Bread of Life Church India

உயர்ந்த நிலைக்கு செல்லவே!

வாழ்க்கையென்கிற ஓட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ அநேகர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
     தான் போக வேண்டிய இடத்தை, சரியாக அறியாமல் பயணம் செல்பவன் வழியெல்லாம் குழப்பத்தோடு செல்வான். புறப்படும்பொழுது, போகவேண்டிய இடத்தையும், போய் என்ன செய்ய வேண்டும் என்பதையும், தீர்மானித்து தன் பயணத்தை ஆரம்பிக்கிறவன் நிச்சயத்தோடு ஆரம்பிக்கிறான். மேலும், தீர்மானிக்கப்பட்டதில் உறுதியாக இருந்து, திறம்பட செயல்படுகிறவன், சிறந்த ஒரு லட்சியவாதியாக நின்று, சாதனைக்கு பங்குள்ளவனாக இருக்கிறான். மனிதர்களாகிய நமக்கு, வாழ்க்கையின் நிச்சயம், பயணத்தின் லட்சியம் தெரிந்திருக்கும்பொழுது, உண்மையாகவே நமது வாழ்வு சிறப்பான வாழ்வாக இருக்கும்.

நிச்சய ஓட்டம்

    பட்டுப்பூச்சி வாழ்வது எட்டு நாளென்றும், பறந்து திரிகின்ற ஈசலுக்கு ஒரு நாளென்றும் சொல்லப்படுவது போல் வாழ்கின்ற வாழ்வல்ல மனிதனின் வாழ்வு. விளக்கின் வெளிச்சத்தில் வீழ்ந்து போவதை அறியாமல் வாழ்கின்ற விட்டில் பூச்சியின் வாழ்வல்ல மனிதனின் வாழ்வு. மேலும், பூத்துக் கருகும் பூவின் வாழ்வு போன்றது மனிதனின் சரீர வாழ்வு மட்டுமே. மாறாக, சரீரத்திற்குள் வாழ்கின்ற உள்ளான மனிதனாகிய ஆத்துமாவுக்கல்ல.
     எனவே, ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டம் நிச்சயமுள்ளதாக இருக்க வேண்டும். ``நான் நிச்சயமில்லாத வனாக ஓடேன்'' (1 கொரி 9:26) என்கிற எண்ணமே, மனிதனை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதற்கு எந்தவொரு செயலையும் செய்ய வைப்பதும் செய்வதும் ஒரு மனிதனின் உள்ளான மனிதனாகிய ஆத்துமாவே. வேதம் கூறுகிறது, ``ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல'' (நீதி 19:1) எல்லாம் அறிந்தவன் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதன். தன் ஆத்துமாவில் அறிவில்லாமல் வாழ்வது எவ்விதத்திலும் பயனாகாது.

     ஆத்துமாவின் அறிவென்பதென்ன? இயேசு கிறிஸ்து கூறும்பொழுது, ``மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை (ஆத்துமா) நஷ்டப்படுத்தினால், அவனுக்கு லாபமென்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்'' (மத் 16:26) என்று ஒரு கேள்வியோடு நிறுத்துவதை நாம் கவனத்தில் கொண்டு வராமல் இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் காண்கின்ற உலகமும் உலக அமைப்புக்களும் மனுஷருடைய சுய ஆளுகைக்காகவும், தன்னைப் பிரியப்படுத்திக் கொள்வதற்காகவும். தன்னைத்தான் திருப்திப்படுத்திக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும், ஒருவனும் கீழ்படிவதுமில்லை.
     ஆகவே, இந்த ஆளுகையின் கீழ் வரும் போது ``வேஷமாகவே மனிதன் திரிகிறான். விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்'' (சங் 39;6) என்ற தேவ வார்த்தையின்படி, உண்மையான முகத்தை மூடி, பொய்யான முகத்தையே வெளிக்காட்டுகிறான். முகமூடியில்லாமல் ஒரு மனிதன் தைரியமாய் வாழ்கிறான் என்பதை காண்பதென்பது மிகவும் அறிதாகவும் அபூர்வமாகவும் இருக்கிறது. சத்தியத்திற்கு தன் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்கு (பொய்) சார்ந்து வாழ்கிறதையே கண்கூடாகக் காண்கிறோம்.
     தான் வாழ்கிற வாழ்க்கை எதற்காக? தான் வியர்வை சிந்தி உழைப்பது யாருக்காக? குடும்பம் என்றால் என்ன? சமுதாய வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பல கேள்விகள் ஒரு மனிதன் தனக்குள் கேட்டுக் கொள்ளக்கூட நேரமில்லாமல், வாழ்க்கையில் துரத்தப்படுகிறான்.
     எது துரத்துகிறது? ஒருபுறம் பொருளாதாரம், மறுபுறம் மாயையான உலக அமைப்புக்கள். உள்ளான பிரச்சனை, வேதனை, துன்பம், சமாதானமின்மை என நிச்சயமில்லாத களைப்பான ஓட்டமே, அநேகர் ஓடுகின்றனர். மேலும், தான் உண்மையாக எதற்காக ஓட வேண்டும், ஏன் வாழ்கிறோம் என்பதையே தெரிந்து கொள்ளாமல், வாழ்க்கையை வாழாமல், ஏதோ ஒன்றில் தொலைத்துவிட்டு, வெற்று வாழ்க்கையே வாழ்கின்றனர்.
     எனவே, துரத்தப்படுகிற இடமெல்லாம் ஓடி களைத்துப் போகாமல், நின்று கிறிஸ்து இயேசுவுக்குள் நிதானித்து, சத்தியமாகிய அவரை முன்மாதிரியாக உண்மையாகவே நிறுத்தும்போது, நாம் ஓடுகிற ஓட்டத்தில் நிச்சயம் உண்டு.

லட்சிய ஓட்டம்
    ``நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்''      (1 கொரி 9:24). வாழ்க்கையில் லட்சியத்தோடு ஓடும்பொழுது எது குறுக்கிட்டாலும் செல்ல வேண்டிய இலக்கையும், அடையவேண்டிய எல்லையையும் விட்டுவிடக்கூடாது. அதுபோல, ``இது யார் தச்ச சட்டை, தாத்தா தைச்ச சட்டை'' என்கிற வார்த்தையை விடாமல் வேகமாக சொல்லும்பொழுது, சொல்ல வந்ததின் பொருள் மாறி உளருவதுபோல், லட்சியத்தோடு ஓடும் மனிதன் வேகமாக ஓடி பொருளை மறந்து, லட்சியத்தைவிட்டு ஒன்றுக்கும் உதவாமல் போய்விடக் கூடாது.
     வேகமும் வேண்டும். விவேகமும் வேண்டும் என்பதில் மிகவும் கவனம் அவசியம். மேலும், திட்டங்களை தீட்டுகிறவன் அல்ல! தீவிரமாய் செயல்படுகிறவனே, எக்காலத்திலும் தலைசிறந்தவனாக விளங்க முடியும் என்பது சரித்திரத்தில் சாதித்தவர்களின் கூற்று.
     ஏனென்றால், மனிதன் திட்டம் தீட்டிக் கொண்டே இருக்கிறான். தேவனோ, தீவிரமாய் செயல்படக்கூடிய நபர்களையே தேடிக் கொண்டிருக்கிறார். ``தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது'' (2, நாளா 16:9) என வேதம் கூறும் நபராக நீ ஏன் இருக்கக்கூடாது?
    கிறிஸ்துவின் லட்சியமே அவரை பின்பற்றும் சீஷர்களின் லட்சியமாக இருக்க வேண்டும். தேவனுடைய ராஜ்ஜியம், பூமியிலே ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும், தேவனால் ஆளுகை செய்யப்பட வேண்டும் என்பதே கிறிஸ்துவின் லட்சியம்.
     எனவே, நாமும் தேவனுடைய ஆளுகையைக் குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படியெனில், தேவனுடைய ராஜ்ஜியம், பரலோகத்திற்குரியது மட்டுமல்ல, ஏனென்றால் இயேசு கிறிஸ்து ஜெபத்தின் மாதிரியை சொல்லிக் கொடுத்த பொழுது, ``உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக.''  (மத் 6:10) என்று கூறுவதை தள்ளி விடாது கவனிக்க வேண்டும். தேவனுடைய ராஜ்ஜியம் பூமியிலே செய்யப்பட வேண்டுமேயானால், நமது தேசத்திலே செயல்பட வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனின் இருதயமும், கிறிஸ்துவுக்கு வேண்டும். அவருடைய ஆளுகையானது, ``புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.''  (ரோமர் 14:17) என்று வேதம் கூறுகிறது.
    இந்த ஆளுகையே கிறிஸ்துவின் லட்சியமானால், அவரைப் பின்பற்றுகிற நமது லட்சியமும், அதுவாகத்தானே இருக்க வேண்டும். கிறிஸ்தவன் கிறிஸ்துவினால் ஆளப்படுகிறவன். அவரின் ஆளுகையின் கீழ், அனேகரை கொண்டு வரும்படியாக லட்சியத்தோடு செயல்படுகிறவனே சிறந்த ஒரு சீஷன்.

சாதனை ஓட்டம்

    ஒடுக்கப்படுகிறவர்கள், தேவனால் உயர்த்தப் படுவார்கள். தள்ளப்படுகிறவர்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்படுவார்கள், இழிவுப்படுத்தப்படுபவர்கள் தேவனால் பலப்படுத்தப்படுவார்கள். வாழ்க்கைச் சக்கரத்தில் கீழானோர் மேலாகவும், மேலானோர் கீழாகவும் மாற்றப்படுவதுபோல், ஒருவராலும் கவனிக்கப்படாமலும் ஒருவராலும் மதிக்கப் படாமலும் யாராலும் விரும்பப்படாமலும் இருக்கும், ஒருவரையே தேவன் தன் பாடசாலையில் கற்றுக் கொடுத்து அவன் தன்னையே அனைத்திலும் சார்ந்து கொண்டு, தனது சித்தத்தை அறிந்து செயல்படும் விதத்தில் உருவாக்கி அனுப்புகிறார்.
     ``உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரை பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்'' (ஆதி 12:2) என்று வாக்கு கொடுத்து அழைக்கப்பட்ட ஆபிராம், தன் வாழ்க்கையில் 75 வயது வரைக்கும் ஒடுக்கப்பட்டவனாக, தங்குவதற்கு நிலையான ஒரு இடமில்லாமல் நாடோடியாக (பரதேசி) சுற்றித்திரிந்த ஒரு குடும்பப் பின்னணியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
     ``நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது, அவர்கள் வேறே தேவர்களை சேவித்தார்கள்'' (யோசுவா 24:2, 3) என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் கொடுத்த வாக்கை மட்டுமே, சாதனையின் பொருளாகக் கொண்டு சூழ்நிலைகள் ஒன்றும் சாதகமாக இல்லாதிருக்கும்போதே, தனது சாதனை ஓட்டத்தை துவக்க ஆரம்பித்த அபிராமின் வாழ்வில் மேலும் ஒரு வாக்கை தேவன் கொடுக்கிறார். ``உன்னிடத்தில் இருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்'' (ஆதி 17:6). அவனுக்கு ஆளுகை உரிமையைக் கொடுத்து, அவனது சந்ததியில் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தையும், அதே சந்ததியில், இயேசு கிறிஸ்துவின் மூலமாய், தேவனுடைய ராஜ்ஜியத்தையும் உலகத்தில் அமைத்த தேவன், இன்றைக்கும் தேடிக் கொண்டிருப்பது, தமது வார்த்தைக்கு கீழ்படிந்து விசுவாசத்தினாலே சாதிக்கும், சத்தியவான்களையே.
     நெறிதவறி ஓடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தில் சத்தியத்திற்காக ஓடும் சாதனையாளர்களையே, எனவே, உலகமும் அதிலுள்ளவைகளும் மனிதனை சில லட்சங்களுக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதை மிகத் தீவிரமாய் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் தற்கால சூழ்நிலையில், ஒரு மனிதன் சத்தியத்திற்காக சாதனையாளனாக மாறுவது எப்படி என்பதை நாம் சொல்லிக் கொடுக்கத் தவறினால், அவனல்ல நாம் தப்பு பண்ணுகிறவர்களாய் மாறிவிடுவோம்,
     எனவே, நாம் நிச்சயம் உள்ளவர்களாக, லட்சியம் உள்ளவர்களாக, சாதனையாளர்களாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். கிறிஸ்து இயேசு நமக்கு கற்றுத் தருவார்.

0 comments:

Post a Comment