் கண்டான். ஒருசிலர் தங்கள் குழந்தைகளைத்
தலைக்கு மேல் தூக்கிப்பிடித்திருந்தனர்.
அப்பொழுது நோவா, “இந்தக் கஷ்டமெல்லாம் வரும்னுதானே இத்தனநாளா நான் தலைப்பாடா
அடிச்சுக்குட்டேன். ஒருத்தனாவது
கேட்டீங்களா? ஒருத்தனாவது நம்புனீங்களா? என்ன
பைத்தியக்காரன் சொன்னீங்களே. இப்ப நீங்க
பைத்தியமா கத்துறாப்போல ஆயிடுச்சே. என்னால இந்தக் கதவத் திறக்க
முடியாது. கடவுள் அதப் பூட்டிட்டாரு, உங்களுக்கு
கொடுக்கப்பட்ட தருணங்களை நீங்க வீணாக்கிட்டீங்க. இனி மேலும் அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு
கிடைக்காது’’ என்று வேதனையுடன் சொன்னான்.
மேலும் மக்கள் எல்லோரும் தங்கள் பலத்தையெல்லாம் திரட்டி பேழையின் மேல் ஏறி அதன்கதவை
திறக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அது அவர்களால் முடியாமல் போயிற்று.
பூமியில் மேல் வெள்ளம் மிகுதியாகப்
பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதக்க ஆரம்பித்தது. மக்களெல்லாம் தப்பிக்க
வேறு வழியிருக்கிறதா? என்று முயற்சி
செய்து கொண்டிருந்தனர்.
சிலர் உயரமான இடங்களைத் தேடி அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். ஆனாலும் மழை
நிற்காமல் பெய்து கொண்டிருந்தபடியினால், உயரமான எல்லா இடங்களையும் கூட தண்ணீர் மூழ்கடித்தது.
பேழை மிதந்து கொண்டிருந்தது. அடுத்து
என்ன செய்வது, என்ன நடக்கும் என்று எல்லோரும் திகைத்து நின்றனர். அப்பொழுது.
தொடரும்..........................
ஆதியாகமம் 6ம் அதிகாரம் 13 முதல் 22 வரை,
7ம் அதிகாரம் 1 முதல். 18 வரை
வேதாகம சரித்திர கதைகளின் முந்தைய Links
பகுதி 1
காணும் போதே மறைந்த தோட்டம்
பகுதி 2
மனு குலத்தின் முதற்கொலை
பகுதி 3
மரணத்தை காணாத மனிதன்
பகுதி 4
பூமி முழுவதும் அழியப் போகிறது
Post by Lourdu Raj.
நண்பரே! நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
ReplyDeleteபைபிள் கதைகளை உணர்தலோடும் புரிதலோடும் அணுக இவ்வரிசைக் கதைகள் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் கதைகளைப் படித்த வாசிப்பனுபவம் திருப்திகரமாக இருக்கிறது.
இது போன்ற கதைகளை எங்களுக்கும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
வந்து கருத்திட்டமைக்கும், உங்களின் உற்சாகமான வார்த்தைகளுக்கும் நன்றி நண்பரே,
Deleteஇது போன்ற உங்களின் வார்த்தைகளே, எங்களை உற்சாகப்படுத்துகிறது.