Bread of Life Church India

எது சரி ?


 “அக்கா அக்கா’’ என்று கூப்பிட்டவாரு கதவை தட்டினாள் வித்யா.
“இதோ வந்து விட்டேன்’’ என்று சொல்லியபடியே கதவை திறந்து “யாரு’’ என்றபடி வெளியே வந்தாள் கவிதா.
“நான்தாங்கா வித்யா’’
வித்யாவா, என்ன வித்யா ரொம்ப வேகமா வந்திருக்க? என்ன விஷயம். உள்ளே வா’’ என்று கதவை முழுவதுமாக திறக்க “வேகம் எல்லாம் இல்ல, வீடு பூட்டி இருந்துச்சு, அதான் சத்தமா கூப்பிட்டு கதவை தட்டினேங்கா’’ என்றபடியே உள்ளே சென்றாள் வித்யா.
 “எப்படி இருக்கீங்கக்கா’’ என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தாள்.
“ம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? என்ன இரண்டு மூன்றுநாளா வீடு பூட்டி இருந்தது. ஊருக்கு போயிருந்தீயா?’’

“ஆமாக்கா ஊர்ல அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு போன் வந்தது, அதனாலதான் போய் பாத்துட்டு வந்துடலாம்னு உடனே புறப்பட்டு போய்ட்டு வந்தோங்க்கா யாராவது எங்களை தேடி வந்தாங்களா?
“யாரும் வரல, ஆனா உங்க பாஸ்டரு வந்தாரு, மாசம்வர்ரதுக்கு மறந்தாலும் மறக்கும், உங்க பாஸ்டர் உங்க வீட்டுக்கு வருவதற்கு மறக்க மாட்டாரா?  என்று கேலியாக சிரித்தாள் கவிதா.
“என்னக்கா ஒரு மாதிரி சலிப்பா பேசுறீங்க, எங்க சபை பாஸ்டர். அவர் நமக்காக ஜெபிப்பதற்காகத்தானே வருகிறார், அவர் வந்து நம்மை விசாரித்து, நமக்காக ஜெபிப்பது நமக்குத்தானே நல்லது’’
உடனே கவிதா நமட்டு சிரிப்புடன்“இப்போ நாம என்ன குறைஞ்சு போயிட்டோம், தேவன் நம்மள நல்லாத்தானே வச்சிருக்காரு’’ வாரம்தவறாம சபைக்கு போறோம் பிறகு என்ன வித்யா,? வீட்டுக்கு வேற வந்து விசாரித்து ஜெபிக்கனுமா? ’’
“என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க அப்போ, ஊழியக்காரங்க வீட்டுக்கு வந்து ஜெபிக்கணுன்னா வியாதியா இருக்கணும், இல்லனா எதாவது பிரச்சனையா இருக்கணுமா? என்னது நீங்க சொல்லுவது விசித்திரமா இருக்கே’’ என்று கேட்டபடியே கவிதாவின் முகத்தை பார்க்க.
  “வித்யா, நீ இப்போதான் சபைக்கு போக ஆரம்பித்து இருக்க, உனக்கு அதெல்லாம் தெரியாது, பெரிய, பெரிய  ஊழியக்காரர்கள் சொல்வதை எல்லாம்  நீ கேட்பதில்லையா? “உங்க வீடு தேடி வரும் ஊழியக்காரங்கள, வீட்டுக்குள்ள  விடாதீங்க, அவங்க உங்க வீட்டுக்கு  வருவதே பணத்துக்காகத்தான் அதனால காணிக்கை கொடுத்து அவங்கள தொடர்ந்து உங்க வீட்டுக்குள்ள வர்ரதுக்கு இடங்கொடுக்காதீங்கங்கன்னு சொல்லுறாங்க இல்ல’’ என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
தண்ணீரை வாங்கி குடித்துக்கொண்டே“ஓகோ இதெல்லாம் வச்சித்தான் நீங்க இவ்ளோ சலிப்பா பேசுறீங்களா?’’ என்று கேட்டாள் வித்யா.
“பிறகு,? அவங்க எல்லாம் எவ்ளோ பெரிய ஊழியர்கள், அவங்க மீட்டிங்ன்னா எவ்ளோ கூட்டம் வருது, அவங்க சபையில் எவ்ளோ விசுவாசிங்க இருக்காங்க, அப்படிப்பட்ட ஊழியர்கள் எல்லாம் வீடு விசிட்டிங் எல்லாம் செய்வதே இல்லை.  நாம அவங்கள பார்த்து ஜெபிக்கணுன்னா, ஆலோசனை கேட்கனுன்னா, அப்பாய்ன்ட்மென்ட் வாங்கினாத்தான் முடியும் தெரியுமா?’’ என்று பெருமிதமாக பேசினாள்.
“ஓ நல்லா தெரியுமே, அப்படீன்னா உங்க பார்வையில் நல்ல ஊழியக்காரங்கன்னா, வீடு விசிட்டிங் செய்யக்கூடாது, அவங்கள பார்க்கணும்னா அப்பாய்ன்மென்ட் வாங்கனும், நல்ல காரு, பங்களான்னு வசதியா இருக்கனும், அப்படிப்பட்ட ஊழியர்கள் அருகில் போகமுடியாத அளவுக்கு எப்போதும் ஒரு கூட்டம் சுற்றியே இருக்க வேண்டும் அப்படித்தானே ?’’ என்று கேட்க, கவிதா அமைதியாக வித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
தொடர்ந்து பேசிய வித்யா “கிறிஸ்தவம் எதை நோக்கி போகுதுன்னு தெரியல, நீங்க மட்டுமல்ல, இக்காலத்துல நம்மை தேடி வந்து, நம்ம சுக துக்கங்களில் பங்கு கொண்டு, நமக்காக ஜெபித்து, ஆலோசனை கொடுத்து, கிறிஸ்துவுக்குள்ள நாம நிலைத்திருக்கவும், விசுவாசத்தில் வளரவும், நம்மை நடத்துகிற ஊழியர்களையும், வசதியில் குறைவாக இருக்கும் ஊழியர்களையும் தரக்குறைவாக பேசுவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது.  வீடு விசிட்டிங் செய்து, ஜெபித்து ஆலோசனை கொடுக்கும் ஊழியக்காரர்கள் என்றால் மட்டமானவங்களா? பணத்துக்காகத்தான் அவங்க நம்மை தேடி வாறாங்க?’’ என்று சிறிது கோபத்துடனேயே முகத்தை வைத்துக்கொண்டு, வித்யா பட படவென்று பொரிந்து விட்டாள்.
என்ன பேசுவது என்று கவிதா திகைத்து நிற்கும் போதே,
“நாம யாரு, எங்க இருக்கிறோம், எந்த சூழ்நிலையில் இருக்கிறோம், நம்ம வீடு எங்க இருக்கிறது, என்று நம்மைப்பற்றி எதுவுமே தெரியாமல், எப்போதும் பிஸியாக இருக்கிறேன், நானெல்லாம் வீடு விசிட்டிங் எல்லாம் போறதே இல்லை, எப்போதும் வெளிநாடு ஊழியங்கள் எனக்கு அதிகமாக இருக்கிறது, என்று போலி பெருமையோடு காலரை தூக்கிக்கொண்டு பேசும், பாஸ்டர்கள், ஊழியக்காரர்கள்தான் உங்களுக்கு பெரியவங்களாகவும், உண்மை உள்ளவங்கபோலவும் ரொம்ப உசத்தியா தெரியுராங்க இல்லக்கா?’’ சற்று சிரிப்பை வரவழைத்தவளாக கவிதாவை பார்க்க.
“அப்போ அப்படி சொல்லுகிறவங்க எல்லாரும், தப்பானவங்கன்னு சொல்லுறியா வித்யா? ‘ என்று கவிதாவும் சற்று கடுமையாகவே கேட்க.    
“அய்யோ, நீங்க எதையும் சரியா புரிந்து கொள்ள மாட்டீங்களா? உடனே நீங்க ஏன் அப்படி எடுத்துக்கொள்ளுறீங்க, என்னை வம்புல மாட்டிவிட்டுடாதீங்க, அவங்க வீடு விசிட்டிங் செய்யும் ஊழியர்களை குறித்தும், வசதியில்லாத ஊழியர்களை குறித்தும் சொன்னதா நீங்க  சொன்னதுக்கு பதில் சொன்னேன். அவ்வளவுதான்.
அப்படிப்பட்ட ஊழியக்காரர்கள் தாங்கள் வளர்ந்து விட்ட பின்பு, ஆரம்ப ஊழியர்களைக்குறித்தும், வளர்ந்து வரும் ஊழியர்களைக்குறித்தும், பணவசதி குறைவான ஊழியர்களைக்குறித்தும், கேவலமாக பேசுவதைக்குறித்துத்தான் நான் அப்படி சொன்னேனே தவிர, அவர்கள் தப்பானவர்கள், என்றோ அவர்கள் தவறானவர்கள் என்றோ நான் சொல்லவில்லை.
தற்காலத்தில் வேதாகமத்தை பார்க்காமல் ஒருவரை பார்த்து, ஒருவர் குறை பேசுவது வாடிக்கையாக மாறிவிட்டது. இப்படி பேசுவது தப்பு என்று வெளிப்படையாக பேசுவதற்கு சில ஊழியக்காரர்கள் தயங்குகிறார்கள். ஏனென்றால் தங்களின் பெயருக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ? நம்மையும் பண ஆசை பிடித்த ஊழியர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ? என்ற அச்சம்தான் அதற்கு காரணம். மேலும், குறை சொல்லுவதை சிலர் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த வியாதி தற்போது கிறிஸ்தவத்தை பிடித்திருக்கிறது, இந்த வியாதி நீங்க நாமதான் ஜெபிக்க வேண்டும்.
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு ஒரு  ஊழியக்காரர் ஜெபிக்க வந்தார்.  அவர் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்பவராம். நாங்களும் ஊழியக்காரர் நமக்காக ஜெபிக்க வந்திருக்கிறாரே என்று, ஜெபித்த பின் எனது கணவர் அந்த ஊழியருக்கு காணிக்கை கொடுத்தார். உடனே அந்த ஊழியருக்கு வந்தது பாருங்க கோபம், நாங்க பயந்தே போயிட்டோம், என்னடா இது, நாம எதாவது செய்ய கூடாத தவறு செய்து விட்டோமா? என்று நாங்கள் திகைத்து நிற்கும் போது, சிறிது நேரம் கோபமாக முறைத்து பார்த்தவர் சொன்னார்.
நீங்க இப்படித்தான் காணிக்கை கொடுத்து, கொடுத்தே ஊழியர்களை கெடுக்குறீங்க, மொதல்ல வீட்டுக்கு வந்து ஜெபிக்கிற ஊழியர்களுக்கு காணிக்கை கொடுப்பதை நிறுத்துங்க என்றார்.
அப்பொழுது நான் கேட்டேன், ஐயா, நீங்க நல்ல வேலையில் இருக்கீங்க, உங்க மனைவியும் வேலை செய்றாங்க அதனால உங்களுக்கு மாதம் ஆனால் நல்ல வருமானம் வந்து விடுகிறது, நீங்க நேரம் கிடைக்கும் பொழுது பகுதி நேரமாக ஊழியம் செய்து வருகிறீர்கள்,
ஆனால் முழு நேரமாக தேவன் அதிகமான ஊழியர்களை, தம்முடைய ஊழியத்தை மட்டும் செய்யும்படியாக அழைத்திருக்கிறார், அப்படிப்பட்டவர்களையும், அவர்கள் செய்யும் ஊழியங்களை தாங்குவதும், தேவன் சொன்ன கட்டளைதான், தேவன் சொன்னதையே மாற்றி சொல்லும் அளவுக்கு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் ? என்று கேட்டு விட்டு,
 சரி அது இருக்கட்டும், ஒரு வேளை தேவன் உங்களை முழு நேரமாகத்தான் தம்முடைய ஊழியத்தை செய்ய வேண்டும் என்று, உங்களையும், சிஸ்டரையும் அழைக்கும் போது, நீங்கள் இருவரும் வேலையை விட்டு வந்து விட்ட பின்பு, நீங்கள் யாரிடமும் காணிக்கையே வாங்க மாட்டோம் என்று  இதே வார்த்தையை நீங்க சொல்லுங்க, அப்பொழுது நாங்களும் நீங்க சொல்லுவதை கேட்டு அப்படியே நடந்து கொள்ளுகிறோம், இப்பொழுது நான் பேசினது அதிக பட்சமாக நீங்கள் நினைத்தால் தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், என்று சொல்லி அனுப்பினேன்.
அதனால அக்கா, நீங்க மட்டுமல்ல உங்களைப்போல அநேகர் இப்படித்தான் சில ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக மட்டும் பேசுவதை வேதவாக்காக நினைத்து, அதே கண்ணோட்டத்தில் நீங்களும் வீட்டுக்கு வந்து ஜெபிக்கிற ஊழியர்களை பார்க்கிறீர்கள், உங்க கண்ணுக்கும் அப்படியே வீடுதேடி வந்து ஜெபிக்கும் ஊழியர் பண ஆசையில்தான் வந்தது போல தெரிகிறது..
இக்காலத்தில்  சில ஊழியர்கள் தங்கள் சொந்த அனுபவத்தை வைத்தே பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர, தேவ வசனத்தையோ, மற்றவர்களை தேவன் அழைத்த விதத்தையோ அறிந்து, தெரிந்து, புரிந்து பேசுவதே இல்லை தான் செய்வதும், பேசுவதும்  மட்டுமே சரி என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இது தவறு, இதை நாம் சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
 அக்கா நான் அப்படியே பேசிக்கொண்டே போயிட்டேன், நான் எதாவது அதிகமாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்க, நான் இன்றைக்கு ரொம்ப பேசிட்டேன்ல? என்று சிரித்தபடியே கேட்க.
அப்படியெல்லாம் இல்ல வித்யா, இவ்ளோ நாளா நான் தேவனுக்கு விரோதமா நினைத்துக்கொண்டிருந்ததை எனக்கு சுட்டிக்காட்டி, புரியவச்சதுக்கு உனக்கு நான் நன்றில்ல சொல்லனும்.
இவ்ளோ நாட்களா வீடு தேடி வந்து உங்களை விசாரித்து, உங்களுக்காக ஜெபித்த, உங்கள் சபை பாஸ்டர், உங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம்.மிகவும் தரக்குறைவாக எண்ணி, நீங்க கொடுக்கும், காணிக்கைக்காகத்தான் தேடி வருகின்றார்  என்று தப்பாக நினைத்து பேசிவிட்டேன், கர்த்தர்தான் என்னை மன்னிக்கவேண்டும்.
நாம தான் நல்ல ஆசீர்வாதமா இருக்கிறோமே, நமக்கும்தான் நன்றாக ஜெபிக்க தெரியுமே, அப்படி இருக்க, நாம கூப்பிடாமலே மாச மாசம் ஏன் வந்து இந்த ஊழியக்காரங்க வீட்டுக்கு வந்து  ஜெபிக்க வர வேண்டும், நாம கொடுக்கும் காணிக்கையால்தான் இந்த ஊழியக்காரர்களே வாழ்ந்து கொண்டு இருக்கிறார், என்றெல்லாம் கூட நான் கேவலமாக நினைத்தது உண்டு.
நீ சொல்லுவது போல நான் போகும் சபையிலும் கூட 10 ஆயிரம் பேருக்கு மேல இருக்காங்க, நாங்களும் எங்க சபைக்கு கடந்த 7, 8 வருடங்களாக சென்று கொண்டிருக்கிறோம், ஆனால் இது வரை தலைமை போதகர் எங்க வீட்டுக்கு வந்ததே இல்லை, அது மட்டுமல்ல, அவருக்கு நாங்க இருக்கிற வீடு கூட தெரியாது, இரண்டு அல்லது மூன்று முறை உதவி ஊழியர் மட்டுமே கடமைக்காக வந்து போனார். இதெல்லாம் இவ்ளோ நாட்களாக எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.
பல பிரபல ஊழியர்கள் கூட்டங்களுக்கெல்லாம் கூட சென்றிருக்கிறேன், ஒரு  முறை கூட அருகில் சென்று ஜெபித்துக்கொண்டது இல்லை, இதெல்லாம் தான் எனக்கு வியப்பாகவும், மிகவும் பெரிய விஷயமாகவும் தென்பட்டது, சே, எவ்வளவு பெரிய முட்டாள்தனம், இனி இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை செய்ய மாட்டேன், யார் உண்மையாக நம் மீது கரிசனையோடு நம்மை விசாரித்து, சத்தியத்தை சரியாக சொல்லி ஜெபிக்கிறார்களோ, அவர்களை இனி உண்மையாக கனப்படுத்துவேன். என்று மிகவும் தழு தழுத்த குரலில் கவிதா பேசினாள்.
“ரொம்ப நல்லது அக்கா, அதே வேளையில் நீங்க போகும் சபைக்கும் உண்மையாக இருக்க வேண்டும், சபைக்கு தவறாமல் செல்ல வேண்டும், எல்லா ஊழியங்களிலும் பங்கு பெற வேண்டும், சபை போதகரை கனப்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் மக்கள் வரும் பொழுது எல்லோருடைய வீடுகளுக்கும் சென்று விசாரித்து அவர்களால் ஜெபிக்க முடியாது, அதையும் நாம் தப்பாக நினைக்க கூடாது. ஒருகாலத்தில் அவர்களும், ஆத்தும பாரத்துடன் வீடு சந்தித்து, சத்தியத்தை சொல்லி, விசாரித்து ஜெபித்த படியால்தான் அவர்கள் நடத்தும் சபை அந்த அளவுக்கு வளர்ந்து இருக்கு அதனால் யாரையும் நாம் தவறாக நினைத்து விடக்கூடாது. அதே சமயம், இதுவாக இருந்தாலும், அதுவாக இருந்தாலும் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் நம்பக்கூடாது, யார் சரியானவர்கள் என்பதை வேத வசனத்தின் வெளிச்சத்தில் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் போலிகளும் உண்டு, அதை சரியாக அறிந்து கொள்ள வேண்டும்’’ என்று சொல்லி விட்டு, பட படப்புடன்,
“சரி ரொம்ப நேரமாகிவிட்டது, நான் போயிட்டு வருகிறேன். பிறகு பார்க்கலாம்.’’ என்று சொல்லியபடியே வித்யா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“சரி’’ என்று சொல்லி விட்டு, வித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். கவிதா.

1 comments:

  1. தேவனுடைய பார்வையில் எல்லா ஊழியர்களும் சமமே

    ReplyDelete

விடை தேடும் கேள்விகள்