Bread of Life Church India

நீதியை நிறைவேற்றிய கிருபை

   
நியாயப் பிரமாணத்தை ஆனாலும் தீர்க்க தரிசனங்களை ஆனாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத் 5:17,18) என்று இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார்.



நியாயப்பிரமாணம் என்றால் என்ன ?

    தேவன் இஸ்ரவேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பாகவே கட்டளைகள் கொடுக்கப்பட்டன.
    இஸ்ரவேலர் தேவனுக்குச் சொந்தமானவர்கள் அவர்கள் தேவனுக்கு உண்மையும், கீழ்படியுதலும் உள்ளவர்களாயிருக்க வேண்டும் என்றும், அவர்கள் அனுசரிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இந்தக் கற்பனைகள் எடுத்துக் காட்டின. மேலும் இந்தச்சட்டம் தேவனுடைய இயல்பான தன்மையையும் ஒழுக்கத்தையும் காட்டுகிறது. அதாவது, அவரது அன்பு, பரிசுத்தம், நற்பண்பு, நீதி, தீமையை வெறுத்தல் ஆகியவை இதன்மூலம் வெளிப்படுத்தப் படுகின்றது.



நியாயப்பிரமாணத்தின் வேலை என்ன ?

           பாவம் இன்னதென்று நியாயப் பிரமணத்தினாலே நான் அறிந்தேன் (ரோமர் 7: 7) என்று பவுல் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் தான் பாவி தன்னை இரட்சித்துக் கொள்ள தன்னால் முடியாது என்று தன்பாவ நிலையை சுட்டிக்காட்டி அதை அறிந்த கொள்ளச் செய்கிறது.

நியாயப் பிரமாணத்தின் நோக்கம்

    நியாயப் பிரமாணத்தினுடைய நோக்கம் என்னவென்று (கலா 3: 9) வேதம் கூறுகிறது. நியாயப் பிரமாணத்திலுள்ள பலிகள் அனைத்தும் கிறிஸ்துவையே சுட்டிக் காட்டுகின்றன. கிறிஸ்துவின் பலி நியாயப் பிரமாணத்தின் பலிகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது. ஆகவே இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை, பழைய உடன்படிக்கையின் நிறைவேறுதலாக இருக்கிறது.
    நியாயப் பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை யென்பது வெளியரங்கமாயிருக்கிறது. (கலா 3 : 11) நியாயப் பிரமாணத்தின் நோக்கம் `நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நம்மைக் கிறிஸ்துவினடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருக்கிறது (கலா 3 : 24)

கிறிஸ்துவின் நோக்கம்

    கிறிஸ்துவின் நோக்கம் தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் தேவனுடைய நியாயப் பிரமாணத்தின் ஆவிக்குரிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக உண்மையில் விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுவது நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துகிறது. `நம்மிடத்தில் நியாயப் பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு` (ரோமர் 8 : 4) `கிறிஸ்து நமக்காகச் சாபமாகி நியாயப் பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்` (கலா 3 : 13)

மோசேயின் நியாயப் பிரமாணம்

    மோசேயின் நியாயப் பிரமாணம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். மோசேயின் மூலமாய் இஸ்ரவேல் ஜனத்தோடு செய்யப்பட்ட உடன்படிக்கை வாழ்க்கையின் மூன்று பகுதிகள் மேல் ஆளுகையுடையது.
1)    ஒழுக்கநெறிக் கட்டளைகள், தேவனோடு தொடர்பில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு கொடுக்கப் பட்டுள்ள பரிசுத்த வாழ்வுக்கு ஆதாரமான சட்டங்கள். (யாத் 20 : 1 _ 26)
2)    ஆட்சிமுறைக் கட்டளைகள், தேவனோடுள்ள தொடர்பில் சமூக வாழ்க்கைக்கு கொடுக்கப் பட்டுள்ள இஸ்ரவேலின் சட்டரீதியான மற்றும் சமூக வாழ்க்கை சம்மந்தப்பட்ட விதிகள் (யாத் 21 : 1 _ 24  : 11)
3)    தெய்வீக வழிபாடு சம்மந்தமான கட்டளைகள் ஜனங்கள் தேவனண்டை செல்லும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய மார்க்க சம்மந்தமான வழிபடவேண்டிய விதம், பலிகள் பற்றிய விதிகள் உள்ளடங்கிய சடங்காச்சார நியமனங்கள் (யாத் 24 : 12 _ 31 : 18)

1)    ஒழுக்க நெறிக் கட்டளைகள்

    இதன் மூலம் தேவனுக்கும், உலகிலுள்ள பிறருக்கும் நேராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் முறை காட்டப்பட்டுள்ளது. இதைப் புதிய உடன்படிக்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் அதிக கூர்மையாக்கி ஒழுக்க சம்மந்தமான விஷயங்களுக்கு தனது புதிய மேன்மையான விளக்கத்தையே தந்துள்ளார் என்பதை மத் 5 : 17 _ 48 வசனங்களை நாம் கவனிக்க வேண்டும்.
           மேலும் ஒழுக்கமான வாழ்வுக்கு தேவையான _வைகளை அழிக்க அல்ல, அதை கூர்மையாக்கி பாவ அடிமைத்தனத்திலிருந்த மனிதனுக்கு தனது உயிர்த் தெழுதலின் மூலம் அதைக் கைக்கொள்ள பெலன் கொடுக்கிறார் (ரோமர் 8 : 11). நாம் அவரையே விசுவாசித்து முன்மாதிரியாக வைத்து நமது புதிய வாழ்க்கையை துவங்கும் போது, `நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாய் இருக்கிறோம் ` (எபே 2 : 10) என்று வேதம் கூறுகிறது.
     நாம் நற்கிரியைகள் செய்கிறவர்களாக வாழ வேண்டும் என்பதே தேவனது நோக்கம். எனவேதான் மனிதனின் ஒழுக்கத்தை வேதம் மிகவும் முக்கியத்துவப்படுத்தி கூறுகிறது. மேலும் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்ற தேவ பிள்ளைகளிடத்தில் தேவன் நீதியின் கனியையே விரும்புகிறார். ஒழுக்கத்துக்குள் வராத கிறிஸ்தவ வாழ்க்கை, கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் அல்ல. இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலமாய் விசுவாசத்தைக் கொண்டு நீதிமானாக்கப்பட்ட நாம் ஒழுக்க சம்மந்தமானவைகளைப் பின்பற்றி வாழ கிறிஸ்துவுக்குள் வலியுருத்தப் படுகிறோம்.
     ஆகவே இந்த ஒழுக்க சம்மந்தமான கற்பனைகள் தேவனுடைய பரிசுத்த சித்தத்தை வெளிப்படுத்து _கின்றன. ஆகவே புதிய ஏற்பாட்டு விசுவாசிகளும் கிறிஸ்துவுக்குள் இவைகளுக்கு கட்டாயம் கீழ்படிய வேண்டியவைகளாகவும் உள்ளது.

2)    ஆட்சி முறைக் கட்டளைகள்

    இஸ்ரவேல் மக்கள் வாக்கு தத்த பூமியில் (கானான்) வாழும் முறை பற்றி கட்டளைகள் இதில் உள்ளன (யாத் 21 : 1 _ 24 : 11) இஸ்ரவேல் தேசத்துக்குரிய பிரமாணங்கள் சமுதாய சட்டரீதியான ஆளுகை செய்யும் இந்த பிரமாணங்கள் பெரும்பாலும் ஆட்சிமுறை சார்ந்தவையாக உள்ளது. அவை இஸ்ரவேல் தேசத்துக்கும், அப்போது நிலவிய தேச சூழ்நிலைக்கும் பின்னணிக்கும் மட்டும் பொருத்த _ மானவை. இருப்பினும் இவற்றில் காணப்படும் சில அடிப்படை விஷயங்களான நீதி நியாயத்திற்கு அடிபணியுதல் போன்றவை என்றென்றைக்கும் பொருத்தமானவைகளே.
    அதேபோன்று இப்போதைய காலகட்டத்தில் தேச சூழ்நிலைக்கு ஏற்றவிதத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம், நாம் வாழும் தேசத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழவேண்டும்.
    வேதத்திற்கு உட்பட்டு தேச சட்டத்தின் படியாக வாழ்வதிலும் கிறிஸ்தவன் முன்மாதிரியாக வாழவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். `எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கும் கீழ்படியக்கடவன்` (ரோமர் 13 : 1) என்று வேதம் கூறுகிறது.
    மேலும் `நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்க வேண்டுமானால் நன்மை செய் அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும் ` (ரோமர் 13 : 3) ஆகவே ஒரு கிறிஸ்தவன் தீமையானவைகளையும், சட்டத்திற்கு மீறின செயல்களையும் செய்துவிட்டு `நான் எதற்கும் பயப்படவும் மாட்டேன், அடிமைப்படவும் மாட்டேன்` என்று கூறுவது `தேவனுடைய நியமனத்திற்கு எதிர்த்து நிற்பது ஆகும்` (ரோமர் 13 : 2) எனவே நீங்கள் மனுஷனுடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்படியுங்கள் (1 பேதுரு 2 : 13)

3) தெய்வீக வழிபாடு சம்மந்தமான கட்டளைகள்

    தன் பாவ நிலையில் தேவனை நெருங்கி வாழ முடியாத படிக்கு இருந்த மனிதனின் நிலையை அறிந்து, அவன் பலிகளின் மூலமாகவும், பண்டிகைகளின் மூலமாகவும் தன்னை நெருங்கி வாழப் பண்ணுகிற விதத்திலே பலிகளை செலுத்தி தேவ கிருபையை பெற்றுக்கொள்ளும்படியாக கொடுக்கப்பட்டது.
    இவை வரும் நிஜத்திற்கு அடையாளமாக கொடுக்கப்பட்ட நிழலாட்டமான காரியங்களே. இதையே அப்.பவுல் குறிப்பிடுகையில் `ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது பண்டிகை நாளையும் மாதப் பிறப்பையும், ஓய்வு நாளையும் குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாது இருப்பானாக அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது. (கொலோ 2 : 16, 17) ஆகவே நிஜமான பலியாகிய கிறிஸ்து அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு         (எபி 9 : 28) பலிகளுக்கும் பண்டிகைகளுக்கும் சடங்காச்சாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, இந்த சடங்காச்சார சட்டங்களை இயேசு கிறிஸ்து தன் சிலுவை மரணத்தினால் ரத்து செய்து விட்டார்            (எபே 2 : 15, கொலோ 2 : 14).
     பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறது போல அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும் படிக்குப் பிரவேசிக்கவில்லை (எபி 9 : 25). எனவே நாம் பழைய உடன்படிக்கை பலிகளையும், சடங்காச்சாரங்களையும் இனி பார்க்க வேண்டியதில்லை. தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தராக இருப்பது கிறிஸ்துவே. `ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத் தண்டையிலே சேரக்கடவோம் (எபி 4 : 16). இனி பாரம்பரியங்களோ, சடங்காச்சார முறைமைகளோ நமது ஆவிக்குரிய வாழ்க்கையை தடை செய்யாத படிக்கு தேவ கிருபையால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    புதிய ஏற்பாடு வேதாகம காலத்தில் யூத பாரம்பரியங்களும், பாலஸ்தீன புற ஜாதிகளின் பாரம்பரியங்களும் சபைகளுக்குள் நுழைய முற்பட்ட போதே அப்.பவுல் கொதித்து எழுந்து அவைகளை தேவனுடைய வார்த்தையால் எதிர்த்து அவைகளை நுழைய விடாமல், விசுவாசிகளுக்குள்ளே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இயேசு கிறிஸ்துவையே பற்றிக் கொள்ளும்படியாக தூண்டி விட்டார்.
    ஆனால் இப்போது நமக்கு அக்காலத்தில் காணப்பட்ட பாரம்பரியங்களோ, சடங்காச்சாரங்களோ தடையாக இல்லை என்றாலும் இன்றைய நிலையிலும் நாம் எந்த கலாச்சார பின்னணியில் இருந்து வந்தோமோ, அந்த புறஜாதியின் மூடப் பழக்க வழக்கங்கள், நமக்குள்ளோ, நமது சபைக்குள்ளோ வேறு விதமாக ஊடுருவி, கிறிஸ்துவின் கிருபையையும் வேத வசனத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்து விடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது(கொலோ. 2:20_23).

0 comments:

Post a Comment