Bread of Life Church India

மணித் துளிகளின் ஆரம்பம் எது ?



"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்'' (ஆதி 1:1).
“ஆதியிலே தேவன்’’ என்ற வார்த்தை முந்திய நித்தியத்தை குறிக்கும் வார்த்தை. தேவன் காலத்திற்கும், நேரத்திற்கும் அப்பார்ப்பட்டவர் என்பதை இந்த வசனத்தில் இந்த வார்த்தையின் அடிப்படையில் அறிந்து கொள்ள முடியும்.
 “ஆதி’’ என்பது ஆரம்பம். அல்லது துவக்கம் என்று அறியப்பட்டாலும். தேவன் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர். “அப்படியானால் ஏன் ஆதியிலே என்று வேதாகமத்தின் வார்த்தைகள் ஆரம்பிக்கிறது’’ என்றால், வேதாகம வசனங்கள்  இந்த உலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்படாமல் அது தேவனிடமிருந்து ஆரம்பிக்கப்படுகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆகையால் பரிசுத்த வேதாகமம் தேவனை வெளிப்படுத்துகிற புத்தகம் மட்டுமல்ல, அது தேவனிடமிருந்தே ஆரம்பிக்கிற புத்தகம்.
தேவனின் நித்திய (முடிவில்லா) தன்மையை அறியத்தருகிறது. தேவத்துவத்தைக்குறித்து எளிதாக அறிந்து கொள்ள முயல்கிறவர்கள் விசுவாசம் இல்லாமல் அறிந்து கொள்வது முடியாத காரியம்.
தேவன் ஒரு ஆவியாகவோ, வெறும் ஒளியாகவோ, ஏதோ ஒரு சக்தியாகவோ அல்ல.  ஆள்தத்துவம் உடையவர். மனிதனின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பார்ப்பட்டவர். அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர்.  
தேவனை எப்படி வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்று நினைப்பவர்களே ஏமாற்றம் அடைகிறார்கள். தேவனை ஒரு குறுகிய வட்டத்தில் வைத்து பார்ப்பவர்களே. அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அல்லது இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்.
“வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்'' இந்த வார்த்தை  அண்டம் உண்டான ஆரம்பத்தையும், படைக்கப்பட்டதையும் விளக்குகிறது. இதுவும் கால நேரங்களுக்கு உட்படவில்லை, பூமி அண்டத்தில் ஒரு பகுதி. இந்த பூமிதான் அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும்
ஒரே இடமாக கருதப்படுகின்றது.
பூமி சுற்ற ஆரம்பித்ததில் இருந்துதான் பகல் இரவு, நாள்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என்று அறிந்து கொள்ள முடிகிறது. வானமும் பூமியும் உண்டாக்கப்பட்டவுடன் பூமியின் இந்த சுழற்சி முறை இல்லை. “வானமும் பூமியும் (அண்டம்) உண்டாக்கப்பட்டதும் முந்திய நித்தியத்தில்தான். (ஆரம்பம் இல்லாத காலம்) ஆகவே அவை காலங்கள் வருடங்கள் என்ற கணக்கிற்குள் வராது.
 “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்’’ (ஆதி 1:2). உயிரினங்கள் தேவனால் படைக்கப்படுவதற்கு முன் பூமி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்க வில்லை. அதைத்தான் பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது என்று வேதம் கூறுகிறது. அண்டத்தில் மற்றவைகள் எல்லாம் எப்படி இருந்ததோ பூமியும் அவ்விதமாகவே இருந்தது. பூமியில் மனிதனை சிருஷ்டிக்க வேண்டும் என்று தீர்மானித்த பினபுதான் மனிதன் அதாவது உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் பூமியை தேவன் உருவாக்கினார்.
இதுவும் நமது நாட்காட்டிக்குள் வராத காலங்களே. இவைகளை எல்லாம் நாள்காட்டியில் தேடி கண்டுபிடிக்க முடியாது. ஏன் என்றால் பூமியின் சுழற்சிதான் நாட்காட்டியின் ஆரம்பம். இதுதான் உண்மை. புவி ஈர்ப்பு சக்தி என்று சொல்லுகிறார்களே, அதுவே பூமியின் சுழற்சி முறையில் தான் (பூமி சுற்ற
ஆரம்பித்தபின்) ஆரம்பமானது.
''தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று" ( ஆதி 1:3-5)
இதில் இருந்துதான் பூமி சுழல ஆரம்பிக்கிறது. நாட்கள் எண்ணப்படுகிறது. மனிதன் பூமியில் வாழ்வதற்கு வேண்டிய எல்லாம் தேவனால் உண்டாக்கப்படுகிறது. தேவன் ஆறு நாட்களில் மனிதனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் படைத்து, மனிதனையும் படைத்தார். மனிதன் மனிதனாகவே படைக்கப்பட்டான்.
அதுவும் தேவ சாயலாக படைக்கப்பட்டான். சாயல் என்றால் ஆள் தத்துவம். அல்லது ஆத்துமா. பூமியில் மனிதன் வாழ மண்ணில் இருந்து சரீரம் (உடல்) செய்யப்பட்டு, தேவன் தமது ஆவியை ஊத “மனிதன் ஜீவ ஆத்துமா ஆகிறான்.
மனிதன் என்பவன் ஆவி, ஆத்துமா, சரீரம்.   சரீரம் மட்டும் மனிதன் இல்லை. ஆத்துமாதான் மனிதன். ஆத்துமா மட்டும் பூமியில் வாழ முடியாது. ஆகவேதான் ஆத்துமாவையும், சரீரத்தையும் இணைக்க தேவன் தமது ஆவியை ஊதினார். 
பாவம் செய்வதற்கு முன்வரை எவ்வளவு வருடங்கள் முதல் மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் ஏதேனில் இருந்தார்கள் என்பது கணக்கிட்டு பார்க்க முடியாத வருடங்கள். ஆகவே அது எத்தனை ஆண்டுகளோ, எத்தனை நாட்களோ தெரியாது.
எப்பொழுது ஆதாமும் ஏவாளும் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டார்களோ, அது முதற்கொண்டுதான் நாட்கள் எண்ணப்படுகிறது. ஏன் நாட்கள் எண்ணப்படுகிறது.? மனிதனின் சரீரம் அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது. அதை கணக்கிடவே நாட்களையும், காலங்களையும் கவனிக்க வேண்டிய அவசியமாயிற்று.
இதில் இருந்துதான் 6.000 ஆயிரம்
ஆண்டுகள் என்று கணக்கிடப்படுகிறது.
இப்பொழுது பொதுவாக எல்லோரும் அங்கீகரிக்கும் காலண்டர் முறையின்படி நாம் கி.பி. 2014 ல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த காலண்டர் முறையை பார்க்கும் போது. கி. பி. முன்னோக்கியும். கி.மு. பின்னோக்கியும் கணக்கிடப்படுகிறது. வேதாகம சரித்திரத்தின்படியும். வேதாகமத்தில் சொல்லப்பட்ட வம்ச வரலாறு அடிப்படையிலும். கி. மு. 4.000ம் என்று அநேகர் ஏற்றுக்கொள்ளப்படுவது. ஆதாம். ஏவாள் ஏதேனை விட்டு வெளியே வந்ததில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
இந்த 6.000 ம் என்பது உலகத்தின் தோற்றம் முதல் கணக்கிடப்பட்டது. அல்ல. அல்லது முதல் மனிதன் படைக்கப்பட்டதில் இருந்தும் கணக்கிடப்பட்டதும் அல்ல.
நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். முதன் மனிதனாகிய ஆதாமும். அவன் மனைவி ஏவாளும் தேவனுடைய வார்த்தையை மீறி பாவம் செய்து, தேவனுடைய தோட்டமாகிய ஏதேனை விட்டு துரத்தப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஆதாமில் இருந்து இயேசு கிறிஸ்துவரை மிக முக்கியமான 64 தலைமுறை வேதாகமத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
ஆதாம் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டு. ஆபிரகாம் வரை 2.000 ம் வருடங்கள் கணக்கிடப்படுகிறது. இதற்கு இடையில்தான் நோவாவின் காலத்தில். முழு பூமியும் தண்ணீரினால் அழிக்கப்பட்டு. நோவா உட்பட 8 பேர் மட்டும் உயிருடன் இருந்தனர். பின்பு இவர்கள் மூலமாகவே மனுக்குலம் பெருக ஆரம்பித்தது.
ஆபிரகாமில் இருந்து. இயேசு கிறிஸ்துவரை 2.000ம் ஆண்டுகள் கணக்கிடப்படுகிறது. இப்பொழுதோ. இயேசு கிறிஸ்துவில் இருந்து 2014ல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இது கிட்டத்தட்ட வேதாகமத்தில் உள்ள தலைமுறைகளை வைத்து. அவர்களின் வயதை கணக்கிட்டு. அமைக்கப்பட்ட வருட கணக்குகள். இந்த 6.000 ம் வருடங்கள் என்பது. உலகம் படைக்கப்பட்டதில் இருந்தோ, மனிதன் படைக்கப்பட்டதில் இருந்தோ, கணக்கிடப்பட்டவை அல்ல. முதல் மனிதனாகிய ஆதாமும், ஏவாளும் ஏதேனை விட்டு வெளியே அனுப்பப்பட்டதில் இருந்து கணக்கிடப்பட்டவை.  இதுவும் தோராயமாக கணக்கிடப்பட்டவைகள்தான்.
ஆதாமும் ஏவாளும் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்ட நாள்தான். முதல் நாள். இதில் இருந்தே இப்போது இருக்கும் காலண்டர் முறை கணக்கிடப்பட்டிருக்கலாம். 
ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்துதான் ஆதாமின் வயது கணக்கிடப்பட்டுள்ளது. ஆதாம் பூமியில் வாழ்ந்த நாட்கள் 930 வருஷங்கள் என்று வேதாகமம் நமக்கு அறிவிக்கிறது.
இவைகள் எல்லாம் நம்முடைய கூடுதலான வேத அறிவுக்கு மட்டுமே. இதன்மூலமாக வேதாகமத்தில் உள்ளவைகள் எல்லாம். கற்பனையோ, கதையோ அல்ல, இது வரலாறு என்று நாம் அறிந்து நமது விசுவாசத்தில் உறுதிப்படுவதற்காகத்தான்.
விசுவாசம் என்பது பரிசோதித்து வருவது அல்ல. அதே வேளையில் மூட நம்பிக்கையும் அல்ல. உள்ளதை, உள்ளபடி உறுதியாக ஏற்றுக்கொள்வதுதான் “விசுவாசம்’’. இந்த விசுவாசம் வளரவும், உறுதிப்படவும், நாம் விசுவாசத்தில் நின்று ஆவியானவரின் துணையுடன். இவைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். புரியவில்லை என்றால் எதுவும் பொய் அல்ல விசுவாசத்தில் ஓடுவோம். சரியான வேளைவரும் பொழுது ஆவியானவர் சரியாக நமக்கு புரியவைப்பார். குழப்பம் வேண்டாம். கர்த்தர் நம்மோடு இருக்கிறார். அவருடைய கரத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சரியாக வழிநடத்துவார்.   

0 comments:

Post a Comment