கானான் சபிக்கப்பட்டது ஏன்?
வேதாகமத்தை வாசிக்கும் போது நமக்குள்ளாக கேள்விகள் எழுவது
இயற்கையே, கேள்விகள் வந்தால்தான் நாம் சரியாக வேதாகமத்தை கவனித்து வாசிக்கிறோம்
என்று பொருள். கேள்விகள் வரலாம், அதே வேளையில் சந்தேகம் வரக்கூடாது. தவறுதலாக
புரிந்து கொள்ளக்கூடாது. தனக்கு புரியாதவைகளை இல்லை என்றும் சொல்லக் கூடாது.
வெள்ளத்தினால் உலகம் அழிந்த பிறகு, புதிய பூமியில் முதல்
குடும்பமான நோவாவின் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை குறித்து இந்த செய்தியில்
பார்க்கலாம்.
ஒரு நாள் நோவா “திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம்
விலகிப் படுத்திருந்தான்’’ (ஆதி 9:21) என்று வாசிக்கிறோம்.
தேவ கிருபை பெற்ற தேவ மனிதன்.
புதிய பூமியில் புதிய மனிதன் நோவா, குடித்து, வெறிக்கிறவனா? வேதாகமம் இதை
அனுமதிக்கிறதா? என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் எழும்பும். இந்த கேள்விகளுக்கெல்லாம்
வேதாகமத்தின் மூலம் கிடைக்கும் பதில் தேவ மனிதன் நோவா குடித்து வெறிக்கிறவன் இல்லை
என்பதுதான்.
எப்படி என்றால், நோவா நாட்களில்
இரவும் பகலும் 40 நாட்கள் தொடர் மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்ப்பட்டது என்று
வேதம் நமக்கு கூறுகிறது.
ஆனால் அதற்கு முன்பாக மழையையே
மக்கள் பார்த்தது இல்லை. ஏன் என்றால் மழை பெய்யவில்லை. “அப்பொழுது மூடுபனி
பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது’’ (ஆதி 2:6) என்று வேதம்
கூறுகிறது. நோவா நாட்கள் வரை பூமியில் மழை பெய்யாமல், மூடு பனிதான் பூமியை
நனைத்தது.
அதே போல், நோவாவின் நாட்களில்
நடந்த வெள்ளப்பெருக்கிற்கு முன், சீதோஷண நிலை மாறி மாறி இருக்க வில்லை.
உலகமெங்கும் ஒரே சீதோஷண நிலைதான் இருந்திருக்கிறது.
நோவாவின் நாட்களில் பெய்த மழைக்கு
பின்புதான் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. சீதோஷண நிலை
மாற்றத்தை உணராத நோவா எப்போதும் போல் திராட்சைரசத்தைக் குடித்த போது, அதன் தன்மை
மாறி, கிரு கிருப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நோவா தெரிந்து அதை குடிக்காமல்,
தெரியாமலேயே அதைக் குடித்திருக்கலாம். வேதம் எந்த காலத்திலும் மனிதன் தன்னுடைய சுய
சிந்தையை இழக்கச் செய்யும் போதை வகைகளை அனுமதிக்க வில்லை.
சீதோஷண நிலை மாறுபாட்டால் திராட்சைரசத்தில்
உண்டான புளிப்பு தன்மை நோவாவுக்குள் போதையாகி, வெறிக்க செய்திருக்கலாம். அந்த
நிலையில் சுய நினைவு அற்றவனாக நோவா தான் அணிந்து இருந்த உடை விலகி இருப்பது கூட
தெரியாமல் படுத்திருக்கையில்தான்
நோவாவின் இளைய குமாரன் காம்,
தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைக் கண்ட போது அது அவனுக்கு வேடிக்கையாகவும்,
விநோதமாகவும் இருக்க, தன்னுடைய சகோதரர்களுக்கும் அதை வேடிக்கையாக அறிவித்து, பரியாசம்
பண்ணுகிறான்.
ஆனால் நோவாவின் மற்ற பிள்ளைகளோ,
அதை பரியாசம் பண்ணாமல், தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தை காணக்கூடாது என்பதற்காக
பின்னிட்டு சென்று, நோவாவின் நிர்வாணத்தை மூடினார்கள் என்று வேதம் கூறுகிறது.
மனிதனின் சிறு குறைகளையும்,
மதியீனத்தையும், வேதம் ஏன் சுட்டி காட்டுகிறது என்றால், இப்படிப்பட்ட செயல்களை
செய்யக்கூடாது என்று வலியுறுத்தி திருஷ்டாந்தமாகவே எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செயலுக்கு நவீன கால
வேத வியாக்கியானிகள் பல வடிவங்களை கொடுத்து, அருவெறுக்கத்தக்க விதத்தில் வியாக்கியானம்
செய்கிறார்கள். எப்படியெனில் நோவாவுடன், ஓரின சேர்க்கையில் காம் ஈடு
பட்டிருக்கலாம் ஆகையால்தான் நோவா சாபம் கொடுத்தான். அப்படி செய்யாவிட்டால் சாதாரணமாக
நோவா எப்படி சாபம் கொடுத்திருப்பான் என்றும், மறைவானவைகளை கர்த்தர் எங்களுக்கு
வெளிப்படுத்தினார் என்றும், வேதாகம சம்பவங்களுக்கு விரோதமாக வியாக்கியானித்து.
விசுவாச வாழ்வில் உள்ள மக்களை வழி விலக செய்ய பிசாசினால் ஆளப்படுகிறவர்கள். அப்படிப்பட்ட பொல்லாதவர்களை வேத சத்தியங்கள் மூலம் விசுவாச
மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அப்படிப்பட்டவர்களை விட்டு விலகவும் வேண்டும்.
இப்படி வேதாகமத்திற்கு விரோதமாக
வியாக்கியானம் செய்யும் நபர்கள் தப்பாகவே வியாக்கியானம் செய்கிறார்கள் என்பதற்கு
ஆதாரம் என்னவென்றால், தன் தகப்பனோடு தகாத உறவில் காம் ஈடுபட்டிருப்பானால், அதை
எப்படி தன் சகோதரர்களுக்கு அறிவித்திருப்பான். தான் செய்த தவறை ஒருவன் மறைக்கதான்
பார்ப்பான். மாறாக அதை வெளிப்படுத்த மாட்டான். எனவே இங்கு தன் தகப்பனின் நிலையை
ஏளனம், செய்து பரியாசம் செய்த செயலாகவே வேதம் திட்டமாக விவரிக்கிறது.
எனவே அப்படிப்பட்ட
வியாக்கியானங்கள் முழுக்க முழுக்க வேதாகமத்திற்கு புறம்பாகவும், விரோதமாகவும்
இருக்கிறது.
இங்கு தன்னுடைய நிர்வாணத்தைக்
கண்டு, மறைக்காமல், அதை தூற்றி மற்ற சகோதரர்களுக்கும் அறிவித்து, தகப்பனுக்கு
கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்க தவறிய கானானின் சந்ததி நோவா மூலம்
சபிக்கப்படுகிறது என்பதுதான் வேதாகம உண்மை.
மேலும் காம் செய்த தவறுக்கு,
கானான் ஏன் சபிக்கப்பட்டான் என்பது மற்றுமொரு கேள்வி.
“நோவா திராட்சரசத்தின் வெறி
தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில்
அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்’’ (ஆதி 9:24,25)
தனக்கு நேர்ந்தது என்ன என்பதை
அறியாமல் நிர்வாணமாக படுத்திருந்த நோவா, எழுந்த பின் தனக்கு சம்பவித்த
எல்லாவற்றையும் அறிந்து, ஏன் தவறு செய்த தன்னுடைய மகனை சபிக்காமல், கானானை சபிக்க
வேண்டும்.
வேதம் காமை அடையாளப்படுத்தும்
போது, “கானானுக்குத் தகப்பனாகிய காம் ‘’ என்று 22 ம் வசனத்தில் அறிமுகப்படுத்துவதை கவனிக்க வேண்டும். அப்படியானால் அந்த
நாட்களில் நோவாவின் பிள்ளைகளும் அவர்களுக்கு பிள்ளைகளும் பிறந்து மக்கள் திரளாகி
விட்டார்கள்.
எப்போதும் நாம் வேத வசனத்தை
வாசிக்கையில் ஒருசில வேத பகுதியில், ஒரு வசனத்திற்கும், அடுத்த வசனத்திற்கும் பல
வருட இடைவெளிகள் இருப்பதை அறிந்து வாசிக்க வேண்டும்.
அப்படிதான் இந்த சம்பவத்திலும்
காணப்படுகிறது. நோவாவின் குடும்பம் பேழையை விட்டு இறங்கி பல ஆண்டுகளுக்குப் பின்
இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
காம் பிள்ளைகள் பெற்று, காமின்
மகன் கானானுக்கும் பிள்ளைகள் பிறந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆகவேதான் காம் செய்த செயலுக்கு
காமை மட்டும் சபிக்காமல், கானான் முதல் அவன் சந்ததி முழுவதையும் நோவா சபிக்கிறான்.
தகப்பனின் சாபம் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளையும் தொடரும் என்று வேதம்
கூறுகிறது. யாத் 20:5, யாத் 34:7) .(ஆனாலும் அந்த சாபமும் பின்நாட்களில் இயேசு
கிறிஸ்துவினால் உடைக்கப்பட்டது. அல்லேலூயா)
நோவா கொடுத்த சாபம், தகப்பன்
செய்த பாவம், அவன் தலைமுறையை பாதிக்கும் என்பதை காண்பிக்கிறது. ஒருவன் பாவம்
செய்தால் அந்த பாவம் அவனோடு முடிந்து விடாமல், எப்படி அவன் சந்ததியே
பாதிக்கப்படுகிறது என்பதை அறியத்தருகிறது.
அதேவேளையில் “சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.யாப்பேத்தை தேவன்
விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய
கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்’’ (ஆதி 9:26,27).
தகப்பனுடைய நிர்வாணத்தை பரியாசம்
பண்ணாமல், அதை பார்க்க துணியாமல், பின்னாக சென்று மூடிய காமின் சகோதரர்களின்
சந்ததி ஆசீர்வாதம் பெறுகிறதையும், ஆசீர்வாதமாக வாழ்வதையும், அது மட்டுமல்ல, உலக
இரட்சகரை உலகத்திற்கு கொடுத்த பாக்கியமுள்ள சந்ததியாகவும் விளங்கியதை நாம்
மறக்கலாகாது.
மற்றவர்களை இழிவு படுத்தவும்,
பரியாசம் செய்யவும் முற்படுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் தலைமுறைக்கே
சாபத்தை சம்பாதிக்கிறார்கள்.
விளையாட்டைப்போல காம் செய்த தவறு,
சரித்திரத்தில் அவன் சந்ததி சாபமாக்கப்பட காரணமாகி விட்ட வரலாறுதான் இவைகள்.
0 comments:
Post a Comment