இழந்ததைக் கொடுக்கவே...!
உடைந்தவை முன்போல் ஒட்டாது என்பது பழமொழி. இது நடைமுறைவாழ்வில் நிதர்சனமான உண்மை. இது போல் மனிதனின் வாழ்வில் ஒட்டவே வைக்க முடியாதபடி உடைத்து போட்டவைகளில் மிக முக்கியமானவை மூன்று.
1)மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள ஐக்கியம்.
2) தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள உறவு.
3) தேவன் மனிதனுக்கு கொடுத்த சமாதானம்.
இவைகளை எப்படியாகிலும் திரும்ப பெற்றிட வேண்டுமென்கின்றதவிப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இல்லாமலில்லை. இதற்க்காக மனிதயினம் சுயமாக எடுக்கும் பிரயாசங்களும், துடிப்புகளும், எதையும் செய்ய துணியும் முடிவுகளும் சாதகமாக இல்லை. பாதகமாகவே முடிகின்றது என்பது மறுக்கமுடியாத சரித்திர உண்மை.
சிலர் இதற்காகவே தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்து எப்படியாவது மனிதன் இழந்ததை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கடினமாக உழைத்து தங்கள் வாழ்வையே கொடுத்திருக்கிறார்கள்.
இது இன்று நேற்று அல்ல கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னும் ஆதியிலிருந்தே எத்தனையோ நபர்கள் எழும்பியுள்ளார்கள். இதுவும் வரலாற்று உண்மை.
1) மனிதனுக்கும் மனிதனுக்கும் ஐக்கியம்
அ) உடைந்த நிலை என்ன?
மீறுதலினால் முதல் மனிதன் செய்த பாவத்தின் விளைவால் மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே ஏற்பட்ட பிரிவினையின் சுவர், பல அகோரமான செயல்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனுடைய தன்மையை அலசிப் பார்க்கும் போது ஆதியிலிருந்து இன்றுவரை நடக்கும் சில சம்பவங்களை காணலாம். சகோதரனை கொலை செய்யத் தூண்டுவது (ஆதி 4:8), சகோதரனை பரியாசம் பண்ணுவது (ஆதி 21:9), சகோதரனை ஏமாற்றுவது (ஆதி 25:31), சகோதரனை விற்றுப்போடுவது (ஆதி 37:37), இது போல இன்றும் சமுதாயத்திலே சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், உயர்வு தாழ்வு என பற்பல பேதங்களை ஏற்படுத்திக் கொண்டு நாள்தோறும் கொலையிலும் பரியாசத்திலும் ஏமாற்றுவதிலும் அடிமைப்படுத்துதலிலும், ஒவ்வொருவரையும் ஒடுக்கி ஆள வேண்டுமென்கிறபொல்லாத எண்ணத்தோடே ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் வேலை செய்து கொண்டிருக்கிறது. தன்னைப் போலவே உள்ள மிருகம் மற்றதை தீண்டாததாக ஒருபோதும் பார்க்காது. ஆனால் மனிதன் மட்டுமே தன்னைப் போலவே தேவன் தன் சகோதரனையும் தன் சாயலாக படைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளமுடியாதபடிக்கு உள்ளம் பிரிவினை என்றசுவரால் அடைக்கப்பட்டிருக்கிறது.
மனிதனை மனிதன் ஆள வேண்டும் என்கிறதான எண்ணம் எப்போது ஒரு மனிதனுள் உதிக்கிறதோ, அப்பொழுது அத்தனை விதமான பொல்லாத செயல்களும் அவனுக்குள் உருவாக ஆரம்பிக்கிறது. தேவ ஆளுகைக்குள் நடத்தாமல் தன் ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டுமென்கிற எண்ணத்தோடு செயல்படும் எந்தவொரு தலைவனாலும் ஜனத்தை சீர்படுத்த அல்ல, தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுபோலத்தான் இன்றைய அநேக தலைவர்களின் செயல்கள். ஏனென்றால் குளம்பின குட்டையிலே மீன் பிடிக்க முடியும் என்பது போல் பிரிந்திருக்கும் மனிதனையே ஆளமுடியும் என்பதும் இப்படிப்பட்ட தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆ) ஐக்கியம் ஏற்படுத்துவது
பொல்லாத பிரிவினை என்கிற எண்ணச் சுவரை உடைத்து மனிதனுக்கும் மனிதனுக்கும், ஐக்கியம் ஏற்படுத்தி (எபே 2:14) அதை பலப்படுத்த இன்னும் ஒரு படி உயர்ந்து பிறரை நேசி (லூக் 10:27). சத்துருவை சிநேகி, சபிக்கிறவர்களை ஆசீர்வதி, பகைக்கிறவர்களுக்கு நன்மை செய் (மத் 5:44). தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னித்துவிடு (மத் 18:35) என்று மாபெரும் மனித ஒற்றுமையை நிலைநிறுத்தி ஏட்டிலல்ல, செயலில் நடைமுறைப்படுத்தி, அநேகரை இதற்குள் கொண்டுவந்து உலக சரித்திரத்தில் முதலிடத்தை கொண்டிருக்கும் சரித்திரத்தின் மையமாக உலக இரட்சகரான இயேசு கிறிஸ்து உடைந்த மனித ஐக்கியத்தை ஒட்ட அல்ல, உடைந்தவற்றைசுக்குநூறாக்கி இனந்தெரியாமல் நொறுக்கி தன் சரீரத்தில் ஒன்றாக்கினார்.
வேதம் கூறுகிறது ``அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்'' (1 கொரி 10 : 17) என்று. எனவே, அவருடைய ஆளுகைக்கு கீழ் வரும்பொழுது உண்மையான ஐக்கியம் அவருக்குள் நமக்கு கிடைக்கிறது.
நியாயாதிபதிகள் காலத்தில் கிதியோன் இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு விடுவித்து நல்லதொரு தலைவனாக வெற்றியாளனாக வரும்பொழுது ஜனங்கள் அவனிடத்திலே சொல்லுகிறவார்த்தையும், கிதியோன் மறு மொழியாக கொடுக்கும் வார்த்தையும் மிகவும் முக்கியமானது ``நான் உங்களை ஆளமாட்டேன், கர்த்தரே உங்களை ஆளுவாராக'' (நியாயாதிபதிகள் 8:22, 23). இது தேவ நடத்துதலின் படியாக ஒரு மனிதன் தன்னை ஒப்படைக்கும் போது உண்மையாகவே நடக்கக்கூடிய காரியம்.
இவ்விதமாக தேவனால் ஏற்படுத்தப்படுகிறதலைவர் இன்றும் சரியான விதத்திலே ஜனங்களை தேவனுடைய ஆளுகைக்குள் நடத்தும்போது ஜனங்களுக்குள், தேவனுக்கு பயப்பட வேண்டும், கீழ்படிய வேண்டும் மற்றவரை நேசித்து அன்புடன் நடக்க வேண்டுமென்கிறஉண்மையான எண்ணமும் சிந்தனையும் உருவாகி பலப்பட ஆரம்பிக்கும்.
2) தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள உறவு
அ) உறவு முறிதல்!
தேவனுடைய நோக்கத்தையும் சித்தத்தையும் விட்டு விலகி, விலக்கப்பட்டதின் மேல், தன்னுடைய நோக்கத்தையும், சித்தத்தையும் வைத்து பாவியாகவும், தேவனுக்கு சத்துருவாகவும் (ரோமர்5:10) மாறின மனிதன் தேவனுடைய உறவையும் நெருக்கத்தையும் இழந்தான்.
தேவ சமூகத்திலிருந்து பிரிந்ததின் விளைவு, எத்தனையோ விதமான தன்னுடைய செயல்களின் மூலமாக அந்த உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பிய மனிதன் தோல்வியை சந்தித்தான். இன்றைய நாள் வரை தங்களுடைய சுயநீதியின் படியாக, தன்னைத்தான் வருத்திக் கொள்வதன் மூலமாகவும் கடவுளுக்கு ஏதாகிலும் கொடுத்தோ, அவ்வுறவை தொடர முற்படும் மனிதன் எடுக்கின்ற பிரயாசங்கள் தோல்வியைகளிலேயே முடிகிறது. காரணம் பரிசுத்தம் இல்லாமல் மனிதன் தேவனை நெருங்கவே முடியாது. அறியாத மனிதனோ, தன் வாழ்நாளை மாயையாக கழிக்க முற்படுகிறான்.
ஆ) உறவு புதுப்பிக்கப்படுதல் யாரால்?
``கிறிஸ்துவிடம் செல்வதற்கு பரிசுத்தம் வழி அல்ல, கிறிஸ்துவே பரிசுத்தத்திற்கு வழி'' என்று அட்ரியன் ரோஜர்ஸ் என்ற பரிசுத்தவான் கூறுகிறார். தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தராக (1 திமோ 2:5) சமாதான கரத்தை பிடிக்கச் செய்தவர் இயேசு கிறிஸ்து, வேதம் கூறுகிறது, அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக உறவை புதுப்பித்து, தூரமாக இருந்த மனிதனை தேவனுக்கு சமீபமாக, (அருகில்) கொண்டுவந்தார் (எபே 2:13). அது மாத்திரமல்ல அவரை விசுவாசிக்கிற அனைவரையும், தேவனுடைய பிள்ளையாகும்படியான அதிகாரத்தையும் கொடுக்கிறார் (யோவான் 1:12) எனவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு (ரோமர் 6:22). பழையவைகள் ஒழிக்கப்பட்டு, எல்லாம் புதிதாக்கப்படுகிறது. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாகிறான் (2 கொரி 5:17). தேவ உறவும், நெருக்கமும் மனிதனின் வாழ்வில் புது உத்வேகத்தை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் பொதுவாக வைக்க வேண்டும். என்கிறஉள்ளான தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் கை வலியால் துடிக்கும்போது, கண் வெறுமையாகப் பார்த்துக்கொண்டிராது, காலில் முள் குத்தியதும், கை கட்டிக் கொண்டு நிற்காது. ஒவ்வொரு அவயமும் அதனுடைய வேலையை சரியாக செய்ய ஆரம்பித்து விடும்.
எனவே, கிறிஸ்துவின் சரீரமான சபையே, வலது கைக்கும் இடது கைக்கும் தொடர்பில்லாமல், காலுக்கும் கைக்கும் தொடர்பில்லாமல், தலைக்கும் சரீரத்திற்கும் தொடர்பில்லாமல், முடமான நிலையில் இல்லாமல், எல்லா உறுப்புகளுக்கும் பாய்ந்தோடக்கூடிய நிலையை உருவாக்கிக்கொள்வது உண்மையான தேவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் உலகுக்கு உணர்த்தும்.
3) தேவன் மனிதனுக்கு கொடுத்த சமாதானம்
அ) மனிதனின் நிலை
சமாதானத்தையும் செழிப்பையும் விரும்பாத மனிதர் இருக்கவே முடியாது. இதை எப்படியாகிலும் அடைந்தே தீருவேன் என்று செயல்படும் மனிதனின் வாழ்வில் எட்டாக்கனிதான் சமாதானம். காரணம், நோக்கம் சரி, செயல்பாடுகள் தவறு. மரித்துப்போன தாயின் மார்பில், தாய் மரித்ததை அறியாமல் பாலைத் தேடும் பிள்ளையின் செயலே பாலைவனமான, முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும் பூமியிலே தேவ சமாதானத்தையும், தேவ செழிப்பையும் தேடி அலையும் மனிதனின் செயலும்.
ஆ) தேவ சமாதானம்
எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை (பிலி 4:7), மனிதன் பெற்றுக் கொள்ளும்படியாக தன்னுடைய சமாதானத்தையே கொடுத்து (யோ 14:27) எல்லோரும் (உலக மனிதர்) ஒன்றாக இருக்க வேண்டுதல் செய்து, தன்னேயே அர்ப்பணம் செய்தவர் இயேசு கிறிஸ்து.
இப்பூமியில் மனிதவாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், தேவை தேவ சமாதானம். இல்லை என்றால் வெந்ததைத்தின்று, விதி வந்தால் போகலாம் என்கின்றசலிப்பு ஏற்பட்டு வாழ்க்கையை வாழாமல் தள்ள வேண்டிய நிலையே ஏற்படும்.
மாறாக, தேவ சமாதானத்தைக் கொடுத்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் இயேசுவை, தன் வாழ்வில் வழியாக, உணவாக, ஜீவனாக, உண்மையாக ஏற்கும்போது ஏற்படுவது எல்லா புத்திக்கும் மேலாக இருக்கும். தேவன் அருளும் தேவ சமாதானம், மனிதன் உடைத்து விட்ட, மனித ஐக்கியம், தேவனோடுள்ள உறவு, தேவ சமாதானம், இவைகளை இழந்து அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும் உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் (இயேசுவானவர்) நம்மைச் சந்திக்கிறார் (லூக் 1 : 78,79)
0 comments:
Post a Comment