வெற்றி வாழ்வின் துவக்கம்
வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற
தலைப்பில் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைத் தியானித்து வருகிறோம். இதில் செயல்படுத்த
வேண்டிய அவசியம் என்ற பகுதியில்
2. பின்பற்றுதலில் உறுதி
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்,
கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில்
வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோசெயர் 3:1-4)
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோசெயர் 3:1-4)
மேலான வாழ்க்கை என்றதும், வெற்றி
என்றதும் வறுமையை ஜெயித்த, பணம்படைத்தவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும், வசதி வாய்ப்போடு இருப்பவர்களுமே வெற்றிப் பெற்றவர்கள்
என்று நினைத்துக்கொள்கின்றோம்.
உலகமும் வறுமையை ஜெயித்தவர்களை
மட்டுமே கொண்டாடுகிறது. அப்படிப்பட்டவர்களையே
அடையாளப்படுத்துகிறது.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிற
இளைய தலைமுறையும் வெற்றி என்றதும் வறுமையை ஜெயித்து, பணம்படைத்தவர்களாக வேண்டும், உயர்ந்த பதவிகளை எட்டி விட வேண்டும், என்று வசதி வாய்ப்புக்களை மட்டுமே குறிவைத்து செயல்பட
ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் வெற்றி வாழ்க்கைக்கும்,
பணத்திற்கும், பதவிக்கும், வசதியான வாழ்வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதை
அறியாமல், வெற்றி வாழ்க்கையைத் தொலைத்துப்
பணத்தைச் சம்பாதித்துவிட, பதவியை எட்டிவிட வசதியான
வாழ்வை பிடித்துவிட அநேகர் துடிக்கின்றனர்.
எனவேதான் வறுமையை ஜெயித்தவர்கள், பணம்,
பதவியைப்
பெற்று, வசதியான வாழ்க்கை வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையில் ஒழுங்கீனமான பாவ செயல்களைச்
செய்து கொண்டே, தாங்கள் வெற்றி பெற்று
விட்டோம் என்று தங்களைத் தாங்களே திருப்தி படுத்திக்கொள்கின்றனர்.
ஆனால், தேவன் விரும்பும் தூய்மையான வாழ்வுதான் வெற்றியின்
வாழ்வு என்பது அறியாமல் ஆவிக்குரிய கண்களை மறைத்து போலியான வெற்றியின் தோற்றத்தைக்
கொடுத்து, புகழின் உச்சியில் இருப்பது போல்
காண்பிப்பதே பிசாசின் தந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. அவனின் இந்தத் தந்திரங்களை
அறிந்து கொள்வதும், அதை எதிர்த்து நாம்
வெற்றி வாழ்க்கை வாழவேண்டும் என்பதும்தான் தேவனின் திட்டமும், சித்தமுமாக இருக்கிறது.
பணமும் வசதியான வாழ்வும் நம்முடைய
தேவைகள். ஆனால் அது மட்டுமே நம்முடைய குறிக்கோளாகவும், நம்முடைய இலக்காகவும் இருக்கக் கூடாது. நம்முடைய
குறிக்கோளும், இலக்கும் தேவ சித்தம்
செய்வதும், தேவனுக்குப் பிரியமாக
வாழ்வதும்தான்.
தேவ சித்தம்
செய்யக்கூடாதபடிக்கும், தேவனுக்குப் பிரியமாக
வாழக்கூடாதபடிக்குமே இந்தப் பூமியில் நமக்கு எதிராகப் பிசாசு எதிர்த்து
நிற்கிறான். ஆனாலும் நமக்கு வெற்றியை தரும்படியாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
நம்மோடு இருக்கிறார்.
வறுமையை ஜெயிப்பதற்கு இந்தப்
பூமியில் எத்தனையோ வழிகளும் வாய்ப்புக்களும் இருக்கிறது. அந்த வழிகளில் வறுமையை
ஜெயிக்கப் போராடும் மனிதர், தூய்மையாக வாழ்வதற்கு
இருக்கும் வழியில் சென்று போராடுவதில்லை. ஏன் என்றால், தூய்மையான வாழ்வு சாத்தியமில்லை என்று
எண்ணிக்கொள்வதும் , தூய்மையான வாழ்வு வாழ
விரும்பாததுமே காரணம்.
ஆனால் ஒரு மனிதன் வறுமையை
ஜெயித்து, ஒழுங்கீனமான வாழ்க்கை வாழ்கிறவனாக
இருந்தால் அவன் வாழும் வாழ்க்கை தோல்வியின் வாழ்க்கையாகவே இருக்கும்.
ஆகையால்தான் இயேசு கிறிஸ்து “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?’’ (மத்தேயு 16:26) என்று சொல்லி, வறுமையை ஜெயித்த மனிதன்
வாழ்க்கையில் தோற்றுப்போனால் அதனால் மனிதனுக்கு எந்த வித லாபமும் இல்லையே. அதையே
இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்.
வறுமையை ஜெயித்து மிகப்பெரிய
செல்வந்தனாக வாழும் மனிதன், தன் வாழ்க்கையில்
தாறுமாறாக பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பானானால், அவன் தோற்றுப்போனவனாகப்
பரிதாபத்திற்குரிய மனிதனாகப் பரிதவிக்கக் கூடிய வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.
இந்த உலகத்தில் வயிற்றுக்காக, புகழுக்காகப் போராடும் மனிதர் அதில் ஒரு சதவீதம்
கூடத் தன்னுடைய மரணத்திற்குப் பின் இருக்கும் முடிவில்லா வாழ்க்கைக்காகப்
போராடுவது இல்லை. மனிதனின் ஓட்டமெல்லாம், போராட்டமெல்லாம்
எப்படியாகிலும் நான் செல்வந்தனாகிவிடவேண்டும், எப்படியாகிலும்
பட்டம், பதவியை அடைந்து விட வேண்டும்
என்பதை இலக்காக வைத்தே இருக்கிறது.
எனவே வாழ்கையின் தன்மை என்ன? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? எதற்காக இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்தப் பூமி வாழ்க்கைக்குப் பின் இருக்கும்
முடிவில்லா வாழ்வுக்குத் தகுதியடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக்குறித்து
எண்ணம் பலரிடத்தில் இல்லாமல் போகிறது.
வேதாகமத்தில் வறுமையை ஜெயித்து
மிகப்பெரிய செல்வந்தனாக வாழ்ந்த மனிதனைக்குறித்து இயேசு கிறிஸ்து சொன்னபொழுது,
“ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும்
தரித்து, அநுதினமும் சம்பிரமமாய்
வாழ்ந்துகொண்டிருந்தான்.’’ (லூக்கா 16:19)
அந்த மனிதன், பூமியில் வெற்றி
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், தன்னைப்போல்
ஒருவரும் இல்லை என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் பூமியில்
வாழ்ந்த பொழுது தான் வெற்றி வாழ்க்கை வாழவில்லை. தோல்வி வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறோம்
என்பதை மரித்தபின்தான் உணர்ந்துகொண்டான் (லூக்கா 16:23- 31). இருப்பினும் அதனால் அவனுக்கு
எந்த விதமான பயனும் ஏற்பட வில்லை. ஆனால் இந்தப் பூமியில் வாழும் நாட்களில்
மனந்திரும்பி, வெற்றி வாழ்க்கை
வாழ்வதற்கு எல்லா மனிதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலமாகத் தருணங்கள்
கொடுக்கப்படுகிறது.
இக்காலத்திலும் அநேகர்
வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள செல்வந்தனைப்போலவே மனதைக் கடினப்படுத்திப் போலியான
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எதை முக்கியத்துவப் படுத்த வேண்டுமோ, அதைச் சாதாரணமாக்கி விட்டு, எது முக்கியத்துவப்படுத்தக்கூடாதோ அதை மிக முக்கியமாக
எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக
ஏற்றுக்கொண்டு, விசுவாச வாழ்க்கை வாழும்
தேவ பிள்ளைகள் உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும், உலக
மனிதர்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளாமல், தேவன் விரும்பும் வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு இயேசு
கிறிஸ்துவை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.
. நம்முடைய செயல்கள் எல்லாம்
கிறிஸ்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாக இருந்து, நாம் எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவின்
அடிச்சுவட்டில் நடக்க ஆரம்பிக்கும்போதே வெற்றி வாழ்க்கை நமக்குச் சாத்தியமாகும்.
எந்த அளவிற்கு, கிறிஸ்துவின்
அடிச்சுவட்டை பின்பற்றுவதற்குத் தயாராக இருக்கிறோமோ, அதுவே
நம்மை வெற்றியின் உயரத்திற்குக் கொண்டு செல்லும். கிறிஸ்துவை பின்பற்றுவதில் உறுதி
இல்லை என்றால் வெற்றி, சாத்தியமில்லை.
உறுதியாகக் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு வெற்றி சாத்தியமே. இதில் சந்தேகமே
இல்லை.
கிறிஸ்துவின் அடிச்சுவடை பின்பற்ற
அழைக்கப்பட்டிருக்கிற நாம் அதில் உறுதியாக இருக்க வேண்டும். நம்முடைய வெற்றியைத்
தடுப்பதற்கு எதிரி கையாளும் தந்திரம், கிறிஸ்துவின்
அடிச்சுவடை விட்டு நம்மை விலகச் செய்வதாகவே இருக்கும். கவனமாக இருக்க வேண்டும்.
“அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு
உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்’’ (லூக்கா 14:33) என்று, இருமனதுடன், உலகத்தின் இச்சைகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அதிலிருந்து விடுபட மனதில்லாமல், தனக்குள்ளாகச் சுய வெறுப்பு இல்லாதோர் வெற்றி
வாழ்க்கை வாழ்வது கடினம், என்பதையே இந்த வசனத்தின்
மூலம் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார்.
கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து, மேலான வாழ்வுக்குள் வர விரும்புகிறவர்கள் முதலாவது
இந்த உலகத்திலிருந்து வருகிறவைகளையும், இச்சைகளையும், தேவனை விட்டு பிரிக்கும்படி செயல்படுகிற
எல்லாவற்றையும் வெறுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற சுய வெறுப்பின்
தன்மையைக்குறித்தே லூக்கா 14: 27-34 வரை உள்ள வேதபகுதியில் இயேசு கிறிஸ்து தெளிவாக
விளக்கி காண்பிக்கிறார்.
இந்தச் சுய வெறுப்பு என்பது, தியாகம் அல்ல. இன்று
அநேகர் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வையும், கிறிஸ்துவை
பின்பற்றி வாழும் வாழ்க்கையையும் தியாகம் என்று நினைத்துக்கொண்டு, மிகுந்த கடினமாக எண்ணி, கிறிஸ்துவுக்காக
நான் தியாகமாக வாழ்கிறேன் என்று சொல்லுகிறது உண்டு. கிறிஸ்துவைப் பின்பற்றி, கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடந்து கிறிஸ்துவுக்குள்ளாக
வாழும் வாழ்க்கை தியாகமான வாழ்க்கை அல்ல, வெற்றி
வாழ்க்கை, என்பதை நாம முதலாவது நன்றாக
அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இந்த வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு நாம்
உற்சாகமாக இருந்து, முடிவு பரியந்தம்
உண்மையாக இருப்போம்.
மாறாக இது தியாகமான வாழ்க்கை
என்று நமது சிந்தையில் பதிவு செய்வோம் என்றால் நாம் வெகு விரைவில் இந்த வெற்றி வாழ்க்கையில்
இருந்து வழிவிலகி போகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும்.
இக்காலக் கிறிஸ்தவர்கள் அநேகர்
வெற்றிவாழ்க்கை சாத்தியமில்லை என்று நினைப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில்
ஒன்று. கிறிஸ்துவுக்குள்ளாக வாழும் வாழ்க்கை தியாகமான வாழ்க்கை என்றும், தேவன் விரும்பும் தூய்மையான வாழ்க்கை வாழ்வது
கடினமானது என்றும், நினைத்துக்கொள்வதாலேயே
அதிகமானவர்கள் உண்மையான வெற்றி வாழ்க்கை வாழ முடியாமல், விழுந்து போகக் காரணமாகிவிடுகிறது.
எனவே நம்முடைய சுய வெறுப்பு
என்பது. தோல்வி வாழ்க்கையில் இருந்து, வெற்றி
வாழ்க்கை வாழ்வதற்குத் தயாராகிறதையே குறிக்கிறது.
வெற்றிக்குத் தயாராகும் மனிதன்
அதற்குப் பயிற்சி செய்ய வேண்டும். வெற்றி வாழ்க்கைக்கு எதிராக வரும் எல்லா எதிர்ப்புகளையும்
எதிர்த்து போராட தயாராக வேண்டும் என்பதைக்குறித்தே இயேசு கிறிஸ்துவானவர் தெளிவாகப்
போதிக்கிறார்.
ஆகவே எப்போது ஒருவர் இயேசு
கிறிஸ்துவை உறுதியாகப் பின்பற்ற ஆரம்பித்து விட்டாரோ, அப்பொழுதே வெற்றி வாழ்க்கை துவங்கி விட்டது.
இந்த வெற்றி வாழ்க்கை தொடரந்து வர
ஒவ்வொருநாளும் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து, கிறிஸ்துவின்
சாயலாக மாறும்போதே வெற்றி வாழ்க்கை சாத்தியமாகிறது.
எனவே வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு
விரும்பினால் போதும். நாம் வெற்றியோடு வாழ்வதற்கு நமக்கு உதவி செய்து இயேசுவானவரே
நம்மை வழிநடத்துகிறார்.
தொடரும்...........
0 comments:
Post a Comment