Bread of Life Church India

அரணை காத்துக்கொள்

வாழ்க்கை பயணத்தில் சமாதானமும், மகிழ்ச்சியையும் மனிதர் யாவரும் விரும்புவர். ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்று என்பது போல் இவைகளை கெடுக்கும் படியாகவே ஒரு மனிதனுக்கு முன்னும், குடும்பத்துக்கு முன்னும் எதிரியான பிசாசு சிதறடிக்கிறவனாக வருகிறான். பாதுகாப்பு வட்டத்துக்குள் வரும்படி மனிதனுக்கு வேதம் அழைப்பு விடுக்கிறது.


``சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக் கொள்,  வழியை காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக் கொள் உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து'' (நாகூம் 2:1). மனிதனின் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பது தேவன். அந்த தேவனின் பாதுகாப்பை மனிதன் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் வேதத்தின் அறிவுரை ``ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; (1 பேதுரு 5:9).
தேவனைச் சார்ந்து கொண்டு, அவரில் விசுவாச முள்ளவர்களாய் இருந்தே பொல்லாத பிசாசை எதிர்த்து, அவனுடைய பொல்லாத செயல்களை அழிக்க வேண்டும்.
பிசாசு தோற்கடிக்கப்பட்ட சத்துரு, கிறிஸ்து வெற்றி வேந்தர், நாமும் வெற்றி வீரராயிருக்க வேண்டுமே ஒழிய தேவனது எதிரிக்கு முன் சரண்டைந்து விடக்கூடாது ``உலகத்தில் இருப்பவனின் நம்மில் இருப்பவர் பெரியவர்              (1 யோ 4:4).

அரணைக் காத்துக் கொள்

    அரண் என்பது பாதுகாப்பானது என்பது நாம் அனைவரும் நன்றாக அறிந்த ஒன்று பட்டணங்களுக்கும் தேசத்துக்கும் பாதுகாப்பு எவ்வளவு அவசியமோ, அதுபோல தேவனுடைய பாதுகாப்பு ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை மிகத் தெளிவாக நமக்கு உணர்த்திக் கொடுக்கிறது.மனிதனின் வாழ்வில் தேவனுடைய பாதுகாப்பு இல்லை என்றால் நிம்மதி, சமாதானம், சந்தோஷம் என்பது மனித வாழ்வில் கானல் நீர் போல் ஆகிவிடும்.
இதை அறிந்த பக்தன் தாவீது தேவனிடத்தில் தன்னுடைய வேண்டுதலை தெரிவிக்கும் பொழுது ``கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் (சங் 17:8) என்று கூறுவதை பார்க்கிறோம். கண்ணின் கருவிழியை எவ்விதம் இமை பாதுகாக்கிறதோ, அவ்விதமாக மனிதனுக்கு தேவனுடைய பாதுகாப்பு மிக மிக அவசியம்.
யோபுவின் வாழ்வைக்குறித்து சிதறடிக்கிறவனாகிய சாத்தான் கர்த்தரிடத்தில் வந்து சொல்லுகிற வார்த்தை ``நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்க வில்லையோ?   (யோபு 1:10) என்று கூறுவதையும், தேவன் அவனை சுற்றிலுமாக வேலியடைத்து பாதுகாத்தபடியினாலே, சாத்தான் அதுவரை எந்தவொரு பொல்லாப்பையும் யோபுவிற்கு விரோதமாக செய்ய முடியவில்லை என்பதையும் வேதம் கூறுகிறது, ஏனென்றால் தேவனின் பாதுகாப்பு ஒரு மனிதனுக்கு அவசியம் என்பதை குறித்து இவ்வேதப் பகுதி நமக்கு நன்றாக விளக்கி காண்பிக்கிறது. ``நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதன் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (சகரியா 2:5). தேவ ஜனங்கள் வாசம் பண்ணும் இடத்தை சுற்றிலுமாக தேவன் அக்கினி போன்ற பாதுகாப்பை கொடுத்து, அதன் மூலமாகத் தான் மகிமையாக இருப்பேன் என்று கூறுகிறார்.
இப்படிப்பட்ட பாதுகாப்பான அரணைக் காத்துக் கொள் என்பதே நாம் தியானிக்கிற இப்பகுதியின் பொருள். தேவனுடைய பாதுகாப்பை ஒரு மனிதன் பெற்றுக் கொள்ளலாம், இல்லையென்றால் தனது நடத்தையின் மூலமாக பாழ்படுத்தியும் விடலாம். எதிரியானவன் வருகிறவரைக்கும் பாதுகாப்பின் மேன்மை குறித்து ஒருவன், எளிதில் அறிந்து கொள்ள முடியாது.
தாகமுள்ளவனே தண்ணீரின் மகத்துவத்தை அறிவான், வெயிலின் கொடுமையை உணர்ந்தவனே நிழலின் ஸ்பரிசத்தை அறிவான். அதுபோல வாழ்க்கையில் நிம்மதியிழந்து, சமாதானமிழந்து, தோல்வியின் மேல் தோல்வியடைந்தவனே கர்த்தருடைய பாதுகாப்பை தேட ஆரம்பிப்பான்.
வரும் முன் காப்பவன் புத்திசாலி, வந்த பின் தேடுபவன் அறிவாளி, முடிந்தபின் யோசிப்பவன் முட்டாள். எனவே தேவனின் பாதுகாப்பு இருக்கும் பொழுதே அதனுடைய மேன்மையை உணர்ந்து கர்த்தருக்கு நன்றி செலுத்தி அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்பவன். தீங்கு வரும் முன் பொல்லாப்பு நெருங்குமுன், சிதறடிக்கிறவனாகிய சாத்தான் ஒன்றும் செய்ய முடியாதபடிக்கு தீங்கு எதுவும் வரும் முன் தன்னை காப்பவன் அடுத்தவன் தேவ பயமில்லாமல் தன் இஷ்டப்படி எல்லா தீமைகளையும் செய்யும் பொழுது, உன் அரணை காத்துக் கொள் என்று வரும் தேவ சத்தத்திற்கு கீழ்படிந்து அறிவாளியாக செயல்படுபவன். இவ்விரு வழிகளும் இல்லாமல் போகிறவர்களின் முடிவே பரிதாபத்துக் குறியது. அரணாகிய தேவன் ஒரு மனிதனின் வாழ்வில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் ``என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய், அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள் காத்துக் கொள். (நீதி 4:20,21) எல்லாக் காவலோடும் உன் இதயத்தைக் காத்துக் கொள் (நீதி 4:23).

வழியைக் காவல் பண்ணு

``ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்கு பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்'' (நீதி 16:7).
தேவனுக்கு பிரியமான வழியில் மனிதன் செல்லுவதுதான் வழியைக் காவல் பண்ணுவது, ``கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள் (எபே 5:10). தான் தோன்றித் தனமாக தனது விருப்பத்தின் படியெல்லாம் செல்வது வாழ்க்கையில் தேவன் மனிதனுக்கு வகுத்து கொடுத்த வழியல்ல! மனிதன் இப்படித்தான் தனது வாழ்வில் செயல்படவேண்டுமென்று தேவன் நியமித்து கொடுத்துள்ளவற்றை மனிதன் அறிந்து கொள்வதே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
ஆனால் மனிதனின் வாழ்வில் ஏற்படும் எல்லா பொல்லாப்புகளுக்கும், மனிதன் வழி விடவில்லையென்றால் அவனுடைய வாழ்வில் பொல்லாப்பு இல்லை ஏனென்றால் ``கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்'' (நீதி 18:10).
ஆனால் மனிதன் தனது வாழ்வில் பொய்யை உண்மையாக்க, உண்மையை பொய்யாக்கி கொண்டிருக்கிறான். நியமித்து கொடுக்கப்பட்டுள்ள சுகவாழ்வின் வழியை காத்துக் கொள்ளாமல், பொல்லாப்புகள் நுழைவதற்கு இடம் கொடுத்து விட்டு கலங்கித் தவிக்கிறான். ஆனால் தமக்குப் பயந்து தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார் (சங் 147:11)

அரையை கெட்டியாய் கட்டிக் கொள்

அரையை கட்டிக் கொள்வது என்பது, ``பெல்ட்'' அணிந்து கொள்வது, போட்டுக்கொள்கிற உடை உடம்பிலே நிற்பதற்காக எவ்விதம் போடப்பட்டிருக்கிறதோ, அதுபோல. வேதம் கூறுகிறது, ``நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்''          (1 பேதுரு 1:13) மனதின் அரையைக் கட்டுவது என்பது பரிசுத்தத்தை காத்துக் கொள்வது. மனதின் மையத்தில், எழும்புகிற இவ்வுலக பொல்லாத எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் மனிதன் வளைந்து கொடுக்காது இருக்கும் பொழுதே, மனித வாழ்வில் தடுமாற்றமும் குழப்பமும் இல்லாமல் வாழ்க்கை பயணத்தை தொடர முடியும். தனது மனதின் அரையை கட்டாத மனிதன், திருப்தியில்லாதவனாக தனது வாழ்வில் தனது நிலையை இழக்கிறான்.
மனிதன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல, தகுதியானவற்றையே செய்ய வேண்டும். தனது மனதில் தகுதியாய் இருக்கிறதையே செய்ய வேண்டுமென்று தீர்மானித்து செயல்படுகிற மனிதனே தனது மனதின் அரையை கட்டியிருக்கிறான். அப்படி கட்டிக் கொள்ளுகிற மனிதனுடைய வாழ்வுதான் தேவனுக்கு பிரியமானதாக இருந்து அவருடைய பாதுகாப்பை கொடுத்து, தேவையில்லாத வீணான பிரச்சனைகளுக்கு விலக்கி, மெய்யான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.
இடுப்பில் கட்டப்படுகிற அரை தன்மானத்தை காக்கும், மனதில் கட்டப்படுகிற அரை பரிசுத்தத்தைக் காக்கும்.

0 comments:

Post a Comment

விடை தேடும் கேள்விகள்