Bread of Life Church India

முடிவல்ல...துவக்கம்
பிரியமானவர்களே, தெய்வீக அன்பும், தேவ கிருபையுமே நம்மை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதமும் தேவனுடைய ஆசீர்வாதமான வார்த்தையின்படி கர்த்தர் உங்களை வழிநடத்தப்போகிறார்.
இந்த மாதத்தின் விசேஷித்த ஆசீர்வாத வசனம் இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?’’ (எரேமியா 32:27).
இந்த வசனத்தை நாம் கவனித்து வாசித்தால் தேவன் நம்மிடத்தில் கேட்கும் கேள்வியை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நாம் பல நேரங்களில் நம்முடைய கஷ்டங்களையும், நம்முடைய வேதனைகளையும் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் தேவனுடைய மகத்துவங்களையும், அவருடைய வல்லமையையும் குறித்து பேச மறந்து விடுகிறோம்.  சூழ்நிலைகளை காரணமாக வைத்து, எல்லாவற்றையும் கணக்கு பார்க்கிறோம்.
ஆகையால்தான் கர்த்தர் என்னால் செய்ய முடியாதவைகள் எதாவது இருக்கிறதா?’’ என்று கேட்கிறார். அன்பான தேவனுடைய பிள்ளைகளே, கடந்த நாட்களில் நம்முடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளை வைத்து இனியும் எல்லாம் அப்படித்தான் நடக்கும் என்று தவறான கணக்குகளை உங்களின்  மனதில் போட்டு வைத்திருந்தால் அவைகளை இப்போதே நீக்கி விடுங்கள். காரணம் இந்த மாதத்தில் கர்த்தர் கொடுத்திருக்கும் வார்த்தையின் படி நம்மை நடத்தப்போகிறார்.
அவர் அதிசயமானவைகளை செய்யப்போகிறார். எனவே நாம் கலங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
பலவிதமான பாடுகள் வேதனைகள் மத்தியில் யோபுவிற்கு தேவன் பதில் கொடுத்த பின் யோபு சொல்லுகிறார்; தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’’ (யோபு 42:2).
அது போல நம்மைக்கொண்டு கர்த்தர் செய்ய நினைத்திருக்கும் செயல்களை ஒருவராலும் தடைசெய்ய முடியாது. உங்கள் செயல்களை முடக்கும்படியாக உங்கள் உயர்வை தடுக்கும்படியாக உங்களுக்கு எதிராக சத்துருவானவன் பலவித தந்திரங்களை செய்து உங்களுக்கு எதிராக வந்திருக்கலாம், ஆனால் இந்த மாதத்திலே  கர்த்தருடைய வார்த்தையின் படி கர்த்தர் உங்களைக் கொண்டு செய்ய நினைத்த காரியங்களை இனி அவனால் தடைசெய்ய முடியாது.
கர்த்தரின் கரம் உங்கள் மேல் இறங்கி வருகிறது. முழு இருதயத்துடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் விசுவாசம் வைத்து அவரையே நோக்கிப் பாருங்கள். இதுவரை இருந்த எல்லா தடைகளையும் கர்த்தர் மாற்றப்போகிறார்.
அதிசயங்களை செய்து உங்களை உயர்த்தப்போகிறார், இதுவரை நீங்கள் அனுபவித்த எல்லா கஷ்டங்களிலிருந்தும் உங்களை விடுவித்து உங்கள் வேதனைகளை நீக்கி, உங்களுக்கு அற்புதம் செய்யப்போகிறார்.
இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த கடன் பாரங்கள், இதுவரை வீண் பழிசொற்களினால் நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களை விடுவித்து நிறைவான தமது நன்மையினால் கர்த்தர் நிறைத்து நடத்தப்போகிறார். விசுவாசத்துடன் ஜெபித்து பெற்றுக்கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிக்கிறார்.
எப்படிப்பட்ட அதிசயங்களை கர்த்தர் செய்யப்போகிறார் என்பதை வேதவசனத்தின் மூலமாக தொடர்ந்து பார்க்கலாம். தேவன் நமக்கு உதவி செய்வாராக.
முடிந்து போனதை துவக்கப்போகிறார்.
ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.’’ (ஆதி 18:11).
ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் குழந்தையில்லை, அவர்கள் வயது சென்ற முதியவர்களாய், அது மட்டுமல்ல இனி குழந்தை பெற்றுக்கொள்வதற்கு எந்தவிதத்திலும் தகுதி இல்லாதவர்களாய் எல்லாம் முடிந்து போன நிலைக்கு வந்து விட்டார்கள்.
அப்படிப்பட்ட நேரத்தில்தான்  தேவன் ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்’’ (ஆதி 18:10). என்று அவர்களுக்கு வாக்கு பண்ணுகிறார்.
அதைக்கேட்டதும் சாராளுக்கு சிரிப்பு வந்து விட்டது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ'' (ஆதி 18:12)  என்று கேட்கிறாள்.
அவளுடைய கேள்வியிலும் உலக கண்ணோட்டத்தின் படி பார்த்தால் நியாயம் இருப்பது போல்தான் தெரியும், ஏன் என்றால் எல்லாம் முடிந்து போன நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.  பட்ட மரம் பூக்குமோ, என்பது போல் அவர்களுடைய சூழ்நிலையும் இருக்கிறது.
ஆனால் அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்’’ (ஆதி 18:13,14)  என்று  கர்த்தர் சொல்லுகிறார்.
இப்படிதான் சூழ்நிலைகள் வேறு மாதிரியாக நமக்கு எதிராக இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தைகள் ஒருநாளும் நம்மை வெட்கப்படுத்தாது. கர்த்தர் சொன்னால் அதை செய்து முடிப்பார்.  கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?’’ என்று இங்கும் கர்த்தர் நம்மிடமே கேள்விகளை கேட்கிறார்.
ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்’’ (ஆதி 21:1,2). வாக்கு பண்ணின தேவன் தாம் சொல்லியபடியே அவைகளை நிறைவேற்றிக்கொடுத்தார்.
பிரியமானவர்களே, இன்றைக்கும் கர்த்தர் வாக்கு மாறாதவராக, தம்மை விசுவாசிக்கிற மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வல்லமை உள்ளவராக இருக்கிறார்.
உங்களுடைய வாழ்க்கையில் எவைகள் எல்லாம் முடிந்து போனது என்று நினைத்து நீங்கள் கலங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவைகளை கர்த்தர் உங்களுக்கு புதிதாக துவக்கப்போகிறார். இனி நடக்கவே நடக்காது என்று நீங்கள் முடிவு கட்டி, முற்றுப்புள்ளி வைத்தவைகளுக்கு, கர்த்தர் புதிய அத்தியாயத்தை எழுதப்போகிறார்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி எல்லா வாசல்களும் மூடப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்’’ (வெளி 3:8) என்று சொன்னவர், உங்களுக்கு புதிய வாசலைத் திறக்கிறார்.
இதுவரை உங்கள் சுய எண்ணத்தின்படியாக எல்லாவற்றையும்  யோசித்த நீங்கள், கர்த்தருடைய வார்த்தைக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்.  இதுவரை உங்களை தோல்வியடையச் செய்து வந்த எல்லாவற்றிலும் இருந்தும் கர்த்தர் உங்களை விடுவித்து உங்கள் வாழ்வில் புதிய துவக்கத்தைக் கொடுக்க விரும்புகிறார்.
எவைகள் எல்லாம் முடிந்து போனது என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தீர்களோ, அவைகள் இனிமேல்தான் துவங்கப் போகிறது.
இதுவரை நீங்கள் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வந்த காரியங்களை கர்த்தர் நிறைவேற்றிக்கொடுக்கப்போகிறார். விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் கர்த்தரை மட்டுமே சார்ந்து தேவனை நோக்கி, உங்கள் வார்த்தையின்படி என்னுடைய வாழ்க்கையில் நான் முடிந்து போனது என்று நினைத்தவைகளை எனக்கு நீங்க துவக்கி தரப்போவதற்காக நன்றி’’ என்று கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்யப்போகிறார்.
இல்லாததை உருவாக்கப்போகிறார்
நம்முடைய தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்’’ (ரோமர் 4:17) என்று வேதாகமம் கூறுகிறது.
ஒன்றை உருவாக்குவதற்கு தேவனுக்கு எந்த மூலப்பொருளும் தேவை இல்லை.  ஒன்றை உருவாக்க வேண்டுமானால் மனிதனுக்கு மூலப்பொருள் அவசியம். ஒன்றிலிருந்தே மற்றொன்றை உருவாக்குகிறான். ஆனால் தேவனுக்கு அப்படி இல்லை. எதுவும் இல்லாமல் ஒன்றை உருவாக்க முடியும்.
நாம் காண்கின்ற இந்த உலகத்தை ஒன்றுமில்லாமையில் இருந்து, தம்முடைய வார்த்தையினாலே உருவாக்கினார் என்று வேதம் கூறுகிறது.
பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்க்கையில் இதுவரை எனக்கு எந்த மூலதனமும் இல்லாமல் நான் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் இருக்கிறேனே, யார் என்னை கை தூக்கி விடுவார்,? யார் என்க்கு உதவி செய்வார் என்று கலக்கத்தின் மத்தியில் நீங்கள் இருக்கலாம்.
இன்றைக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசியுங்கள், ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கின தேவன் வெறுமையாக இருக்கும் உங்கள் வாழ்க்கையையும் உருவாக்க வல்லவராக இருக்கிறார்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும்,  மோவாபின் ராஜாவை எதிர்த்து தங்கள் படை வீரர்களுடன் ஏதோம் வனாந்தரவழியாய்  யுத்தத்திற்குச்  சென்று கொண்டிருந்த வேளையில் இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.
அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்’’(2 ராஜா 3:9,11).
உடனே யோசபாத் இஸ்ரவேல் ராஜாவை அழைத்துக்கொண்டு எலிசா தீர்க்க தரிசியிடம் கர்த்தருடைய வார்த்தையை விசாரிக்கும்படி செல்லுகிறார்கள். அந்த வேளையில்தான் கர்த்தருடைய வார்த்தையை எலிசா சொல்லுகிறார்.
நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்’’ (2 ராஜா 3:17).
அவர்கள் செல்லுவது வனாந்திரமான பகுதி, அங்கே தண்ணீர் இருப்பதற்கு எந்த விதமான சாத்தியமும் இல்லை. அதே வேளையில் காற்றோ, மழையையோ பார்க்க மாட்டீர்கள் ஆனால் உங்களுக்கும் உங்கள் மிருக ஜீவன்களுக்கும் வேண்டிய தண்ணீர் கிடைக்கும் என்று கர்த்தருடைய வார்த்தையை சொல்லுகிறார்.
மனிதனுடைய விஞ்ஞான மூளையில் சிந்தித்துப்பார்த்தால் இது முட்டாள்தனமாக தோன்றும், ஆனால் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து கர்த்தர் சொன்னபடி, தண்ணீர் வந்து நிரம்பும்படி வாய்க்கால்களை அவர்கள் வெட்டினபடியால், “மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று’’ (2 ராஜா 3:20) என்று வேதம் கூறுகிறது.
பிரியமானவர்களே, இன்றைக்கும் இல்லாதவைகளை உருவாக்குகிற தேவன் உங்களுடைய என்னுடைய வாழ்க்கையில் செயல்படுவதற்கு நம்முடைய விசுவாசமே மூல ஆதாரமாக இருக்கிறது. நாம் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காணமுடியும்.நம்முடைய வாழ்க்கையில் இப்பொழுதுவரை எதுவுமே இல்லாமல் வெறுமையான நிலையில் இருக்கலாம். ஆனால் விசுவாசம் இல்லாமல் இருக்கக் கூடாது. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?’’ (1 யோவான் 5:4,5).
இயேசுகிறிஸ்துவை முழு உள்ளத்துடன் விசுவாசித்து, அவரையே நீங்கள் பற்றிப்பிடிக்கும் போது, அதிசயங்களை செய்கிற தேவன், உங்கள் வாழ்க்கையில் இல்லாததை உருவாக்கி உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
புதிய காரியத்தை செய்யப்போகிறார்
சில நேரங்களில் கடந்த நாட்களில் நடந்தவைகளை நினைத்து நினைத்து மிகவும் வேதனையுடனும் கவலையுடனும் சிலர் இருக்கலாம்.  தொடர்ந்து  என்னுடைய வாழ்க்கையில் நான் தோல்விகளையே சந்தித்து வருகிறேனே, என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காதா? நான் எதை எடுத்தாலும் எல்லாம் தடையாகவே இதுவரை இருந்திருக்கிறதே மாற்றம் எதுவும் இருக்காதா? என்று கண்ணீருடனும் கலக்கத்துடனும் நீங்கள் இருக்கலாம்.
இதுவரை உங்கள் வாழ்க்கை எப்படி இருந்ததோ, ஆனால் இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற உங்களிடத்தில்.முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’’(ஏசாயா 43:18,19) என்று கர்த்தர் இப்போது தம்முடைய வார்த்தையின் மூலமாகப்  பேசுகிறார்.
இனிமேல் கடந்து போனநாட்களில் நடந்தவைகளை நினைத்து நினைத்து நீங்கள் கலங்கி நிற்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்’’ என்று சொன்ன தேவனை நோக்கிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நன்மையாக மாறும்.
ஏற்கனவே நடந்து முடிந்தவைகளை நினைத்து நினைத்து நீங்கள் கண்ணீர் விடுவதினால் எந்த பயனும் நன்மையும் உண்டாகப் போகிறது இல்லை.
நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி இருக்கலாம், நீங்கள் மலைபோல எதிர்பார்த்தவைகள் ஒன்றுமில்லாமல் போயிருக்கலாம். ஆகையால் “என் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து போனது இனி என்க்கு வாழ்வதற்கு எதுவுமே இல்லை’’ என்று விரக்தியடைந்து, மிகவும் சோர்ந்துபோன நிலையில் இந்த செய்தியை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கலாம்.நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’’ என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
இதுவரை நீங்கள் நம்பி இருந்தது, மனித பலத்தை மட்டுமே, ஆனால் அவைகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது என்று அறிந்து கொள்ளும்படியாக இதுவரை நடந்த எல்லா சம்பவங்களும் உங்களுக்கு அறிவித்து விட்டன. ஆனால் இப்பொழுதோ, சுய பலத்தினால் அல்ல, மனித பலத்தினால் அல்ல, தேவனுடைய பலத்தினால்  எல்லாவற்றையும் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் புதிதாக மாற்றப்போகிறார். கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
இதுவரை மற்றவர்களுடைய வாழ்க்கையில்நடந்த அற்புதங்களை நீங்கள் பார்த்திருக்கலாம், அல்லது கேட்டிருக்கலாம், ஆனால் இப்பொழுது தேவனுடைய அற்புதங்களையும், அதிசயங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எல்லா வற்றையும் புதிதாக்கி உங்களுக்கு அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்யப்போகிறார்.
கர்த்தருக்கு உண்மையாக சாட்சியாக வாழ இப்பொழுதே உங்களை அர்ப்பணியுங்கள்.
இந்த மாதத்தில் கர்த்தர் கொடுத்துள்ள இந்த வாக்குத்தத்தங்களின் படி ஜீவ அப்பம் குடும்பங்களை ஆசீர்வதித்து நடத்தப்போகிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் ஒவ்வொருவர்மேலும் தங்கி இருப்பதாக ஆமென்.

0 comments:

Post a Comment