சுவடுகள் (மூன்று) ஊழியத்தின் ஆரம்பம்
இருபத்து மூன்று வயதே நிரம்பிய
வாலிப நாட்கள். ஊழியம் என்றால் என்ன? ஊழியத்தின் தன்மை என்ன என்று எதுவும் தெரியாத
நிலையில் ஊழியத்தின் அழைப்பு.
ஆண்டவர் ஊழியத்திற்கு
அழைத்திருக்கிறார் என்று ஒருவரிடமும் சொல்ல முடியாது. ஏன் என்றால் என்னைச் சுற்றி
இருந்த உறவுகளுக்கு ஊழியம் என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பே இல்லை.
இந்தக் காலத்தில் ஒரு
ஊழியக்காரனின் மகன் ஊழியத்திற்கு வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது.
அல்லது ஊழிய பிண்ணனி கொண்ட குடும்பத்தில் பிறந்து, ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும்
எளிது. அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை என்றாலும், நல்ல வசதி வாய்ப்புடன், பெயர் புகழுடன்
செல்வாக்காய் இருந்தால் ஒருவேளை ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிதாக
இருக்கலாம்.
ஆனால் இவைகள் எதுவும் இல்லாமல்,
ஆண்டவரின் அழைப்பை
மட்டும் வைத்துக்கொண்டு, இந்தக் காலக் கட்டத்தில் ஊழியத்திற்கு வருவது சவாலாகும்.
இந்தச் சவாலை மனதுக்குள்ளாக ஏற்றுக்கொண்டே இந்த ஊழிய பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன்.
ஆனால் தேவனால் முன் குறிக்கப்பட்ட
மனிதனுக்கு, கர்த்தருடைய இந்தக் கனமான ஊழியம் செய்வதற்கு எந்த விதப் பிண்ணனியும்
தேவையில்லை. எந்த மனிதனின் முதுகும் தேவை இல்லை என்பதைக் கர்த்தருடைய நடத்துதலில்
அறிந்து கொள்ள முடிகிறது.
கர்த்தர் தனக்காக, தன்னுடைய பணியைச் செய்யத்
தெரிந்து கொண்ட பின் தனக்கு ஏற்ற விதத்தில் எப்படி எல்லாம் வடிவமைக்கிறார்!
பயிற்சிக்கிறார்! கர்த்தர் கொடுக்கும் இந்தப் பயிற்சி காலத்தில் ஒன்றும் இல்லா
நிலைக்குக் கொண்டு வந்து, அவமானங்கள், கண்ணீர் வேதனை இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பக்குவப்படுத்தி,
பாடங்களைக்
கற்றுக்கொடுத்து, கர்த்தர் குறித்த எல்லைக்குள் நிற்க பெலன் கொடுக்கிறார்.
எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தர்
கை விட வில்லை, எந்த நிலையிலும் விட்டு விலகவும் இல்லை. எல்லா நிலையிலும் உடன் இருந்து
நடத்துகிறார். உதவிகளைச் செய்கிறார். எந்த மனிதனுக்கு முன்பாகவும் நிற்க விட
வில்லை.. விடவும் மாட்டார். இதுதான் அழைப்பின் உறுதியும், ஆண்டவரின் வழி நடத்துதலுமாக
இருக்கிறது.
முழு நேரமாகக் கர்த்தருடைய ஊழியம்
செய்வது உலகத்தில் வேலை செய்வதை விடப் பல மடங்கு உயர்ந்தது. அதை விடக் கடினமானது.
இன்று சிலர் நாங்கள் உழைத்து சாப்பிட்டு ஆண்டவருக்காக ஊழியம் செய்கிறோம் என்று
தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். அப்படிதான் அவர்களுக்கு
நியமிக்கப்பட்டிருந்தால், அப்படிதான் கர்த்தர் அவர்களை அழைத்திருந்தால் அவர்களைக்
குறை சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை.
அதே வேளையில் முழு நேரமாகக்
கர்த்தருடைய ஊழியத்தை மட்டும் செய்வது பரலோக தேவனின் வேலைக்காரர்களாக, தேவனுக்கு உழைப்பவர்கள்
(ஊழியர்கள்) உழைத்துதான் உண்கிறார்கள் என்பதை அப்படிப்பட்டவர்கள் அறிந்து கொள்வது
நல்லது.
முழு நேரமாக ஒருவர் அழைக்கப்படா
விட்டால் இந்தக் கனமான கர்தருடைய ஊழியத்தில் நிற்பது முடியாத காரியம்.
ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட அந்த
ஆரம்ப நாட்களைச் சற்று திரும்பி பார்க்கும் பொழுது, தேவனுடைய கிருபையும், தேவ தயவும், என்றும் மாறாதது என்பதை
அறிந்து தேவனைத் துதிக்காமல் இருக்க முடியாது.
தாயின் வயிற்றில் உருவாவதற்கு
முன்னே அறிந்து, சிறுவயதிலேயே தெரிந்து, வாலிப நாட்களில் ஊழியத்திற்கு அழைத்த என் தேவாதி தேவனுக்கு
மகிமை உண்டாவதாக.
கத்தோலிக்கக் கிறிஸ்தவக்
குடும்பத்தில் பிறந்து, கிறிஸ்துவைக்குறித்து எதுவும் அறியாமல் வளர்ந்து வந்த
எனக்குத் தேவனுடைய கிருபையால் பதினொரு வயதில் கிறிஸ்து இயேசுவை அறிந்து கொள்ளும்
வாய்ப்பை தேவன் ஏற்படுத்திக்கொடுத்தார்.
அந்த நாட்களில் சரியாக ஒரு ஆண்டு
மட்டுமே, பெந்தெகொஸ்தே
சபைக்குப் போக முடிந்தது. அதன் பின்பு சபைக்குப் போக முடியாமல் போனாலும், தேவனுடைய தயவுள்ள கரம்
உடன் இருந்து நடத்தியது. சில வருடங்கள் இடை வெளி, இளம் வாலிப நாட்களில் சுய
இஷ்டத்தின்படியான வாழ்க்கை. அந்தக் காலக் கட்டத்தில் எப்போதாவது ஒருமுறை சபைக்குச்
செல்வது உண்டு.
அப்படிச் செல்லும் பொழுது ஒரு
ஞாயிறு ஆராதனையில் சபை முழுவதும் நிரம்பி இருக்கிறது. நான் ஆராதனையில் கலந்து
கொண்டேன். முன் வரிசையில் அமர்ந்து இருந்த வேளை, அபிஷேக நேரத்தில் தேவ பிரசன்னம்
என் மேல் இறங்கியது. அந்த நேரத்தில் என்னையும் அறியாமல் நான் அபிஷேகத்தில் துள்ளி
குதித்தேன். அப்பொழுது, சதைகள் பிய்ந்து இரத்தம் வடிந்த நிலையில் ஒரு பக்க முகம்
சில நொடிகள் எனது கண்களுக்கு முன்பாக வந்து சென்றது.
அந்தச் சம்பவம் என் நினைவை விட்டு
நீங்கவே இல்லை. சில மாதங்களுக்குப் பின் ஒரு வேதாகமம் வாங்கிப் படிக்க
ஆரம்பித்தேன். தேவன் என்னை நடத்த ஆரம்பித்தார்.
சில ஆண்டுகளுக்குப் பின் சில
வேண்டாத சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்க நிர்விசாரத்துடனும், மனக் கடினத்துடனும் தேவனை விட்டு
விலக ஆரம்பித்தேன். அப்படியே சில ஆண்டுகள் கடந்தாலும். தாயின் கருவில் தோன்றும்
முன்பாகவே முன் குறித்த தேவன். என்னை விட்டு விலக வில்லை. குறித்த நேரத்தில்
சரியாக என்னைத் தொட்டார். நான் மறுபடியும், 2001 ம் வருடம் தேவனைப்
பிடித்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். அந்த நேரத்தில்
கர்த்தரிடத்தில் கண்ணீரோடு என்னை ஒப்படைத்தேன்.
அந்த வேளையில் கர்த்தர் என்னிடத்தில், “நான் உன்னை
ஊழியக்காரனாகவும், சாட்சியாகவும் ஏற்படுத்துவேன்’’ என்று பேசி ஊழியத்திற்கு அழைத்தார். விபத்தில் கால்
ஒடிந்து பல மாதங்களாக நடக்க முடியாமல் இருந்த என்னைச் சுகமாக்கி நடக்கச் செய்தார்.
நாட்களும் கடந்தன. தேவன் ஊழியனாக ஏற்படுத்துவேன் என்று பேசினார். ஆனால் அதற்கும்
எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லையே என்று நினைத்து, கால் சுகமானதும் வழக்கம் போலக்
கடை வேலையில் கவனம் செலுத்தி வந்தேன்.
அந்த நாட்களில் மளிகை கடை நடத்தி
வந்ததால் சரியாகச் சபைக்கும் செல்ல முடியாத நிலையில இருந்து வந்தேன். அப்பொழுது
வியாபாரம் குறைந்து, கடை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. எவ்வளவு முயற்சித்தாலும் எந்த
முன்னேற்றமும் ஏற்படாமல், இருந்தது.
அதன் பின்பாக எத்தனையோ, தொழில் செய்தும் எதுவும்
சரியாக அமையாமல் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, மிகுந்த நெருக்கம் உண்டானது. கடன்
அதிகமானது. அந்த வேளையில்தான் தேவன் அழைத்த அழைப்பும், தேவனுடைய வார்த்தைகளும்
நினைவுக்கு வர இனி நாம் இப்படியே இருப்பது தவறு என்று நினைத்து, ஜெப கூடுகைகளில் கலந்து
கொள்ள ஆரம்பித்தேன்.
அதிகமாக ஆவிக்குரிய செய்திகளைக்
கேட்க ஆரம்பித்தேன். ஆவிக்குரிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
அந்த வேளையில் ஒரு இரவு ஜெபத்தில்
கலந்து கொண்ட போது, அந்த இரவு ஜெபத்திற்கு வந்திருந்த தேவ ஊழியக்காரர் மூலமாகவும் கர்த்தர் ஊழிய
அழைப்பைக் கொடுத்து உறுதிப்படுத்தினார்.
இரவு ஜெபம் முடிந்து அந்த
ஊழியக்காரரே என்னைத் தனியாக அழைத்து, ஊழியத்தின் அழைப்பையும், தேவன் கொடுத்திருக்கும்
ஊழியங்களைக் குறித்தும் பேசினார். நான் அந்த ஊழியக்காரரை அப்பொழுதுதான் முதல்
முறையாகப் பார்த்தேன். ஆனால் அவர் கர்த்தர் என்னிடம் பேசிய வார்த்தைகளைச் சொல்லி,
கர்த்தர் உங்களை ஊழியத்திற்கு
அழைத்திருக்கிறார். தயாராக இருங்கள் என்று சொல்லி ஜெபம் செய்தார்.
அது முதல் ஊழியத்தின் அழைப்பை
மனதில் வைத்து, ஜெபித்துச் செயல்பட ஆரம்பித்தேன்.
அந்நாட்களில் ஒரு ஊழியக்காரர்
மூலமாக ஒரு ஊழிய பயிற்சி வகுப்புக்கு ஆறு மாதங்கள் செல்ல தேவன் கிருபை செய்தார்.
ஆனாலும் அதுவரை நான் மூழ்கி ஞானஸநானம் பெற வில்லை, எனக்கு ஒரு நிரந்தரமான சபை
ஐக்கியமும் இல்லை.
அப்படிப்பட்ட சூழலில் மூழ்கி
ஞானஸ்நானம் எடுப்பதைக்குறித்தும், சபை ஐக்கியத்தில் இணைய வேண்டும் என்பதைக்குறித்தும்
கர்த்தர் எனக்குள்ளாக உணர்த்தி, பேசினார்.
ஒரு நாள் எந்தச் சபைக்குச்
செல்வது என்று ஜெபித்து, “இன்று யாராவது ஒருவர் வந்து என்னிடம் பேச வேண்டும் பேசி
நீங்கள் சபைக்கு வாருங்கள் என்று அழைக்க வேண்டும், இந்த அடையாளம் எனக்கு வேண்டும்’’
என்று நான்
மனதுக்குள்ளாக நினைத்துக்கொண்டு கடையில் இருந்தேன். பல மாதங்களாகத் தெரிந்த ஒரு
சகோதரர் ஆனால் அவர் ஒரு முறைகூட என்னிடம் பேசியது இல்லை. ஆனால் அன்று என்னிடம்
வந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது வேதாகம வசனங்களைக் குறித்து
இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்டது.
அப்பொழுது அவர் “நீங்கள் வேத வசனங்களை
இந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், ஆனால் எந்தச் சபைக்கும் போகாமல்
இருக்கிறீர்களே, நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள், நான் எங்கள் சபை பாஸ்டரை உங்களுக்கு அறிமுகம் செய்து
வைக்கிறேன் என்று சொன்னார்.
நான் எதிர்பார்த்து ஜெபித்தது
போலவே கூப்பிடுகிறாரே என்று நினைத்து உடனே ”சரி வருகிறேன். நீங்கள் செல்லும்
சபை எங்கு இருக்கிறது?’’ என்று கேட்டேன். அவர் விலாசத்தைக் கொடுத்தார். ஆனால் ஞாயிறு
அன்று என்னைக் கூப்பிடாமல் சென்று விட்டார். ஆனாலும் நான் மனதுக்குள்ளாக ஜெபித்த
காரியத்தைக் கர்த்தர் என்க்கு நிறை வேற்றி விட்டார். ஆகவே அந்தச் சகோதரன் சொன்ன
சபைக்குதான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, விலாசம் கேட்டு கேட்டுச் சரியாக
அந்தச் சபைக்குச் சென்று விட்டேன்.
அது டிசம்பர் மாதம், வருடத்தின் கடைசி மாதம்
என்பதால் அந்தச் சபையில் 21 நாட்கள் உபவாச ஜெபம் வைத்திருந்தார்கள் அந்த ஞாயிறு கடைசி 21 வது நாள். ஆகவே, ஆராதனை காலை முதல் மாலை
வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் அந்தச் சபை பாஸ்டரிடம்
என்னைச் சபைக்கு அழைத்து, விலாசம் கொடுத்த சகோதரர் அறிமுகம் செய்து வைக்க அந்தப்
பாஸ்டர் வெகு நேரம் பேசினார்.
அது முதல் தொடர்ந்து அந்தச்
சபைக்குச் செல்ல ஆரம்பித்தேன் ஜனவரி மாதத்தில் ஞானஸ்நானமும் எடுக்கத் தேவன் கிருபை
செய்தார். அது முதல் வாரத்தின் எல்லா நாளும் எல்லா ஜெப கூடுகைகளிலும் கலந்து
கொள்ளவும், அந்தச் சபையில், எல்லா ஆராதனைகளிலும், ஜெப கூடுகையிலும் பங்கு பெற்று, முடிந்த அளவு சரீர உழைப்பின்
மூலமாகவும் ஊழியங்களில் பங்கு பெற தேவன் கிருபையாக நடத்தினார்.
அந்தச் சூழ்நிலையில்
குடும்பத்தில் இருந்து பல விதமான எதிர்ப்புகள் வந்தன. “எப்போது பார்த்தாலும், சபை, சபை என்று ஓடிக்கொண்டிருக்கிறாய்,
எதோ வாரத்தில் ஒரு
நாள் சபைக்குப் போனோமா, வந்தோமா வேலையைப் பார்த்தோமா என்று இல்லாமல் இப்படி
அலைகிறாயே, அவர்களைப்பார் இவர்களைப்பார் உன்னை மாதிரியா அலைகிறார்கள். உழைப்பில் கவனம்
செலுத்து. அப்போதுதான் உருப்பிட முடியும். இந்த வயசில் இப்படி இருக்கிறாயே நீ
எல்லாம் எங்க உருப்பிட போற’’ என்று அடிக்கடி திட்டுவார்கள்.
இருப்பினும் என்னால் வாரத்தில்
ஒரு நாள் மட்டும் சென்று திருப்தியடைய முடிய வில்லை. “இனி வாழ்ந்தாலும் இயேசுவுக்காக,
செத்தாலும்
இயேசுவுக்காக’’ என்று தேவன் ஊழியத்திற்கு அழைத்த அழைப்பை மனதில் நிறுத்தியே செல்ல
ஆரம்பித்தேன். ஆனால் சபை பாஸ்டரிடமோ, சக விசுவாசிகளிடமோ, ஊழிய அழைப்பைக் குறித்து எதுவும்
சொல்லவும் இல்லை. பேசவும் இல்லை.
ஏன் சொல்ல வில்லை என்றால்,
“இப்போதுதான்
சபைக்கு வந்தான், உடனே ஊழியக்காரனாக வேண்டும் என்று சொல்லுகிறானே, இவனுக்கு என்ன தெரியும்’’ என்று தேவனுடைய அழைப்பை
அசட்டை செய்து, கேலி பேசி விடுவார்கள் என்பதற்காகதான் எதுவுமே பேச வில்லை.
ஆனாலும் தேவனுடைய கிருபையால் சில
மாதத்திற்குள்ளாகவே அந்தச் சபையில் பாஸ்டரோடு இணைந்து ஆராதனை வேளையில் பாடல்
பாடும்படியான வாய்ப்பை தேவன் ஏற்படுத்திக்கொடுத்தார். ஊழியத்தின் அடிப்படைகளைக்
குறித்துத் தேவன் கற்றுக்கொடுத்தார்.
அந்த நாட்களில் வேதாகம
கல்லூரியில் ஒரு வருடம் படிக்கும் படியான வாய்ப்புக் கிடைத்தது, அதைக்குறித்துச் சபை
பாஸ்டரிடம் பேசிய போது அவர் முதலில் வேண்டாம் என்று சொன்னார், பின்பு சரி என்று சொல்லி,
அந்த வேதாகம
கல்லூரியில் படிப்பதற்குக் கடிதம் கொடுத்தார்.
அந்த நாட்களில் நாங்கள் மளிகை
கடைகளை எடுத்து விட்டு, சிறிய அளவில் ஒரு உணவகம் வைத்திருந்தோம். அந்த உணவகத்தில்
அதிகாலை 5
மணி முதல் காலை 9 மணி வரை வேலை செய்வேன். பிறகு வேக வேகமாகப் புறப்பட்டு, வேதாகம கல்லூரிக்கு
செல்வேன். வேதாகம கல்லூரியில் திங்கள் முதல், வெள்ளி வரை காலை 10 மணி முதல், மதியம் 2 மணி வரை வகுப்பு
இருக்கும். அந்த வகுப்பு முடிந்ததும் மதியம் மூன்று மணி முதல் 6 மணி வரை உணவகத்தில்
இருப்பேன். 6 மணிக்கு மேல் சபைக்குச் சென்று விடுவேன். வருவதற்கு 10, அல்லது 11 மணி வரை ஆகும்
இப்படிதான். 1 ஆண்டு முழுவதும் சென்றது.
இந்த நாட்களில் வீட்டில் எனக்குப்
பல விதங்களில் எதிர்ப்பு வந்தது, எனது தகப்பனாருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டைகள் வரும் ஏன்
என்றால் நான் சபைக்குச் செல்வதோ, வேதாகம கல்லூரிக்கு செல்வதோ அவர்களுக்குக் கொஞ்சம் கூட
விருப்பம் இல்லை.
சபையில் என்னைத் தெரியாதவர்கள்
யாரும் இல்லை. எல்லோரிடமும் நன்றாகப் பேசுவேன். எனக்குக் குடும்பம், சொந்த பந்தம் எல்லாம்
சபைதான் என்று இருந்தேன்.
தேவனுடைய ஊழிய அழைப்பின் பாதையில்
செல்ல ஆரம்பித்தேன். தேவன் என் மனதில் ஊழிய தரிசனங்களைக் குறித்துப் பேசுவதை எழுதி
வைக்க ஆரம்பித்தேன். நான் சென்ற சபையில் பாஸ்டர் குடும்பம், மற்றும் சபையில் இருந்த எல்லாக்
குடும்பத்தினரும் என்னிடத்தில் மிகுந்த அன்பாக இருப்பார்கள்.
வருடங்கள் செல்ல அந்தச் சபை
பாஸ்டர் தேவன் என்னை ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டார்.
ஆகையால்” நீங்கள்
அடங்கி இருக்க வேண்டும், நம்ம சபையின் மூலமாகவே ஆண்டவர் ஊழியத்தைத் தருவார்’’
என்று பேசுவார்
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே எந்த
ஊழியத்தோடும் இணைந்து ஊழியம் செய்யும்படி கர்த்தர் என்னை நடத்த வில்லை. தேவ
சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தேவ நடத்துதலுக்கு அர்ப்பணித்து, செல்லவே அதிகமாக விரும்பினேன்.
அந்தச் சூழலில் எனக்குத் திருமணம்
செய்வதற்காகப் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். தேவனுடைய கிருபையால் ஏற்ற துணையைக்
கர்த்தர் கொடுத்தார்.
அதுவரை தனி மனிதனாக வயிற்றுக்கு
உணவும், உறங்குவதற்கு
ஒரு இடமும், இயேசுவோடு வாழ்வதே போதும் என்று இருந்த எனக்குக் குடும்பப் பொறுப்புக்கள்.
“இப்படியே இருந்தால் எப்படி,
அடுத்து என்ன
செய்யப்போகிறாய்? என்று எனது வீட்டில் இருந்தும், மாமனார் வீட்டில் இருந்தும் நெருக்கம் வர ஆரம்பித்து
விட்டது.என்ன செய்வது என்று புரியாத நிலை!
கர்த்தர் ஊழியத்திற்கு
அழைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் எதாவது ஒரு தொழிலை நிரந்தரமாகச் செய்ய
வேண்டும். இப்படியே இருப்பது நல்லது அல்ல என்று வீட்டாரின் நெருக்கம்.
மறுபடியும் மளிகை கடை வைக்க
வேண்டும் என்று சொல்லி, எல்லாப் பக்கத்திலும் இருந்து வந்த நெருக்கம் என்ன செய்வது
என்று தெரியாமல் “சரி’’ என்று
சொல்லி விட்டேன்.
கடை பார்த்து அட்வான்ஸ் கொடுத்து,
பொருள்கள்
வைப்பதற்காக ரேக் எல்லாம் வைத்தாகி விட்டது. பொருள்கள் எல்லாம் வாங்க வேண்டும்.
ஒரு வாரத்தில் கடை திறக்க வேண்டும். அந்த நாள் இரவு தூக்கமே வர வில்லை. ஆண்டவர்
ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார். ஆனால் சூழ்நிலை மாற்றி அழைத்துச் செல்கிறதே,
என்று அழுகையாக
வந்தது. நடு இரவு வரை அமர்ந்து அழுது கொண்டே இருந்தேன். தொடர்ச்சியாக மூன்று
நாட்கள் இரவு இப்படியே தொடர்ந்தது. மூன்றாவது நாள் இரவு நான் தனியாக அமர்ந்து
இருப்பதை எனது மனைவி பார்த்து, ஏன் தூங்காமல் அமர்ந்து இருக்கிறீர்கள். என்று எழுந்து
அருகில் வந்து பார்க்கும்போதுதான் நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து “ஏன் அழுது கொண்டு
இருக்கிறீர்கள் என்று கேட்டதும். என் மனதில் இருந்த எல்லாப் பாரத்தையும் சொன்னேன்.
உடனே “ உங்களுக்கு இதில் விருப்பம் இல்லை
என்றால் கடை நமக்கு வேண்டாம்,’’ என்று சொல்ல, “அப்படியானால் நான் எனது அப்பா, அம்மாவிடம் பேசுகிறேன். நீ உனது
அப்பா அம்மாவிடம் பேசு என்று சொல்லி பேசினோம்.
அந்த நாட்களில் எனது மனைவியின்
ஒத்துழைப்புக் கிடைக்கத் தேவன் கிருபை செய்தார். அன்று முதல் ஊழியத்திலே உடன்
இருந்து, பொருளாதார
நெருக்கத்திலும், எத்தனையோ சோர்வான நேரத்திலும் உடன் இருந்து ஊழியப்பாதையில் தொடர்ந்து வர எனது
மனைவிக்கும் தேவன் கிருபை கொடுத்து நடத்தி வருகிறார்.
மளிகை கடை வைத்தால் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை இருந்து
கொண்டே இருக்கும் ஊழியம் செய்ய முடியாது. இந்தச் சின்ன உணவகத்தைப்
பார்த்துக்கொண்டால் ஊழியம் செய்வதற்கு நேரம் இருக்கும் என்பதால் தொடர்ந்து அதையே
பார்த்துக்கொள்ள முடிவு செய்தோம்.
ஆகையால் மளிகைகடைக்காகச் செய்த
செலவுகள் சில ஆயிரங்கள் நஷ்டம் ஏற்பட்டது. இருந்தாலும் தேவ சித்தம் செய்ய வேண்டும்
என்ற எண்ணத்துடன் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் வந்து விட்டோம்.
அதுவரை ஒன்றாக இருந்து அந்தச்
சின்ன உணவகத்தைக் குடும்பமாகக் கவனித்து வந்தோம். இதற்குப் பின்பு எனது அண்ணன்
நான் கடை வைத்துக்கொள்கிறேன் நீங்கள் இந்த உணவகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று
கொடுத்து விட்டுத் தனியாகச் சென்று விட்டார்.
அதன் பின்பு, உணவகத்தைக்
கவனித்துக்கொண்டே ஆண்டவர் கொடுத்த ஊழியங்களைச் செய்ய முடிவு செய்து, ஜீவ அப்பம் ஊழியங்கள்’’
என்ற பெயரில் ஜெப
குழு ஆரம்பிக்கப்பட்டு, சுவிசேஷ ஊழியம் துவங்கப்பட்டது. அதன்மூலமாகக் கை பிரதி,
அச்சிட்டு
ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்தோம்.
அதன் பின்பு ஜீவ அப்பம் மாத இதழ்
வெளியிட ஆரம்பித்தோம். இந்தச் சூழ்நிலையில் நான் சென்று கொண்டிருந்த சபையில்
எதிர்ப்பு உண்டாக ஆரம்பித்து விட்டது.
“அடங்கி இருக்காமல், இப்படி ஊழியம்
செய்யக்கூடாது என்றும், இப்படிப்பட்டவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் இவர்களுக்கு என்ன
தெரியும் என்றும், அது வரை அன்பாக இருந்த குடும்பம் என் மீது பாய ஆரம்பித்தது.
இருப்பினும் அதே சபையில்
தொடர்ந்து ஆராதனையில் பங்கு பெற்று வந்தோம். ஒரு கட்டத்தில் இனி அங்கு இருப்பது
கூடாத காரியம் என்பது போல் சில விரும்பத்தகாத வார்த்தைகள் தொடர்ச்சியாக வர வேறு
வழியில்லாமல் அந்தச் சபையை விட்டு, வெளியே வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அதன் பின்பாக நல்ல சபை ஐக்கியம்
தேவை என்பதால் நாங்கள் இருந்த பகுதியில் சாந்தமாகத் தேவனுக்குப் பயந்து உண்மையாக
ஊழியம் செய்து வந்த ஊழியரோடு ஐக்கியம் கிடைக்க, அவர்கள் நடத்தி வந்த சபையில்
ஐக்கியமாக இருந்து, கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த ஊழியங்களைச் செய்து வர தேவன் கிருபை செய்தார்.
இப்படி வேலை செய்து கொண்டே
ஊழியங்களைச் செய்து வருகையில் ஒரு நாள் கர்த்தர் முழு நேரமாக ஊழியம்
செய்யும்படியாக அழைத்து அதற்குண்டான சூழ்நிலையை உண்டாக்கினார்.
உடனே நாங்கள் நடத்தி வந்த
உணவகத்தை என் தகப்பனாரிடம் விட்டு விட்டு, முழு நேரமாக ஊழியத்திற்கு வந்து விட்டோம். அப்பொழுது
எங்கள் மகன் பிறந்து 6 மாதங்களே ஆகி இருந்தது.
ஊழியத்தில் எந்த விதமான உதவியும்
இல்லை. குடும்பத்தினர் மூலமாகவும் எந்த விதமான உதவியும் இல்லை. பொருளாதாரத்தில்
மிகுந்த நெருக்கம்.
கர்த்தரை மட்டுமே புகலிடமாகக்
கொண்டு, தேவனுடைய
அழைப்பை மட்டுமே முன்பாக வைத்து, சூழ்நிலைகளைக் கவனிக்காமல் இந்தக் கனமான ஊழியத்தை முழு
நேரமாகச் செய்யப் புறப்பட்டோம்.
குடும்பத்தையும் நடத்த வேண்டும்
மாத இதழ் வெளியிட வேண்டும், அந்தச் சூழ்நிலையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது
மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்றுதான் மாத இதழ் வெளியிட முடிந்தது. ஜீவ அப்பம்
மாத இதழ் வெளி வரும் நாட்களில் எத்தனையோ, மாதங்கள் அதை வாங்கிக் கொண்டு வரும் பொழுது, ஹெல்மட் அணிந்து
வண்டியில் வரும் போது அழுது கொண்டே வருவேன். அது இவ்வளவு நெருக்கத்தின் மத்தியில்
தேவன் இந்த மாத இதழை வெளியிட கிருபை செய்தாரே என்ற ஆனந்த கண்ணீரா? இல்லை. ஏன் இந்த
நெருக்கத்தில் நடத்தப்படுகிறோம் என்ற வேதனையின் கண்ணீரா என்பதை அறிந்து கொள்ள
முடிய வில்லை.
தினம் தினம் தேவனை மட்டுமே,
பார்த்து, தேவன் கொடுத்தால் மட்டுமே
புசித்து, இருக்கும்
வீட்டிற்கு வாடகை கொடுத்து வந்தோம். ஆனாலும் எத்தனை நெருக்கத்திலும், தேவன் எங்களை எந்த
இடத்திலும் கை விட வில்லை. அந்தந்த நேரத்திற்குத் தேவையானதை தேவன் எங்களுக்குத்
தந்து அற்புதமாக, நடத்தினார். நடத்திக்கொண்டு வருகிறார். தேவனுடைய நாமம் மட்டுமே
மகிமைப்படுவதாக.
பல இடங்களில் ஊதாசீனப்படுத்தப்பட்டு,
அவமானப்படுத்தப்பட்டு,
இன்னல்கள்
இக்கட்டுக்கள், வேதனைகள் நெருக்கங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவருக்கும் வளைந்து
கொடுக்காமல், சத்தியத்தை விட்டு விலகாமல், எங்கும் யாரிடமும் சென்று நிற்காமல் தேவ கிருபையால்
ஊழியங்களைத் தொடர தேவன் கிருபை கொடுத்து நடத்தி வருகிறார்.
ஜீவ அப்பம் ஊழியங்கள் விரிவடையத்
தேவனுடைய சித்தப்படி, அநேக ஊழியங்களைச் செய்யவும், பல இடங்களுக்கு ஊழியத்திற்குச் செல்லவும், செல்லும் இடமெல்லாம்
அற்புதமாகத் தேவன் நடத்தினார்.
இந்த நிலையில் தேவனுடைய முன்
அறிவிப்பின்படி, தேவ தரிசனத்தின்படி தேவன் குறித்த நாட்களில் ஜீவ அப்பம் ஊழியங்களின் முதல் சபை
துவக்கப்பட்டது.
அதுவரை நாங்கள் ஐக்கியமாக இருந்த
சபை பாஸ்டர் அவர்களே ஜீவ அப்பம் சபையைப் பிரதிஷ்டை செய்ய, ஜீவ அப்பம் முதல் சபையின் ஆராதனை
ஒரு பள்ளியில் துவங்கியது. அந்த வாரத்தில் நான் சென்று கொண்டிருந்த சபையில்
பாஸ்டருடன் வந்திருந்த சிலரும், அந்தப் பள்ளியை சுற்றிலுமாக இருந்த மூன்று புதிய நபர்கள்
ஆராதனையில் கலந்து கொண்டார்கள். இப்படிச் சபை ஆராதனை நடை பெற்றது.
மூன்று மாதங்கள் ஆன பிறகு சில
காரணங்களைச் சொல்லி, ஆராதனை நடத்த வேண்டாம் என்று பள்ளியில் இடம் கொடுத்தவர்கள் சொல்லி
விட்டார்கள். ஆனாலும் தேவன் வேறு ஒரு நல்ல இடத்தைக் கொடுத்து ஆராதிக்கக் கிருபை
செய்து, சபையைக்
கர்த்தர் நடத்திக்கொண்டு வருகிறார்.
தற்போது ஆத்துமாக்களைச் சபையில்
கொடுத்து, சபையைக்
கர்த்தர் விரிவடையச் செய்து வருகிறார். அது மாத்திரமல்ல, எனது தாயார், தகப்பனார் உடன்
பிறந்தவர்களையும் கர்த்தர் இரட்சித்து, சபையிலே இணைத்து இப்போது ஊழியத்திலே உறு துணையாக
மாற்றி, கிருபையாக
நடத்தி வருகிறார்.
தேவ நடத்துதலின்படி சபை ஊழியங்கள்,
ஜீவ அப்பம் மாத
இதழ், சுவிசேஷ
ஊழியங்கள். இணையத் தளத்தின் மூலமாக ஊழியங்கள். இன்னும் அநேக வழிகளில் தேவ
சித்தத்தின்படி ஊழியங்கள் நடந்து வருகிறது.
இந்த நாள் வரை நெருக்கத்தின் மத்தியில் தேவனுடைய
கிருபையே ஊழியப்பாதையில் நடத்தி வருகிறது.
இந்தக் கனமான ஊழியத்திற்கு,
தானாகவோ, ஆசைப்பட்டோ, வராமல், தேவ அழைப்பை பெற்று
வந்ததினால் தேவனே தம்முடைய கிருபையால் நடத்தி வருகிறார். தேவனுக்கே மகிமை
உண்டாகட்டும்.
இத்தனை ஆண்டுக் காலமாக ஊழியத்தின்
பாதையில் பயிற்சித்துக் கற்றுக்கொடுத்துக்கொண்டே வருகிறார். தேவன் கொடுத்த
அழைப்பும், தரிசனங்களும் குறித்த நேரத்தில் நிறைவேற தேவ சித்தத்தின்படி இந்த ஊழியப்பாதை
தொடர்கிறது. இன்னும் கிருபை கொடுத்து கர்த்தர் நடத்தும்படி, எங்களுக்காக, எங்கள் ஊழியங்களுக்காக
ஜெபியுங்கள்.
0 comments:
Post a Comment