Bread of Life Church India

தடுமாற்றத்தின் காரணம்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பின் வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது (எபி 10:38) என்றும் மேலும்   ஆபகூக் 2:4, ரோமர் 1:17, கலா 3:11 வேதாகமத்தில் அதிக இடங்களில் விசுவாசத்தால் வாழ்வோம் என்று கூறும் வேதம், விசுவாசத்தில் போராடும்படியான அழைப்பையே (1திமோ6:12, யூதா 3) ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கிறது. மேலும், விசுவாசத்தின் மேன்மையை உணர்த்தி, மறுபடியும் மறுபடியும் தேவன் அழைக்கிற அழைப்பும் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் படியாகவே உள்ளது.
    ஆனால் விசுவாசத்தில் முன்னோக்கி செல்ல வேண்டிய கிறிஸ்தவ வாழ்வில், ஏன்? பின் வாங்குதல் மிகவும் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. மேலும், பின்வாங்கிப் போவோரின் முந்தின நிலையை ஆராய்ந்து பார்க்கும்பொழுது உண்மையாகவே விசுவாசத்தில் பிரகாசமான வாழ்வுக்குள்ளாகவே இருந்துள்ளனர். பின்பு, எப்படி பின் வாங்கிப் போனார்கள்.
    இதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் இருந்தாலும் சிலவற்றை மட்டும் சிந்தித்துப் பார்ப்பது நாம் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் நடப்பதற்கு வழிவகுத்து, அகலமாக அல்ல, ஆழமாக வாழ்வதற்கு வழிநடத்தும் ஏனென்றால் ``நாமோ கெட்டப் போகப் பின் வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்      (எபி 10:39)

உலக அமைப்பின் இன்பம்

    பொதுவாக மனித உள்ளம், தான் விரும்புகிறதை செய்யக் கட்டுப்பாடு செய்வதை விரும்புவதே இல்லை. ஆதலால், மனிதனுக்கு எது சரி என்று தெரிகிறதோ, அதுதான் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட உலக அமைப்பு. இந்த அமைப்புக்குள்ளாக இருக்க விரும்புவதே இன்பம் என்றும், இதுவே சுலபம் என்றும், அதிகமானோர் ஆதரவு தெரிவித்து, அனேகர் ஆதரவோடு கெட்டுப்போய், தனக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனம் இல்லாமல் வாழ்க்கையில் வீணாகப் போவதையே உலக அமைப்பில் காணலாம். விசுவாசிகளும் இவ்விதம் மாறுவது ஏன்?
    விசுவாசத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ளாமலும், விசுவாசம் என்றால் என்ன என்கின்ற உண்மையைப் புரிந்து கொள்ளாததுமே இதற்கு முக்கிய காரணம். விசுவாசம் என்றால் என்ன? சுலபமான விடை, தேவனுக்குரியவைகளையும், தேவன் விரும்புகிறவை களையும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு, தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டு வாழ்வதே விசுவாசமாகும்.
    அதே வேளையில், ஒரு விசுவாசிக்கு தடுமாற்றம் எங்கு வருகிறதென்றால், விசுவாச வாழ்க்கைக்கும் நாம் வாழ்கின்ற உலக அமைப்பிற்கும் நிறைய மாறுபாடுகள் இருப்பதனால், சில நேரங்களில் உலக அமைப்பு சுலபமானதாகவும் இன்பமானது போன்றும், அதற்கு இசைந்து செல்பவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்ற தவறான எண்ணமே, தடுமாற்றத்தை ஏற்படுத்தி பின்வாங்கச் செய்கிறது. ஆனால் விசுவாசிகள் நன்கு உணர வேண்டும்.
    உலகில் வாழும் எல்லோருக்குமே தேவனுடைய வார்த்தை தெரியாது. ஆகையால், தனக்கு எது சரியோ அதில் நடக்கிறார்கள். அவர்கள் அப்படி நடப்பதனால் அது தான் நடைமுறைக்கு சரி என்ற எதிர்வாதம் சரியல்ல, நாம் குறுகிய எண்ணிக்கையுடையவர்கள். ஆகையால் சில வேளைகளில் நாம் விசுவாசத்தில் நடப்பது சரிதானா? என்கிற சிந்தனை கூட தாக்க ஆரம்பிக்கும். இதுவே ``உலக அமைப்பு'' இன்பமென்றும், ``தேவனுடைய வார்த்தை'' கடினமென்றும் விசுவாச மறுதலிப்புக்கு தள்ளிவிடும். காரணம் நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத விஷயமாக தேவனுடைய வார்த்தை இருப்பதைப் போன்றதொரு மாயையை உலக அமைப்பு ஏற்படுத்தி வருவதால்தான். இதற்கு வேதாகமத்தில் நல்ல உதாரணம் ``தேமா இப்பரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து, என்னை விட்டுப் பிரிந்து... போய்விட்டான்'' (2 தீமோத் 4:10) என்று தேமாவைப் பற்றி வேதம் கூறுகிறது. இதே தேமா விசுவாச வாழ்வில் தேவனுடைய வார்த்தைக்கு உட்பட்டு தேவனுடைய ஆளுகைக்கு உள்ளானவனாக இருந்தான் என்று வேதாகமம் குறிப்பிடுவதை நாம் வாசிக்கலாம்.
    ``பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்'' (கொலோ 4:14). என் உடன் வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்'' (பிலே 24) என்று பவுல் சிறைக்காவலில் இருந்தபோது எழுதப்பட்ட இந்நிரூபங்களில் தேமாவைப்பற்றி தனது உடன் வேலையாள் என்று அடையாளப் படுத்தப்படுகிறான். மேலும், கொலோசெ விசுவாசிகளுக்கும், தனது உடன் வேலையாளான பிலேமோனுக்கும் இந்த தேமாவை குறித்து எழுதுவதால், இந்த தேமா சபை விசுவாசிகளுக்கும், தேவ ஊழியர்களுக்கும் நன்கு அறியப்பட்டவன் மட்டுமல்ல, கிறிஸ்துவுக்காகவும், தேவ இராஜ்ஜியத்துக்காகவும் மிகவும் அதிக வைராக்கிய முள்ளவனாகவும், தன் வாழ்வை கிறிஸ்துவுக்குள் நன்றாக ஆரம்பித்தவன் என்றும், பாடுகள் போராட்டங்களை கடந்து வந்தவனென்றும் அறிகிறோம்.
    ஆனால் சில வருடங்களுக்கு பின் குறிப்பாக கொலோசெவுக்கு எழுதியபின் 2 தீமோத்தேயு நிருபத்தை எழுதுவதற்கும் இடைப்பட்ட காலம் 5 வருடமே. இந்த 5 வருடத்துக்குள்ளாக நடந்த சம்பவம் என்ன?
    வேதம் கூறுகிறது ``இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை'' அப்படியானால் என்ன? (World System) `உலக அமைப்பு'. வேதத்தின்படியான விசுவாச வாழ்வுக்கு அதாவது வேத அமைப்புக்கு கீழ்ப்படியாமல், சுலபமாக தான் விரும்புவதை செய்வதற்கு இவ்வுலக முறைமைகளுக்கு தன்னை அர்ப்பணித்த தேமா பின்வாங்கி பிரிந்து போனான். இதுபோலத்தான் சிலரது வாழ்வு இந்த தேமாவைப் போல மிகவும் வேகமாக வைராக்கியமாக ஆரம்பிக்கும். நாட்கள் செல்ல செல்ல உலக அமைப்பு நெருக்க நெருக்க விசுவாசத்தில் தளர்ந்து  ``கழுதை தேய்ந்து கட்டெறும்பானது'' என்பது போல் மாறி வருகிறது. விசுவாச மறுதலிப்பு, ஒரே நாளில் நடந்து விடாது. கிறிஸ்துவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகச் செய்து, உலக அமைப்பால் மூடச் செய்து, சிலநாள் சென்ற பின் கிறிஸ்துவை விட்டு வெகு தூரத்தில் நிற்கச் செய்துவிடும். ஆக ``ஆதி அன்பை விட்டாய் என்று உன்னில் ஒரு குறை உண்டு'' (வெளி 2:4) என உணர்த்தப்படும்பொழுதே அது என்னவென்று ஆராய்ந்து பார்த்து சரி செய்து கொள்வது நல்லது, இதுவும் ஒரு தருணம் தான்.

அதிகப்படியான எதிர்பார்ப்பு

    கிறிஸ்தவ வாழ்க்கையென்பது தோல்வியே இல்லாத வாழ்க்கையென்பது, அதிகப்படியான எதிர்பார்ப்பு கொள்வோரின் பிரதான கருத்து. ஆகையால் இவர்கள் தங்கள் விசுவாச வாழ்வில் சிறு தோல்விகளோ, சறுக்கல்களோ வந்துவுடன் அதோடு ``கிறிஸ்தவ வாழ்வு வாழ நான் தகுதியில்லாத ஆள். இதோடு எல்லாம் முடிந்து விட்டது'' என்ற தீர்மானத்திற்கு தானாகவே வந்து விட்டு, மீண்டும் விசுவாச வாழ்வைத் தொடர மனமில்லாமல் உடனடியாக முன்பு இருந்த நிலையிலும் கேடான நிலைக்குள்ளாக போய் விடுவதுண்டு. இதற்கு காரணமென்ன ``விசுவாச வாழ்வில் இருக்கும்போது உலகத்தில்தான் இருக்கிறோம் என்பதை மறந்து விடுவது, விசுவாச அமைப்பிற்கும் உலக அமைப்பிற்கும் நடக்கும் போராட்டத்தை சரியாக அறிந்து கொள்ளாமல் இருப்பது, தன்னைத் தான் மிகப்பெரிய நீதிமான் என எண்ணிக் கொள்வது, மேலும் வேதம் உலக அமைப்பிலிருந்துதான் பிரிந்திருக்கும்படியாக அறிவுறுத்துகிறது என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல், சக மனிதர்களோடு பிரிந்திருந்து மற்றவர்களை வித்தியாசமாக எண்ணுவது, சகோதர அன்பில்லாமல் நடந்து கொள்வது, இவைகளெல்லாம் தன்னைத்தான் உயர்வாக எண்ணச் செய்யும் அதிகப்படியான எதிர்பார்ப்புக்குள்ளாக கொண்டு வந்து, உண்மையான விசுவாச வாழ்வை சீரழிக்கிறது.
    மேலும் முதிர் வயதில் தன் இளவயது உடன் ஊழியனுக்கு பவுல் அப்போஸ்தலன் தன் அனுபவத்துடனான தேவ வார்த்தையை கொடுக்கும் போது, ``விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; (1 தீமோ 6:12) என்று அவன் சோர்வை போக்கி உந்தி தள்ளுகிறார். அதுபோல வெற்றிதான் நமது இலக்கு. தோல்வி நமக்கில்லையே, ஜெயமோ கர்த்தரால் வரும். நாம் முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம், இவை அனைத்தும் உண்மைதான். கடைசியாக மட்டுமல்ல, தொடர்ந்தும் நமக்குதான். இவை அனைத்தும் போராடும் குணம் கொண்ட போர் வீரனுக்குரியவைகள். ஆகவே, சில தோல்வி போன்று தெரிகிறவைகளை கண்டு அஞ்சி, போர்க்களித்திலிருக்கிறவன் தோல்வியைப் பற்றி சிந்தித்து விட்டால், மேற்கொண்டு போராடும் பலத்தை தானாகவே இழந்து விடுவான். அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கை நல்ல போராட்டம் என்பதை அறிவித்து உற்சாகப்படுத்த மறந்து விடுவதே சிலர் விசுவாசப் போராட்டத்தை விட்டு ஓடுவதற்கு வழிவகுத்து விடுகிறது.
    எனவே, நன்மையான ஒன்றை உருவாக்க வேண்டுமென்று செயல்படுகிறவன் தன் வாழ்வில் அதற்கு எதிர்த்து வருகிற எதுவாக இருந்தாலும் தகர்த்தெறிந்து முன்சென்று சிறப்பானதை உருவாக்குகிறான். ஆனால், கிறிஸ்துவில் நல்ல வாழ்வை வாழ விரும்பும் நபர்கள் மட்டும் அதில் வருகிற சிறு தடைக்கல் தொடர்ந்து ஓடுவதற்கு தடையாக மாறி விட்டது. ஆகவே, ``இனி நான் ஓடுவதில் எந்த பயனும் இல்லை'' என்ற மனநிலையில் சோர்ந்து போவதால் எந்த பயனும் இருக்காது. அதே வேளையில் போர்க்களத்தில் பின்வாங்கினால் எதிரியின் தாக்குதல் நிச்சயம் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகவே, நல்ல போராட்டத்தை போராடும் போர் வீரன் புல்லையும் ஆயுதமாக்குவான். தடைக் கற்களையும் படிக்கற்களாக்குவான். எனவே, தேவனுடைய ஆளுகைக்குள்ளிருந்து ஜெயிக்கிற வாழ்வுதான் கிறிஸ்தவ வாழ்வு. அதே வேளையில், நல்ல போர்க்களம் என்பதையும் நினைவில் கொள்வோம். போர்க்களத்தில் பூக்கள் அல்ல, ஆயுதங்களே நம்மை வரவேற்கும். எனவே, அதிக எதிர்பார்ப்பு நம்மை உந்தி தள்ளுவதாக இருக்கட்டும். கிறிஸ்து நம்மில் வளரட்டும்.

ஐக்கியத்தை விட்டுவிடுதல்

    இவ்வுலக வாழ்வில் பூரண புருஷர் ஒருவருமில்லை. எல்லோருமே பூரணத்தை நோக்கி கிறிஸ்துவுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறவர்கள். ஆனால், சிலர் தன்னை பூரணர் என்று எண்ணிக் கொண்டு, மற்றவர்களோடு ஐக்கியத்தை விரும்பாமல் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு, நாளடைவில் தூக்கிவிட ஆளில்லாமல் துவண்டு போய் விசுவாச மறுதலிப்புக்கு நேராக போய்விடுவதுண்டு.
    ``ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம். அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பயனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிற வனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே (பிரசங்கி 4:9,10) என்று வேதம் கூறுகிறது. கிறிஸ்தவ வாழ்வில் மிக மிக முக்கியமான வைகளில், தினந்தோறும் ஒருவருக்குள் இருக்க வேண்டிய ஜெபம், வேத வாசிப்பு, விசுவாசம், ஐக்கியம் இதில் ஒன்று விலகினாலும் மற்றவை பலவீனமாகவே இருக்கும். எனவே, இதில் உறுதியாய் இருக்கும்படியாகவே சபை அமைப்பு, இதில் இணைய மாட்டேன் என்பது பலவீனத்தையே ஏற்படுத்தும்.
    மேலும், எல்லோருமே தனது அளவுக்கு இருக்க வேண்டும், அப்பொழுதுதான் ஐக்கியம் கொள்வேன், எனது சிந்தனைக்கு குறைவானவர்களோடு நான் ஐக்கியம் கொள்ள மாட்டேன் என்பதும் சரியல்ல. தேவன், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விசேஷித்த தாலந்துகளைக் கொடுத்திருக்கிறார். இது ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். ஆகவே, நிச்சயமாக ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தாலந்துகள் கண்டிப்பாக இருக்கும். அவைகள் இணையும் போதே தேவன் விரும்புகிற காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும். மற்றவர்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் ஐக்கியமும் கிறிஸ்துவுக்குள் ஒவ்வொரு நாளும் பலப்படுத்தி விசுவாச வாழ்வை கட்டியெழுப்பும். எனவே, தனிமைப்பட்டவனுடைய சிந்தை விகற்பமாகவே இருக்கும். தனிமையில் இனிமை காண்பதெல்லாம் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஒவ்வாதவைகள். அப்படிப்பட்டவர்கள் சீக்கிரத்தில் பின் வாங்கி விடுவர். தனிமை வெற்றியெல்லாம் கிறிஸ்தவ வாழ்வில் இல்லவே இல்லை. ``அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடி வருதலைச் சிலர் விட்டு விடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக் கடவோம்;'' (எபி 10:24,25)

0 comments:

Post a Comment