Bread of Life Church India

சுவரில் அடித்த பந்து

 
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு போதகர் தன்னுடைய திருச்சபை மக்களோடு இணைந்து நற்செய்தி அறிவிப்பதற்காக அருகில் இருந்த  கிராமத்திற்கு சென்றனர். இயேசு கிறிஸ்துவைக் குறித்த செய்திகள் அடங்கிய துண்டு பிரதிகளை கொடுத்து இயேசு உங்களை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
              சிலர் தங்களின் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை சொல்லி, தங்கள் குடும்பத்திற்காக ஜெபம் செய்யுங்கள் என்று கண்ணீருடன் சொன்னார்கள்.   அப்படி சொல்லப்பட்ட ஜெப விண்ணப்பங்களுக்கு உள்ளத்தின் பாரத்துடன். ஜெபம் செய்து இயேசு கிறிஸ்து கட்டாயம் உங்களுக்கு விடுதலை தருவார் என்று அறிவித்துக்கொண்டே வந்தார்கள். அந்த கிராமத்து மக்கள் மிகவும் அவர்களை வரவேற்று உற்சாகமாக இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை கேட்டார்கள்.
                சிறுபிள்ளைகளும் கூட்டமாக இவர்களுக்கு பின்னாகவே சென்று “எனக்கும் இந்த புத்தகத்தை தாங்க’’ என்று  கேட்டு வாங்கிக்கொண்டு பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர்.
ஒரு நான்கு முனை சந்திப்பு வந்ததும் அந்த இடத்தில் நின்று, நற்செய்தியை அறிவிக்கும் பாடல்பாடி, இயேசு கிறிஸ்து தங்களுக்கு செய்த நன்மைகளை அறிவித்து, நாங்கள் இயேசு கிறிஸ்துவை எப்படி ஏற்றுக்கொண்டோம் என்ற சாட்சியை பகர்ந்து கொண்டிருக்கும் பொழுது. அவர்களை சுற்றிலுமாக சிறு பிள்ளைகள் பெரியவர்கள் என்ற சிறு கூட்டம் கூடி இவர்கள் பாடுவதையும், பேசுவதையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
                 அந்த வேளையில் மதுபானத்தை குடித்திருந்த இரண்டுபேர் அங்கு வந்தார்கள் அதில் ஒருவன் கோபமாக “மதம் மாத்தரதே உங்களுக்கு வேலையா போச்சு, இங்கிருந்து போறீங்களா இல்லையா?’’ என்று சொல்லிக்கொண்டே கீழே கிடந்த ஒரு கருங்கல்லை எடுத்து கூட்டத்திற்கு நேராக வீசினான்.
                 அந்த கல் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனின் தலையில் விழ அவன் தனது தலையை பிடித்துக்கொண்டு, “ஜயோ, அம்மா......’’ என்று அலறினான்.  கல்லை எரிந்தவன் ஓடி விட்டான். சிறுவனின் தலையில் இருந்து இரத்தம் கொட்டியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு,  அந்த ஊர் மக்கள் அநேகர் அங்கு கூடிவிட்டார்கள்.
                உடனே போதகரும், நற்செய்தி அறிவிக்கும்படியாக சென்ற திருச்சபையாரும், அந்த சிறுவனை தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனை நோக்கி விரைந்தனர். இன்னும் அந்த ஊரை சேர்ந்த சிலரும், அவர்களோடு சென்றனர்.  கல் விழுந்ததால் ஆழமாக தலையில் வெட்டப்பட்டிருந்தது. அதை சுத்தம் செய்து தையல் போட்டு, மருந்து போட்டு, தகுந்த சிகிச்சை கொடுக்கப்பட்டது.
               சிகிச்சைக்கு உண்டான பணத்தை போதகரே கொடுத்தார். பின்பு அந்த சிறுவனின் வீட்டை நோக்கி வாகனம் விரைந்தது. சிறுவனின் வீட்டிற்கு அருகில் வாகனம் சென்ற போது, வேலைக்கு சென்றிருந்த சிறுவனின் தாய் தனது வேலையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். தனது வீட்டிற்கு முன் வாகனம் நிற்பதை கண்ட அவள். பட படப்புடன் வேகமாக வாகனத்தின் அருகில் வந்தாள்.
              தனது மகனின் தலையில் கட்டு போடப்பட்டிருப்பதைப் பார்த்ததும் “ என் மகனுக்கு என்னாச்சு’’ என்று ஓடி வந்து தூக்கினாள். அப்பொழுது நற்செய்தி குழுவினர். நடந்த சம்பவத்தை விளக்கமாக சொல்ல, “இவனுடைய அப்பனுக்கு நான் என்ன சொல்லுவேன், அந்த குடிகாரபாவி இன்னிக்கு என்ன செய்யப்போரானோ’’ என்று கண்கலங்கியபடியே நற்செய்தி குழுவினருக்கும், போதகருக்கும் நன்றி சொல்லி தனது மகனை அணைத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.
               அந்த சிறுவனின் தகப்பன் இரவு வெகு நேரம் சென்றபின் வீட்டிற்கு வந்தான். அதுவரை தூங்காமல் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர். வந்தவன் தனது மகனின் தலையில் கட்டுபோடப்பட்டிருப்பதைக் கண்டு, "ஏய் என்ன அது தலையில கட்டு, என்னாச்சு'' என்று கடுமையான குரலில் கேட்டான். மனைவி பயந்து, பயந்து அது வந்துங்க……….. அது வந்து பக்கத்து ஊர்ல இருக்கும் கிறிஸ்தவ சபையில் இருந்து சிலர் நம்ம ஊரில் வந்து இயேசு கிறிஸ்துவைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கும் போது நம்ம ஊர்ல உள்ள ஒருத்தன் கல்லைக்கொண்டு எரிந்திருக்கிறான். அப்போது அங்கு இருந்த நம்ம பையன் தலையில் விழுந்து இரத்தமா கொட்டியிருக்கு, உடனே அந்த பாஸ்டரும், அவரோட வந்தவங்கதான் அவங்க வந்த கார்லேயே கூட்டிட்டுப்போயி, ஆஸ்பத்திரியில சேத்து, அவங்க பணத்த செலவு செஞ்சி பாத்துட்டு, இங்க வந்து விட்டுட்டு போனாங்க'' என்று சொல்ல சொல்ல, அவனுக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது. "என்ன நான் எரிந்த கல் நம்ம பிள்ள மேலயா விழுந்திச்சு'' என்று அழ ஆரம்பித்தான்.
                   "அட பாவி நீயா கல்லால அடிச்ச. அந்த நல்ல மனுஷங்க உனக்கு என்னய்யா கெடுதல் செஞ்சாங்க அவங்கள அடிக்க உனக்கு எப்படி மனசு வந்திச்சு இப்பபாரு நீ எரிஞ்ச கல்லு நம்மபிள்ள மேலேயே விழுந்திருக்கே,  அந்த இயேசுதான்யா உண்மையான தெய்வம். அதான் நீ அவங்க மேல எரிஞ்ச கல்லு உன்னுடைய பிள்ள மேலேயே விழுந்திருக்கு.  அதனால நீ ஒழுங்க நாளைக்கே போயி, அந்த பாஸ்டரிடமும். அவரோட வந்தவங்ககிட்டேயும் மன்னிப்பு கேளு, என்று சொல்ல அவன் அமைதியாக தான் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்த ஆரம்பித்தான்.
                  மறுநாள் காலையில் எழுந்ததும் பக்கத்து ஊரில் இருந்த சபைக்கு சென்று, பாஸ்டரை சந்தித்து நடந்த எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்புக்கேட்டான். பாஸ்டரும் அவனிடத்தில் இயேசு கிறிஸ்துவைக்குறித்தும் அவருடைய இரட்சிப்பைக்குறித்தும், அன்பைக்குறித்தும் சொல்லி அவனுக்காக ஜெபம் செய்தார். அன்று முதல் அவன் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, குடியில் இருந்து விடுதலையாகி, ஒழுங்காக வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்து, இயேசுவை பின்பற்றுகிற, இயேசுவை அறிவிக்கிற  நல்ல விசுவாசியானன். குடும்பமாக அவர்கள் ஞானஸ்நானம் பெற்று, தொடர்ந்து சபைக்கு செல்ல ஆரம்பித்தனர். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டானது. 

0 comments:

Post a Comment