Bread of Life Church India

எனக்கு எந்த ஆபத்தும் இல்லை



 அழகிய பண்ணை, வீடு சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் அழகிய வயல்கள். அந்த பண்ணை வீட்டில் வெகு நாட்களாக உலாவி வந்த ஒரு எலி சமையலறையில் எலிபொறியைப் பார்த்துவிட்டது.    

             "ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்தில் ஓடிச் சென்று தனக்கு நெருங்கிய நண்பனான அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று மூச்சிறைக்க நின்றது.
      “என்ன எலியாரே, என்ன சங்கதி, இவ்வளவு வேகமாக ஓடி வந்து மூச்சிறைக்க வந்து நிற்கிறீர்’’ என்று கோழி கேட்டது.
ஓடி வந்த களைப்புடனே மூச்சிறைக்க "சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது, சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது’’ என்று திக்கி தினறி சொல்லியது.    அதைக் கேட்ட கோழி “ஆஹா எலியாரே இனி உமது பாடு திண்டாட்டம்தான் போல’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் சொல்லியது. “என்ன கோழியாரே இவ்வளவு பெரிய விசயத்தை சொல்லுகிறேன், நீங்க மிக சாதாரணமாக பேசுகிறீர்களே’’ என்று மிகவும் பட படப்புடன் பேசியது.

“என்ன எலியாரே, நான் ஏன் பதட்டப்பட வேண்டும். எலிப்பொறிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம், அது எனக்காகவா  வைக்கப்பட்டது அதைக்குறித்து . எனக்கென்ன?"  நான் ஏன் வருத்தம் அடைய வேண்டும்’’ என்று சொல்ல, தனக்கு  உதவி செய்ய கோழி வரும் என்று நம்பிக்கையோடு வந்த எலி ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது.
       இப்படி கோழியார் நம்மை கை விட்டு விட்டாரே, என்ற வருத்ததில் சென்று கொண்டிருந்த  எலிக்கு தன்னுடைய இன்னொரு நண்பணான பன்றி நினைவுக்கு வர, “கட்டாயம் பன்றி நமக்கு உதவி செய்யும்’’ என்ற எண்ணத்துடன், பன்றி இருந்த இடம் நோக்கி ஓட ஆரம்பித்தது.
      எலி வேகமாக ஓடி வருவதை தூரத்தில் பார்த்த பன்றி, “என்ன! என்றும் இல்லாத வேகத்தில் எலியார் இப்படி ஓடி வருகிறாரே, என்னவாக இருக்கும்’’ என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே எலி அருகில் வந்து விட்டது.
“வாங்க எலியாரே, என்ன இந்த வேகத்தில் வந்திருக்கிறீர்கள், நீங்கள் வந்த வேகத்தைப் பார்த்தால் எதோ அவசர செய்தியை கொண்டு வந்தது போல் இருக்கிறது. சீக்கிரமாக சொல்லுங்கள்’’ என்று எலியையே பன்றி பார்த்துக்கொண்டிருந்தது.
சிறிது மூச்சு வாங்கி விட்டு பன்றியாரே, பன்றியாரே, நீர் எனது நல்ல நண்பன்தானே’’
“என்ன எலியாரே, அதில் என்ன சந்தேகம், நாம் நல்ல நண்பர்கள்தான், இதைக்கேட்கவா? இவ்வளவு வேகமாக ஓடி வந்தீர்’’
“இல்லை, இல்லை பன்றியாரே, "சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது’’ அதைப் பார்த்துதான் நான் பயந்து ஓடி வந்து உம்மிடமும் சொல்ல வந்தேன்’’ என்று சொன்னது.
அதைக்கேட்ட பன்றி, “ஆஹா ஆஹா’’ என்று சிரித்துக்கொண்டே, அதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம், எலியாரே, உம்மைப் பிடிக்க வைக்கப்பட்டிருப்பது எலி பொறி. நீர் பயந்ததில் நியாயம் இருக்கிறது. இதை ஏன் என்னிடம் சொல்ல வந்தீர்’’ என்று எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் பேசியது.
“என்ன பன்றியாரே, நீர் எனது நண்பன் எனக்கு எதாவது உதவி செய்வீர் என்றுதானே, உம்மிடம் வந்தேன் நீர் இப்படிச் சொல்லி விட்டீரே’’ என்று மிகவும் வேதனையுடன் கேட்டது.  “நீர் சொல்லுவது சரிதான் எலியாரே, ஆனால் நான் என்ன உதவி செய்ய முடியும், மேலும் அந்த எலிப்பொறியினால் எனக்கு எந்த பாதகமும் இல்லை, இப்போது எனக்கு வேறு வேலை இருக்கிறது, பிறகு பார்க்கலாம் என்று, எலியின் பதிலைக்கூட கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது பன்றி.
ஒரு நிமிடம் பூமியே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது எலிக்கு. “நாம் நம்பியவர்கள் எல்லோரும் இப்படி கை விட்டு விட்டார்களே, என்ன செய்வது என்று நடை தளர்ந்து சென்றது. அப்பொழுதுதான், அதற்கு இன்னொரு யோசனை வந்தது.
தன்னுடைய நண்பர்களிலேயே ஆடுதான், மிகவும் நல்ல நண்பன், ஆட்டிடம் எனது நிலையை சொன்னால், கட்டாயம் புரிந்து கொண்டு, எனக்கு எப்படியாவது உதவி செய்யும், என்று ஆடு கட்டி இருந்த இடத்தை நோக்கி விரைந்தது

எலியை கண்ட ஆடு, “வாங்க எலியாரே, என்ன இந்த பக்கம், இப்போதுதான் வழி தெரிந்ததா? வெகுநாட்கள் இந்த பக்கமே காணோமே’’ என்று கேட்க, வந்த விஷயத்தை எலி விரிவாக எடுத்துச் சொன்னது. அதைக்கேட்ட ஆடு, “அடடா! இப்படிப்பட்ட ஆபத்தில் நீர் சிக்கிக் கொண்டீரே, ஆனால் நான்தான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன், மேலும் அந்த எலி பொறியினால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்று, எலி உதவி கேட்பதற்கு முன்பாகவே, ஆடு நழுவுவதைக்கண்டு, இதற்கு மேல் இதனிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதை அறிந்த எலி மயங்கி விழாத குறையாக நடக்க ஆரம்பித்தது.
வேறு என்ன செய்வது என்று புரியாமல் நடந்த எலிக்கு அந்த பண்ணையில் இருந்த காளைமாடு நினைவுக்கு வர, இந்த  பண்ணையிலேயே மிக பெரிய ஆள்  காளை மாடுதான் அவரும் என் நண்பர்தானே, அவரிடத்தில் சொல்லுவோம், கட்டாயம் அவர் நம்மை கை விட மாட்டார் எதாவது உதவி செய்வார். சே! முதலிலேயே அவரிடம் சென்று இருக்க வேண்டும், தேவையில்லாமல், இந்த கோழியாரிடமும், பன்றியாரிடமும் ஆட்டிடமும் சென்றது மிக பெரிய தவறு’’ என்று எண்ணியபடியே, காளை மாடு இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தது எலி.
உணவு அருந்திவிட்டு, அதை அசைப்போட்டுக்கொண்டிருந்த காளை மாடு எலி வருவதை கவனிக்க வில்லை.
மிகவும் சோகமாக காளை மாடு அருகில் வந்து நின்று, “ காளை மாடாரே, காளை மாடாரே’’ என்று கூப்பிட்டது.
கூப்பிடும் சத்தம் கேட்டு, அசைப்போடுவதை நிறுத்தி விட்டு, “என்ன எலியாரே எப்போதும் துள்ளிக்குதித்து, சந்தோஷமாக சுற்றி வருவீர், என்றும் இல்லாத அளவிற்கு இன்று இவ்வளவு சோகமாக இருக்கிறீரே, என்ன நடந்தது?’’ என்று கேட்டது.
நடந்த எல்லா சம்பவங்களையும் எலி விவரமாக சொல்லி அழுதது. எல்லாவற்றையும் மிகவும் பொறுமையுடன் கேட்ட காளை மாடு, “நீர் சொல்லுவதைக் கேட்க மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது, நீர் அதில் விழாமல் இருக்க உனக்காக வேண்டுமானால் பிரார்த்திக்கிறேன். மற்றபடி  அந்த எலிபொறியால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்று சொல்லிவிட்டது.
“இப்படி தன்னுடைய எல்லா நண்பர்களும் கை விரித்து விட்டார்களே’’ என்று அன்று இரவு முழுவதும் தூங்காமல் எலி அழுது, பயந்துகொண்டு தன் வளையில் பதுங்கிக்கொண்டிருந்தது.

       அந்த வேளையில் படீரென்று ஒரு சப்தம். எலிபொறியில் ஏதோ விழுந்துவிட்டது. அந்த சத்தம் கேட்டது முதல் இன்னும் அதிகமாக பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது எலி.
 
                அடுத்த நாள் காலை சமையலறைக்குள் சென்ற பண்ணையின் மனைவி எலி பொறியைப் பார்க்கச் சென்றாள். ஆனால் அதில் மாட்டியிருந்தது, ஒரு பாம்பு. வால் மட்டுமே மாட்டிக்கொண்டிருந்ததால் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது பாம்பு.

                மாட்டி இருப்பது பாம்பு என்பதை அறியாமல் பண்ணையின் மனைவி அருகில் வரவும் அவளுடைய காலில் பாம்பு ஒரு போடு போட்டுவிட்டது.
“ஐயோ, அம்மா,’’ என்று பண்ணையின் மனைவி போட்ட சத்ததில், அந்த பண்ணையில் வேலைபார்த்த எல்லோரும் அங்கே வந்து விட்டார்கள்.

               பாம்பு கடித்துவிட்டதை அறிந்து எல்லோரும் முதல் உதவி செய்தார்கள்.
வைத்தியரை அழைத்து வந்து  மருந்து கொடுத்தனர்.

                பண்ணையின்  மனைவியோ, மிகவும் பலவீனமாக வலி தாங்க முடியாமல் வேதனையுடன், முணு முணுத்துக்கொண்டிருந்தாள்.
தன் மனைவி படுகிற வேதனைகளை பார்க்க முடியாத பண்ணை எல்லா வைத்தியங்களையும் செய்து வந்தான்.
 
                அந்த வேளையில் பண்ணையின் மனைவியை பாம்பு கடித்து விட்டது என்பதை அறிந்த பக்கத்துப் பண்ணையில் இருந்த பாட்டி, கை வைத்தியமாக சில வேர்களையும் மூலிகைகளையும் கொண்டுவந்து, “கோழி ஒன்றை பிடித்து அடித்து கொண்டு வாருங்கள்’’ என்று சொல்ல, வேலையாள், கொல்லைப் புரத்தில் இருந்த கோழியை பிடித்து வந்து வெட்டிக் கொடுத்தான், அதை வாங்கிய பாட்டி கோழியை சூப் வைத்து. மூலிகைகளை அதில் போட்டு வேகவைத்து பண்ணை மனைவிக்குக் கொடுத்தாள்.
                பண்ணையின் மனைவியை பாம்பு கடித்த விஷயம் அவர்களுடைய சொந்த பந்தங்களுக்கு தெரிந்தது. அவளைப் பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து வந்து அவளை விசாரிக்க வந்தவர்களில்   சில உறவினர்கள் பண்ணையில் தங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு சமைப்பதற்காக பண்ணையின் சமையல்காரன் பண்ணையிடம் வந்து “ ஐயா, எல்லோருக்கும் இன்று என்ன சமையல் செய்வது’’ என்று கேட்டான். உடனே பண்ணை “இன்று பன்றியை அடித்து எல்லோருக்கும் சமையல் செய்து விடு’’ என்று சொல்லி,
சிலரைக்கூப்பிட்டு, “பன்றியை பிடித்து அடியுங்கள்’’ என்று சொல்ல, வேலையாட்கள்  பன்றியை பிடித்து அடித்தார்கள். வந்த எல்லோருக்கும் பன்றிகறி பிரட்டல், வறுவல், என்று சுவையாக சமையல்காரன் சமைக்க  எல்லாரும் சாப்பிட்டார்கள்.


                        சிறிது நாளில் பண்ணையின் மனைவி குணமானாள். தன்மனைவி குணமானதும் பண்ணைக்கு மிகுந்த மகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக  ஊரையே கூட்டி எல்லோருக்கும் விருந்து வைக்க வேண்டும் என்று தீர்மானித்து, எல்லோரையும் அழைத்தான்.
            வந்த எல்லோருக்கும் சிறப்பாக உணவு வகைகள் தயார் செய்ய வேண்டும் என்று சொல்ல, சைவத்தில் எல்லா வகைகளும், அசைவத்தில் எல்லா வகைகளும் தயார் செய்யப்பட்டன.
அசைவத்திற்காக காளை மாட்டையும், ஆட்டையும் பிடித்து, வெட்டி சமைத்தார்கள். விருந்து அமர்க்களமாக நடந்தது.


               இவைகள் எல்லாவற்றையும் தன்னுடைய வளையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி, தன் நண்பர்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு வருந்தி கண்ணீர் விட்டது.

பிரியமானவர்களே, இந்த கதையில் வரும் சம்பவங்களை கவனித்தீர்களா? எனக்கென்ன என்றும், எனக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று சொல்லி ஒதுங்கிய கோழிக்கும், பன்றிக்கும், ஆடுக்கும், காளைமாட்டிற்குமே ஆபத்து வந்தது.

எனவே அநீதிகளை கண்டு,  எனக்கென்ன என்று நாம் இருந்தால் அந்த ஆபத்தில் ஒருநாள் நாமும் சிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இன்று ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டும் காணாதது போல இருந்து விட்டால் நாளை அப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

மற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை நமது பிரச்சனையாக நாம் பார்க்கா விட்டால் அந்த ஆபத்திற்கு சிக்கிக்கொள்ள வேண்டிய நிலை உண்டாகிவிடும். 

மேலும், வேதாகம சத்தியங்களை அறிவிக்காதபடிக்கு, இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை சொல்லாதபடிக்கு யாரோ, சொல்லட்டும், எனக்கென்ன என்று நாம் இருந்தால் அதனுடைய விளைவுகளை நாமே சந்திக்க வேண்டி வரும்.

இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்பதை அறிவித்து சத்தியத்தை சொல்லி, இக்கடைசி நாட்களில் நடக்கும் ஆபத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லி, போதை வஸ்துக்களுக்கும், விபச்சாரத்திற்கும், மூடப் பழக்க வழக்கத்திற்கும் இன்னும் அநேக அடிமைத்தனத்தில் சிக்கி இருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு, எச்சரிக்காவிட்டால், அதன் விளைவுகளை நாமே சந்திக்க வேண்டியது வரும் எனவே, சத்தியத்தை சொல்லி எச்சரிப்போம். சுவிசேஷத்தை அறிவிப்போம். விடுதலைக்காக ஜெபிப்போம்.

0 comments:

Post a Comment