எந்த நாள்...ஓய்வு நாள் ?
“தேவன் தாம் செய்த தம்முடைய
கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு,
ஏழாம் நாளிலே
ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின
தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை
ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்’’ (ஆதி 2:2,3) என்றும் ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும்
உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17) என்றும் வேதாகமத்தில்
வாசிக்கிறோம்.
வாரத்திற்கு ஏழுநாள் என்பது
மனிதனால் உண்டாக்கப்பட்டது அல்ல, இது தேவனால் உண்டானது என்பதற்கு அடையாளமாகவும், இந்தப் பூமியும் உலகமும்
தேவனால் படைக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கும்படியாகவும் வாரத்திற்கு ஏழுநாள்கள் என்பது
இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் ஒரு வாரம் என்ற
நடைமுறை இருந்து வருகிறது. இன்றும் நடைமுறையில் ஆறு பணி நாட்களுக்கு ஒரு நாள்
விடுமுறை என்ற வழக்கம் இருந்து வருகிறது. 12 நாட்களுக்கு ஒருநாள் என்றோ
அல்லது மிகவும் சுலபமான கணக்காய் இருக்கக்கூடிய 10 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை
என்ற கணக்கோ இல்லை. 6 நாட்கள் வேலைக்கு ஒரு நாள் விடுமுறை என்ற 7 நாட்களைக் கொண்ட வாரம் என்ற
காலக்கணக்கு வழக்கில் இருப்பதே உலகத்தின் சிருஷ்டிப்பை தேவன் நிறைவேற்றி முடித்து
ஓய்ந்திருந்தார் என்ற கிறிஸ்தவத்தின் கொள்கைக்கு ஆதாரமாக உள்ளது.
இந்த உலகத்தையும் உலகத்தில்
உள்ளவைகளையும், மனிதனையும் படைப்பதற்காகத் தேவன் எடுத்துக்கொண்டது ஆறு நாட்கள். ஆறுநாட்களில்
தன்னுடைய படைப்பின் செயல்களைச் செய்த தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்றும்
தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்றும் வேதாகமம் கூறுகிறது.
ஓய்வு நாள், மனிதன் ஆறு நாட்களும்
வேலை செய்து ஒரு நாள் ஓய்ந்து இருக்கும் படியும், மனிதன் ஒரு நாள் தேவனோடு
உறவாடுவதற்கும், உலக வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதைக் காண்பிப்பதற்கும் தேவனால்
கொடுக்கப்பட்டது.
ஓய்வு நாளை மனிதன், மதிக்காமல், அதனுடைய தன்மையைச் சரியாக
உணர்ந்து கொள்ளாமல் போன படியினால்தான் அது பிரமாணமாகப் பழைய ஏற்பாட்டு நாட்களில்
கொடுக்கப்பட்டிருந்தது.
ஏன் ஓய்வு நாள் பிரமாணமாகத்
தேவனால் கொடுக்கப்பட்டது என்றால், ஓய்வு நாள் பரலோக வாழ்வுக்கு முன் அடையாளமாக வேதாகமத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. பரலோக வாழ்வை நிழலாட்டமாகக் காண்பிக்கவே பழைய ஏற்பாட்டுக்
காலத்தில் தேவன் ஓய்வுநாளை மனிதனுக்குக் கொடுக்கிறார். இந்த ஓய்வு நாளை
கைக்கொள்ளாதவன் பரலோக வாழ்வை மறுதலிப்பவனாகவே கண்டறியப்பட்டு, அவனுக்குத் தண்டணை
கொடுக்கப்பட வேண்டும் என்று பிரமாணம் சொல்லுகிறது.
ஆனாலும் இந்த ஓய்வுநாள்
பிரமாணமானது தற்காலிகமானது, அது பழைய ஏற்பாட்டுப் பிரமாணம் மட்டுமே. ஏன் என்றால் முதல்
மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் பாவத்தில் வீழ்ச்சியடைந்து ஆறு நாட்களில் தன்னுடைய
சிருஷ்டிப்பின் வேலையை முடித்து ஓய்ந்திருந்த தேவனுக்கு ஏழாம் நாளிலும் வேலை
கொடுத்து விட்டார்கள்.
ஆகையால் ஏழாம் நாளாகிய ஓய்வு
நாளிலேயே மனிதனின் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் வேலையைச் செய்து
முடித்துப் பரலோக வாழ்வுக்காக மனிதனை பரிசுத்தப்படுத்தினார்.
எப்போது இயேசு கிறிஸ்து
உயித்தெழுந்தாரோ, அப்பொழுதே தற்காலிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த அந்த ஏழாம் நாளின் பிரமாணமானது
இயேசு கிறிஸ்துவினால் உடைக்கப்பட்டு, என்றென்றைக்கும் மனிதன் தேவனோடு இருக்கும் முழுமையான
வாழ்வு கொடுக்கப்பட்டு விட்டது.
பழைய ஏற்பாட்டு நாட்களில்
வாரத்தின் ஒரு நாள் மட்டும் தேவனோடு இருந்த மனிதன் எல்லா நாளும் தேவனோடு
வாழ்வதற்கும், எந்த இடத்தில் இருந்தும் அவரை நோக்கி அப்பா பிதாவே என்று கூப்பிடுவதற்கும்
இயேசு கிறிஸ்துவின் வழியாக இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டோம்.
இன்று வாரத்தின் ஒருநாள் என்று
இல்லாமல் வாரத்தில் எல்லா நாளும் மனிதன் தேவனைத்தொழுது கொள்ள வேண்டும் என்றும்,
எல்லா மணித்
துளிகளிலும் தேவனோடு உறவாட வேண்டும் என்றும் வேதாகமம் நம்மை வலியுறுத்தி
அழைக்கிறது.
இதைக்குறித்து எபிரெய ஆக்கியோன்
எழுதும் பொழுது “ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. ஏனெனில்,
அவருடைய
இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை
முடித்து ஓய்ந்திருப்பான் (எபி 4:9,10) என்று இந்தப் பூமி வாழ்க்கை முடிந்து, பரலோக வாழ்வுக்குள்
பிரவேசிப்பதையே ஓய்வு நாள் என்று ஓய்வுநாளைக்குறித்து இங்கு எழுதப்பட்டிருக்கிறது.
எனவே பழைய ஏற்பாட்டில் ஓய்வு
நாளைக்குறித்துச் சொல்லி இருப்பது, பரலோகத்தைக் குறித்த நிழலாட்டமே, அதைப் பழைய ஏற்பாட்டு நாட்களில்
கைக்கொள்ளாதவர்கள் பரலோக வாழ்வை மறுதலிப்பவர்களாகக் கண்டறியப்பட்டுத் தண்டனைக்கு
உரியவர்களாகத் தீர்க்கப்பட்டார்கள்.
எப்போது கிறிஸ்து மரித்து
உயிர்த்தெழுந்தாரோ, அப்பொழுதே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, ஏற்றுக்கொண்டவர்கள் பரலோக
வாழ்வுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.
அதைத்தான் இயேசு கிறிஸ்து இந்தப்
பூமியில் வாழ்ந்து ஊழியம் செய்து வந்த நாட்களில் ஓய்வுநாளின் சரியான தன்மையை
அறிந்து கொள்ளாமல், , அதைச் சடங்கு போலவும், தங்கள் விருப்பத்தின்படியும், மனிதனுக்கு நன்மை நடப்பதைக்கூட
விரும்பாத அளவுக்குச் செயல்பட்டு வந்த பரிசேயர்களுக்கு முன்பாக “மனுஷன் ஓய்வுநாளுக்காக
உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு
நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்’’ (மாற்கு 2:27,28) என்று இயேசு கிறிஸ்து
எடுத்துக்கூறுகிறதை வேதம் நமக்குக் காண்பிக்கிறது.
“மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம்
முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில்
சொல்லியிருக்கிறார். அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும்
அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும்
வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள்
கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும்,
இன்று அவருடைய சத்தத்தைக்
கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு
தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும்
ஒருநாளைக் குறித்திருக்கிறார்.”(எபி 4:4-7) என்று புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு வேதம் தெளிவாகப்
போதிக்கிறது.
பழைய ஏற்பாட்டு நாட்களில்
ஓய்வுநாளின் சரியான தன்மையை அறிந்து கொள்ளாமல், எழுத்தின்படியும், தங்கள் சுய
இஷ்டத்தின்படியும் அதைக் கடைப்பிடிக்க முயன்றவர்களையே, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில்
(பரலோக வாழ்வுக்குள்) பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே (தேவன்)
சொல்லியிருக்கிறார் என்று வேதாகமம் திட்டமாகப் போதிக்கிறது.
இன்றைக்கும் ஏழாம் நாளை
முக்கியத்துவப்படுத்துகிறவர்கள், ஏழாம் நாளின் முக்கியத் தன்மைகளை அறிந்து கொள்வதே சிறந்தது.
ஓய்வு நாள் பழைய ஏற்பாட்டில் கட்டளையாகக் கொடுக்கப்பட்டதின் தன்மையே பரலோக வாழ்வை
மனிதன் பூமியில் வாழும் நாட்களில் எதிர்பார்த்து வாழ்வதற்காகதான்.
ஆனால் புதிய ஏற்பாட்டு
காலத்திற்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கோ, ஓய்வு நாளோ, ஏழாம் நாளோ அல்ல, இயேசு கிறிஸ்து மட்டுமே
முக்கியமாக இருக்கிறார். அவரை விசுவாசித்து, ஏற்றுக்கொண்டவர்கள், பரலோக வாழ்வை
எதிர்பார்த்து வாழ வேண்டும்.
சபையின் தொடக்கத்தில் சபையைக்
குறித்து வேதம் கூறும் பொழுது “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும்
தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும்
போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக்
கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்’’ (அப் 2:46,47) என்றுதான் கூறுகிறது.
மாறாக ஏழாம் நாளிலோ, ஓய்வு நாளிலோ, சபை கூடி வந்ததற்கு
வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அப்படி இருக்க நாம் எந்த நாளில்
சபையாகக் கூடி ஆராதிக்கலாம், என்று கேள்வி எழுப்பினால் வேதாகம அடிப்படையில் தினம் தோறும்
சபையாகக் கூடி ஆராதிப்பதே நல்லது.
மேலும் இயேசு கிறிஸ்துவின்
சரீரமாகிய சபை, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்புதான் உருவாகியது, எனவே உயிர்த்தெழுந்த
முதலாம் நாளில் சபை கூடிவருவதே வேதம் ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது. காரணம் பரலோக
வாழ்வுக்கு நிழலாகச் சொல்லப்பட்டுள்ள ஓய்வு நாளின் தன்மை ஒருவர் இயேசு கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படும்போதே உறுதியாகிறது.
ஒரு மனிதன் இந்த நாள்களில் ,
ஓய்வு நாளை
சரியாகக் கடைப்பிடித்து, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவனாக
இருந்தால் அவனுக்கு என்ன பலன் உண்டாகும்?
மேலும் புதிய ஏற்பாட்டில்
ஆராதிப்பதற்கு வாரத்தில் ஒருநாள் என்ற பிரமாணமே இல்லையே. அப்படி இருக்க நாம் ஏன்
வாரத்தில் ஒருநாள் சபையாகக் கூடி வருகிறோம் என்றால் இயேசு கிறிஸ்து வாரத்தின்
முதலாம் நாளில் உயிர்த்தெழுந்தபடியால், அவர் உயிர்த்தெழுதல் மூலமாக உருவான சபை வாரத்தின்
முதலாம் நாளில் கூடிவர ஆரம்பித்தது. இது சபையின் ஆதிகாலமுதலே இருந்து வருகிறது.
ஏழு நாட்களும் வேலை வேலை என்று
ஓடிக்கொண்டிருக்காத படிக்கு மனிதனுக்கு ஒருநாள் ஓய்வு அவசியம் என்று முதன் முதலில்
தீர்மானித்தது தேவன்தான்.
எல்லா நாளும் தொடர்ந்து
ஓடிக்கொண்டே இருப்பது மனிதனுக்கு நல்லது அல்ல, வாரத்தில் ஒரு நாள் ஓய்வு எடுத்து
தன் பணிகளைச் செய்யச் செல்லும் பொழுதே புத்துணர்ச்சியுடன் தன் வேலைகளைக் கவனிக்க
முடியும்.
மேலும் ஏழாம் நாள், ஓய்வு நாளாகப் பழைய
ஏற்பாட்டில் அறியப்பட்டாலும்,. அது சனிக்கிழமைதான் என்று வேதாகமத்தில் எங்கும்
சொல்லப்படவில்லை.
ஏழாம் நாளிலே தேவன்
ஓய்ந்திருந்தார் என்பதினால் சரியாய் ஏழாம் நாளில் தான் ஓய்வு நாள் பின்பற்றப்பட
வேண்டுமென்று ஒரு சபைப் பிரிவினர் ஒரு உபதேசத்தைப் பின்பற்றி வருகின்றனர். வாரத்தின்
ஏழாம் நாள் சனிக்கிழமை என்பதினால் சனிக்கிழமைதான் ஓய்வு நாளாக இருக்க வேண்டுமென்று
இவர்கள் கூறுகின்றனர்.
இதை மூலபாஷையில் Sabbath என்றழைப்பர். Sabbath
என்ற பதம்
சனிக்கிழமையையோ ஞாயிற்றுக்கிழமையையோ குறிக்கவில்லை Sabbath என்ற எபிரேய வார்த்தைக்கு ஓய்வு
அல்லது Rest என்றுதான் அர்த்தம். எனவே, சனிக்கிழமைதான் ஓய்ந்திருக்க வேண்டுமென்று இன்றும்
வலியுறுத்துவது வேத வார்த்தையின் அடிப்படையிலும் சரியாகாது.
தேவன் ஏழாம் நாளில்
ஓய்ந்திருந்தார் என்பதினால் ஏழாம் நாளாகிய சனிக்கிழமைதான் ஓய்ந்திருக்க வேண்டும்
என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இன்று நாம் பின்பற்றுகிற காலண்டர்
சுமார் கி.பி.3ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகிற காலண்டர்
முறையாகும். எனவே ஆறாயிரம் வருடங்களுக்கு முன் உலகத்தைத் தேவன் சிருஷ்டித்த போது
நம்முடைய வழக்கத்தில் இப்போது இருக்கும் சனிக்கிழமையில்தான் தேவன் ஓய்ந்திருந்தார்
என்றும் திட்டவட்டமாய்ச் சொல்ல முடியாது. எனவே ஏழாம்நாள் என்பது எந்தக்
கிழமையென்று திட்டமாய்ச் சொல்ல இயலாது.
எனவே ஓய்வுநாளின் சரியான அர்த்தம்
தெரியாமல், பழைய ஏற்பாட்டில் பரலோகத்தின் நிழலாட்டமாகக் கொடுக்கப்பட்ட ஓய்வுநாளை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிஜமாக நமது கண்முன் நிறுத்திய பின்னும், நிஜத்தை அறியாமல் இன்னும்
நிழலை பின்தொடர்வது, வேதாகமத்தை சரியாக அறிந்து கொள்ளாமல், சிலர் வீண் வைராக்கியத்துடன் பின்பற்றுவதையே
காண்பிக்கிறது.
மேலும், இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை,
இயேசு கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதலுக்குப் பின்பாகவே துவங்குகிறது. ஏழாம் நாளில் மனிதனின் விடுதலைக்காக
வேலை செய்த இயேசு கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று
வேதாகமம் திட்டமாக நமக்குப் போதிக்கிறது.
உயிர்த்தெழுந்த ஆண்டவரை
ஆராதிக்கக் கூடிவருகிறவர்கள், ஏழாம் நாள்தான் ஓய்வு நாள் அதில் தான் நாங்கள் கூடி வருவோம்
என்பது, வேதாகம
சத்தியத்திற்கு முரணான செயலாகவே இருக்கிறது.
அப்படிப்பட்டவர்களின் இந்தச்
செயல் எப்படி இருக்கிறது என்றால் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ஓய்வு நாளின்
தன்மையை அறிந்து கொள்ளாமல், உயிர்த்தெழுந்த தேவனை ஆராதிக்க முதலாம் நாளில் கூடி
வருகிறதையும் புரிந்து கொள்ளாமல், யாரோ ஒருவர் மூலமாகச் சொல்லப்பட்ட கட்டுகதைகளை வீண்
வைராக்கியத்துடன் பின்பற்றுவதையே காண்பிக்கிறது.
வாரத்தின் முதலாம் நாளில்தான்
இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கூடி வந்தது என்பதற்கு வேதாகமத்தில் திட்டமான
ஆதாரம் உண்டு.
“வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி
சீஷர்கள் கூடிவந்திருக்கையில்’’ (அப் 20:7) என்று இந்த வசனத்தின் மூலமாகத் திருச்சபை வாரத்தின்
முதல்நாளில்தான் கூடி வந்திருக்கிறது என்பதை வேதாகமம் நமக்குத் தெளிவுபடுத்திக்
காண்பிக்கிறது.
இப்படித் திருச்சபையின் துவக்க
காலத்திலேயே வாரத்தின் முதல்நாளில் சபை கூடி வந்திருக்கிறது என்பதை வேதாகமத்தில்
எழுதப்பட்டிருக்க வாரத்தின் முதல் நாளில் சபை கூடிவருவது தவறு என்று ஏழாம் நாள்
பிரிவை சார்ந்தவர்கள் எப்படி எந்த அடிப்படையில் சொல்லுகிறார்கள்.?
நிழலை நிஜமாக்கிய இயேசு கிறிஸ்து
நம்மோடு இருக்கிறார். உயிரோடு எழுந்து தம்முடைய சரீரமாகிய சபையை முதலாம் நாளில்
ஸ்தாபித்த இயேசு கிறிஸ்துவை முதலாம் நாளில் ஆராதிக்கக் கூடிவருவது வேதாகமத்தின்
அடிப்படையிலும் மிக மிகச் சரியாகவே இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் பரலோகத்தை
எதிர்பார்த்து வாழ்வதற்கு நிழலாகக் கொடுக்கப்பட்ட ஓய்வு நாளை, பரலோக வாழ்வின் நிஜமாக
இயேசு கிறிஸ்து வந்து விட்ட பின்னும் இப்போதும் நிழலாகவே அனுசரிப்பேன் என்பது
ஏழாம் நாள் ஆராதனை செய்பவர்களின் அறியாமையா? ஏமாற்றுவேலையா? என்பது தெரியவில்லை.
இத்தனை விளக்கங்களுக்குப்
பின்னும் இன்னும் பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள்காட்டி இப்படிச் சொல்லி
இருக்கிறது, இது தேவையில்லையா? அது தேவை இல்லையா? என்று வாதம் செய்யாமல், பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக்குறித்து வரும் வேத வசனங்களை
ஆராய்ந்து வாசித்தால் அது எதற்காகக் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை ஆவியானவர்
விளங்கச் செய்வார்.
ஆகவே வேதாகம வெளிச்சத்தில் வேத
வசனங்களை வாசித்து, ஆவியானவரின் துணையுடன் வேதவசனங்களின் விளக்கங்களை அறிந்து கொள்வோம்.
அப்பொழுது மாறுபாடனவைகளுக்கும்,
வேண்டாதவைகளுக்கும்
விலகி சத்தியத்தின்பாதையில் தெளிவாக நடந்து, தேவ சித்தம் செய்கிறவர்களாக
இருப்போம்.
இப்போது எந்த நாள் ஓய்வு நாள்
என்பதைத் தேடுவதை விட்டு விட்டு, இந்தப் பூமி வாழ்க்கை முடிந்து ஓய்வு நாளுக்குள் (பரலோகத்திற்குள்)
பிரவேசிப்பதைக்குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாய், பயத்துடனும், நடுக்கத்துடனும் வேத
வசனங்களைக் கவனித்து, தேவனுக்குப் பிரியமாக வாழ்ந்து, தேவ சித்தம் செய்கிறவர்களாய் இருப்போம்.
நிஜமான ஓய்வு நாளுக்குள்
பிரவேசிப்போம்.
நன்று
ReplyDelete