சீர்திருத்தம் எங்கிருந்து....
இக்காலத்தில் சீர்திருத்தம் பேசுகிறவர்களுக்கோ, சீர்திருத்தவாதிகளுக்கோ
பஞ்சமில்லை. இத்தனை சீர்திருத்தவாதிகள் இருந்தும், சீர்திருத்தம் எங்கே? என்று
தேவன் கேட்கும் கேள்வி காதில் விழுகிறதா?
வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானாலும், பவுலானாலும், மற்ற
அப்போஸ்தலர்களானாலும், சீர்திருத்தம் பேசுகிறவர்களாக மட்டும் இல்லை. சீராக
வாழ்ந்தார்கள்.
இயேசுவைப்போல் சாட்டை எடுக்க இன்று அநேகர் தயார். இயேசுவைப்போல் வாழ அவர்கள் தயாராக
இல்லை. பவுலைப்போல் பிரம்பை எடுக்க எல்லோரும் தயார். ஆனால் பவுலைப்போல் வாழ
அவர்களுக்கு விருப்பம் இல்லை.
இத்தனை ஆண்டுகாலம் சீர்திருத்தத்தை குறித்து பேசியவர்கள் சீராகி
இருப்பார்களானால் சீர்திருத்தம் என்றோ உதயமாகி இருக்கும், இன்னும் உதயமாகாமல்
மங்கி கிடப்பதன் காரணம் என்ன? சீர்திருத்தம் பேச தயார், ஆனால் சீராக வாழ தயாரில்லை
ஆகையால்தான்.
தன்னைத்தான் முதலாவது சீர்தூக்கி பார்க்கிறவர்கள் என்று எழும்புகிறார்களோ,
அன்றைக்கு இந்த தேசமும், கிறிஸ்தவமும் சீராகும்.
“நீ சீராகாமல் யாரை சீர் திருத்தம் செய்யப்போகிறாய். நீ ஒழுங்காகாமல் யாரை
ஒழுங்கு படுத்தப்போகிறாய்? நீ மாறாமல் யாரை மாற்றப்போகிறாய்? நீ என்னுடைய
வார்த்தையை கேட்காமல், யாருக்கு போதிக்க போகிறாய்? என்று வேதாகமமும், இயேசு
கிறிஸ்துவும் கேட்பது காதில் விழுகிறதா?
தனக்கொன்றும் ஊருக்கொன்றும் என்று வேதாகமம் நமக்கு போதிக்க வில்லையே,
மற்றவர்களை குற்றம்பிடிக்க ஒரு ஊழியத்தை தேவன் ஏற்படுத்த வில்லையே, மற்றவர்களை
குற்றவாளிகளாக தீர்க்க ஒருவருக்கும் தேவன் பொறுப்பு கொடுக்க வில்லையே.
உன்னை மாதிரியாக காண்பி, நீ மாதிரியாக இரு, என்றுதானே வேதம் சொல்லுகிறது.
மாதிரிகளாக நிற்க அழைக்கப்பட்டவர்களே, அதற்காக பொறுப்புக்களை பெற்றுக்கொண்டவர்களே,
அதற்காக நியமிக்கப்பட்டவர்களே, தன்னைப் பற்றி கவலைப்படாமல், தன்னுடைய வாழ்வை
மாற்றாமல், முன்மாதிரியான வாழ்வை அமைத்துக்கொள்ளாமல், யாருக்கு வேண்டும் உன் சீர்திருத்த
பேச்சு என்று ஆவியானவர் சொல்லும் வார்த்தைகள் காதில் விழுகிறதா? விழாது, ஏன்
என்றால் புகழ்ச்சி காதை அடைத்திருக்கிறது. கர்வம் காதை அடைத்திருக்கிறது. பரிதாபம்!
பரிதாபம்!!
சீராக வாழாதவனின் சீர்திருத்த வார்த்தைகள் குப்பை, குப்பை. அது எரிப்பதற்கு
மட்டுமே பயன்படும், ஒருவரையும் மாற்றுவதற்கு பயன்படாது. வாழ்க்கையில் அலங்காரம்
இல்லாதவன், வார்த்தையில் அலங்காரம் இருந்து பயன் இல்லை. வார்த்தை ஜாலம் மனிதனை
ஏமாற்றலாம், மனித வாழ்வை மாற்றாது.
உணர்ச்சி மிக்க வார்த்தைகள் மட்டும், ஒருவரையும் உருவாக்கி விடாது. உண்மை
மிக்க வாழ்வில் இருந்து புறப்படும் வார்த்தைகள்தான் ஊன்ற கட்டும்.
பானம் நன்றாக இருந்தாலும் பயன்படும் பாத்திரம் சரியாக இருந்தால்தான், அதை
பயன்படுத்த முடியும். அதன் மூலம் பயன் உண்டாகும், குப்பை குப்பையை மட்டுமே
உருவாக்கும், மாய்மாலம் மாய்மாலத்தை மட்டுமே உருவாக்கும். உண்மையோ, உண்மையை
உருவாக்கும், உண்மை மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும்.
சத்தங்கள் அல்ல, சத்தியங்களே, சத்தானவர்களை உருவாக்கும். மற்றவர்களை குறை பாட
புறப்பட்ட குப்பைகளால் தேசமும், திருச்சபையும் இன்று பாழ் படுத்தப்பட்டுள்ளது.
குறை பாடுவதற்காகவா கூட்டங்கள்.
உண்மை சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கை போதும் அநேகர் சீர் அடைவதற்கு.
கிறிஸ்துவில் வாழவும், அவர் அடிச்சுவட்டில் நடக்கவுமே அழைப்பு. இன்று கிறிஸ்துவை
நோக்கி கை காட்டும் கை காட்டி மரங்கள் அதிகம் இருக்கின்றன. அதற்கும்
கிறிஸ்துவுக்கும் சம்மந்தம் இல்லை.
சத்தியத்திற்கு எதிரானவைகளை சத்தியத்தின் மூலம் அடையாளப்படுத்தும்
சத்தியவான்கள் எங்கே என்று கேட்கும் கிறிஸ்துவின் வார்த்தைகள் காதில்
விழுகின்றனவா?
விழுந்தவர்களை தூக்கி விடுவது மட்டும்தான் கிறிஸ்துவின் பணி, விழுந்தவர்களை
தோலுரித்து காட்டப்போகிறேன் என்று சொல்லுகிறவர்கள் செய்யும் பணி யாருடைய பணி?
நியாயத்தீர்ப்பை
சொல்லி, இரட்சிப்புக்கு நேராக நடத்தும் இரட்சிப்பின் சுவிசேஷமே கரத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது. சுவிசேஷத்தை சொல்லி நியாயம் தீர்த்து அழிக்க சொல்லும்
அதிகாரம் யார் கொடுத்தது?
இதெல்லாம் நவீன சீர்த்திருத்தவாதிகளால் தயார் செய்யப்பட்ட புதிய திருப்புதலோ?
உடைக்க அல்ல, ஊன்ற கட்டவே, இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும்,
செயல்பட்டார்கள். இக்கால உண்மை ஊழியர்களும் செயல்படுகிறார்கள்.
உடைப்பது மட்டுமா? ஊழியம். இல்லை. இல்லை. உருவாக்குவதே ஊழியம். காயப்படுத்துவதா?
ஊழியம் இல்லை, இல்லை காயம் கட்டுவதே ஊழியம்.
பாவி என்று விரட்டுவதா ஊழியம்? இல்லை. பாவத்தில் இருந்து விடுதலை கொடுக்க
இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்று அவரிடம் அனுப்புவதே ஊழியம்.
தன்னை காண்பிப்பதா ஊழியம்? இல்லை, இல்லை, இயேசுவை காண்பிப்பதே ஊழியம்.
மற்றவரை குற்றப்படுத்துவதா ஊழியம்? இல்லை, இல்லை. சத்தியத்தை சரியாக
அறிவிப்பதே ஊழியம்.
கிறிஸ்துவின் அன்பை காற்றில் பறக்க விட்டு விட்டு, அனலை மட்டும் கக்கி
பயனில்லை.
சக மனிதனை நேசிக்க தெரியாதவன், கிறிஸ்துவின் அன்பை சொல்ல புறப்பட்டது, முகவரி
இல்லா ஊருக்கு பயணம் சென்ற மனிதனுக்கு ஒப்பாக இருக்கும்.
நேசத்தின் மூலம், கிறிஸ்துவின் அன்பின் மூலம் வருவது ஊழியம். வைராக்கியத்திலும்,
மூர்க்கத்திலும் வருவது ஊழியமா?
நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் மற்றவன் சரியாக இருக்க வேண்டும்
என்பது வேடிக்கையாக இல்லையா?
தலை அறிவில், பரலோக பயணம் புறப்பட்டவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.
தனக்கென்று ஒரு நியாயம், தனக்கென்று ஒரு நீதி, தன்னைப்போல் யாரும் இல்லை என்ற
கர்வம், நானே சிறந்தவன் என்ற பெருமை இவைகள் எல்லாவற்றிற்கும் வேதம் கொடுக்கும்
பதில் என்ன? என்பதை அறிந்து கொள்ளலாமே.
குற்றப்படுத்துவதும், மட்டுப்படுத்துவதும் யார் வேலை? ஒருவனுமே சரியில்லை
என்று யார் சொல்ல முடியும்? அப்படி சொன்னால் அதற்கு என்ன பெயர்?
கிறிஸ்துவுக்குள்ளாக தனி மனித மாற்றமும், தனி மனித எழுச்சியுமே, ஒட்டு மொத்த
மாற்றமாகவும், எழுச்சியாகவும் இருக்க முடியும். மாறவேண்டியது மற்றவர் அல்ல,
முதலாவது நான் என்ற எண்ணம் எனக்கு வராவிட்டால் நானும் மாய் மாலக்காரனே.
இந்த எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும். கிறிஸ்துவின் சுவிசேஷம்
முதலாவது மாற்றுவது தனி மனிதனையே, தனி மனிதனில் துவங்கி ஒட்டுமொத்த உலக
மனிதர்களையும் அது மாற்றும். அந்த மாற்றம் என்னில் இருந்து ஆரம்பிக்க நான் என்னை
அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லுகிற தனி மனிதனின் குரலை கேட்கவே தேவன் தமது செவியை
கூர்மையாக்கி வைத்திருக்கிறார்.
நான் பாவி நான் மாறவேண்டும், என்னில் இன்னும் மாற்றம் உண்டாக வேண்டும், நான்
தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும், தேவன் விரும்பும் பரிசுத்தம் என்னில் காணப்பட
வேண்டும்.
கிறிஸ்துவில் நாளுக்கு நாள் நான் வளர வேண்டும், சாட்சியாக இருக்க வேண்டும். என்னில்
இருந்து பரிசுத்த அக்கினி எல்லோரையும் பற்றி பிடிக்க வேண்டும். தேவனே என்னை
சீர்திருத்தம் செய்யுமே என்று முழுமையாக அர்ப்பணிக்கிறவர்களே சீர்திருத்தவாதிகள்.
எனவே கிறிஸ்துவைப் போல் சாட்டை எடுப்பவர்கள் அல்ல, கிறிஸ்துவுக்குள் சாட்சியாக
வாழ்பவர்களே அவசியம்.
கிறிஸ்துவின் சாட்டையை எடுத்து தன் மேல் சுழட்டுகிறவர்களையே தேவன்
எதிர்பார்க்கிறார். மற்றவர்களை நியாயம் தீர்க்கிறவர்கள் அல்ல, தன்னைத்தான் நியாயம்
தீர்க்கிறவர்களையே தேவன் தேடுகிறார்.
கிறிஸ்தவம் மதம் அல்ல,
வாழ்வியல் முறை. கிறிஸ்துவில் வாழ்பவனே, கிறிஸ்தவன்.
கிறிஸ்தவம் பெயரில் இல்லை. கிறிஸ்தவம் அடையாளத்தில் இல்லை. கிறிஸ்தவம் மனிதனின் வாழ்க்கையில் இருக்கிறது. அந்த வாழ்க்கை முறையில் கிறிஸ்துவின் சாயல் வெளிப்பட வேண்டும்.
கிறிஸ்தவம் பெயரில் இல்லை. கிறிஸ்தவம் அடையாளத்தில் இல்லை. கிறிஸ்தவம் மனிதனின் வாழ்க்கையில் இருக்கிறது. அந்த வாழ்க்கை முறையில் கிறிஸ்துவின் சாயல் வெளிப்பட வேண்டும்.
இந்த மாற்றம்தான் தேவன் விரும்பும் மாற்றம், இந்த மாற்றம்தான் தேசத்தின்
மாற்றம். இந்த மாற்றம்தான் உலகத்தின் மாற்றம். இதுதான் கிறிஸ்துவின்
சீர்திருத்தம். இதுதான் கிறிஸ்தவத்தின் சீர்திருத்தம்.
இது எந்த ஒரு
தனிமனிதரையும் தாக்குவதாக யாரும் எடுத்துக்கொள்ளாமல், தன்னிடம் உள்ள குறைகளை
நீக்குவதற்காக மட்டுமே.
(வெளிப்படையாக சொல்ல
வேண்டுமானால், இதை மறுபடி நான் வாசித்தால் எனக்காகவும்தான்)
0 comments:
Post a Comment