பிசாசின் மேல் வெற்றி
வெற்றி வாழ்க்கை
சாத்தியமே- 3
கடந்த சில நாட்களாக வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற சத்தியங்களை தியானித்து வருகிறோம். தொடர்ச்சியாக ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கையை தியானித்து, நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக.
இ) பிசாசின் ஆளுகையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்குமே ஒரு எதிரி உண்டு, அவன் சாத்தான். அவனுடைய வேலை தேவனிடமிருந்து மக்களைப் பிரித்து, தன்னுடைய ஆளுகையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இயேசு கிறிஸ்து கல்வாரி செல்லும் வரை அவனுடைய எண்ணங்கள் நிறைவேறியது. ஆனால் எப்போது இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கி வெற்றி பெற்றாரோ, அது முதற்கொண்டு இயேசு கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிற யாவருக்கும் பிசாசின் மேல் வெற்றியை தேவன் கொடுத்து விட்டார்.
ஆனால் இன்றைக்கும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற சில தேவனுடைய பிள்ளைகள் “பிசாசு என்னை அப்படி செய்கிறான். இப்படி செய்கிறான் என்று அதிகமாக பிசாசைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் மூலமாக தனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் அதிகாரத்தைக்குறித்தும் அறிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். ஆகையால்தான் அப்படிப்பட்டவர்களை பிசாசு இன்னும் ஏமாற்றி தன் ஆளுகைக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்.
பிசாசின் எல்லா முயற்சிகளையும், தோல்வியாக்கும் அத்தனை பலத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கிறார். ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். <யாக்கோபு 4:7>. நாம் விசுவாசத்துடன் இயேசு கிறிஸ்துவை சார்ந்து வாழ்கிற வாழ்க்கையே பிசாசுக்கு எதிர்த்து நிற்பதுதான். கலங்காமலும் பயப்படாமலும் நம்முடைய கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் நாம் பயணம் செய்ய வேண்டும். பயமும் திகிலும் உள்ளவர்கள் கிறிஸ்துவின் சேனையாக இருக்க முடியாது. கிறிஸ்துவின் சேனையாக நீங்களும் நானும் இருப்போமானால் பயம் நம்மைப்பார்த்து பயப்படும். சாத்தான் நம்மைப்பார்த்து நடுங்குவான். இது யாரோ ஒரு சிலருக்கோ அல்லது விசேஷவரம் பெற்றவர்களுக்கோ மட்டும் சொந்தமானதல்ல. இயேசு கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கும் எல்லா தேவனுடைய பிள்ளைகளுக்கும் தேவன் கொடுத்திருக்கும் அதிகாரம்.
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்
<1 யோவான் 4:4>. பெரியவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கும் பொழுது நாம் எதைக்குறித்தும் கலங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் சில அநேக தேவ பிள்ளைகள் இருட்டைப்பார்த்தும்
பயப்படுகிறார்கள். அவர்கள் எனக்கு விரோதமாக என்னமோ செய்கிறார்கள் இவர்கள் எனக்கு என்னமோ ஏவுதல் செய்கிறார்கள் என்று பயந்து பயந்தே தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதாகமம் தெள்ளத் தெளிவாகச் சொல்லுகிறது. நீங்கள் பிசாசின் ஆளுகையில் இருந்து முழுமையாக விடுதலையாக்கப்பட்டு விட்டீர்கள் என்று. அது மாத்திரமல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து `இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது'' <லூக்கா 10 :19> என்று நமக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.
இது மட்டுமா? `சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப் போடுவார்'' ரோமர் <16:20> என்று வேதம் நமக்கு திட்ட வட்டமாகக் கூறுகிறது. நமக்கு எதிராக செயல்பட நினைக்கும் சாத்தானை நமது காலின் கீழே நாமே மிதிக்கும்படியாக கர்த்தர் நமக்கு கிருபை கொடுத்திருக்கிறார்.
சிலர் ஜெபிக்கும் போது கேட்டிருக்கிறேன். “ஆண்டவரே சாத்தானை கட்டிபோடும். ஆண்டவரே, சாத்தானை அழித்து போடும். ஆண்டவரே, சாத்தானை விரட்டி விடும்’’ என்று இப்படிதான் ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிக்கிறவர்களை நான் குறை கூரவில்லை. அப்படிப்பட்டவர்களின் அறியாமையை சுட்டிக்காட்டுகிறேன். வேறு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பது தெரிகிறது. அதாவது சாத்தானை விரட்டவும், அவனுடைய செயல்களை அழிக்கவும் வேண்டிய எல்லா வல்லமைகளையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவ பிள்ளைகளாகிய நம்மிடமே கொடுத்து விட்டார். இப்பொழுது, இயேசுவின் நாமத்தில் பிசாசை விரட்ட வேண்டியதும், அவனுடைய செயல்களை அழிக்க வேண்டியதும் முழுக்க முழுக்க தேவ பிள்ளைகளாகிய நம்முடைய வேலை.
மேலும் நாம் பிசாசின் ஆளுகையில் இருக்கிறவர்களை விடுவிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்களாக இருப்பதாக வேதாகமம் திட்டமாக போதிக்கிறது. `அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பையும் பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்குரிய சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன்'' என்றார் <அப் 26: 18>.
அநேகருடைய கண்களை குருடாக வைத்து, ஒளியாகிய இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு வரமுடியாத படி மக்களை பிசாசு இருளில் வைத்திருக்கிறான். அப்படிப்பட்டவர்களின் கண்களை சத்தியத்தைக் கொண்டு திறக்க வேண்டும். சத்திய வசனமாகிய ஒளி பிராகாசிக்கும் போது, இருளின் ஆதிக்கங்கள் <சாத்தானின் ஆளுகை> முழுவதுமாக விலகிப்போகும். இயேசு கிறிஸ்து என்னும் உண்மையான ஒளியில் நடந்து, அநேகரை இந்த ஒளியினிடத்திற்கு அழைத்து வரும்படியாகவே நாம் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கிறோம். அழைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை ஒரு நாளும் மறந்து போகக்கூடாது.
உலகத்தில் இரண்டு விதமான பார்வை அற்றவர்களைப் பார்க்கலாம். ஒன்று கண்கள் அடைக்கப்பட்டு, குருட்டுத்தனம் உள்ள கண்களை உடையவர்கள். அவர்களால் எதையும் பார்க்க முடியாது. தங்களுக்கு முன்பாக இருக்கும் எந்த ஒரு பொருளையும் அவர்களால் கண்டு கொள்ள முடியாது. இப்படிப் பட்டவர்கள் உண்மையாகவே பார்வை இழந்தோர். இவர்கள் பார்வை அடைய வேண்டும்.
இரண்டாவது தங்கள் கண்களில் பார்வை உள்ளவர்கள். பார்வை இருந்தும் தங்கள் கண்களை மூடிக்கொள்கிறவர்கள். இவர்களாலும் எதையும் பார்க்க முடியாது. இவர்களின் கண்கள் திறக்கப்பட வேண்டும்.
இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களும் விசுவாசிக்காதவர்களும் உண்மையாகவே பார்வை இழந்தவர்களைப்போல இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் இருண்ட கண்களைத் திறக்க சுவிசேஷம் என்ற மருந்து இருக்கிறது.
மற்றொரு வகை இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களும், அவரை விசுவாசிப்பவர்களும். ஆனால் இவர்கள் வேதசத்தியத்தை சரிவர அறிந்து கொள்ளாமல் தங்களின் கண்களை தானாகவே மூடிக்கொள்கிறவர்கள்.
ஒரு பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. “தூங்குகிறவனை எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவதைப் போல நடிக்கிறவனை எழுப்பவே முடியாது. அது போலதான் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பவர்களை மேலும் சத்தியத்தின் பாதையில் நடத்துவது மிகவும் கடினமானதாகவே இருக்கும். ஏன் என்றால் அப்படிப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் தேங்கி நின்று விடுகிறபடியால் சோதனை வேளைகளில் பிசாசின் தந்திரங்களை அறிந்து கொள்ள முடியாமல் தினறுகின்றனர். அப்படிப்பட்டவர்களை பிசாசு ஏமாற்றியும் விடுகிறான்.
ஆனால் சத்தியங்களை அறிந்து கொண்டு, சத்தியத்தில் வளர ஆரம்பிக்கும் போது. பிசாசினால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் சத்தியத்தை அறிந்து தேவனுக்காக நிற்க ஆரம்பிக்கும் மனிதனுக்கு முன்பாக பிசாசு நடுங்க ஆரம்பிக்கிறான். சத்தியத்தை அறிந்த நீங்களும் நானும் சாதாரணமானவர்கள் அல்ல. நாம் தனி மரமும் அல்ல. ஒரு விதை பல விருட்சங்களைக் கொடுக்க முடியும். ஒரு விதைக்குள் பல ஆயிரம் விதைகள் இருப்பது போல் சத்தியத்தை அறிந்த உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் பல ஆயிரம் ஆத்துமாக்கள் இருக்கிறார்கள் என்பது பிசாசுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் பல நேரங்களில் நம்மை சோர்வு படுத்தி நம்மை பெலவீனரைப்போல நமக்கே காண்பித்து, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு முன்பாகக் காண்பிக்கப்பார்க்கிறான்.
அப்படிப்பட்ட நேரத்தில் எல்லாம் நாம் ஒன்றை பிசாசுக்கு காண்பிக்க வேண்டும். நான் பலவீனன் தான். ஆனால் எனக்குள் இருக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ` பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்;'' <எரேமியா 20:11>. இவ்விதமாக வேத வசனத்தின் துணையுடன் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை செல்லும் என்றால் பரிசுத்த ஆவியானவரின் துணையுடன். முழுவதும் ஜெயம் பெற்றவர்களாக வெற்றி வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிடுவோம். தோல்வி என்பது நமக்கு தூரமாகச் சென்று விடும்.
எனவே நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டிய உண்மையான சத்தியங்கள் என்னவென்றால் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் நம்மை பிசாசு ஆளுகை செய்ய முடியாது. பிசாசு பிடிக்க முடியாது. எந்த மந்திர, தந்திர பில்லி சூனியங்களோ ஒன்றும் செய்ய முடியாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். மாறாக கிறிஸ்துவுக்குள்ளாக இருந்துகொண்டு, இன்னும் நாம் தோல்வியைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. கிறிஸ்துவுக்குள் வெற்றி வாழ்க்கை சாத்தியமே, சாத்தியமே. கிறிஸ்துவுக்குள் முழுமையாக அற்பணித்து வெற்றி வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
வெற்றி வாழ்க்கைக்குரிய வார்த்தைகளை தொடர்ந்து வரும் நாட்களிலும் தியானிப்போம். படித்து பயன் பெறுங்கள்.
0 comments:
Post a Comment